Chapter 02

0Shares

“இந்தப் பொண்ணு ஸ்கூல் யூனிபார்மில இருக்குதே தனஞ்ஜெயன் இது யாரா இருக்கும்..? ஒருவேளை அன்பழகனின் தங்கையாக இருக்குமோ..?”

போட்டோவைக் காட்டாமல் சித்ரா கேட்டு வைத்த போது.. நான்கு வருடங்களுக்கு மேலாக அன்பழகனைக் காதலிக்கிறவளுக்கு அவனுக்குத் தங்கை இல்லை.. தம்பிதான் இருக்கிறான் என்ற விவரம் கூடவா தெரியாது என்ற கேள்விதான் தனஞ்ஜெயனின் மனதில் முதலில் எழுந்தது.. இருந்தாலும் அவன் அதை மறைத்துக் கொண்டு நண்பனின் காதலி என்பதால்..

“எந்தப் போட்டோங்க..? அவன் நாலாம்கிளாஸில் படிக்கிறப்ப ரோஸிங்கிற பாப்பாவுக்கு ரூட் விட்டானே.. அந்தப் போட்டோவா..?” என்று கேட்டு வைத்தான்..

“இல்லேங்க.. இது வேற போட்டோ..” சித்ராவின் முகம் லேசாக மாறியது..

“வேற போட்டோன்னா எதுவா இருக்கும்..? அவன் ஆறாம் கிளாஸ் படிக்கிறப்ப.. ஆஷான்னு ஒரு குட்டிப் பொண்ணு பின்னால சுத்தினதா சொன்னானே.. அந்தப் போட்டோவா..?” தனஞ்ஜெயன் விளக்கம் கேட்டான்..

“ஊஹீம்..” சித்ராவின் முகம் இறுக ஆரம்பித்தது..

“அதுவுமில்லைன்னா.. அவன் எட்டாம் கிளாஸ் படிக்கிறப்ப எர்ணாகுளத்தில இருந்து வந்து படிச்ச சாந்தினிகிட்ட சரண்டர் ஆகியிருந்ததாச் சொன்னானே.. அந்தப் போட்டோவாங்க..?” தனஞ்ஜெயன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்..

சித்ரா கடினமான முகத்துடன் தலையை இடம் வலமாக அசைத்தாள்..

“இதுவும் இல்லேன்னா.. அவன் பத்தாவதிலே பார்த்து வைச்ச பக்கத்து வீட்டு பங்கஜத்தோட போட்டோவாத்தான் இருக்கும்ங்க..” உறுதி படச் சொன்னான் தனஞ்ஜெயன்..

“ப்ம்ச்..” சூள் கொட்டினாள் சித்ரா..

“பங்கஜமும் இல்லேன்னா யாரா இருக்கும்..? அவன் ப்ளஸ் டூவில ஒன்னுக்கு மூணு பொண்ணு பின்னாலே சுத்தினானாம்.. இரண்டை கரெக்ட் பண்ண முடியலையாம்.. மூணாவது திரும்பிப் பார்த்துச்சாம்.. அதுவா இருக்குமோ..?” சித்ராவிடமே தனஞ்ஜெயன் கேட்டு வைத்தான்..

“ஆக.. உங்க பிரண்ட்.. நாலாம் கிளாஸில இருந்து காதலிக்க ஆரம்பிச்சு.. இரண்டு வருசத்துக்கு ஒரு பொண்ண மாத்திக்கிட்டு இருந்திருக்காரு.. காலேஜ் வந்தவுடனே கேணத்தனமா நான் கிடைச்சிட்டேன்னு அடக்கி வாசிச்சிருக்காரு.. அப்படித்தானே..?”

அன்பழகனை விட்டு விட்டு தனஞ்ஜெயனிடம் குமுறியவள் அன்றே கல்லூரிவிடுதியை காலி செய்து விட்டு ஊரைப் பார்த்துப் போய் விட்டாள்.. தேர்வை மட்டும் அண்ணன்.. அப்பா என்ற படைபலத்தோடு வந்து எழுதிவிட்டுப் போனாள் என்பது வேறு விவரம்..

