Chapter 12
எனக்கே எனக்கென்று சில வார்த்தை – நீ
என்னிடம் பேசிவிடக் கனாக் கண்டேன்..
அடுத்து வந்த நாள்களில்.. கோகுல் மீராவை ஆராய்ச்சியாகப் பார்க்க ஆரம்பித்தான்.
அவன் முன் வந்து அமரும் போது மீராவின் பார்வை தாழ்வதையும், அவன் பார்க்காதது போல் பார்த்த போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள்.. அவசரமாய் பார்வையை விலக்கிக் கொண்டு பதற்றமாகக் குனிந்து கொள்வதையும் கண்டவனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன..
‘நான் அவளைப் பார்த்தால் நிலம் பார்க்கிறாள்.. நான் பார்க்காத போது.. என்னை விழுங்கி விடுவது போல் பார்த்து வைக்கிறாள்.. இந்தப் பார்வையைத் தான் வள்ளுவர் குறளில் எழுதினாரோ.. ஊம்.. இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்…?’
அவன் அவளிடம் சில சமயம்.. பொதுவான பேச்சுக்களைப் பேச ஆரம்பித்தான்.. அவன் பேசுவதை ஓர் ஆனந்தத்துடன் அவள் ரசித்துக் கேட்பதை அவனால் உணர முடிந்தது. பதில் பேச அவள் முயலவில்லை.
எந்தவொரு சமயத்திலும் அவள் அதிகப்படியாய் நடந்து கொள்ளவில்லை. அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள். அவன் பேசுவதை ரசித்துக் கேட்டாள். அவன் சொல்வதை சிரத்தையுடன் செய்து முடித்தாள். அவனிடம் அவளுக்கு அதீதமான பக்தி இருந்தது.
‘இது என்னவென்றே பிடிபட மாட்டேன் என்கிறதே.. விட்டால்.. இவள் என் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்வாள் போலத் தெரிகிறதே.. இதற்கு பெயர்தான் காதலா…?’ கோகுல் குழம்பிப் போனான்.
தன்னுடைய சொத்து விவரங்களை ஒருநாள் டிக்டேட் செய்து ஸ்டேட்மென்டாய் கம்ப்யூட்டரில் அடித்து வரச் சொன்னான்.
அவன் சொன்ன விவரங்களை.. உணர்ச்சி பிரதிபலிக்காத முகத்துடன் கேட்டுக் கொண்டவள் சில நிமிடங்களில் அவன் சொன்ன ஸ்டேட்மென்டுடன் வந்து நின்றாள்.
“கரெக்டா பிரிண்ட் பண்ணியிருக்கீங்க.. வெரிகுட்.. ஆமாம் மீரா.. என்னிடம் இவ்வளவு சொத்துக்கள் இருக்கிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க…?”
“சார்…?”
இவன் ஏன் இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கிறான்.. என்று தெரியாமல் விழித்தாள் மீரா..
“இல்லை.. நான் இவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருப்பதைப் பற்றி உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா..?”
“இதில் நான் பிரமிக்க என்ன இருக்கிறது…?” மீரா விசித்திரமாக அவனைப் பார்த்தாள்.
‘என்னடா இது.. வினோதமான ஆளைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்து வைக்கிறாள்…’ கோகுல் நாற்காலியில் லேசாக சுழன்றான்.
“உங்கள் சொத்து உங்களுக்கு சொந்தமாக இருக்கிறது.. நீங்கள் பெரிய கம்பெனியின் முதலாளி. அதனால் கோடீஸ்வரனாக இருக்கிறீங்க… இதில்
நான் பிரமிக்க என்ன இருக்கிறது..?” மீரா இயல்பாகக் கேட்டாள்.
“இல்லை.. என்னுடைய வி.ஐ.பி. அந்தஸ்தைப் பார்த்து உனக்குப் பயம் வரவில்லையா…?” கோகுல் விடாமல் அவளைக் கேள்வி கேட்டான்.
“பயமா..? உங்களிடமா…?” மீரா கலகலவென்று சிரித்தாள்.
தன் முன்னால்.. முதன் முதலாக வாய்விட்டு சிரிப்பவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் கோகுல்.. அவளது சிரிப்பில் ஒரு இயல்பு இருந்தது. உண்மை தெரிந்தது.
“ஏன் சிரிக்கறீங்க…?”
“ஆக்சுவலா சார்.. எனக்கு உங்களைத் தான் தெரியும்.. நீங்கள் இவ்வளவு பெரிய ஆள்ன்னு தெரியாது..”
