Chapter 03
தாமரை பண்ணிய அழிச்சாட்டியங்களில் தலை வேதனை கொண்ட இந்திராதேவிக்கு.. புது மருமகளுக்கு வந்திருந்த காய்ச்சலின் மீது கோபம் வந்தது..
அவளே வன்பாடுபட்டு.. இல்லாத பஞ்சாயத்தை உருவாக்கி.. கூட்டாத பஞ்சாயத்தை கூட்ட வைத்து.. தனஞ்ஜெயனுக்குத் திருமணத்தை நடத்தி வைத்திருக் கிறாள்.. அவசரத் திருமணமாக இருந்தாலும் ஒரு குறைவுமில்லாமல் சுற்றுப்பட்டியையும் கலக்கிய ஆடம்பரத் திருமணம் அது..
அப்பேற்பட்ட திருமணம் முடிந்து வலது காலை எடுத்து வைத்து புகுந்த வீட்டிற்குள் நுழைந்த மருமகள் பூஜையறையில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு வெளியே வந்தவுடன் கடமை முடிந்தது என்று மயக்கம் போட்டு விழுந்து வைக்கலாமா..?
சுமித்ரா மட்டும் காய்ச்சல் கண்டு மயங்கி விழாம லிருந்திருந்தால்.. தாமரை போன்ற பெண்மணிகளின் வயிற்றெரிச்சல் நிறைந்த வாய்மொழிகளைக் கேட்டிருக்க வேண்டிய தேவை இந்திராதேவிக்கு இருந்திருக்காதே..
அது தனஞ்ஜெயன் முடிவு பண்ணிய திருமணம் என்றாலும் அதற்கு வெளியே தெரியாத தூண்டுகோலாக இருந்தது இந்திராதேவிதான்..
பக்கத்து ஊர் பரமசிவத்தின் மகனுக்கு பெண் கேட்ட இடத்திலிருந்து மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தவன் தனஞ்ஜெயனுடைய காரின் முன்னால் விழுந்து வைத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு.. அத்தனைக்கும் காரணம் தனஞ்ஜெயன்தான் என்று அவன்மீது அடாது பழி சுமத்தியதிலிருந்து அந்தப் பிரச்னை ஆரம்பமானது..
“அம்மா.. இவன் மாப்பிள்ளை வீடு பார்க்கப் போயிருக்கான்.. அங்கிருந்தவங்க இவனுக்கு ஆக்கிப் போட்டு உபசரணை பண்ணி மாப்பிள்ளைப் பையனக் கண்ணில காட்டாம ஊருக்கு தாட்டி விட்டுட்டாங்க.. இவனும் வீடு பெரிய வீடு.. ஆளுக பெரிய மனுசங்கன்னு ஊரப் பாத்து போய்க்கிட்டு இருந்திருக்கான்.. வழியில புல்லட்டில அந்த மாப்பிள்ளை பையன் வந்திருக்கான்.. அவன போட்டோவில பாத்தோமேன்னு இவன் நிற்க.. யாருடா நீயின்னு அவன் கேக்க.. பேச்சு வார்த்தை ஆரம்பமாகியிருக்கு.. பொண்ணு கொடுக்க வந்தவன்னு தெரிஞ்சதும் மாப்பிள்ளப் பையன் குஷாலாகிட்டான்.. அவனுக்குத் தெரிஞ்ச வகையில அவன் விருந்து உபசாரம் பண்ண வேணாமா..? அதனால.. பக்கத்திலதான் நம்ம தோப்பு.. நீங்க வந்தா தோப்பையும் பாத்த மாதிரி இருக்கும்.. தண்ணியையும் குடிச்ச மாதிரி இருக்கும்ன்னு சொல்லியிருக்கான்.. இந்த மூஞ்சி.. அந்தத் தண்ணிய இளநித் தண்ணின்னு நினைச்சுக்கிட்டு பின்னாலேயே போயிருச்சு..”
“ஐயோ பாவம்.. மனுசருக்கு குடிப் பழக்கம் இல்ல போல..”
“நீங்க வேறம்மா.. அதெல்லாம் மூச்சு முட்டக் குடிக்கிறவன்தானாம்.. ஆனா.. மாப்பிள்ளை வீடு பாக்கப் போன இடத்தில அதையெல்லாம் செய்வானா..? இவன் பாவம்.. அடக்க ஒடுக்கமாத்தான் இருந்திருக்கான்.. அந்தக் கழுதைப்பயதான் தோப்புக்குப் போனதும்.. சரக்கையும்.. இளநியையும் கலந்து மட்டவாங்கு வாங்க வைச்சிருக்கான்..”