இதில் தனஞ்ஜெயன் தலைமுடியைப் பிய்த்துக் கொண்ட ஒன்று எது என்றால்.. கடைசிவரை சித்ரா கையிலிருந்த போட்டோவை அவன் கண்ணிலேயே காட்டவில்லை என்பதுதான்..

“போட்டோவாவது.. ஒன்னாவது.. அவபோட்டு வாங்கியிருக்காடா மச்சான்..” என்றான் தனஞ்ஜெயனின் நண்பன்..

“அது சரிடா.. அவ எதுக்காகடா அன்பழகன்கிட்டப் போடவேண்டிய சண்டையை உன்கிட்டப் போட்டா..? அதுக்கே அவளை வீடு கட்டி அடிக்கனும்.. அவன்கிட்டப் போனா அவன் அமெரிக்க மாப்பிள்ளையைப் பத்தி வண்டை.. வண்டையாக கேட்பானில்ல.. அதுக்காகத்தான் அம்மணி உன்கிட்டப் பிலிம் காட்டிட்டு ஓடிப் போயிருச்சு..” என்றான் இன்னொருவன்..

எது எப்படியோ.. தேர்வு முடிந்து.. நண்பர்குழாம் பிரிந்து போன கடைசி நாளில்.. தலைமூடி கலைந்து.. கண்கள் சிவக்க.. தேவதாஸ்போல தனஞ்ஜெயனை வெறித்து வெறித்துப் பார்த்த அன்பழகன் சூளுரைத்தான்.. 

“என் காதலைக் கவுத்துட்டல்ல.. நீயெல்லாம் நல்லா வருவேடா.. போடா டேய்.. உன் ஜமீன் பரம்பரைக்கேத்த பெரிய இடத்துப் பொண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழு.. நான் மட்டும் கடைசி வரைக்கும் கல்யாணம் இல்லாமலே வாழ்ந்துட்டுப் போறேன்..”

“அன்பு…”

“என் பேரைச் சொல்லிக்கூடக் கூப்பிடாதே.. துரோகி.. நான் உனக்கு என்னடா கெடுதல் பண்ணினேன்..? எதுக்காகடா என் காதலில மண்ணை அள்ளிப் போட்ட..?”

“இப்படியாகும்ன்னு நான் நினைக்கலைடா..”

“அவளை உண்மையாகக் காதலிச்சேண்டா.. அவகிட்ட என் மேட்டரையெல்லாம் ஓபன் பண்ணி ஓட்டி விட்டுட்டியேடா பாவி.. என் வயிற்றெரிச்சல் உன்னைச் சும்மா விடாதுடா.. என் வாழ்க்கையிலே இனி கல்யாணம் என்கிற நிகழ்வு வரவே வராதுடா..”

அவன் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.. தனஞ்ஜெயன் அதைப் பிடித்துக் கொண்டு திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டான்.. இந்திராதேவியும் எத்தனையோ விதமாக எடுத்துச் சொல்லிப் பார்த்து விட்டாள்.. தனஞ்ஜெயன் அசைந்து கொடுக்கவில்லை.. முப்பத்தி மூன்று வயது வரைக்கும் திருமணத்தைத் தள்ளிப் போட்டு பிடிவாதமாக நின்று விட்டான்..

அவனுடைய இருபத்தி ஐந்தாம் வயதிலிருந்து அவனுக்குப் பேசப்பட்ட பெண்கள் அனைவருக்கும் திருமணமாகி.. தாமரை சொன்னதைப் போல… கையில் ஒன்றும்.. இடுப்பில் ஒன்றுமாக உலா வந்து கொண்டிருந்தார்கள்.. தனஞ்ஜெயன் மட்டும் யாரையும் கண்டு கொள்ளாமல் வீடு உண்டு.. தொழில் உண்டு.. என்று தன் வாழ்க்கைப் போக்கை அமைத்துக் கொண்டான்..