“அது எப்படி.. நான் உங்கள் அப்பா வேலை செய்யும் எஸ்டேட்டின் முதலாளி.. உங்கள் அப்பாவின் முதலாளியை ஒரு சாதாரணமான ஆளாக நினைத்தீங்களா..?”
“தயவு செய்து கோபப் படாதீங்க சார்…”
“இல்லை.. இது கோபமில்லை. ஏன் நீங்கள் இப்படிச் சொல்கிறீங்க என்பது எனக்குத் தெரிய வேண்டும்…”
“நான் உங்களை முதன் முதலில் பார்த்தது எஸ்டேட் முதலாளியாக இல்லை சார்.. ஒரு பேப்பரில் வந்த போட்டோவில் தான்.. முதலில் உங்களைப் பார்த்தேன்..”
“இது என்ன புதுக் கதையாய் இருக்கிறது…” கோகுலின் புருவங்கள் மேலேறின…
“எந்தப் பேப்பரில் பார்த்தீங்க…?”
மீரா.. அந்தப் பேப்பரைப் பற்றி சொன்னாள். தான் அந்தப் பேப்பரை பார்க்க நேர்ந்ததைப் பற்றி விவரித்தவள் அதைத் தான் துணிகளுக்கு அடியில் வைத்துப் பாதுகாப்பதைச் சொல்லவில்லை..
“அது வந்து ஆறு வருஷமிருக்குமே..”
“ஆமாம்…”
“நான் கார் ரேஸில் வின் பண்ணியபோது எடுத்த போட்டோ அது.. என்னிடம் பேட்டி வாங்கி போட்டிருக்காங்க..”
“அதை நான் படித்தேன் சார்.. அப்புறம் பார்த்தால்.. நீங்கள் என் கண் முன்னால் ஒருநாள் வந்து நின்றீங்க..”
“ஈஸிட்.. நான் ஊட்டியில் உங்களைப் பார்க்கவே இல்லையே..”
“ஆனால்.. நான் உங்களைப் பார்த்தேனே.. ரிஷி அண்ணாவிடம் உங்களைப் பற்றி விசாரித்தேன்.. அவர்தான் உங்கள் பெயரைச் சொன்னார்…”
பழைய சம்பவங்களை விவரிக்கும் போது அவளிடம் தெரிந்த ஜ்வலிப்பு.. அவள் முகத்தில் தெரிந்த பரவசம்.. குரலில் தெரிந்த உற்சாகம்.. இவையெல்லாம் ரிஷி சொன்னது சத்தியான உண்மை என்பதை அவனுக்கு அடித்துச் சொல்லின..
கோகுல்.. அவள் காட்டிய அதீத ஈடுபாட்டில் கவரப்பட்டான். தன் மேல் இந்த அளவுக்கா அவள் பிரேமை கொண்டிருக்கிறாள் என்று திகைத்தாள்..
“ஓ.. அப்புறம் அம்மாவிடம் ஏன் வேலை கேட்டீங்க..?”
“உங்கள் கம்பெனியில் வேலை செய்ய ஆசைப்பட்டேன் சார்…”
“ஏன்…? உங்களுக்குத் தேவை வேலைதானே.. அதை என் கம்பெனியில் செய்தால் என்ன.. இல்லை வேறு கம்பெனியில் செய்தால் என்ன..? நானே உங்களிடம் ஒன்றை சொல்ல வேண்டும்ன்னு நினைத்தேன்..”
“என்ன சார்…”
“என் ஃபிரண்டின் கம்பெனியில் ஒரு வேலை காலியாக இருக்கிறது இதை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகம் கிடைக்கும். உங்கள் எதிர்காலத்திற்கு.. அந்த வேலையை நீங்கள் ஒப்புக் கொள்வது நல்லதாக இருக்கும்.. போகிறீங்களா…?”
மீரா அதிர்ந்து விட்டாள். அவன் எதையோ பேசிக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில்.. அவளை அருகில் அமர வைத்து அவளோடு அவன் பேசிக் கொண்டிருப்பதை பரம சுகம் என்ற கிறக்கத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு.. காலடியில் பூமி நழுவுவதைப் போல இருந்தது.
அது வரையில் கடைப்பிடித்து வந்த சுயக்கட்டுப்பாட்டை இழந்து விட்டாள் மீரா.. எங்கே அவன் தன்னை வெளியே அனுப்பி விடுவானோ என்ற பயத்தில் வார்த்தைகளைச் சிதறி விட்டாள்.
“செத்து விடுவேன் சார்.. என்னை நீங்கள் விட்டு விட்டால் செத்து விடுவேன்…”
“வாட் இஸ் திஸ் நான்ஸென்ஸ் மீரா…”
கோகுல் கொதித்து விட்டான்.. ‘இந்தப் பெண் யார்..? நான் யார்..? ஏதோ.. ரிஷி சொன்னானே என்று இரண்டு வார்த்தைகள் அதிகப்படியாகப் பேசிவிட்டால்.. உடனே இந்த அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வதா…?’
