Chapter 05

0Shares

காபி.. பலகார உபசரிப்புகள் முடிந்த பின்பு இந்திராதேவி விவரத்திற்கு வந்தாள்..

“அண்ணா.. நேத்து பொழுது சாய ஒரு பிரச்னை நடந்திருக்குது..” என்று ஆரம்பித்தவள்.. ரங்கசாமி அவளிடம் ஒப்பித்த அனைத்து விவரங்களையும் விலாவாரியாக தியாக ராஜனிடமும்.. மரகதத்திடமும் எடுத்துரைத்தாள்..

தியாகராஜன் ஒரு வார்த்தையைக் கூடத் தவற விட்டு விடாமல் வெகு கவனமாக கேட்டு விட்டு..

“அந்தாளு எந்த ஊர்க்காரன்..?” என்று ரங்கசாமியிடம் கேட்டார்..

“லட்சுமி புரம்ங்கய்யா..” என்றார் ரங்கசாமி..

“லட்சுமி புரம்ன்னா.. அங்கே நம்ம சொந்தக்காரன் ஒருத்தன் இருக்கான்.. அவன்கிட்ட விசாரிக்கலாம்..” என்றபடி மனைவியை அவர் பார்த்தார்.. அவள் உடனே இந்திராதேவியை பார்த்து..

“ஆமாங்கண்ணி.. என் சின்னம்மா மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைக்கு உடன் விட்ட பங்காளியோட ரெண்டு விட்ட அண்ணனோட பேத்தியைத்தான் லட்சுமி புரத்தில கட்டிக் கொடுத்திருக்காங்க.. நெருங்கின சொந்தம்தான்..” என்று சொன்னாள்..

இந்திராதேவி ரங்கசாமியை ஒரு மௌனபார்வை பார்த்தாள்.. தூக்கம் கெட்டுப் போயிருந்த ரங்கசாமிக்கு எங்கே எஜமானியம்மா அந்த உறவுமுறை குறித்த வரைபடத்தைக் கேட்டு விடுவாளோ என்ற கலவரம் எழுந்தது.. அப்படியெல்லாம் அவள் கேட்டு விடக் கூடாது என்று ஊரில் உள்ள கடவுள்களையெல்லாம் அழைத்து மனதிற்குள் வேண்டுதல்கள் வைத்தார்..

கடவுள்கள் ரங்கசாமியைக் காப்பாற்றினார்கள்.. இந்திராதேவி.. மரகதம் சொன்ன உறவுமுறையின் விளக்க வரைபடத்தை தயாரித்துச் சொல்லும்படி ரங்கசாமியிடம் சொல்லவில்லை..

“அதுக்கென்னண்ணா.. உங்க சொந்தக்காரங்க கிட்டயே விசாரிச்சுச் சொல்லுங்க..” என்று தியாகராஜனிடம் தான் சொன்னாள்..

தியாகராஜன் செல்போனை எடுத்துப் பேசினார்.. மறுமுனையில் பேசியவன் சொன்னதை புருவங்கள் சுருங்க.. உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.. ரங்கசாமிக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது.. அவர் மரியாதையுடன் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் பாவனையில் அரைக் கண்களை மூடிக் கொண்டு கோழித்தூக்கம் போடலானார்.. தியாகராஜன் போன் பேசி முடித்து விட்டு இந்திராதேவியை பார்த்தார்..

“அந்தாளோட பேரு மணிவாசகமாம்மா.. துர்காங்கிறது அவரோட பொண்டாட்டியாம்.. பொண்ணொன்னு ஆணொன்னுன்னு ரெண்டு புள்ளைகளாம்.. மூத்தது பொண்ணாம்.. சுமித்ரான்னு பேராம்.. சென்னையிலே ஆஸ்டலில தங்கி.. எம்.எஸ்ஸி பட்டப் படிப்ப படிச்சுக்கிட்டு இருந்துச்சாம்.. இப்பத்தான் போனமாசம் படிப்பை முடிச்சுட்டு.. லட்சுமி புரத்துக்கு வந்திருக்குதாம்.. அதைப்பத்தி கேள்விப்பட்டுத்தான் நம்ம பக்கத்து ஊரு பரமசிவம் பொண்ணுக் கேட்டுப் போயிருக்கான்..”

“அப்ப.. அவங்க ஒன்னும் பொண்ணு கொடுக்கறேன்னு மாப்பிள்ளை கேட்கலைங்கறிங்களா..?”

