Chapter 01

0Shares

திருமண வீட்டுக்கான அனைத்து அடையாளங்களும் அங்கிருந்தன.. அந்தத் தெருவையே அடைத்ததைப் போன்ற பிரம்மாண்டமான அந்த வீட்டின் முன்பாக ஊரையே அடைத்ததைப் போன்ற பந்தல்.. அதன் வாசலில் தோரணம் போல கட்டப் பட்டிருந்த வாழை மரம்.. பந்தலில் அணி வகுத்ததைப் போல வரிசை.. வரிசையாக போடப் பட்டிருந்த நாற்காலிகள்.. அதை நிரப்பியிருந்த உற்றார்.. உறவினர்.. அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்.. பட்டுப் புடவையும்.. நகைகளுமாக.. பூவாசத்துடன் விரைந்து கொண்டிருந்த பெண்கள்.. என அங்கே தனியான ஒரு களை தாண்டவமாடியது..

அந்த வீடு.. ஏழெட்டு திருமண மண்டபங்களை உள்ளடக்கியது போல விஸ்தீரணமாக இருந்தது.. வீட்டின் முன்புறம் அகன்று பரந்த வழவழப்பான 

தூண்கள் கொண்ட போர்டிகோவும்.. அதை ஒட்டியிருந்த நீண்ட படிக்கட்டுக்களும்.. படிக்கட்டின் முடிவில் இருந்த அகன்ற வரண்டாவும்.. அந்தக் காலத்து ஜமீன் பாரம்பர்யத்தின் கட்டிடக் கலையை கண்முன் கொண்டுவந்தன..

வரண்டாவுக்கு அடுத்ததாக தென்பட்ட மிகப் பெரிய ஹாலில் ஆங்காங்கே.. பெரியபெரிய சோபாக்கள் போடப் பட்டிருந்தன.. மேற்கூரையில் தொங்கிய அலங்கார விளக்குகள் ஜமீன் பாரம்பர்யத்தை அறிவுறுத்தின.. சுவர்களில் மாட்டப்பட்டிருந்த அழகான ஓவியங்களின் விலை மதிப்பு கோடிகளைத் தாண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்..

அந்த வீடு.. அன்னவாசல் கிராமத்தின் ஜமீன் பரம்பரையின் வீடுதான்.. ஜமீன்தார்களின் ஆட்சி மறைந்தாலும்.. அவர்களுக்கான பாரம்பர்யப் பெருமையும்.. பெயரும்.. அந்தக் கிராமத்தில் இன்னும் மறையவில்லை.. அவர்கள் அந்த வீட்டை ‘ஜமீன் வீடு’ என்றே இன்றுவரை அழைத்து வருகிறார்கள்..

வீட்டின் உள்ளே இருந்தவர்களின் முகங்களில் ஓர்விதமான இறுக்கம் காணப்பட்டது.. அந்தக் காலத்து வரலட்சுமியைப் போல அரச கம்பீரக் களையுடன் இருந்த இந்திராதேவி.. மகனைக் கவலையுடன் பார்த்தாள்…

“காய்ச்சல் குறையலை தனஞ்ஜெயா.. கூடிக்கிட்டே இருக்கு..”

அவள் அழைத்த தனஞ்ஜெயன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கம்பீரமான அழகுடன் இருந்தான்.. அவனது முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆண்மையின் ஆளுமை ததும்பியது.. அகன்ற நெற்றியும்.. செதுக்கி வைத்த சிலையைப் போன்ற திருத்தமான முக அமைப்பும்.. பெரிய மீசையும்.. அவனுடைய ஆகிருதியின் அழகை அதிகப் படுத்திக் காட்டின..

தனஞ்ஜெயன் பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளையைப் போல இருந்தான்.. ஆனால்.. மாப்பிள்ளைக்குரிய சந்தோசம் அவன் முகத்தில் இல்லை.. லேசான சஞ்சலத்துடன் கூடிய இறுக்கம் அதில் நிறைந்து காணப்பட்டது..

“எங்கேயிருக்காம்மா..?”

“மாடி ரூமில…”

“என் ரூமிலயா..?”

“இல்லைப்பா.. அதில அலங்காரம் பண்ணிக் கிட்டிருக்காங்களே.. வேற ஒரு ரூமில படுக்க வைச்சிருக்கேன்..”

அந்த மாளிகையில் அறைகளுக்கா பஞ்சம்..?