ரகுநாதன் விட்டுச் சென்ற நூறை.. தனஞ்ஜெயன் ஆயிரமாக்கிக் காட்டியதில் அவனுடைய அன்னையின் மனம் நிறைவiந்து விடவில்லை.. அவள் மாலையும்.. கழுத்துமாக தன் மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்.. ஏங்கினாள்.. 

இன்று அந்த ஏக்கம் நிறைவேறிவிட்டது.. தனஞ்ஜெயனுக்குத் திருமணமாகி மாலையும் கழுத்துமாக வந்து நின்று விட்டான்..

‘வந்து நின்னு என்ன பண்ண..?’

இந்திராதேவியின் மனதை ஏக்கம் சூழ்ந்தது.. அவள் மகனுக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினாள்தான்.. இப்படியொரு அவசரத் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லையே.. இருந்தும் அதையும் அவள்தான் நடத்திக்காட்டினாள்.. அவளுக்கு வேறு வழி தெரியவில்லை..

“யாருன்னு தெரியலைம்மா.. நம்ம ஐயாவோட காருக்கு முன்னாலே குடிச்சுட்டு விழுந்துட்டான்..” 

கணக்குப்பிள்ளை விவரம் சொன்னபோது இந்திராதேவி பதறிவிட்டாள்.. 

“என்ன சாமி ஆச்சு..?”

ஒன்றும் ஆகவில்லையென்றார் அந்த ரங்கசாமி..

“லேசாத்தான் கார் இடிச்சிருக்கு.. அவன் குடி போதையிலே மயங்கி விழுந்துட்டான்.. நம்ம ஐயா ரோட்டோரமா இழுத்துப்போட்டுட்டுப் போகாம.. காருக்குள்ளே தூக்கிப் போட்டுக்கிட்டு போயி ஆஸ்பத்திரியில சேர்த்திட்டாரு..”

“என் மகன் அப்படித்தான் இருப்பான் சாமி.. அது எப்படி கண்ணுக்கு முன்னாலே ஒருத்தன் மயங்கிக் கிடக்கிறப்ப.. கண்டும் காணாம அவனை ரோட்டில் விட்டுட்டுப் போறது..?”

“ம்ஹீம்.. இப்படிப் பாவம் பார்த்ததோட பலன்தான் இது..?”

“எது சாமி..?”

“அந்தாளோட மச்சினனாம்.. எப்படி என் தங்கச்சி புருசன் மேலே காரை 

விட்டு மோதலாம்ன்னு ஆஸ்பத்திரிக்கு வந்து தையத்தக்கத்தையான்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாரு.. “

“அடக்கவுடளே..! நல்லதுக்கே காலமில்லை சாமி..”

“அதைத்தான்ம்மா நானும் சொல்றேன்.. அங்கேயிருந்த டாக்டர்க.. அடி எதுவும் படல… அந்தாளு குடி மயக்கத்திலதான் மயங்கி கிடக்கான்னு சொன்னாங்க.. அதைக் கேட்டதும் அந்தாளோட மச்சினன் போட்டாரே ஒரு போடு..”

“என்ன சொன்னாரு சாமி..”

“எந்தங்கச்சி புருசனுக்கு குடிப் பழக்கமே இல்ல.. நீங்க உங்க குத்தத்தை மறைக்கிறதுக்கு மாத்திச் சொல்றீங்கன்னு சொல்லிட்டாரு..”

“அதை அந்தாளோட தங்கச்சி புருசன்கிட்டயே கேட்கச் சொல்ல வேண்டியதுதானே சாமி..?”

“சொன்னோமே.. அந்தக் குடிகாரன் கண்முழிச்சதும் அடிச்சான் பாருங்க.. ஒரு அந்தர் பல்ட்டி..”

“அவன் என்னத்தச் சொன்னான்..?”

“மாமா.. எனக்கு ஊத்திக் கொடுத்ததே இவருதான் மாமான்னு நம்ம ஐயா பக்கம் கையைக் காட்டிட்டான்..”

“என்னது…?” இந்திராதேவிக்கு தூக்கி வாரிப் போட்டது..

