Chapter 04
“இவன் கதையைக் கேட்ட பின்னாலேயும் அங்கே நீங்க ரெண்டு பேரும் இருந்திருக்கக் கூடாது சாமி.. கிடக்கிறான் பயல்ன்னு கிளம்பி வந்திருக்க வேணாமா..?”
“அம்மா.. நானா வேணாம்ன்னு சொன்னேன்..? கெஞ்சிக் கூத்தாடினேன்ம்மா.. ஐயா.. குடிகாரப்பய மயக்கம் தெளிஞ்சதும் வீட்டைப் பாத்துப் போயிருவான்னு.. ஐயா கேட்கலையே.. சொந்தக்காரங்க வந்ததும் போகலாம்ன்னு அடிச்சுச் சொல்லிட்டாரே..”
“யாரை அடிச்சான் சாமி..? உங்களையா..?”
‘அது ஒன்னுதாம்மா குறை..’
ரங்கசாமிக்கு கோபம் கோபமாக வந்தது.. தூங்க முடியாத கண் எரிச்சல்.. அடை மழை போல ஓயாத இந்திராதேவியின் விசாரனை என்று அவர் கந்தலாகிக் கொண்டிருந்தார்..
“ஒரு பேச்சுக்குச் சொன்னேன்ம்மா.. ஹி.. ஹி..”
“இருக்கட்டும்.. இருக்கட்டும்.. அந்த மச்சினர் வந்ததும் என்னாச்சு..?”
‘அதத்தானே இத்தனை நேரமும் கூவிக்கிட்டு இருந்தேன்..’ பொறுமையை இழுத்துப் பிடிக்க பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டார் ரங்கசாமி..
“அந்த மச்சினர் வந்தாரும்மா.. தங்கச்சி புருசனைப் பாத்ததும் பதறிப் போயிட்டாரு.. டாக்டர்கள் குடிமயக்கம்ன்னு சொன்னத அந்த மச்சினரு காதிலேயே போட்டுக்கலை.. எந்தங்கச்சி புருசனுக்கு குடிப்பழக்கமே கிடையாது.. அதை மூக்கில வைச்சு முகர்ந்து கூடப் பார்க்க மாட்டான்னு சத்தம் போட்டாரு.. உன் தங்கச்சி புருசனையே கேளுய்யான்னு இவனக் கை காட்டினோம்.. மயக்கம் தெளிஞ்சு உணக்கையா சூடான பாலை வாங்கிக் குடிச்சுக்கிட்டு இருந்த இந்த நாதாரி.. அதைவாங்கிக் கொடுத்தத நினைச்சுப் பார்க்காம கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாம.. பழியைத் தூக்கி நம்ம ஐயா மேலே போட்டுட்டான்ம்மா..”
“என்னத்தைச் சொன்னான்..?”
“மாமா.. நான் மாப்பிள்ளை வீடு பாக்கப் போனேன்.. அந்த பரமசிவம் ஐயாதங்கமான மனுசரு.. ஊருக்கு பெரிய மனுசரு.. வீடு.. வாசல் தோப்பு.. துரவுன்னு எல்லாமும் இருக்கு.. மாப்பிள்ள சொக்கத்தங்கம்..”
“அடப்பாவி..! அவன் தகரத்திலகூட சேர்த்தியில்லாத வனாச்சே..”
“அது நமக்குத் தெரியும்.. அந்த மச்சினருக்குத் தெரியுமா..?”
“அதைச் சொல்லுங்க..”