“இந்தக் கருமமெல்லாம் நமக்கெதுக்கு சாமி..?”
எல்லாக்கதைகளையும் உணக்கையாக ‘ஊம்’ கொட்டிக் கேட்டு விட்டு கடைசியில் இந்திராதேவி இப்படிச் சொன்னதில் தூக்கமின்றி நின்ற கணக்குப் பிள்ளை நொந்து நூலானார்..
‘இவுககிட்ட கணக்குப்பிள்ளை உத்தியோகம் பாக்கிறதுக்குப் பதிலா கழுதை மேய்க்கப் போயிரலாம்..’
அந்தக் கழுதை மேய்த்தலில் இது போன்ற கைநிறைய சம்பளமும்.. ஜமீன் வீட்டுக் கணக்குப் பிள்ளையென்ற பட்டமும் கிடைக்காதென்பதால்.. அந்த யோசனையை பெருமூச்சுடன் துரத்தி அடித்து விட்டு விதியே என்று இந்திராதேவியின் முகம் பார்த்தார்..
“நீங்க சொன்னா சரிதான்ம்மா.. இந்த கருமமெல்லாம் நமக்கு எதுக்கு..? அப்ப நான் வீட்டுக்குப் போகட்டுங் களா..?”
தூங்காத விழிகள் இரண்டையும் இமை சிமிட்டி அடக்கியபடி அவர் கேட்க.. அதைக் கொஞ்சம் கூடக் கவனிக்காமல் இந்திராதேவி பேச்சே குறியாக இருந்தாள்..
“சொல்றதை விளங்கச் சொல்லாம வீட்டுக்குப் போகனும்னு பறந்தா எப்படிச் சாமி..?”
அப்படி அவள் கேட்டபோது மணி நள்ளிரவு இரண்டு.
அந்த நேரத்தில் ஒரு வயதான மனிதன் தூக்கம் சுழட்டும் கண்களுடன் வீட்டுக்குப் போக நினைத்தால் அது பறப்பதாக ஆகி விடுமா..?
இந்த நியாயத்தை ஜமீன் வீட்டு அம்மாவிடம் கணக்குப் பிள்ளையான அவர் எப்படி கேட்டு வைப்பார்..?
ஆதலினால் தழுவ வந்த தூக்கத்தை.. போய்விடு என்று மானசீகமாக கெஞ்சியபடி.. இந்திராதேவி கேட்ட விளக்கத்தை அவர் கொடுத்தார்..
“அம்மா.. குடிக்க வைச்சவன் அந்த மாப்பிள்ளப் பயதான்னு காட்டிக் கொடுக்க இந்த களவாணிப் பயலுக்கு மனசில்லம்மா.. சரக்கு வாங்கிக் குடிச்ச நன்றி விசுவாசம் ஒருபக்கம்.. இன்னொரு பக்கம்.. குடிகார மாப்பிள்ளைக்கு இவனோட மச்சினரு பொண்ணக் கட்டிக் குடுக்க மாட்டாரு..”
“எப்படிக் கொடுப்பாரு..?”
“அதான்.. இந்தாளு பிளேட்டை மாத்திப் போட்டுட்டான்.. இந்தக் கல்யாணம் நடந்தா இவன் பேரில ஐஞ்சு ஏக்கர் புஞ்சையை எழுதி வைக்கிறேன்னு அந்த பரமசிவம் மகன் சரக்கு மேல அடிச்சு சத்தியம் பண்ணித் தந்திருக்கானாம்..”
“இது வேறயா..? கிழிஞ்சது போங்க.. அந்தப் பரமசிவம் மகனுக்கு பொண்ணப் பிடிச்சிருக்கும் போல..”
“பிடிக்காம எப்படிம்மா இருக்கும்..? பொண்ணுக பக்கமே திரும்பிப் பாக்காத நம்ம ஐயாவே… அந்தப் பொண்ணோட போட்டோவப் பாத்துட்டு.. அழகா இருக்குன்னாரே..”
“தனாவா அப்படிச் சொன்னான்..? இது எப்ப..?”
இந்திராதேவிக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவளுடைய அருமந்தப் புதல்வன்.. பெண்களையே திரும்பிப் பார்க்காத புத்திரசிகாமணி.. திருமணமே வேண்டாமென்று சொல்லும் நவின ரிஷியசிருங்கர்.. தனஞ்ஜெயனா இப்படிச் சொன்னான்..?
