Chapter 06
‘என்னைப் பத்தி இந்த மாமனுக்கு என்ன தெரியும்..?’
திருக்குமரனுக்கு ஆற்றாமையாக இருந்தது.. பரமசிவத்தின் மகன் ஊற்றிக்கொடுக்கிறானே என்று ஓர் அளவோடு நிறுத்தாமல் ஊர்பட்ட ‘தண்ணி’யை உள்ளே சரித்துக் கொண்டதினால் வந்த வினையல்லவா இது என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்..
‘பேசாம பாட்டிலைக் கொடுங்க தம்பி..! வீட்டில போயி யாருக்கும் தெரியாம போட்டுக்கறேன்னு சொல்லியிருக்கலாம்..’
காலம் கடந்து வந்த ஞானோதயத்திலும் அந்த பாட்டில்களை விட்டுக் கொடுக்காமல் கைப்பற்றி இருக்க வேண்டுமென்ற புத்திதான் அவனுக்கு இருந்தது..
“இன்னைக்குத்தான் இவன் என் தங்கச்சி புருசன்..”
மணிவாசகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
“நேத்து யாரா இருந்தான்..?” என்று சன்னமான குரலில் கேசவனிடம் சந்தேகம் கேட்டார் ரங்கசாமி..
கேசவனுக்கு சிரிப்பு வந்தது.. முக்கியமான பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் அப்படி சிரித்து வைக்க முடியாது என்பதினால் அவன் சித்தனைப் போல ரங்கசாமியைப் பார்த்து வைத்தான்..
அந்தப் பார்வையில் அரண்டு போன ரங்கசாமி அவசரமாக முகத்தைத் திருப்பி.. பஞ்சாயத்தை தீவிரமாக கவனிப்பவரைப் போல பாவனை செய்ய ஆரம்பித்து விட..
‘அஃது..! இனிமே என்கிட்ட இது போல கேள்வியைக் கேட்டு சிரிப்பு மூட்டுவ..?’ என்ற திருப்தியுடன் கேசவன் மணிவாசகம் சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தான்..
உணர்ச்சி வேகத்தில் மாமன் அப்படி உரையாற்றி யிருக்கக் கூடாது என்று திருக்குமரனுக்கும் தோன்றியது.. ரங்கசாமியின் சன்னமான கேள்வி கேசவனின் காதுகளில் விழுந்ததைப் போல திருக்குமரனின் காதுகளிலும் விழுந்தது.. அவன் காதுகளில் விழ வேண்டும் என்பதற் காகவே.. கேசவனை விட நெருக்கமாக திருக்குமரன் பக்கம் சரிந்து ரங்கசாமி பேசினாரோ என்ற சம்சயம் அவன் மனதில் எழுந்தது.. ரங்கசாமியின் நமட்டுச் சிரிப்பு அதை உறுதிப் படுத்தியதில் அவன் மூச்சு விடாமல் உட்கார்ந்திருந்தான்..
“என் தங்கச்சியைக் கட்டிக்கிட்டதாலே இவன் எனக்குச் சொந்தமில்ல.. என் சொந்தம்ங்கிறதினாலதான் என் தங்கச்சியை இவனுக்குக் கட்டிக் கொடுத்தேன்.. என்னைத் தூக்கி வளர்த்த என் தாய்மாமனின் மகன் இவன்..”
“அதுக்கு..?”
மணிவாசகத்தின் மணிப்பிரவாக உணர்ச்சி மயமான பேச்சை.. ஒற்றை வார்த்தையில் நறுக்கென்று தடுத்து நிறுத்தினார் தியாகராஜன்..
மணிவாசகம் கொதித்து விட்டார்.. அவருடைய உணர்வுகள் அலட்சியப்படுத்தப் படுவதா..?
“என்னங்க..? அன்னவாசல் மணியக்காரர் கூப்பிடறாருன்னு மரியாதை கொடுத்து வந்தா.. என்னையே கிணடல் பண்றீங்களா..?” கோபத்துடன் கேட்டார்..