“ஆமாம்மா.. தானா வந்து பெண் கேட்கவும்.. மாப்பிள்ளை வீட்டைப் பத்தி விசாரிச்சுட்டு அப்புறமா பொண்ணுப் பாக்க வரச் சொல்லலாம்ன்னு மணிவாசகம் நினைச்சாராம்.. மனுசன்.. நல்ல குணமானவராம்.. ஊரில ரைஸ்மில்… வயல் வரப்புன்னு வசதியான குடும்பமாம்.. ரெண்டாவதா பொறந்த மகன்.. இப்பத்தான் பனிரெண்டாம் வகுப்பில படிக்கிறானாம்.. மூத்த பொண்ணுக்கும் இவனுக்கும் இடையில ஆறு வயசு வித்தியாசமாம்..”

“பையன் கொஞ்சம் சின்னவன்தான்னு சொல்லுங்க.. அக்கா கல்யாணத்தில தலை கொடுக்கிற வயசு இன்னும் வரலைன்னு சொல்லுங்க..”

“ஆமாம்மா.. அதனாலதான மணிவாசகம் வீட்டோடு இருந்த அவரோட தங்கச்சி புருசன் திருக்குமரன்கிட்ட பரமசிவம் மகனைப் பத்தியும்.. அவன் வீட்டப் பத்தியும் விசாரிச்சுட்டு வான்னு அனுப்பியிருக்காரு..?”

“தங்கச்சி குடும்பத்த கூடவே வைச்சிருக்காரா..?”

“அப்படித்தான் என் சொந்தக்காரன் சொல்றான்.. மணிவாசகத்தக்கு ஒரே தங்கச்சியாம்.. அதோட பேரு மல்லிகாவாம்.. இந்தக் கருமாயம் பிடிச்ச நாதாரிக் கழுதை மணிவாசகத்தோட மாமன் மகனாப் பிறந்திட்டானாம்.. மணிவாசகத்துக்கு சின்ன வயசிலேயே தகப்பன் தவறிட்டாரு.. அக்கா மகனைப் பார்த்துக்கறேன் பேர்வழின்னு அந்தக் காலத்திலேயே மணிவாசகத்தோட வீட்டோட செட்டிலானவன்தான் இந்தத் திருக்குமரனோட அப்பன்.. அது தெரியாம.. மாமன் தூக்கி வளர்த்தாருன்னு ஏமாந்த சோணகிரி போல புலம்பிக்கிட்டு அந்த ஆளு பெத்த ஒத்தை மகனுக்கு தங்கச்சியைக் கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கிட்டாராம் மணிவாசகம்.. தங்கச்சிக்கு ரெண்டும் பொண்ணுகளாம்.. சின்னப் புள்ளைகளாம்.. அதில ஒன்னை மணிவாசகத்தோட மகன் சுந்தருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து.. வீட்டோட மாமனாரா புரமோசன் ஆகிடனும்னு திருக்குமரன் பிளான் போட்டு வைச்சிருக்கானாம்..”

“போடுவான்.. போடுவான்.. அவன்தான் எந்த பிளானையும் இமைக்கிற பொழுதுக்குள் போட்டுடறதிலே கெட்டிக்காரனா இருக்கானே அண்ணா.. அவனுக்கு பிளான் போட சொல்லியா கொடுக்கனும்..? எப்படித்தான் இப்படி கூசாம பொய் சொல்றானோ தெரியலை.. உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறானே.. இவனெல்லாம் ஒரு மனுசனா.. இவனையும் பிள்ளைன்னு பெத்து வளர்த்திருக்காளே ஒரு பொம்பளை.. நல்லதாயின் வயிற்றில பிறந்தவன் அடுத்த வீட்டு பொம்பளைகளுக்கு கெடுதல் நினைக்க மாட்டான்.. இந்த நாதேரி வீட்டோட இருக்க வைச்சு.. தங்கச்சியக் கட்டிக் கொடுத்து.. குடும்பத்தையே தாங்கி சோறு போட்டுக்கிட்டு இருக்கிற மகராசன் மகளை 

ஐஞ்சு ஏக்கர் புஞ்சையை வாங்கிக்கிட்டு.. ஒரு கேடு கெட்ட குடிகாரனுக்கு கட்டிக் கொடுக்கப் பாக்கிறானே.. இவனெல்லாம் ஒரு ஜென்மம்.. ச்சே…”

“சொல்லும்மா.. இப்ப என்ன செய்யலாம்..?”