வீட்டின் நிர்வாகத்தை கைக்குள் வைத்திருந்ததாலும்.. அடிக்கடி மாடி ஏறி இறங்க முடியாத மூட்டுவலியாலும் இந்திராதேவி ஹாலை ஒட்டியிருந்த மிகப்பெரிய 

படுக்கை அறையில் இருந்தாள்.. வீட்டை கண்காணிப்பில் வைத்திருக்க அதுதான் அவளுக்கு வசதியாக இருந்தது..

தனஞ்ஜெயனின் அறை மாடியில் இருந்தது.. அதை அறை என்பதை விட.. அழகான தனி வீடு என்று சொல்லலாம்.. சமையலறை.. பூஜையறையைத் தவிர.. ஒரு வீட்டுக்கான சகல அம்சங்களும் அவன் அறையில் இருந்தன.. 

கதவைத் திறந்ததும் வரவேற்பறை.. அதை ஒட்டிய பெரிய பால்கனி.. வரவேற்பறையை அடுத்து நீண்டதாக படிக்கும் அறை.. அதையும் தாண்டினால்.. மிகப்பெரிய கட்டில்களும்.. சோபாக்களுமாக இருந்த படுக்கையறை.. படுக்கையறையை ஒட்டிய உடை மாற்றும் அறை.. அதனுள் இருக்கும் குளியலறை என்று தனஞ்ஜெயனின் அறை அனைத்து வசதிகளையும் கொண்டது..

அந்த அறையில்தான் அவனது முதலிரவுக்கான அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தன.. அதைக் கொண்டாட வேண்டியவனோ.. அந்தச் செய்தியைக் கேட்டதும் அதிருப்தியுடன்..

“ம்ப்ச்..” என்றான்..

“ஏன் தனா..?” இந்திரா தேவியின் இதயம் வலித்தது..

எத்தனை ஆண்டுகால கனவு அது..!

திருமணமே வேண்டாமென்று இருந்த தனஞ் ஜெயனுக்கு திருமணம் நடக்காதா..? அந்த வீட்டில் விளக்கேற்ற ஒரு மருமகள் வரமாட்டாளா என்று அந்தத்தாய் எத்தனை கோவில்களில் ஏறி இறங்கியிருப் பாள்.. எத்தனை நேர்த்திக்கடன்களை நேர்ந்திருப்பாள்.. அத்தனையும் கூடி வந்து தனஞ்ஜெயனுக்கும் திருமணமாகி.. புதுமணப் பெண்ணாக அந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து பிரவேசித்த சுமித்ரா.. வந்தவுடனே மயங்கி விழ வேண்டுமா..? அவளைத் தாங்கிப் பிடித்த தனஞ்ஜெயனுக்கு அவள் உடல் காய்ச்சலில் கொதிக்கிறது என்று தெரிய வேண்டுமா..?

“அம்மா.. இவளைப் படுக்க வையுங்க.. நான் டாக்டருக்குப் போன் பண்ணிட்டு வரேன்..”

தனஞ்ஜெயன் தன்மேல் சரிந்த புதுமனைவியை கைகளில் ஏந்தி அங்கிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு.. செல்போனுடன் வாசல்பக்கம் போனான்..

“அண்ணி.. என்ன ஆச்சு..?”

“கல்யாணப் பொண்ணு காய்ச்சல்ல கிடக்கிறாளா..? காய்ச்சலோடவா மணமேடை ஏறினா..?”

“நேத்தே காய்ச்சல் இருந்திருக்குமோ..?”

“இல்லையே தெய்வானை.. மணியக்காரர் வீட்டில நடந்த பஞ்சாயத்தில இந்தப் பொண்ணு தெளிவாத்தானே வந்து நின்னுச்சு..”

“ஆமாண்டி மருக்கொழுந்து.. நானும் பாத்தேனே.. எதுக்காக பஞ்சாயத்தைக் கூட்டியிருக்காங்கன்னு தெரியாம.. சிநேகிதப் பிள்ளையோட சிரிச்சுப் பேசிக்கிட்டே வந்துச்சே..”

“அதுக்கப்புறமாத்தான் காய்ச்சல் வந்திருக்குமோ..?”

“யாருக்குத் தெரியும்..? ஏன் இந்திரா உனக்குத் தெரியுமா..?”

உறவுக்காரப் பெண்கள்.. இந்திரதேவியின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆளுக்கு ஒன்றாகப் பேசினார்கள்..

அவளது மனம் ரணமானது.. இருந்திருந்து அவள் மகன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான்… அந்தத் திருமணம் இப்படி மற்றவர்கள் விமரிச்சிக்கும்படியா நடந்து முடிய வேண்டும்..?