“அட சண்டாளா..! என்ன கழுதைக்கு என்மகன் அந்தாளுக்கு ஊத்திக் கொடுக்கப் போறானாம்..? அவன் பொண்ணக் கிண்ணக்கட்டிப்புடணும்னு என் மகன் அந்தாளக் கணக்குப் பண்ணப் பார்த்தானாமா..?” மனம் தாளாமல் கேட்டாள்..

“அப்புடித்தான் அந்தாளு சொல்லிப்புட்டான்ம்மா..”

கணக்குப்பிள்ளை சொன்னபோது திகைத்து விட்டாள் இந்திரா.. 

இப்படிக்கூட உலகத்தில் சொல்வார்களா என்ன..?

“என்ன சொல்றீங்க சாமி.. நிஜமாவே அந்தாளு அப்படித்தான் சொன்னானா..?”

“ஏறக்குறைய அப்படித்தான்… ஒரு சின்ன வித்தியாசம் என்னன்னா… அந்தாளோட பொண்ணக் கட்டிக்கிறதுக்காக கணக்குப் பண்ணலையாம்..”

“பின்னே..?”

“ஆஸ்பத்திரிக்கு வந்து சத்தம் போட்டாரே.. அந்தாளுக்கு தங்கச்சியைக் கட்டிக் கொடுத்த மனுசன்..”

“ஆமாம்.. அந்தாளுக்கு என்ன..?”

“அந்த மச்சினனோட மகளைக் கட்டனும்னுதான் இவனை நம்ம ஐயா கணக்குப் பண்ணினாராம்..”

“இது என்ன சாமி கூத்தா இருக்கு..? எங்கேயோ போற மங்காத்தா.. என் வீட்டில கொஞ்சம் தங்காத்தான்னு. இவனோட அழகு மச்சினன் மகளக் கட்டிக்கனும்னு என் மகன் இவனக் கவுத்தானா..? காலக் கொடுமை சாமி..”

“இன்னொரு வித்தியாசம்ங்கம்மா..”

“நீங்க என்ன சாமி.. ஆறில இருந்து அறுபது வரைக்கும் வித்தியாசத்தை அள்ளி விடுவீங்க போல..”

“நான் என்னம்மா செய்யட்டும்.. நடக்கறது அப்படி.. அப்புறம் இன்னொன்னும்மா..”

“இன்னும் என்ன சாமி..?”

“இந்த வித்தியாசம் அறுபதோடு நிக்காது போல இருக்கும்மா.. அது பாட்டுக்கு அனுமார் வால் போல நீண்டுக்கிட்டேப் போயி அறுபதாயிரம் வித்தியாசத்தில வந்து நின்னுரும் போல இருக்கும்மா..”

“அடக்கடவுளே..!”

“ஆமாம்மா.. அந்தாளோட மச்சினனை அழகுன்னு எடுத்த எடுப்பில சொல்லிர முடியாதுதான்.. கொஞ்சம் அப்படி.. இப்படி பல கோணத்தில பார்த்து வைச்சா.. கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கிறவருதான்..”

“இப்ப இது தேவையா சாமி..? அந்த மச்சினர் எப்படி இருந்தா நமக்கென்ன..?”

“அவரு எப்படி இருந்தாலும்.. அவரோட பொண்ணு ரொம்ப அழகா இருக்குதுங்கம்மா..”

“அந்தப் பொண்ண நீங்க எங்க பார்த்தீங்க..?”

“போட்டோவிலதான்..”

“போட்டோவிலயா..?”

“ஆமாம்மா.. குடிச்சிட்டு விழுந்த மனுசன் கையில ஒரு பையி இருந்துச்சு.. அந்தப் பையிலதான் 

அந்தப் பொண்ணோட போட்டோ.. ஜாதகம்.. லொட்டு லொசுக்கெல்லாம் இருந்துச்சு..”

“அவன் பையை நீங்க ஏன் குடைஞ்சீங்க..?”