“இதில கிண்டலுமில்ல.. சுண்டலுமில்ல மணிவாசகம்.. உங்க தங்கச்சி புருசன் உங்களுக்கு உசத்தின்னா.. அத உங்க வீட்டுக்குள்ளேயே வைச்சுக் கொண்டாடிக்கனும்.. ஊருக்கே அவன் உசத்தியாயிருக் கனும்னு அவசியம் ஒன்னுமில்ல..”
“இப்ப என்னதான் சொல்ல வரீங்க..?”
“எங்க மாப்பிள்ளை தனஞ்ஜெயன் உங்க பொண்ணு மேல ஆசைப்பட்டு… உங்க தங்கச்சி புருசன்கிட்ட பொண்ணுக் கேட்டதாகவும்… இவன் மாட்டேன்னு சொன்னதுக்கு எங்க மாப்பிள்ளை உங்க தங்கச்சி புருசனைக் குடிக்க வைச்சதாகவும்.. அதுக்கும் மேலே இறங்கி ஓடப் பார்த்தவன் மேலே காரை விட்டு மோதினதாகவும் பழி சொல்லியிருக்கானே.. இதை நாங்க சும்மா விட்டுருவோம்ன்னு நினைச்சீங்களா..?”
“சும்மா விடாம என்ன செய்வீங்க..? உங்களாலே ஆனதைப் பார்த்துக்கங்க..”
மணிவாசகம் போட்ட சப்தத்தில் திருக்குமரனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது..
‘கடவுளே..! மாமனே ஆனதைப் பாத்துக்கங்கன்னு சொல்லிக் கவுத்துட்டாரே.. இவனுக ஆனதைப் பாத்துக்கக் கிளம்பினா நான் தாங்குவேனா..?’
“பாத்துட்டாப் போச்சு..” என்றார் மணியக்காரர்..
அத்துடன் நிறுத்தாமல் திருக்குமரனைப் பார்த்து..
“என்னப்பா.. வீட்டோட மாப்பிள்ளை..! ஆனதைப் பாத்துக்கச்சொல்லி உன் மாமனே சொல்லிட்டாரு.. ஆனதைப் பார்த்துரலாமா..?” என்று கிண்டலாக கேட்கவும் செய்தார்..
திருக்குமரன் என்ன செய்வான்..? பக்கத்தில் மணிவாசகம் இல்லாமலிருந்தாலாவது.. ஐயா சாமி.. என்று மணியக்காரரின் கால்களில் விழுந்திருப்பான்.. அப்படிச் செய்யவும் முடியாமல் மணிவாசகம்தான் கோந்து போட்டதைப் போல திருக்குமரனுடன் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே..
“இந்தப் பூச்சாண்டியையெல்லாம் வேற எங்கே யாவது வைச்சுக்கங்க.. அன்னவாசல் ஜமீனுன்னா கொம்பா முளைச்சிருக்கு..? வழியோடு போன என் தங்கச்சி புருசனை மடக்கி.. பொண்ணுக் கேட்டது யாரு..? உங்க மாப்பிள்ளைதான்..”
நடந்தது என்னவென்று அறியாமல் வார்த்தைகளைச் சிதற விட்டார் மணிவாசகம்.. மணியக்காரரின் முகம் இறுகியது.. இந்திராதேவியின் புருவங்கள் சுருங்கின..
“யாரு பொண்ணுக் கேட்டது..?” அவள் கோபமாக கேட்டாள்..
“இந்தம்மா யாரு..?”
பெண்களிடம் பேசுவதற்கு யோசிக்கும் வழக்கமுள்ள மணிவாசகம் தயங்கினார்..
“அன்னவாசல் ஜமீன்தாரிணி இந்திராதேவி.. நீங்க பொண்ணுக் கேட்டதாச் சொன்ன தனஞ்ஜெயனைப் பெத்த அம்மா..”
தியாகராஜன் நிதானமாக இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்..
“ஓ..” மணிவாசகம் சங்கடப்பட்டுப் போனார்..
“உங்க பொண்ணு உலகப் பேரழகியாகவே இருக்கட்டும்.. அதை என் மகன் பொண்ணு கேட்டான்னு எப்படி நீங்க சொல்லலாம்..? எங்க தகுதிக்கும்.. உயரத்துக்கும் உங்க வீட்டில வந்து பெண்ணெடுக்க எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?”