“பஞ்சாயத்தை கூட்டுங்கண்ணா..”

இந்திராதேவி.. நிதானமாக.. ஆனால்.. தீர்மானமாக சொன்னாள்..

“கூட்டிட்டாப் போகுது.. எப்படியும் மணிவாசகம் இதுக்குப் பதில் சொல்லித்தான் ஆகனும்.. அவருக்கு வேணும்னா அவரோட தங்கச்சி புருசன் உசத்தியா இருக்கலாம்.. மத்தவங்களுக்கு அப்படியில்லை.. குடிச்சுப் புட்டு காருக்கு முன்னாலே விழுந்ததுமில்லாம.. கொண்டு போயி ஆஸ்பத்திரியில சேர்த்த நம்ம மாப்பிள்ளை மேலேயே பழி போட்டு பயம்.. பத்தில்லாம பேசியிருக்கானே.. பஞ்சாயத்தைக் கூட்டி.. இதுக்கு என்ன பதில் சொல்றான்னு கேட்டுரலாம்.. ஆனா தனஞ்ஜெயன் ஊடே தலை யிட்டுட்டா என்னம்மா பண்றது..?”

தனஞ்ஜெயன் தலையிடுவான்தான்.. அவனால் முடியாததையா மணியக்காரர் முடித்து வைக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்புவான்தான்.. அவனால் முடியும்.. அவன் நிச்சயமாக அந்த திருக்குமரனை ஒரு கை பார்ப்பான் என்று இந்திராவுக்கு நன்றாகவே தெரியும்.. வழியோடு போனவனை வம்புக்கு இழுத்து.. பழி போட்டு பேசிய திருக்குமரனை ஒருநாளும் தனஞ்ஜெயன் மன்னிக்க மாட்டான்… ஏனென்று கேட்டு… பாடம் கற்றுக் கொடுக்காமல் விடவும் மாட்டான் என்பதை அவள் நன்கு அறிவாள்..

ஆனால் இந்திராதேவிக்கு அது போதாதே..

“தனா தலையிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் அவனுக்குத் தெரியாம இங்கே கிளம்பி வந்திருக்கேன் அண்ணா..” என்றாள் இந்திராதேவி..

“என்னம்மா சொல்கிற..? மாப்பிள்ளைகிட்ட தேவையில்லாம வம்பு வளர்த்தான்ங்கிறதுக்காகத்தான் இந்தப் பஞ்சாயத்தையே கூட்டப் போறோம்.. சம்பந்தப்பட்ட அவருக்கே விவரம் தெரியக் கூடாதுன்னு சொன்னா எப்படிம்மா..?”

“இல்லேண்ணா.. இந்த விவரம் இப்ப தனாவுக்கு தெரியக் கூடாது.. அவனுக்கு தெரிய வருகிறப்ப.. இந்தப் பஞ்சாயத்தில இருந்து அவன் பின் வாங்கவே கூடாது..”

புதிர் போட்டுப் பேசினாலும்.. தெளிவாக.. தீர்க்கமாகப் பேசினாள் இந்திராதேவி.. அவள் ஒரு முடிவோடுதான் அங்கே வந்திருக்கிறாள் என்பதை தியாகராஜனும்.. மரகதமும் புரிந்து கொண்டார்கள்..

“உன் மனசில என்ன நினைப்பிருக்கும்மா..?” தியாகராஜன் நேரடியாகவே கேட்டு விட்டார்..

“அண்ணா.. என் புள்ள.. யதேச்சையா அந்தப் பொண்ணோட படத்தைப் பார்த்திருக்கான்.. பாவம்.. அழகான பொண்ணு.. இதைப் போயி அந்த பரமசிவம் மகன்கிட்டத் தள்ளப் பாக்குறாங்களேன்னு சொல்லி யிருக்கான்.. அதை அந்த நாதாரிகேட்டுட்டு.. அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டுத்தான் என்மகன் அவன்மேல காரை ஏத்தினான்னு கூசாம பழி சொல்லிட்டானே அண்ணா.. இதை சும்மா விடச் சொல்றிங்களா..?”

“எதை செய்தாலும் நானே செய்துக்கறேன்னு மாப்பிள்ளை சொல்லுவாரேம்மா..”

“அவன் செய்கிறதை அவன் செய்யட்டும்.. நாம செய்ய வேண்டியதை நாம செய்யலாம்…”

“என்ன செய்யனும்னு சொல்லும்மா..”