“மாப்பிள்ளைக்கு வெத்தலை பாக்கு போடற பழக்கம்கூட இல்லை.. சிகரெட்டுன்னா எப்படி யிருக்கும்ன்னு கேப்பாரு.. தண்ணின்னா சுடுதண்ணியா.. பச்சைத் தண்ணியான்னு கேட்டு வைக்கிற அப்பாவி மனுசன்.. பொண்ணுக அந்தப் பக்கம் வந்தா.. இந்தப் பக்கம் குதிச்சு ஓடிடற தங்கமான பிள்ளை.. பெண்ணைக் கொடுத்தா இப்படியாப்பட்ட தங்கத்துக்கு கொடுக்கனும்னு வாய் கூசாம பொய் சொன்னான்.. நம்ம ஐயா சும்மா இருக்க மாட்டாப்புல அவனை முறைச்சு வைச்சிட்டார்.. அவன் அப்பாவி போல முகத்தை வைச்சுக்கிட்டு.. மாப்பிள்ளை வீட்டைப் பார்த்திட்டு வர வழியில இந்தாளு காரில வந்து என் வழியை மறிச்சு.. உன் மச்சினர் மகளுக்கு பரமசிவம் ஐயாவோட மகன் தோதுப்பட மாட்டாருன்னு சொல்லிரு.. அதுக்குப் பதிலா என் பேரைச் சொல்லி.. எனக்குக் கட்டிக் கொடுக்கச் சொல்லுன்னு சொன்னாரு மாமா.. நான் மாட்டேன்னு சொல்லிக் காரை விட்டு இறங்கப் பார்த்தேன். என்னைக் கட்டாயப்படுத்தி குடிக்க வைச்சாரு.. அப்பவும் நான் காரை விட்டு இறங்கி ரோட்டில ஓடப் பாத்தேன்.. இவரு காரை விட்டு என்மேல மோதிக் கொல்லப் பாத்தாரு மாமான்னு அள்ளித் தெளிச்சுட்டான்ம்மா..”
“அட சண்டாளா..!”
இந்திராதேவிக்கு ஆத்திரம் பொங்கியது.. யாரைப் பார்த்து யார் பழி போடுவது..? அதற்கும் ஒரு தகுதி.. தராதரம் வேண்டாமா..?
“நம்ம ஐயா கையை ஓங்கிட்டாரு.. அந்த மச்சினரு ஊடே வந்திட்டாரு.. இல்லைன்னா இந்தக் குடிகார நாய.. ஐயா உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வந்திருப்பாரு..”
“மச்சினரு என்னதான் சொன்னாரு..?”
“அவரோட தங்கச்சி புருசன் சொன்னதுதான் உண்மைன்னு சொல்லிட்டாரு.”
“தனஞ்ஜெயன் என்ன சொன்னான்..?”
“போய்யா.. நீ ஒரு ஆளு.. உன் தங்கச்சி புருசன் ஒரு ஆளு.. உங்க கூடல்லாம் பேசறதே வேஸ்டுன்னு சொல்லிட்டு வந்திட்டாரும்மா..”
இனிமேலாவது எஜமானியம்மா வேலையிலிருந்து விடுதலை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பாள் என்று மனதார நம்பினார் ரங்கசாமி.. அந்த நம்பிக்கையில் மண்ணைக் கொட்டினாள் இந்திராதேவி..
“நீங்க என்ன செய்கறிங்கன்னா.. முதலிலே காபியைக் குடிக்கறிங்க..”
அவள் யோசனையுடன் சொன்னபோது.. ஜமீன் வீட்டுக் காபியின் ருசியில் நாக்கைச் சப்புக் கொட்டத்தான் செய்தார் ரங்கசாமி.. அவ்வளவு நேரமும்.. தொண்டைத் தண்ணீர் வற்ற அவர் கதை சொன்னதற்கு ஒரு காபியாவது கிடைக்கிறதே..
இருந்தும் ஒரு பேச்சுக்காக அதை மறுக்க வேண்டும் என்பதற்காக..
“இந்த நேரத்தில எதுக்கும்மா காபியெல்லாம்..? பாவம் சுசிலா… அதைத் தூக்கத்தில இருந்து எழுப்ப வேணாம்…” என்று சமையல்வேலை செய்யும் சுசிலாவுக்காக பரிந்துரை செய்தார்..
“இந்த நேரத்தில காபி குடிக்காம வேற எந்த நேரத்தில காபி குடிப்பாங்க சாமி..? சுசிலாவை தூக்கத்தில் இருந்து எழுப்பனுமா..? அவ எப்பவோ எழுந்திருச்சு.. வாசலைத் தெளிச்சுக் கோலம் போட்டுட்டு வந்துட்டாளே..”
இந்திராதேவி ஆச்சரியத்தோடு சொன்னதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.. அர்த்த ஜாம வேளையில் சுசிலா வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடுகிறாளா..?
‘என்னடா இது..?’ என்ற நினைத்தபடி வாசல் பக்கமாக பார்த்தவர் அரண்டு போனார்..
அங்கே அதிகாலை வெளிச்சத்தில் ஜமீன் வீட்டின் தோட்டத்துப் பூக்கள் அவரைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தன..