கம்பீரமான இந்திராதேவி கேட்ட கேள்வியில் மணிவாசகத்தின் சங்கடம் பறந்தோடி விட்டது.. அவர் ரோசத்துடன் நிமிர்ந்தார்..
“உங்க மகன் பொண்ணுக் கேட்டதா என் தங்கச்சி புருசன் சொல்றானே…”
“அவன் சொன்னா..? அது உண்மையாகிருமா..?”
“பொய்யின்னு நீங்க சொல்கிறிங்களா..?”
“பொய்யேதான்.. உங்ககிட்டயெல்லாம் நாங்க பொண்ணு கேட்க மாட்டோம்.. யாரு வந்து.. யார் வீட்டிலே பொண்ணு கட்டறது..?”
இந்திராதேவியின் கம்பீரமான அலட்சியத்தில் தான் மட்டம் தட்டப்படுவதைப் போல உணர்ந்தார் மணிவாசகம்.. அவர் முகத்தில் கோபச் சிகப்பு வந்தது..
“போதும்மா.. ரொம்பப் பேசாதீங்க.. நீங்க பொண்ணு கேட்டாலும் நாங்க கொடுக்க மாட்டோம்.. உங்களுக்கு மருமகளா அனுப்பி வைக்கத்தான் என் பொண்ணைப் பெத்து வளர்த்து வைச்சிருக்கிறேனா..?”
மணிவாசகம் கோபத்துடன் இரைந்த போது..
“யாரைப் பார்த்து என்ன பேசறிங்கன்னு யோசித்துத் தான் பேசறிங்களா..?” என்ற குரல் கணிரென்று கேட்டது..
‘ஆஹா..! ஐயா வந்திட்டாரு..’
திரைப்படத்தில் அடுத்த காட்சியைப் பார்க்கப் போகும் ஆவலுடன் வாசல் பக்கமாக திரும்பிப் பார்த்தார் ரங்கசாமி..
அங்கே செந்தணலாக நின்று கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்..
தியாகராஜனின் பார்வையும்.. இந்திராதேவியின் பார்வையும் அர்த்தபுஷ்டியுடன் சந்தித்து மீண்டன.. அவர்கள் இயல்பாக பார்ப்பதைப் போல உள்ளே பார்த்தார்கள்.. அங்கே டைனிங் ஹாலின் அருகே செல்போனுடன் நின்றிருந்த மரகதம் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தாள்..
அதுதான் அவர்களின் திட்டம்.. தனஞ்ஜெயனின் மீது எப்படி பழி போட்டுப் பேசலாம் என்று கேட்பதற்காக வரவழைப்பதைப் போல மணிவாசகத்தை வரவழைப்பது.. அவரிடம் இந்திராதேவி கடுமையாக பேசி சண்டை வளர்ப்பது.. மரகதம் முன் கூட்டியே தனஞ்ஜெயனுக்குப் போன் பண்ணி தனஞ்ஜெயனை வர வைப்பது.. அவன் வரும் தருணத்தில் மிகச் சரியாக இந்திராதேவியை மணிவாசகம் திட்டிப் பேசுவதைப் போல சூழ்நிலையை உருவாக்குவது..
அதன்படி மணிவாசகம் வந்தவுடனே மரகதம் உள்ளே நழுவி தனஞ்ஜெயனுக்குப் போன் பண்ணி விட்டாள்..
“தனா.. என்னங்கய்யா இது..? உங்க அம்மாவை அந்த லட்சுமிபுரத்து மணிவாசகம் மனம் நோக பேசிக்கிட்டு இருக்காருப்பா.. பாவம் அண்ணி.. அண்ணன் போய் சேர்ந்த பின்னாலே உங்களுக்காகவே உயிரை வைச்சுக் கிட்டு இருக்கிற ஆத்மா.. அவங்களை நீங்கதானேப்பா பத்திரமா பார்த்துக்கனும்..?”
குரல் தழதழக்க மரகதம் பேசிய பேச்சில் தனஞ்ஜெயன் பதறிவிட்டான்.. அவனுக்கு லட்சுமிபுரத்து மணிவாசகம் என்பது யாராக இருக்கக்கூடும் என்றே தெரியவில்லை..