“எந்தப் பொண்ணு மேலே என்மகன் ஆசைப் பட்டான்னு அந்தக் களவாணிப்பய சொன்னானோ.. அந்தப் பொண்ணையே என் மகன் கல்யாணம் பண்ணிக் காட்டனும் அண்ணா..”

“என்னம்மா சொன்ன..?”

இந்திராதேவியின் உறுதியான குரலில் ஆச்சரியப் பட்டுப் போனார் தியாகராஜன்.. ரங்கசாமியின் கோழித் தூக்கம் சேவலைத் தேடிப் பறந்து போய்விட்டது.. மரகதம் தலையை ஆட்டி மகிழ்ந்து போனாள்..

“அண்ணின்னா அண்ணிதான்.. அந்தக் கடன்காரனையும் கேள்வி கேட்கனும்.. நம்ம மாப்பிள்ள முத முதலா அழகாயிருக்குன்னு சொன்ன பொண்ணயே அவருக்கு கட்டியும் வைக்கனும்.. ஆஹா..! ஆஹா..! சும்மாவா.. ஜமீன் வீட்டம்மா ஒரு வாசகம் பேசினாலும் அது திருவாசகமா இருக்கும்ன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..?”

மணியக்காரர் தாடையைத் தடவியபடி யோசித்தார்.. இந்திராதேவி மௌனமாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தாள்.. 

தியாகராஜனும்.. தனஞ்ஜெயனின் அப்பா ரகுநாதனும் உயிர் நண்பர்கள்.. ரகுநாதன் போன பின்பு.. அவருடைய வார்ப்பாக இருக்கும் தனஞ்ஜெயனைப் பார்க்கும் போதெல்லாம் நண்பரின் நினைவில் தியாகராஜனின் கண்கள் கசியும்.. அவன் திருமணத்தை தள்ளிப் போடுவதைச் சொல்லி இந்திராதேவி வருத்தப் படும் போதெல்லாம் அவரும் வருத்தப்படுவார்..

அந்த தனஞ்ஜெயனுக்கு அதிரடியாக அவன் அழகாயிருக்கிறாள் என்று வாய் விட்டுச் சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது..

அதை அவரால் எப்படி நழுவ விட முடியும்..?

“இவ்வளவுதானேம்மா..? என் காதில விசயத்தை போட்டுட்டல்ல.. இனி நான் பாத்துக்கறேன்.. கவலைப் படாதே.. இன்னைக்கு முதல் கட்ட பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைப்போம்.. நீயும் இரு..”

“நானுமா அண்ணா..?”

“நீதான் கட்டாயம் இருக்கனும்.. நீதானே சொன்ன.. மாப்பிள்ளைக்கு விசயம் தெரிகிறப்ப இந்தப் பஞ்சாயத்தில இருந்து அவரு பின்வாங்கவே கூடாதுன்னு.. நாம இன்னும் ஒரு படி மேலே போயி.. பஞ்சாயத்தில முனைப்பா அவரை இறங்க வைப்போம்..”

அவர்கள் போட்ட திட்டத்தில் ரங்கசாமிக்கு தூக்கத்தின் சுவடு கூட கிட்ட வரவில்லை.. அவர் கொட்டக் கொட்ட கண்களை விழித்தபடி அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளைக் காண ஆயத்தமானார்..

தியாகராஜன் அவருடைய சொந்தக்காரனுக்கு திரும்பவும் போன் போட்டு பேசி விட்டு.. போனை அணைத்தார்.. இந்திராதேவியிடம் வேறு விவரங்களை பேச ஆரம்பித்தார்..

“நீங்க வேணும்னா வாசப்பக்க ரூமில கண் அசருகிறிங்களா ரங்கசாமி..” என்று ரங்கசாமிக்கு கருணையும் காட்டினார்..

“ஆமாண்ணா.. சாமிதான் பாவம்.. நேத்துப் பூராவும் தூங்கல.. நீங்க போயி தூங்குங்க சாமி..” இந்திராதேவியும் ஞானோதயம் வந்து சொன்னாள்..

ரங்கசாமி நகரவில்லையே.. தூக்கத்துக்கு என்ன..? தினம்.. தினம்தான் அவர் தூங்கி எழுந்து கொள்கிறார்.. ஆனால் இதுபோன்ற காட்சிகளை அவரால் தினம் தினம் பார்க்க முடியுமா என்ன..?