‘விடிஞ்சுருச்சா..?’
விடிய விடியவா அவர் இந்திராதேவியின் புலன் விசாரணைக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..?
நெஞ்சை அடைக்க திரும்பிப் பார்த்தவரை.. மாடியிலிருந்து ‘ஹாவ்..’ என்ற கொட்டாவியுடன் வந்த தனஞ்ஜெயன் பார்த்து விட்டு புருவங்களை உயர்த்தினான்..
“என்ன சாமி.. இவ்வளவு சீக்கிரமா வேலைக்கு வந்துட்டிங்க..?”
ரங்கசாமிக்கு அழுகையே வந்து விட்டது.. அவர் அதிகாலையில் வேலைக்கு கிளம்பி வந்திருக்கிறாரா..?
‘நான் வீட்டுக்கே போகலைய்யா..’
மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தவரிடம் காபித் தம்ளரை நீட்டினாள் சுசிலா.. மகனுக்கு காபி கொடுத்த இந்திராதேவி..
“நல்லாத் தூங்கினயாப்பா..” என்று பரிவுடன் விசாரித்தாள்..
ரங்கசாமிக்கு வயிறு எரிந்தது.. தனஞ்ஜெயனுக்கு மட்டும் தான் தூக்கம் வருமா..? அவனுடைய கணக்குப் பிள்ளைக்கு தூக்கம் வராதா..?
அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் பொதுவான தூக்கத்தை அவருக்கு மறுத்துவிட்ட எஜமானியம்மாவை அவர் விரோதத்துடன்தான் பார்க்க முயன்றார்.. ஆனால் அவளது கம்பீரமான பார்வையில்.. அவரது பார்வை கூழைக்கும்பிடு போடும் பார்வையாக தழைந்து போனது..
தனஞ்ஜெயன் காபியை குடித்துவிட்டு மாடிக்குப் போய் விட்டான்.. இனியாவது வீட்டுப் பக்கம் போகலாம் என்று எழுந்தார் ரங்கசாமி.. அவரது உடலும்..
மனமும்.. அசதியில் ஓய்வுக்காக கெஞ்சியதில்.. அன்று மட்டும் விடுமுறை வாங்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன்..
“அம்மா..” என்று ஆரம்பித்தார்..
“நீங்க வாசல்பக்கம் பாத்ரூமில குளிச்சுத் தயாராகிருங்க ரங்கசாமி.. உங்களுக்கு மாற்றுத்துணியை வாங்கிக்கிட்டு வர பூபதி போயிருக்கான்..” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் இந்திரா..
“என்னங்கம்மா சொல்றீங்க..?”
“ஆமாம் சாமி.. நாம உடனடியா மணியக்காரர் வீட்டுக்குப் போயாகனும்.. சீக்கிரமா கிளம்புங்க..”
அவருடைய பதிலை எதிர்பாராமல் இந்திராதேவி.. வீட்டுக்குள் போய்விட்டாள்.. ரங்கசாமி இடிந்து போனார்.
ஒரு மனிதன் வேலை செய்ய வந்து விட்டால்.. பசி.. தாகம்.. தூக்கம் என்ற அனைத்தையும் மறந்தாக வேண்டுமா..?
அவர் மனதுக்குள் புலம்பியபடி வாசல்பக்கம் போன போது அங்கே கார் டிரைவர் பூபதி அவருடைய மாற்றுடையுடன் வந்து நின்றான்..
‘இது ஒன்னுதான் குறைச்சல்..’
இந்திராதேவியை முறைக்க முடியாதவர்.. அவனை முறைத்தபடி துணிகளை வாங்கிக் கொண்டு பாத்ரூம் பக்கம் நகர்ந்தார்..
குளித்து உடைமாற்றி வந்தவருக்கு சூடாக நெய் தோசைகளும்.. சட்னி.. சாம்பாரும் கிடைத்தன.. தோசைகளின் ருசியில் அவரின் கோபம் கொஞ்சம் குறைந்தது..
இந்திராதேவி அவசரமாக அங்கு வந்தாள்.. அகலக் கரையிட்ட பட்டுப் புடவையும்.. டாலடிக்கும் வைர நகைகளுமாக.. ஜமீன்தாரிணிக்கே உரிய தோரணையுடன் வந்தவள்.. ரங்கசாமியிடம்..