“யாரு அத்தை அது..?” என்று மரகதத்திடமே கேட்டு வைத்தான்..
‘சரியாப் போச்சு போ.. உனக்குப் பொண்ணு கொடுக்கப் போகிற மாங்காய் மடையனப்பா அவரு..’ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட மரகதம்.. விலாவாரியாக விவரத்தை எடுத்துச் சொன்னாள்..
“ஏன் அத்தை.. இந்தப் பஞ்சாயத்தை நான் பார்த்துக்க மாட்டேனா..? இதுக்காகவா அம்மா விட்ட விடிகாலையிலே உங்க வீட்டைத் தேடி ஓடி வந்தாங்க..?” தனஞ்ஜெயனின் குரலில் அதிருப்தி தொனித்தது..
“இல்லே தம்பி.. அண்ணி அதுக்காக வரலை.. எங்க மகளுக்கு என்னைக்கு வளைகாப்புன்னு கேட்டுட்டுப் போக வந்தாங்க.. உங்க மாமாதான் விசயத்தை வேற
யாரு மூலமாவோ கேள்விப்பட்டுட்டு உங்க அம்மாகிட்ட இப்படியாமில்ல தங்கச்சின்னு கேட்டாரு.. அண்ணி பதறிப் போயி கணக்குப்பிள்ளையை வரச்சொல்லி விவரம் கேட்டாங்க.. அவரும் மறுத்துப் பேச முடியாம ஆமாம்ன்னு சொல்லிட்டாரு.. உங்க மாமாதான் மனசு கொதிச்சுப் போயி.. அந்த மாணிக்கவாசகத்துக்கிட்ட நியாயம் கேட்கனும்னு வரச் சொன்னாரு.. வந்த மனுசன் உங்க மாமாவை விட்டுட்டு.. உங்க அம்மாகூட சண்டைக்கு வாராரு தம்பி..”
அதற்கு மேலும் பொறுமையாக தனஞ்ஜெயன் விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பானா என்ன..?
“இதோ கிளம்பிட்டேன் அத்தை.. நீங்க அம்மாவை பத்திரமா பார்த்துக்கங்க..” என்று கிளம்பி விட்டான்..
இந்திராதேவி ஹாலின் ஜன்னல் வழியாக போர்டி கோவை பார்த்தபடி தியாகராஜனுக்கும்.. மணிவாசகத்துக்கம் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தையைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.. தனஞ்ஜெயனின் கார் போர்டிகோவில் நுழைவதைக் கண்டதும் களத்தில் இறங்கி விட்டாள்.. அவளின் கர்வமான பேச்சில் ரோசப்பட்டுப் போன மணிவாசகம்..
“உங்களுக்கு மருமகளா அனுப்பத்தான் நான் பொண்ணப் பெத்து வளர்த்து வைச்சிருக்கேனா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது தனஞ்ஜெயன் வீட்டுக்குள் பிரவேசித்து விட்டான்..
“யாரைப் பார்த்து என்ன பேசறிங்கன்னு யோசித்துத்தான் பேசறிங்களா..?”
அவனின் கோபமான குரலில் இந்திராதேவி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.. மணிவாசகத்திற்கு கோபம் குறையவில்லை..
“என்னங்க இது.. வாயெடுக்கிறவங்கள்ளாம் இதே போல பேசி வைக்கறிங்க.. உங்களைப் பாத்து நான் இதைப் பேசக் கூடாதா..? பெண்ணைப் பெத்தவங்க நானு..”
“யோவ்.. போய்யா.. ஊரில இல்லாத பெண்ணைப் பெத்து வைச்சிட்டீரு.. எதுக்கெடுத்தாலும்.. பொண்ணு.. பொண்ணுன்னு அனத்திக்கிட்டு.. ஏன்..? என் அம்மாவுக்கு மருமகளா உங்க பொண்ணை அனுப்பி வைக்க மாட்டீரோ..?”
கண்கள் இடுங்க கோபத்துடன் கனன்ற தனஞ்ஜெயனின் கேள்வியில் இந்திராதேவியின் இதயம் குளிர்ந்தது..