“ஆமாங்கம்மா.. ஆமாம்..” என்றார் ரங்கசாமி..
“அந்தப் பொண்ண அந்த அளவுக்கு அவனுக்குப் பிடிச்சிருக்குதா சாமி..?” ஆவலுடன் கேட்டாள் இந்திராதேவி..
“அதில்லங்கம்மா.. இவரு சொன்ன அழகாயிருக்கே வேற..”
“வேறவா..?”
இந்திராதேவி சுரத்தில்லாமல் கேட்டாள்.. அவள் மகனாவது ஒரு பெண்ணின் அழகில் மயங்குகிறதாவது..
‘ம்ஹீம்..’
இந்திராதேவியின் பெருமூச்சை அறிந்தும் அறியாதவரைப் போல.. எதற்காக தனஞ்ஜெயன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு அழகாய் இருக்கிறதென்று சொன்னான் என்ற விளக்கம் தர களத்தில் இறங்கினார் ரங்கசாமி..
“ஐயா அந்தப் போட்டோவ பார்த்தார்.. இந்தக் குடிகாரன் உளறினதக் கேட்டார்.. பாவம் சாமி இந்தப் பொண்ணு.. இத்தனை அழகாய் இருக்கு.. இதுக்கு பரமசிவம் மகனை விட்டா வேற மாப்பிள்ளை கிடைக்கலியான்னு கேட்டுக்கிட்டே சட்டைப்பையில போட்டோவை வைச்சுக்கிட்டார்..”
“ஓஹோ..”
“இத.. இந்தக் குடிகாரப்பய அரைகுறை போதையில தெள்ளத் தெளிவாக கேட்டிருக்கான்.. அதையே மாத்தி யோசிச்சு.. அவனோட மச்சினர்கிட்ட.. உன் மாமன் பொண்ணு இத்தனை அழகாயிருக்கே.. இதை பரமசிவம் மகனுக்கா கட்டிக் கொடுக்கப் போகிற..? எனக்குக் கட்டிக் கொடுத்தா உனக்கு ஐஞ்சு ஏக்கர் புஞ்சையை எழுதி வைக்கிறேன்னு ஆசை வார்த்தை காட்டி நம்ம ஐயா பேசினாருன்னு சொல்லிட்டான்..”
“அடப்பாவி.. அப்பவும் இந்த ஐஞ்சு ஏக்கர் புஞ்சையை இவன் மறக்கலையா..? இவன் என்ன பெண் வீட்டுக்காரனா போனானா..? இல்ல.. பெண்ணக் கட்டிக் கொடுத்தா எனக்கு எத்தனை ஏக்கர் புஞ்சையை எழுதிக் தருவேன்னு பேரம் பேச போனானா..?”
“பின்னதுக்குத்தான் போயிருப்பான்.. அந்த மச்சினரோட அத்தனை வேலயிலயும் இவன் தலை கொடுத்து ஊடே கமிசன் அடிப்பானாம்.. இவன் பிழைப்பே அதுதானாம்.. இவனைப் பத்தின உண்மையை அந்த மச்சினர்கிட்டச் சொன்னா.. அந்த மனுசர் அதைக் காதிலேயே வாங்கிக்க மாட்டாராம்.. என் தங்கச்சி புருசனப் போல உண்டுமான்னு சொல்லி.. நல்லது சொல்லப் போனா மனுசனையே தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சு அனுப்பி வைப்பாராம்..”
“தங்கச்சி மேலே அம்புட்டு பாசமா..?”
“தங்கச்சி புருசன் மேலே அம்புட்டு பாசம்..”
“தங்கச்சியைக் கட்டிக் கொடுத்ததினாலதான சாமி.. இந்த மனுசன்.. அந்த மனுசருக்கு சொந்தமானான்..?”
“தங்கச்சியைக் கட்டிக் கொடுக்கனும்னே வீட்டோடு வளர்த்த சொந்தக்காரன்ம்மா அவன்.. அந்த மனுசரைத் தூக்கி வளர்த்த தாய் மாமனோட ஒத்தை மகன்..”
“பாருடா..”
முகவாயில் கை வைத்து அதிசதியத்தாள் இந்திரா.. பேச்சு சுவராஸ்யத்தில் அவள் சொன்ன ‘பாருடா..’
‘யாருடா..?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் ரங்கசாமி.. அதற்கான விளக்கத்தை அவர் ஜமீன் வீட்டு அம்மாவிடம் கேட்டு விட முடியுமா..? கேட்டால்தான் அவள் பதில் சொல்லி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாளா..?