“எனக்குத் தூக்கம் வரலைம்மா..” என்று சொல்லி விட்டு கல்லுக்குண்டைப் போல அங்கேயே உட்கார்ந்து விட்டார்..

சற்று நேரத்தில் கார் வரும் ஓசை கேட்டது..

“வந்துட்டாங்க..” தியாகராஜன் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்..

“வா கேசவா..” மரகதம் அவர்களுடைய சொந்தக்காரன் என்று சொல்லப்பட்டவனை வரவேற்றாள்..

மரகதம் சொன்ன உறவுமுறை வரைபடத்தை வைத்து அவன் மரகதத்திற்கு என்ன முறையாவான் என்று அறியும் ஆவல் ரங்கசாமிக்குள் மிகுந்தது.. அவனோ..

“நல்லாயிருக்கீங்களா..?” என்று பொதுப்படையாக கேட்டு விட்டு உட்கார்ந்து விட்டான்..

‘அவன் என்ன செய்வான் பாவம்.. அவனுக்கே என்ன உறவுமுறைன்னு தெரிஞ்சிருக்காது..’ ரங்கசாமி நினைத்துக் கொண்டார்..

“இவர்தான் மணிவாசம் ஐயா.. இவரு.. ஐயாவோட தங்கச்சி புருசன்..”

கேசவன் அந்த தங்கச்சி புருசனின் பெயரைக் கூடச் சொல்லவில்லை.. இப்படிப் பெயரில்லாமல் பிழைப்பதில் அந்த திருக்குமரனுக்கு வருத்தம் எதுவும் இருப்பதாக அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.. அவன் என்னவோ மெடல் கிடைத்து விட்டதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்..

“எங்களை எதுக்காக வரச் சொன்னீங்க..?” மணிவாசகம் கணிரென்ற குரலில் கண்டிப்புடன் கேட்டார்..

“எதுக்காகவா..? நீங்க வயசிலயும் சரி.. நிலைமையிலயும் சரி.. பெரிய மனுசன்.. பேசற வார்த்தையை யோசிச்சுப் பேச வேணாமா..? உங்க ஊருக்குள்ள வேணும்னா நீங்க பெரிய மனுசனா இருக்கலாம்.. ஆனா.. இந்த சுத்துப்பட்டி ஊருகளுக்கே.. அன்னவாசல் ஜமீன்தாரரான எங்க மாப்பிள்ளை தனஞ்ஜெயன்தான் பெரிய மனுசன்.. அவரைப் பார்த்து நாக்கு மேலே பல்லைப் போட்டுப் பேசியிருக்கான் உங்க தங்கச்சி புருசன்.. நீங்க இவனைக் கண்டிச்சு வைக்காம எங்க மாப்பிள்ளை மேலே குத்தம் சொன்னீங்களாமே..?” மணியக்காரர் தியாகராஜன்.. மணிவாசகத்தை விடக் கண்டிப்பான தோரணையில் கேள்வி கேட்டார்..

திருக்குமரன் திருதிருத்தான்.. விசயம் பஞ்சாயத்து வரை வந்து விடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.. மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கப் போனவன்.. யாருடன்.. எங்கே குடித்தான் என்ற விவரத்தை மறைப்பதற்காக..  சொன்ன பொய் அன்னவாசல் ஜமீனைப் பற்றியதாக இருக்கும் என்று நினைத்திருந்தால் அவன் வாயைத் திறந்திருப்பானா..? எவனோ ஒரு கார்காரன் என்று நினைத்து ஐந்து ஏக்கர் புஞ்சை நிலத்துக்கு ஆசைப்பட்டு.. பரமசிவத்தின் மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக அன்னவாசல் ஜமீனின் மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டானே..

“என் தங்கச்சி புருசனைப் பத்தி எனக்குத் தெரியும்..”

மணிவாசகம் கறாராகப் பதில் சொல்ல… திருக்குமரனின் வயிற்றில் புளி கரைந்தது..

‘இந்த மாமன் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்தாத் தேவலையே..’ அவனுக்கு பதக்.. பதக்கென்று இருந்தது..

மணிவாசகம் அந்த இடத்தில் மடங்கிப் போக வேண்டுமென்று அவன் மனதார நினைத்தான்..

அந்த நினைப்பை மட்டும் மணிவாசகம் அறிந்திருந்தால் அவனை உண்டு இல்லையென்று ஓர்வழி பண்ணியிருப்பார்..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link