Chapter 09
சூரியனாக நீயெனைச் சுட்டாலும் – உன்
சொந்தமாகிவிடக் கனாக் கண்டேன்…
இந்த மீரா.. சுபாஷிணி அறியாதவள்.. தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கிப் போகும் மீராவைத்தான் அவள் அறிவாள்.. தனக்குத்தானே சிரித்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டு இப்போது தனக்குத்தானே பாடிக் கொண்டிருக்கும் இந்த மீராவை இன்றுதான் அவள் பார்க்கிறாள்.
“என்ன ஆச்சு மீரா.. எதுவும் ஜாக்பாட் அடித்து விட்டதா…?”
“ஜாக்பாட்டை வைத்து நான் என்ன செய்ய…?”
“என்னடி இது.. ஜாக்பாட்டை விட மேலானது எது இருக்கிறது…?”
“எவ்வளவோ இருக்கிறது..”
“உதாரணத்திற்கு ஒன்று சொல்லேன்…”
“இதையெல்லாம் சொல்ல முடியாது சுபாஷிணி..”
மீரா சப்பாதிக்கு தேய்க்க ஆரம்பிக்க.. சுபாஷிணி குருமாவை இறக்கி வைத்து விட்டு.. சப்பாத்தியை போட்டு எடுக்க ஆரம்பித்தாள்.
“ஆமாம்.. இன்றைக்கெல்லாம் பாட்டும் சிரிப்பும் தூள் பரப்புது…?”
“அது அப்படித்தான் சுபா…”
“அந்த ரகசியத்தை என்னிடம் மட்டும் சொல்லக் கூடாதா…?”
“சொல்லவா…?”
“சொல்லு.. சொல்லு…”
“நான் என் பதினைந்து.. பதினாலு வயதில் ஒரு கனவு கண்டேன் சுபா.. அந்தக் கனவு இன்றைக்குத்தான் நனவாகி இருக்கிறது..”
“புரியவில்லையே..”
“புரியாவிட்டால் விட்டுவிடு.. இப்போதைக்கு இவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்…”
“ஒருவேளை.. இதைவிட அதிகமான சந்தோஷம் வந்தால் அப்போதாவது என்னிடம் சொல்வாயா…?”
“இதை விட அதிகமான சந்தோஷம் இருக்க முடியாது சுபா.. இதுவே எனக்கு அதிகம்.. இன்னும் சொல்லப் போனால்.. இப்படி ஒரு அரிய வாய்ப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.. நினைக்காதது நடந்திருக்கிறது. நான் வேண்டியது கிடைத்திருக்கிறது. தவம் செய்தவர்களுக்கு வரம் கிடைத்தால் எப்படியிருக்கும்..? அதுதான் என் இப்போதைய நிலை.. எனக்கு இதுவே போதும் சுபா.. இதைத்தாண்டிய சந்தோஷம் என் வாழ்வில் எதுவும் இல்லை.. இந்த சந்தோஷத்திற்கு வானம்தான் எல்லை…”
“ஊஹூம்.. இவளுக்கு இன்றைக்கு என்னவோ தான் ஆகிவிட்டது..”
சுபாஷிணி கவலையுடன் மீராவை உற்றுப் பார்த்தாள்.. தற்செயலாக சுபாஷிணியின் பார்வையை மீராவிற்கு மீண்டும் சிரிப்பு வந்துவிட்டது..
“சுபா.. ஏன் இப்படி கவலையாய் பார்க்கிற… ஐ ஆம் ஆல் ரைட்…”
“என்னவோ போ.. எனக்கென்றும் விளங்கவில்லை..”
“விளங்காவிட்டால் விட்டுவிடு..”
“முயற்சி செய்கிறேன்…”
அன்று இரவு விளக்கை அணைக்கும் முன்னால் உறங்கிக் கொண்டிருந்த மீராவின் முகத்தைப் பார்த்த சுபாஷிணி விளக்கை அணைக்காமல் தயங்கி நின்றாள்.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மீராவின் முகத்தில் எல்லையற்ற திருப்தியும்.. புன்னகையும் பரவி இருந்தன.
‘என்னவாகத்தான் இருக்கும்..?’ குறுகுறுத்த மனத்துடன் விளக்கை அணைத்து விட்டு படுத்து விட்டாள் சுபாஷிணி..
தன் இருக்கையில் அமர்ந்து வேலை செய்த வண்ணம்.. அடிக்கடி கண்ணாடி தடுப்பிற்கு அப்பாலிருக்கும் கோகுலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா..
“மிஸ்டர் கௌதம்.. நான் ஃபைனலாக உங்களை வார்ன் பண்ணுகிறேன். இனியொரு முறை இப்படி குறுக்கு வழியில் நுழையும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்..” ம்ம்.. இவன் இப்படியெல்லாம் கூட பேசுவானா…?
சிறு கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் குனிந்த நிலை நிமிராமல்.. அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு.. அமைதியாக வேலை செய்து கொண்டிருக்கும் அந்தப் பெண்.. தன் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனதிற்குள் சேகரித்து வைத்துக் கொள்கிறாள் என்பதை அறியாமல் கோகுல்.. தன் போக்கில் இயல்பாகப் பேசிக் கொண்டே வேலைகளைக் கவனித்தான்.