அதனால்.. ‘சேச்சே.. பேச்சுவாக்கில அம்மா சொல்லியிருப்பாங்க.. இந்த ‘பாருடா..’ நானா இருக்காது..’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு மேற்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் ரங்கசாமி..
“ஆமாம்மா.. அந்த தங்கச்சி புருசனப் பத்தி.. சொந்தத் தங்கச்சியே பிராது கொடுத்தாலும் அந்த மனுசர் கிழிச்சுப் போட்டுருவாராம்.. அவர் காண்பிக்கிற அந்தக் கண்மூடித்தனமான பாசத்தைத்தான் இவன் இவனுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கிட்டு ஊழல் பண்ணிக்கிட்டு அலையறானாம்..”
“ஓ…”
இந்த விவரங்களை எதற்காக இந்த அளவுக்கு ஜமீன் வீட்டம்மா உள்வாங்கிக் கொள்கிறாள் என்று ரங்கசாமிக்குப் புரியவில்லை.. இந்திராதேவிக்குத் தெரியாமல் அவர் கைக்கடிகாரத்தை ஏக்கத்துடன் பார்த்தார்.. அது மூன்று என்றது..
பிரச்னையை எதிர் கொண்டிருக்கும் தனஞ்ஜெயனே தூங்கப் போய்விட்டான்.. அவனுடன் கூடப் போன கொடுமைக்காக.. ரங்கசாமி தூக்கத்தை தொலைத்து விட்டு.. இந்திராதேவியின் விசாரணைக் கமிசனில் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடினார்..
“கடைசியில என்னதான் ஆச்சு சாமி..?”
“இவன் குடிச்சுட்டு காருக்கு முன்னாலே மயக்கம் போட்டு விழுந்து வைச்சிட்டான்ம்மா.. விட்டுட்டுப் போகலாம்ன்னு நான் சொன்னதைக் காதில வாங்கிக்காம நம்ம ஐயா அந்தக் கழுதையைத் தூக்கிக் காரில போட்டுக் கிட்டுப் போயி ஆஸ்பத்திரியில சேர்த்தாரும்மா.. கூடவே அவன் கையிலிருந்த கிழிஞ்ச பையையும் பத்திரமா கொண்டு போனாரு.. இந்த நாயி மயங்கிக் கிடக்குதேன்னு இவன் வீட்டுக்குத் தகவல் சொல்ல.. அந்த கிழிஞ்ச பையில இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தாரு.. அதில இவனோட மச்சினன் மகளோட போட்டோவும்.. ஜாதகமும் இருந்துச்சும்மா.. ஜாதக நோட்டில இருந்த இவன் மச்சினரோட போன் நம்பருக்கு நம்ம ஐயா போன் பண்ணிட்டு.. போட்டாவைப் பார்த்தாரும்மா.. பொண்ணு அழகாயிருக்கே கணக்கு.. இந்தப் பொண்ணுக்கு பரமசிவம் மகனை விட்டா வேற மாப்பிள்ளை கிடைக்கலியான்னு கேட்டுக்கிட்டே சட்டைப் பைக்குள்ள போட்டோவை வைச்சுக்கிட்டாரு.. இவரு பேசியதை அந்த நாதாரிப்பய.. அரை குறை போதையில கேட்டு வைச்சிட்டான்..”
கோர்வையாகச் சொன்னாலாவது விடுதலை கிடைக்காதா என்ற நப்பாசையுடன் ரங்கசாமி நடந்தவற்றை ஒன்று சேர்த்து மடமடவென்று ஒப்பிக்க ஆரம்பித்தார்.. இருந்தும் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை..
“இருங்க ரங்கசாமி..” என்று ஊடே புகுந்து அவர் பேச்சை நிறுத்தினாள் இந்திராதேவி..
‘இருக்காம ஓடவா போறேன்..?’ கேட்க நினைத்ததை கேட்காமல்.
“என்னங்கம்மா..?” என்று பவ்யமாக கேட்டு வைத்தார் ரங்கசாமி..