“பொண்ணு வயசில சின்னப் பொண்ணா இருப்பா போல இருக்கே..”

“ஆமாம் தாமரை… இப்பத்தான் படிப்பை முடிச்சாளாம்..”

“முடிச்சவுடனே வேலைக்குப் போகனும்னு நினைச்சிருப்பா.. மெட்ராஸ்காரப் பொண்ணில்ல.. அது மனசில என்ன நினைப்போ..?”

அந்தத் தாமரையின் மனதில்தான் வன்மம் கலந்த நினைவு இருந்தது.. அவளின் மகளை தனஞ்ஜெயனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென்று அவள் பகீரத பிரயத்தனங்களைச் செய்தாள்.. ஜமீன் வீட்டுக்கு நடையாய் நடந்தாள்.. இந்திராதேவிக்கு மனமிருந்தது தான்.. தனஞ்ஜெயனுக்குத்தான் மனமில்லை..

“பிடிக்கலைன்னா.. விட்டுருங்கம்மா..” கண்டித்துப் பேசிவிட்டான்..

இந்திரா தேவியின் கண்கள் கலங்கி விட்டன.. அதில் எண்ணற்ற மன உளைச்சல்கள் கலந்து வந்தன.. அவளும் தான் என்ன செய்வாள்..?

“அம்மா.. நீங்க எதைக் கேட்டாலும் செய்யறேன்.. கல்யாணம் மட்டும் வேண்டாம்.. என்னை என் போக்கில் விட்டிருங்க..” என்று சொல்லும் மகனுடன் எப்படிப் போராடுவாள்..?

விடுவதா..? ஒரு தாயால் அது முடியுமா..?

இந்திராதேவி கண்ணீரில் கரைந்தாள்.. தனக்குள் மறுகினாள்.. தனஞ்ஜெயன் அசைந்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்..

அந்த வன்மம்தான் அந்தத் தாமரைக்கு..

“நேத்துப் பாக்கனும் கோமளா.. என்னவோ ஊரைச் சுத்திப் பாக்க வந்திருக்கிறதைப் போல இந்தப் பொண்ணு அம்புட்டு மலர்ச்சியா வந்துச்சே மருக்கொளுந்து.. இப்ப அந்த மலர்ச்சியெல்லாம் காணாமப் போயி கண்ணத் திறக்காம மயங்கிக் கிடக்கு.. பாவம்..”

அவள் பாவம் என்று பரிதாபப் பட்டது எதற்காக..? மயங்கிக் கிடக்கும் சுமித்ராவின் காய்ச்சலுக்காக பரிதாபப் பட்டாளா..? இல்லை.. அந்த ஜமீன் குடும்பத்தின் மருமகளாக அவள் வந்து விட்டாளே என்று பரிதாபப் பட்டாளா..?

இந்திராதேவி பல்லைக் கடித்தாள்.. முதல்நாள் வரை அவள் முன்னால் நின்று பேசத் தயங்கிய பெண்களெல்லாம் அன்று தைரியமாக அவள் முன்னாலேயே கதை பேசியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

“இப்பத்தான் கல்யாணம் ஆனதைப் போல இருக்கு.. அதுக்குள்ள என்மக இடுப்பில் ஒன்னு.. கையில் ஒன்னுன்னு இருக்கிறா.. இந்தக் காலத்துப் பொண்ணுக கல்யாணமாகிட்டா அப்படித்தான்.. பொறந்த வீட்ட மறந்துட்டு.. புருசன் வீடே கதின்னு ஆகிருவாங்க..”

‘இப்ப என்ன கழுதைக்காக இவ மகளுக்கு ரெண்டு குழந்தைகன்னு சொல்லிக்கிட்டு இருக்கா..’

இந்திராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. தாமரையின் மகள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி நிற்பதற்கும்.. புது மணப்பெண்ணான சுமித்ரா காய்ச்சலில் மயங்கிக் கிடப்பதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லைதான்..

ஆனால் எதற்காக தாமரை அதற்கும்.. இதற்கும் இணை கூட்டினாள் என்பதை இந்திராதேவியால் இனம் கண்டு கொள்ள முடிந்தது..

தனஞ்ஜெயன் மணக்க மறுத்து விட்ட தாமரையின் மகள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயென்றால் தனஞ்ஜெயனுக்கு எத்தனை வயதாகி இருக்க வேண்டும் என்ற கேள்வி அதில் தொங்கி நிற்பதை உணர்ந்து கொள்ள முடியாத முட்டாளா இந்திராதேவி..?