“மீரா…”
“யெஸ் சார்…”
“இந்த மெயில்களுக்கு பதில் அனுப்புங்க…”
“ஓ.கே. சார்…”
“இது என்ன.. எஸ்டேட்மெண்ட்டை இப்படி பிரிண்ட் அவுட் எடுத்திருக்கிறீங்க…?”
“சார்.. பிரிண்ட்டர் கொஞ்சம் மக்கர் பண்ணுகிறது..”
“அதை ஏன் முதலிலேயே கவனிக்கவில்லை…?”
“ஸாரி சார்…”
“உலகத்திலேயே எனக்கு பிடிக்காத வார்த்தை எது தெரியுமா…?”
மீரா உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாக நின்றாள். அவனுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற தவிப்பு.. அவள் மனதில் எழுந்தது..
“கமான்.. டெல் மி.. அது என்னவென்று தெரியுமா.. தெரியாதா…?” கோகுல் அதட்டினான்.
“தெரியவில்லை சார்…”
“இது எனக்குப் பிடிக்காத இரண்டாவது வார்த்தை..”
“ஸாரி சார்…”
“இப்போதுதானே சொன்னேன். ஸாரி.. தெரியாது.. இவை இரண்டுமே எனக்கு சரிப்பட்டு வராத வார்த்தைகள்.. எதைக்கேட்டாலும் தெரியாது என்கிறீங்களே.. உங்களுக்கு என்னதான் தெரியும்…?”
“இனி இப்படி நடக்காது சார்…”
“நம்புகிறேன்.. தவறு நடப்பதற்கு முன்னாலேயே அதை அவாய்ட் பண்ணப் பழகுங்க.. எந்த ஒரு செயலும் சரியாக வரவில்லையென்றால்… அதைசரிப்படுத்த முயற்சி செய்யுங்க.. அதை விட்டுவிட்டு.. தெரியாதுன்னு சொல்லி.. அதிலிருந்து தப்பிக்க பார்க்காதீங்க..”
“ஓ.கே. சார்..”
“இந்தப் பதில் எவ்வளவு நன்றாக இருக்கிறது..? இப்படியே இனிப் பேசிப் பழகுங்க..”
“யெஸ் சார்..”
“பொறுப்பு வேண்டும், சும்மா வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டால் மட்டும் போதாது.. அம்மாவுடைய ரெக்கமெண்டேஷன் என்பதற்காக.. வேலையில் நீங்க அலட்சியமாக இருந்தால் விட்டு விடுவேன்னு நினைத்து விடாதீங்க.. தொழில் வேறு.. வாழ்க்கை வேறு.. தொழில் விசயத்தில் நான் கண்டிப்பானவன்..”
“தெரியும் சார்…”
“குட்.. இப்போதுதான்.. முதன்முறையாக உங்கள் வாயிலிருந்து ‘தெரியும்’ என்ற வார்த்தை வருகிறது. கீப் இட் அப்…”
அவன் அவ்வளவு நேரம் கடுமையாகப் பேசியது.. மீராவிற்கு சுத்தமாக மறந்து விட்டது. அவன் சொன்ன ‘குட்..’ என்ற ஒரு வார்த்தையில்.. முகம் மலர்ந்து போனாள் அவள்..
அவன் சொல்லியபடி.. பிரிண்ட்டரை சரி செய்து விட்டு ஸ்டேட்மெண்ட்டை டைப் பண்ண ஆரம்பித்தாள்.. மனம் முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.
‘நீ கோபமாகப் பேசினாலும் – அது
எனக்கு கொஞ்சம் மொழிதான்
நீ என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்.
என்பது மட்டுமே.. என் மனதை
நிறைக்கிறது..’
அன்று இரவு அவளுடைய டைரியில்.. இந்த வரிகளை எழுதினாள் மீரா.. அவளது மனதில்.. சொந்தமில்லாத பார்வையுடன் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த கோகுலின் முகம் வந்து நின்றது.
‘கனலாக நீ பார்த்தாலும்…
காதலாகத்தான் நான் பார்த்தேன்…
எனை நீ நினைக்காத போதும்…
உனை நினைப்பதை நான் நிறுத்தமாட்டேன்..’
எழுதிக் கொண்டிருந்த டைரியிலேயே முகம் பதித்தவள்.. அப்படியே கண் மூடிக் கொண்டாள்.
மீராவிடம் எதையோ கேட்க வந்த சுபாஷிணி அவளிருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு அசையாமல் நின்றாள்.. டைரியில் எழுதப்பட்டிருந்த வரிகள் அவள் கண்ணில் பட்டது. அவளது புருவங்கள் முடிச்சிட்டன.
‘மீராவின் மனதில் காதல் இருக்கிறதா..?’ அவள் ஆச்சரியத்துடன்.. மீராவைப் பார்த்தாள்..
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.