“இந்தப்பய.. அவனோட மச்சினர் மகளுக்க.. பரமசிவத்தோட மகனை மாப்பிள்ளை பாக்கப் போயிருக்கான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..? இது முதலாவது சந்தேகம்.. என்னோட ரெண்டாவது சந்தேகம் என்னன்னா.. இவனோட கிழிஞ்சு போன பையில இருந்த போட்டோவும்.. ஜாதகமும்.. இவன் மச்சினர் மகளோடதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..? இதுக்கெல்லாம் அடுத்ததா வர்ற என்னோட மூணாவது சந்தேகம் என்னன்னா.. அந்த பரமசிவத்தோட மகன்தான் இவனைக் குடிக்க வைச்சு அனுப்பினான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..? எப்படி பக்கத்தில
இருந்து பாத்ததைப் போல இத்தனையையும் நீங்க பிட்டுப்பிட்டு வைக்கறிங்க..?”
‘இந்தம்மா போலிஸ் கமிசனரா ஆகியிருக்க வேண்டியவங்க..’
ரங்கசாமி.. இத்தனை கேள்விகளையும் அவரை எதிர் நோக்க வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கப் போய் விட்ட தனஞ்ஜெயனின் மீது பொறாமை கொண்டார்..
அந்த உறக்கம் அவருக்கு மட்டும் ஏன் எட்டாக்கனியாக போய் விட்டது..?
“நீங்க கேட்கிறதும் சரிதான்ம்மா.. இவனைத் தூக்கிக் காரில போட்டப்ப இத்தனை விவரமும் எங்களுக்குத் தெரியாது.. ஆஸ்பத்திரியில சேர்க்கப் போன இடத்தில பரமசிவத்தோட ஊர்க்காரன் ஒருத்தனப் பார்த்தோம்.. அவன் பொண்டாட்டிக்கு பிரசவ வலின்னு அப்பத்தான் கொண்டு வந்து சேர்த்ததாச் சொன்னான்..”
அடுத்து மருத்துவ மனையில் அந்த நேரத்தில்.. பரமசிவத்தின் ஊர்க்காரனுக்கு என்ன வேலை என்ற கேள்வியைத்தான் இந்திராதேவி கேட்டு வைப்பாள் என்பதினால் முன் ஜாக்கிரதை மூர்த்தியாக அந்த விவரத்தையும் சொல்லி விட்டார் ரங்கசாமி..
“பிரசவ வேதனையில துடிச்ச பொண்டாட்டிய விட்டுட்டு வந்தா உங்ககிட்ட அவன் கதை பேசிக்கிட்டு இருந்தான்..?”
என்னதான் அவர் முன்ஜாக்கிரதை மூர்த்தியாக இருந்தாலும்.. அவள் ஜமீன்தாரிணி இந்திராதேவி என்பதை அழகுற மெய்ப்பித்தாள் இந்திராதேவி..
தப்பிக்க முடியாத கேள்விகளைக் கேட்கும் எஜமானியம்மாவிடம்.. மாட்டிக் கொண்டிருந்த ரங்கசாமி.. பரமசிவத்தின் ஊர்க்காரனின் மனைவியின் பிரசவ வலியைப் பற்றிய விளக்கத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்..
“கொண்டு வந்து சேர்க்கிறவரைக்கும் அந்தப் பொண்ணுக்கு இடுப்பு வலி இருந்துச்சாம்மா.. ஆஸ்பத்திரிக் குள்ள கால் வைச்சதும் வலி போயிருச்சு..”
“பொய் வலியா இருந்திருக்கும்..”
ரங்கசாமி அந்த பொய் வலியையும்.. மெய் வலியையும் பற்றி என்னத்தைக் கண்டார்..?
“தெரியலம்மா.. இவன் பயந்துக்கிட்டு பொண்டாட்டிய ஆஸ்பத்திரியில சேத்துட்டான்.. மாத்திரை.. மருந்தை வாங்க வந்தவன்… இவனைத் தூக்கிக்கிட்டு வந்த எங்களைப் பார்த்ததும் மாத்திரை மருந்தை மறந்துட்டு.. எங்க கூடவே டாக்டர்கிட்ட வந்துட்டான்.. டாக்டர் இவனை செக் பண்ணிட்டு.. குடி மயக்கம்ன்னு சொன்னதும்.. அவன்தான் கதை கதையாய் இத்தனையையும் சொன்னான்.. அவன் பரமசிவத்தோட தோப்பில வேலை செய்துக்கிட்டு இருந்தானாம்.. அப்பத்தான் இவனக் கூப்பிட்டுக்கிட்டு பரமசிவத்தோட மகன் தோப்புக்குள்ள வந்தானாம்..”
“ஓ…”
மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள் இந்திராதேவி.. தூக்கத்தில் தவித்தார் ரங்கசாமி..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.