“சாப்பிட்டாச்சா சாமி..?” என்று கேட்டாள்..
ரங்கசாமி சாப்பிட்டு முடித்திருக்கவில்லை.. இரவு முழுவதும் தனஞ்ஜெயனுடன் அல்லாடி.. அதற்குப் பின்னால் இந்திராதேவியின் புலன்விசாரணையில் தூக்கமின்றி சாமியாடி.. துயரப்பட்டிருந்தவர் அகோரப் பசியில் இருந்தார்.. அவர் தட்டில் வரிசைகட்டி இருபது நெய் தோசைகள் வந்து விழுந்த பின்பும் அவரின் பசி அடங்கவில்லை.. தோசை வார்த்து எடுத்து வந்து போட்டுக் கொண்டிருந்த சுசிலாவுக்கு கை தளர்ந்து.. நடையும் தளர்ந்து கொண்டிருந்த வேளையில் இந்திhதேவி அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் ரங்கசாமியை முந்திக் கொண்டு..
“சாப்பிட்டாரும்மா..” என்று குரல் கொடுத்தாள்..
‘வயிறு என்னுடையதா.. இல்லை.. இவளுடையதா..’ ரங்கசாமி அவளை உக்கிரபார்வை பார்த்தார்..
சுசிலா அவர் பார்வையை சந்திக்கவே இல்லையே.. அவளும்தான் என்ன செய்வாள்..? ரங்கசாமி இப்போது போதும் என்று சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு தோசையாக கொண்டு வந்து போட்டு விட்டு அவர் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்ப்பாள்.. அவர் வாயிலிருந்து.. சட்னி வேண்டும்.. சாம்பார் வேண்டும்
என்ற வார்த்தைகள்தான் வந்ததேயொழிய ‘போதும்..’ என்ற வார்த்தை மட்டும் வரவே இல்லை..
‘இந்த மனுசனுக்கு இருக்கிறது வயிறா.. இல்ல.. ஊரனியா..?’
அவள் அசந்து விட்டாள்.. இருநூறு தோசைகள் சாப்பிட்டாலும் ரங்கசாமியின் வாயிலிருந்து தானாக போதும் என்ற வார்த்தை வரப்போவதில்லை என்று தெரிந்த பின்பு கிடைத்த வாய்ப்பை இறுக்கிப் பற்றிக் கொள்ளாவிட்டால் அவள் தப்பிக்க முடியாதே..
ரங்கசாமி சாப்பிட்டு விட்டார் என்று சமையல் செய்யும் சுசிலாவே சான்றிதழ் கொடுத்து விட்ட பின்பு.. அவர் தட்டை விட மாட்டேன் என்று கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா..?
வேறு வழியின்றி அவர் சுசிலாவை விரோதி போல பார்த்தபடி கை கழுவ எழுந்தார்..
“சுசிலா..” ரகசிய குரலில் அழைத்த இந்திரா தேவியின் பார்வை மாடிப்படிகளில் படிந்து மீண்டது..
“என்னங்கம்மா..?” இந்திராவை விட ரகசியமாக பேசிய சுசிலாவின் குரலில் அவளை எஜமானியம்மா ரகசியம் பேச அழைத்து விட்டாள் என்ற மகிழ்வு இருந்தது..
“தனா வந்தா டிபன் எடுத்து வைய்யி.. நான் எங்கேன்னு கேட்டா.. மணியக்காரரோட மருமகளுக்கு என்னைக்கு வளைகாப்பு நடத்தப் போறாங்கன்னு கேட்டுட்டு வரப் போயிருக்கேன்னு சொல்லு..” என்று சொல்லியபடி ரங்கசாமியைப் பார்த்த இந்திராதேவி அடுத்துச் சொன்ன வார்த்தைகளில் ரங்கசாமியின் தலையில் இடி இறங்கியதைப்போல இருந்தது..
“ரங்கசாமி எங்கேன்னு கேட்டா.. அவருக்கு நானு லீவு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன்னு சொல்லிரு..” என்று இரக்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் இந்திராதேவி..
‘போச்சா.. ஒரு நாள் லீவு போச்சா.. நாளைக்காவது லீவு கேட்கலாம்ன்னு நினைச்சேனே.. இனி லீவு கேட்டா ஐயா இன்னைக்கு லீவு எடுத்ததா கணக்குப் பண்ணிக்கிட்டு.. லீவு கொடுக்க மாட்டாரே.. கணக்கைப் பாருன்னு சொல்லிருவாரே..’