“நான் ஏன்ம்மா குடையப் போறேன்..? நாந்தான் அந்தாள அப்படியே அம்போன்னு விட்டுப்புட்டு 

வீட்டைப் பாத்துப் போகலாம்ன்னு ஐயாவப் போட்டுக் குடைஞ்சிக்கிட்டு இருந்தேனே.. ஐயாதான் அவன் வீட்டுக்கத் தகவல் சொல்லனும்னு அவன் பையைக் குடைஞ்சாரு.. ஏம்மா.. நீங்களே சொல்லுங்க.. குடிச்சிட்டு விழுந்து வைச்சவனை ஆஸ்பத்திரியிலே சேர்த்ததே அதிகம்.. அதுக்கும் மேலே அவன் கண்ணை முழிச்சு வீட்டைப் பாத்துப் போகட்டும்ன்னு விட்டுட்டுப் போகாம.. அவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்து வரவைக்கனு மான்னேன்.. இப்பப் பாருங்க.. வந்த மச்சினன்.. நம்ம ஐயாவப் பாராட்டி மெடலா குத்தினாரு..? அத்தனைக்கும் காரணம் நம்ம ஐயாதான்னு சொல்லிப்புட்டாரா இல்லையா..?”

இந்திராதேவி சிந்தனையில் ஆழ்ந்தாள்.. தேவையில்லாத பிரச்னை வந்து முளைத்திருக்கிறது என்றாலும்.. அதைப் பற்றி அவளோ.. கணக்குப் பிள்ளையோ கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை என்பது அவளுக்கும் தெரியும்.. ரங்கசாமிக்கும் தெரியும்..

தனஞ்ஜெயன் பார்த்துக் கொள்வான்.. அவன் சந்திக்காத தடைகளா..? அவன் எதிர் கொள்ளாத போராட்டமா..?

இருப்பினும் இப்போது வந்திருப்பது மிக நூதனமான பிரச்னை இல்லையா..? எதற்கும் எதற்கும் இணை கூட்டுவது..? வழியோடு போனவனின் காருக்கு முன்னால் குடித்து விட்டு விழுந்தவனைக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தால்.. அதற்கு அவன் நன்றி சொல்லாமல் அவன் வீட்டுப் பெண்ணுக்காக தனஞ்ஜெயன் அவனைக் குடிக்க வைத்தான் என்று சொல்லி விடுவதா..?

இதுபோன்ற வழக்கை அவள் எங்கேயும் கேட்டதில்லை..

“அந்தப் பொண்ணோட போட்டோவ தனஞ்ஜெயன் பார்த்தானா..?”

“வில்லங்கமே அங்கேயிருந்துதானம்மா ஆரம்பிச்சுச்சு..”

“ஏன் சாமி..?”

“அவன் வைச்சிருந்த பையி நழுவி அவன் ரோட்டில விழுந்தப்ப ரோட்டோர மரத்து வேரில மாட்டிக்கிச்சு.. நாங்க இவனத் தூக்கிப் போட்டப்ப.. இவன் கையில பிடிச்சிருந்த பையும் சேர்ந்து வந்திச்சு.. சும்மாவும் வரல.. மரத்தோட வேரில மாட்டியிருந்ததினால கிழிஞ்சு வந்திருச்சும்மா..”

“சுத்தம்..”

“ஐயா இதில இருந்த அத்தனயையும் ஆராய்ச்சி பண்ணிட்டு.. அட்ரஸை நோட் பண்ணிட்டு.. மொத்தத்தையும் மடிச்சு சட்டைப் பையில் திணிச்சிட்டாரு..”

“அந்தக் குடிகாரனோட சட்டைப் பையிலயா..?”

“அப்படிச் செஞ்சிருந்தாத்தான் வினையே வந்திருக் காதே.. ஐயா அதைச் செய்யாம தன்னோட சட்டைப்பையில அந்தப் பொண்ணோட போட்டோவையும்.. ஜாதகத்தையும் திணிச்சிட்டாரும்மா..”

“அப்படிப் போடு..”