அதை மறைமுகமாக சொல்லிக் காட்டுவதற் காகத்தான் அறியாப் பெண்மணியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு

‘பொண்ணு வயசில சின்னப்பொண்ணா இருப்பா போல இருக்கே..’ என்று அந்தத் தாமரை கேட்டு வைத்தாள்..

‘இந்தத் தனா மட்டும் காலாகாலத்தில கல்யாணத்தை பண்ணியிருந்தா.. இவளுகல்லாம் என் முன்னாலே நின்னு நாக்கு மேலே பல்லைப் போட்டு நியாயம் பேசியிருப்பாளுகளா..?’

இமையோரம் துளிர்த்த கண்ணீரை.. இமைசிமிட்டி அடக்கிக் கொண்டாள் இந்திரா தேவி.. பெரிய வீட்டின் பெண்மணி அவள்.. வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் அவளுக்குக் கிடையாது… இமையோரம் துளிர்க்கும் கண்ணீரை அவள் விழிகளுக்குள் விரட்டித்தான் ஆக வேண்டும்.. கம்பீரத்தைக் கைவிடாமல் அந்த அன்னவாசலின் ஜமீன்தாரிணியாக நிமிர்ந்து நின்று தான் ஆக வேண்டும்..

அதுபோன்ற நிலைமையை தாய்க்குக் கொடுப்ப வனல்ல தனஞ்ஜெயன்.. அவன் வல்லமையாளன்.. ஜமீன்தார் ரகுநாதனின் மறைவுக்குப் பின்னால் அந்த ஜமீன் சொத்தை நிர்வகித்து.. கணவரை இழந்து விட்ட தனிமை தாயை அண்டி விடாமல் பாதுகாத்து.. புதிதாகப் பல தொழில்களைத் தொடங்கி.. பாரம்பர்யத்தின் பெருமையை உயர்த்தி.. அந்த சுற்று வட்டாரத்திலேயே மிகப்பெரும் மனிதனாக.. செல்வந்தனாக உயர்ந்து நிற்பவன்..

இந்திரதேவிக்கு அவன் வாழ்வதற்கான தைரியத்தைக் கொடுத்தான்.. பாசத்தைக் கொடுத்தான்.. பாதுகாப்பைக் கொடுத்தான்.. பெருமைகளைக் கொடுத்தான்.. அவள் கேட்காமலே இவை அனைத்தையும் கொடுத்தவன்.. அவள் கேட்டும் கொடுக்காதது ஒன்றே ஒன்றுதான்..

அதுதான் தனஞ்ஜெயனின் திருமணம்..!

அவனுடைய கல்லூரி நாள்களில் அவன் அறியாமல் சொன்ன ஒரு சிறு விவரத்தால் அவனுடன் படித்த நண்பனின் காதல் முறிந்து போனதாம்.. மனம் வெறுத்துப் போன அந்த நண்பன்.. படிப்பை முடித்து விட்டு பிரிந்த கடைசிநாளன்று தன் வாழ்வில் திருமணம் என்பதே கிடையாது என்று சொன்னானாம்.. அத்துடன் நிறுத்தாமல் அதற்கு காரணம் தனஞ்ஜெயன்தான் என்று விரல் நீட்டிக் குற்றம் சாட்டி விட்டுப் போய் விட்டானாம்..

அந்த நண்பன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினானோ.. இல்லையோ.. தனஞ்ஜெயன் அந்த சொல்லில் உறுதியாக நின்று விட்டான்.. இந்திராதேவி எதைச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்கிறவன்.. திருமணம் என்ற சொல்லை மட்டும் காதில் போட்டுக் கொள்ளாமல் அழிச்சாட்டியம் பண்ணினான்..

“காலேஜீக்குப் போனா.. படிச்சோமா.. டிகிரியை வாங்கினோமான்னு இருக்கனும்.. அதைவிட்டுட்டு கூடப் படிச்சவன் காதலிலே தோத்துப் போனான்.. அதனால எனக்குக் கல்யாணம் வேணாம்ன்னு இருக்கக் கண்டோமா..? ஏண்டா.. அவன்தானடா காதலிச்சான்..?”

“அதில ஏம்மா உங்களுக்கு இம்புட்டுச் சந்தேகம்..?”

“பின்னே..? அவன் காதலில் தோத்துப் போனா அவன் தானடா கல்யாணம் வேணாம்ன்னு சொல்லனும்..? அதை விட்டுட்டு என்ன அலுவலுக்கு நீ கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிற..?”