மனதுக்குள் புலம்பிய ரங்கசாமி… எதுவும் நடக்காதைப் போல வெகு இயல்பாக அவர் முகம் பார்த்து..
“போகலாமா சாமி..?” என்று கேட்ட இந்திரா தேவியிடம் எங்கே போகிறோம் எதற்காக போகிறோம் என்ற எந்தக் கேள்வியையும் கேட்காமல்.. பலி ஆட்டைப் போல தலையை ஆட்டிக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தார்..
காரில் ஏறிய இந்திராதேவி.. வாகாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தபடி ரங்கசாமியையும் ஏறச் சொன்னாள்..
“காரை மணியக்காரர் வீட்டுக்கு விடு பூபதி..” என்றவள்..
“ரங்கசாமி நம்ம கூட வந்ததா தனாவிடம் சொல்ல வேணாம் பூபதி.. அவர் அப்பவே லீவு வாங்கிக்கிட்டு அவர் வீட்டைப் பார்த்துப் போயிட்டாருன்னு சொல்லிரு..” என்றும் சொன்னாள்..
ரங்கசாமிக்கு அவர் வீட்டைப் பார்த்துப் போக வேண்டுமென்ற ஆசை உண்டானது.. அதை எவ்விதம் எஜமானியிடம் வெளிப்படுத்துவது என்று புரியாமல் வாயிருந்தும் ஊமையாக.. செய்து வைத்த சிலை போல காருக்குள் அமர்ந்திருந்தார்..
கார் கிளம்பியது.. அது போன வேகத்தில் ரங்கசாமிக்கு சுகமான தூக்கம் வந்தது.. சொக்கிய இமைகளை மூடியவர்.. கண்கள் செறுக.. அப்படியே பூபதியின் தோளில் சாய்ந்து தூங்கி விட்டார்..
காரை ஓட்டிக் கொண்டிருந்த பூபதிக்கு கடுப்பாக இருந்தது.. ஒருமுறை.. இந்திராதேவி.. ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்த ஊருக்குப் போயிருந்தாள்.. அவள் கூடத் துணைக்கு சுசிலாவும் சென்றிருந்தாள்.. திரும்பி வந்த போது இரவாகியிருந்தது.. விடிய.. விடிய காரோட்டிய பூபதிக்கு அலுப்பே தெரியவில்லை.. அவனருகில்தான் சுசிலா உட்கார்ந்திருந்தாளே.. தூங்கிக் கொண்டு வருவதற்கு தோதாக இந்திராதேவி பின்சீட்டில் தலையணையைப் போட்டுப் படுத்து விட்டாள்..
அந்த இரவு நேரப் பயணத்தில் சுசிலாவும் அயர்ந்து உறங்குவாள்.. அந்த உறக்கத்தில் அவளையுமறியாமல் பூபதியின் தோள் சாய்வாள் என்று அவன் நொட்டை விட்டுக் கொண்டு எதிர்பார்ப்புடன் காரை ஓட்டினான்.. சுசிலாவோ.. கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு வந்தாளே தவிர.. இமைமூடி பூபதியின் தோள் மீது தலை சாய்க்கவேயில்லை..
‘என் நேரம்.. மயிலு தூங்கி வழிஞ்சு என் தோளில தலை சாய்க்க மாட்டேங்குது.. இந்தக் கிழவன்தான் தலை சாய்க்கிறான்..’ பூபதி பல்லைக் கடித்தான்..
மணியக்காரரின் வீட்டிற்கு முன்னால் கார் நின்றது.. அந்த காலை நேரத்தில் வீடு தேடி வந்திருக்கும் ஜமீன்தாரிணியை ஓடி வந்து வரவேற்ற மணியக்காரர் தியாகராஜனின் முகத்தில் எதற்காக இந்த திடிர் விஜயம் என்ற கேள்வி தென்பட்டது..
“மரகதம்..” அவர் மனைவியை அழைத்தார்..
“அண்ணி.. நீங்களா..! வாங்க.. வாங்க..” அவர் மனைவி ஓடோடி வந்தாள்..
ரங்கசாமி பின்தொடர தியாகராஜனின் வீட்டுக்குள் பிரவேசித்தாள் இந்திராதேவி..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.