இந்திராதேவிக்குச் சிரிப்பு வந்தது.. போட்டோவுக்கும் தனஞ்ஜெயனுக்கும் ஏழாம் பொருத்தம் என்று ஆகிவிட்ட பின்பும் அவன் அந்த விசப் பரிட்சையை மேற் கொள்ளலாமா..?

“அந்தக் குடிகாரன் அதையே காரணமா சொல்லிட்டான்..”

“எப்படிச் சொன்னான்..?”

“அவன் மச்சினன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கப் போனானாம்..”

“இதுவும் கதையா..?”

“இல்லையாம்மா.. உண்மையிலேயே அந்த முகரக் கட்டையை மாப்பிள்ளை வீட்டைப் பாக்கிறதுக்குத்தான் அந்த மச்சினன்காரரு அனுப்பி வைச்சிருக்காரு..”

“மாப்பிள்ளை வீட்டைப் பாக்கப் போனவன் குடிச்சுட்டா மாப்பிள்ளை வீட்டைப் பாக்கப் போனான்..?”

“குடிக்க வைச்சதே அந்த மாப்பிள்ளை தானாம்மா..”

“என்னது..?!”

இந்திராதேவிக்கு தலையைச் சுற்றியது.. எதனால் கணக்குப்பிள்ளை.. ஆறிலிருந்து அறுபதாயிரம் வரை வித்தியாசங்கள் நீளும் என்று ஆருடம் சொன்னாரென்று அப்போது அவளுக்குப் புரிந்தது..

இப்படி எந்த வரையறைகளுக்கும் ஆட்படாமல் எக்குத் தப்பாக திசை திரும்பிக் கொண்டிருந்தால் வித்தியாசங்கள் அனுமார்வாலாக நீளாமல் என்ன செய்யும்..?

“ஆமாங்கம்மா.. அந்த மச்சினரோட பொண்ணுக்காக பார்க்கப் போன மாப்பிள்ளை மொடா குடிகாரன்தான்.. தோப்பு.. துரவுன்னு வசதி வாய்ப்பா இருக்கிறவன்தான்.. யாருங்கறிங்க.. நம்ம பக்கத்து ஊரு பரமசிவத்தோட பையன்தான்..”

“பரமசிவத்தோட பையனா..?”

இந்திராதேவிக்கு அந்த பரமசிவத்தைத் தெரியும்.. அவர் ஒருவகையில் ரகுநாதனுக்கு பங்காளி முறையாக வேண்டும்.. அவருடைய மகன் பட்டப் படிப்பை முடித்து விட்டு.. வயலைப் பார்த்துக் கொள்கிறேன் பேர்வழியென்று வேறு எதை எதையோ பார்த்துக் கொண்டிருப்பதாக உறவினர் வட்டாரங்களில் பேசிக் கொள்வதை இந்திராதேவி கேட்டிருக்கிறாள்..

“ஆமாங்கம்மா.. அதே பையன்தான்..”

“அவனுக்குப் பொண்ணுக் கொடுக்கப் போனவங் களையா நம்ம தனஞ்ஜெயனோட காரு இடிச்சுச்சு..?”

“நீங்க ஒருத்தங்க போதுங்கம்மா.. நம்ம ஐயாவுக்கு எதிரா வேற சாட்சியே வேணாம்.. ஏம்மா..? நம்ம ஜயாவோட காரா அவனை இடிச்சுச்சு..? அவன்தான் நம்ம ஐயாவோட காரில இடிச்சான்ம்மா..”

ரங்கசாமி ஆதங்கத்துடன் விளக்கம் சொன்னார்.. பொழுது சாய வீட்டுக்குப் போக வேண்டிய மனிதர் பேசாமல் வீட்டுக்குப் போயிருக்க வேண்டாமோ..? தனஞ்ஜெயனின் காரைப் பார்த்ததும் கார் சவாரிக்கு ஆசைப்பட்டு அதில் காலை வைக்கலாமா..?

‘இந்நேரத்துக்கு வீட்டில சாப்பிட்டுட்டு.. யாரோ.. எவரோன்னு தூங்கித் தொலைச்சிருக்கலாம்..’

அவர் கவலை அவருக்கு..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link