தனஞ்ஜெயனுக்குத் தெரியாமல் பஞ்சாயத்தை ஆரம்பிக்க வேண்டும்.. தனஞ்ஜெயனுக்கு விவரம் தெரிய வருகிறபோது அவன் அந்தப் பஞ்சாயத்தில் இருந்து பின் வாங்கவே கூடாது என்ற அவரின் எண்ணம் பலித்து விட்டது..
இனி அவளே ‘நில்’ என்று சொன்னாலும் அவள் மகன் நிற்க மாட்டான்.. பஞ்சாயத்திலிருந்து பின் வாங்க மாட்டான்.. இதற்கு மேலான பஞ்சாயத்து தனஞ்ஜெயனுக்கும்.. மணிவாசகத்திற்குமானது.. அவன் நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டான்..
நிம்மதி பெருமூச்சுடன் அவள் தியாகராஜனையும்.. மரகதத்தையும் பார்த்தாள்.. அவர்கள் இமைமூடி அவளை அமைதிப் படுத்தினார்கள்..
‘என்னாங்கடா இது.. இதவிட மோசமா ஆஸ்பத்திரியில் இந்த ஆளுக பேசினானுக.. ஐயா அதையெல்லாம் கண்டுக்காம இவனுகள்ளாம் ஒரு ஆளுகளான்னு கேட்டுட்டு வந்திட்டாரு.. இப்ப என்னடான்னா.. அம்மாவைப் பார்த்து சொன்ன ஒற்றை வார்த்தைக்காக யுத்த முழக்கம் செய்யறாரு..’
ரங்கசாமி வாயில் ஈ போய் வருவதைக் கவனிக்காமல் ‘ஆ’ வென்று வாய் பிளந்து கவனித்துக் கொண்டிருந்தார்..
“என்னது..?” மணிவாசகம் கொதித்தார்..
அவருக்கு தனஞ்ஜெயன் யாரென்று தெரியாதுதான்.. அவன் அன்னவாசலின் ஜமீன்தாரர் என்பதை அறியாமல் மருத்துவமனையில் தங்கையின் கணவன் இருக்கிறானே என்ற கோபத்துடன் பேசி விட்டார்தான்.. அதற்காக அவன் உச்சாணிக் கொம்பில் ஏற.. அவர் அண்ணாந்து பார்த்து முட்டி போட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமா..?
“வயசில பெரியவர்ங்கிற நினைப்பில்லாம பேசற நீங்கள்ளாம் ஒரு பெரிய மனுசன்..! எந்த தைரியத்தில என் பொண்ணக் கட்டிக் கொடுன்னு கேட்கறிங்க..?”
“போய்யா.. உமக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு..? மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கப் போன உங்க தங்கச்சி புருசன் குடிச்சுப்புட்டு காருக்கு குறுக்கால வந்து விழுகறான்.. கருமமேன்னு ஆஸ்பத்திரியில சேத்தா.. உம்மைக் கண்டதும்.. உங்க பொண்ணுக்காக நானே இவனுக்கு ஊத்திக் கொடுத்தேன்னு அந்தர் பல்ட்டி அடிக்கிறான்.. உம்ம குடும்பமெல்லாம் ஒரு குடும்பம்.. அதில பெண்ணைப் பெத்து வைச்சுக்கிட்டு நீரு பிலிம் காட்டறீரு.. ஆமாம்.. உம்ம வயசுக்கு நான் மரியாதை கொடுக்கனும்.. என்னோட அம்மாவுக்கு நீர் மரியாதை கொடுக்க மாட்டிரு.. அப்படித்தானே..? உமக்கெல்லாம் இம்புட்டுத்தான்ய்யா மரியாதை.. உம்ம பொண்ணக்
கட்டிக் கொடுன்னு கேட்க எங்களுக்கு தைரியம் வேண்டியதில்லைய்யா.. உமக்குத்தான் தகுதி வேணும்..”
இந்திராதேவி சொன்ன அதே தகுதி..!
மணிவாசகத்தின் தன்மானம் அடிவாங்கியது.. சுயமரியாதை சிலிர்த்து எழுந்தது..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.