“அவன் காதலில் தோத்துப் போறதுக்கு நான் தானேம்மா காரணம்..?”

“இப்படியே பேசிக்கிட்டு இரு.. ஏண்டா தனஞ்ஜெயா இப்படி இருக்கே..? நீயென்ன அவன் காதலியை அவனை விட்டுட்டு ஓடுன்னு சொல்லி ஓட்டியா விட்ட..?”

“ஏறக்குறைய அப்படித்தான்ம்மா..”

“என்னடா மகனே இப்படிச் சொல்ற..?”

“ஆமாம்மா.. அன்பழகன் இருக்கானே…”

“அவன் யாருடா..?”

“அவன்தான்மா.. என்னால காதலில தோத்துப் போனவன்..”

“அந்தக் கட்டையில போற கடன்காரன் அவன்தானா..?”

“ப்ம்ச்.. நான் பண்ணின வேலையாலே அவன்தான் பாதிக்கப் பட்டான்ம்மா..”

“டேய்.. டேய்.. அவன் பேசின பேச்சில.. நீயும்..  உன்னால நானும் தாண்டா தம்பி பாதிக்கப்பட்டு நிற்கிறோம்..”

“இல்லேம்மா.. சித்ராகிட்ட..”

“இவயாருடா.. சித்ராங்கி..?”

“அன்பழகனோட காதலிம்மா..”

“என்ன கருமமாவோ இருந்துட்டுப் போகட்டும்.. அவகிட்ட உனக்கென்ன பேச்சு..?”

“அவதான்ம்மா என்கிட்டப் பேசினா..”

“என்ன கழுதைக்காம்..?”

“அன்பழகனோட பர்ஸில சின்ன வயசுப் பெண்ணோட படம் இருந்துச்சாம்.. அது யாருன்னு கேட்டா..”

“அதை அவன்கிட்டத்தானே கேட்டிருக்கனும்..? உன்கிட்ட வந்து வேலை மெனக்கெட்டு ஏண்டா கேட்டு வைச்சா..?”

“நான்தானேம்மா அன்பழகனோட ரூம்மேட்..”

“அந்தக் கொடுமைக்கு நீ ஹாஸ்டலில தங்கிப் படிக்காம தனிவீட்டை வாங்கிப் படிச்சிருக்கலாம்.. நம்ம கிட்ட இல்லாத பணமா..?”

‘செய்திருக்கலாமோ..?’ தனஞ்ஜெயன் பெருமூச்சு விட்டான்..

செய்யாமல் விட்டதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன..? அவன் எதற்காக கல்லூரி விடுதியில் அன்பழகனுடன் ஒரே அறையில் தங்க வேண்டும்..? அந்த அன்பழகன் எதற்காக அவனுடைய ‘ஆட்டோகிராப்’ காதல் கதைகளை தனஞ்ஜெயனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்..? தனஞ்ஜெயன் எதற்காக சித்ரா கேட்டவுடன் யதார்த்தமாக அவற்றைச் சொல்லி விட வேண்டும்..? சித்ரா எதற்காக அதுதான் சாக்கு என்று அன்பழகனைக் கழட்டி விட்டுவிட்டு.. அப்பாம்மா பார்த்திருந்த அமெரிக்க மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி வெளிநாட்டுக்குப் பறக்க வேண்டும்..?

விதி வலியது..!

“நீ வேறடா.. அவளே இவனைக் கழட்டி விட எந்தக் காரணம் சிக்கும்ன்னு தேடிக்கிட்டு இருந்தா.. நீ வசமா மாட்டின.. இல்லேன்னா பாப்பாவுக்கு இவனைப் பற்றி எதுவும் தெரியாதாக்கும்..?”

தனஞ்ஜெயனுடன் படித்த இன்னொரு நண்பன் சொன்னான்.. அதை மற்றொருவன் ஆமோதித்தான்..

“அதுக ரெண்டுமே விவரமானதுகடா.. சித்ராவுக்கு அமெரிக்கமாப்பிள்ளை கிடைக்கிற வரைக்கும் அவ அன்பழகனைப் பற்றித் தூண்டித் துருவினாளா..? வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சதும்.. அவமேல குற்றமில்லாம தப்பிக்கக் காரணத்தை உண்டாக்கிக்கிட்டா.. அவ்வளவுதாண்டா..”

நண்பர்கள் பலரும் அதையேதான் சொன்னார்கள்.. தனஞ்ஜெயன் கேட்டுக் கொள்ளவில்லை.. அவன் மனதில் ஒரு குற்ற உணர்வு தங்கி விட்டது..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link