‘விட்டு விட்டால் செத்து விடுவேன் என்கிறாளே.. அப்படி இவளுக்கும்.. எனக்கும் என்ன பந்தம் இருக்கிறது..?’
“நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் மீரா.. நீங்கள் உங்கள் லிமிட்டைத் தாண்டிக் கொண்டு இருக்கிறீங்க.. நீங்கள் பேசுவது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா…?”
மீரா பேச்சிழந்தாள்.. கண்ணீர் மல்க அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள்.. அவள் மனம் குமுறியது..
‘எது ஓவர்…? உன் மீது நான் காட்டும் சொந்தமா..? அது இன்று.. நேற்று.. உருவான சொந்தமல்ல.. ஆண்டுக் கணக்கில் என் மனதில் அழியாத ஓவியமாய் பதிந்திருக்கும் சொந்தம் உன் மேல் நான் கொண்டிருக்கும் சொந்தம்.. என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டாயே.. யார் உணராமல் போனாலும்.. என் காதலை நீ உணர வேண்டாமா..? யார் அறியாமல் போனாலும் என் காதலை நீ அறியாமல் போகலாமா…?’
“ஸாரி சார்.. எனக்கு உங்களைப் பற்றிய எந்த அடையாளமும் தெரியாது.. நீங்கள் இவ்வளவு பெரிய பணக்காரர் என்பதும் தெரியாது. எனக்குத் தெரிந்த தெல்லாம்.. நீங்கள் மட்டும்தான்.. நான் ஏதாவது அதிகப்படியாகக் பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு அதிக அளவு சம்பளமும் வேண்டாம். என் எதிர்காலம் அந்தச் சம்பளத்தில் வளமாக இருக்கவும் வேண்டாம். எனக்குத் தேவை.. உங்கள் கம்பெனியில் ஒரு வேலை.. அதைக் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் எனக்கு வேலையே வேண்டாம். நான் ஊட்டியைப் பார்த்துக் கிளம்புகிறேன்…”
“வெயிட் மீரா.. நான் என்ன சொல்ல வந்தேனென்றால்..”
“போதும் சார்.. நீங்க நிறையப் பேசி விட்டீங்க.. நானும் நிறைய கேட்டு விட்டேன்.. என் மனம் வலிக்கிற வலியும் வேதனையும்… எந்த அளவுக்கு என்னை கொல்கின்றது என்பது உங்களுக்குத் தெரியாது சார்.. ஏன்.. உங்களுக்கு எதுவுமே தெரியாது.. நான் போகிறேன்.. நீங்கள் அழைத்தால் மட்டுமே திரும்பவும் நான் வேலைக்கு வருவேன்.. இல்லையென்றால்.. என் ராஜினாமாக் கடிதம் உங்களைத் தேடி வரும்…”
“நான் சொல்ல வந்ததை முழுவதுமாக என்னை சொல்லவிடப் போகிறாயா.. இல்லையா…?”
பேச்சின் போக்கில் தன்னையுமறியாமல் அவளை.. அவன் ஒருமையில் விளித்துவிட.. அந்த நிலையிலும் அதைக் கவனித்த மீராவின் மனம்.. ஒரு கணம் இதமானது. ஆனால் அவன் நாவினால் சுட்ட புண் மனதினில் ரணமாக இருக்க அவள் உதட்டைக் கடித்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்..
“நாங்கள் உங்கள் அளவிற்கு வசதியானவர்கள் இல்லை தான் சார்.. ஆனால் எங்களுக்கு மரியாதை மிகவும் முக்கியமானது. நான் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் எனக்கென்ன சார்..? நான் உங்கள் முன்னால் மண்டியிட்டு இருப்பது உங்களுக்காக! உங்கள் பணத்திற்காக இல்லை. என் விசுவாசத்தை நீங்கள் உணரவில்லை. உணர்ந்திருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை என்னை நோக்கிப் பிரயோகித்து இருக்கமாட்டீர்கள்.. இந்த மீராவின் அன்பு ஒன்றும் எளிதானது இல்லை சார்.. அது ஆண்டுக்கணக்கில் மனதில் அடக்கி வைத்திருப்பது.. அதற்கு சக்தி அதிகம்.. மதிப்பும் அதிகம்.. நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன். என்றைக்கும் என் மனதின் ஆட்ட நாயகன் ஃபேவரிட் ஹீரோ நீங்கள் தான்..” அவள் வேகமாக வெளியேறி விட்டாள்.
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.