Chapter 07
“உங்க தகுதியைப் பத்தி எனக்குத் தெரியாதா..? முப்பத்தி மூணு வயசு வரைக்கும் கல்யாணமாகாம இருக்கிறதுதான உங்க தகுதி..?”
காயப்பட்ட மணிவாசகத்தின் தன்மானம் பதிலுக்கு தனஞ்ஜெயனின் தன்மானத்தைக் காயப்படுத்தி விட்டது..
குருதிகண்ட சிங்கமாக சிலிர்த்து நிமிர்ந்தான் தனஞ்ஜெயன்..
“ஆமாம்.. இப்ப எனக்கு முப்பத்துமூணு வயதுதான்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..?” கண்கள் சிவக்க ரௌத்ரத்துடன் கேட்டான்..
மணிவாசகத்திற்கு என்னவோ போல ஆகி விட்டது.. எதிலோ ஆரம்பித்து.. எதிலோ வந்து நிற்பதைப் போல அவர் உணர்ந்தார்.. புலி வாலை பிடித்த கதையாய் அவர் கதை ஆகிவிட்டது.. அதிலிருந்து விடுபடும் மார்க்கம் புரியாமல் அவர் திகைத்து நிற்க.. தனஞ்ஜெயன் தியாகராஜனைப் பார்த்தான்..
“மாமா.. சுத்துப்பட்டிக்கு தகவல் சொல்லி அனுப்புங்க.. வார புதன்கிழமை இங்கே சுத்துப்பட்டி பஞ்சாயத்து கூடியாகனும்..”
“ஆகட்டும் மாப்பிள்ளை..”
“இந்த மணிவாசகத்தோட தங்கச்சி புருசன் மேல நான் பிராது கொடுக்கறேன்.. என் மேல இவன் சொன்ன குற்றச்சாட்டை இவன் புரூவ் பண்ணனும்.. அப்படிக் குற்றச்சாட்டை புரூவ் பண்ண முடியாமப் போனா.. ஒன்னு இவனும்.. இந்த மணிவாசகமும் குடும்பத்தோட சுத்துப்பட்டு கிராம பஞ்சாயத்தில என் காலில
விழுந்து மன்னிப்புக் கேட்கனும்.. இல்லைன்னா.. இந்த மணிவாசகத்தோட மகளை எனக்குக் கட்டிக் கொடுத்தாகனும்.. வாங்கம்மா போகலாம்…”
தனஞ்ஜெயன் இந்திராதேவியை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறிவிட்டான்.. மணிவாசகம் அவனை விட கோபமாக மீசையை முறுக்கினார்..
“நீ கவலைப்படாதேடா மாப்பிள்ள.. நாம எதுக்கு பயப்படனும்..? நியாயமும் தர்மமும் நம்ம பக்கம் இருக்கு..”
மணிவாசகம் முழங்க.. திருக்குமரன் பரிதாபமாக தலையை அசைத்தான்.. தியாகராஜனின் பார்வை அவனைத் துளைத்தது.. அப்படியா.. நியாயமும்.. தர்மமும்.. உன் பக்கம் இருக்கின்றனவா என்று கேள்வி கேட்டது.. அவன் அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்..
வீட்டுக்கு போனபின்பும் அவன் ஆன மட்டும் முயற்சி செய்தான்தான்..
“மாமா.. நமக்கெதுக்கு வம்பு..? அவனோ பெருங்கொண்ட பணக்காரன்.. அவன்கூட மோத நம்மால் முடியுமா..?”
“அதுக்கு..?”
“சமாதானமாப் போயிரலாம் மாமா..”
“எப்புடி சமாதானமாப் போறது..?”
“நடந்தது நடந்து போச்சு.. நீங்க உங்க வேலையைப் பாருங்க.. நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம்ன்னு சொல்லலாமில்ல..?”
“அவன் ஆஹான்னு கேட்டுட்டுத்தான் வேற சோலியைப் பாப்பான்… போவியா… நிலைமை முத்திப் போச்சுப்பா.. சுத்துப்பட்டி பஞ்சாயத்து கூடப் போகுது.. அதுக்கான அழைப்பு வந்திருச்சு.. நாம வரமாட்டோம்ன்னு சொல்ல முடியாது..”
“ஏன் முடியாது..?”
“முடியாதுன்னா முடியாதுதான்… இது ஊர் கட்டுப்பாடு.. இன்னும் உடையாம இருக்கிற நியாய தர்மம்.. இதை மறுக்க என்னால முடியாது.. அப்படி மறுத்தா சுத்துப்பட்டியும் என் குடும்பத்தை தள்ளி வைச்சிருவாங்க.. என் குடும்பத்தில பொண்ணு கொடுத்து பொண்ணெடுக்க மாட்டாங்க…”
மணிவாசகம் கவலையுடன் சொன்ன போது பெண் கொடுப்பதைப் பற்றி வேண்டுமானால் இவர் கவலைப் படலாம்.. பெண் எடுப்பதைப் பற்றி ஏன் இவர் கவலைப்பட வேண்டும் என்ற சினம் திருக்குமரனுக்கு வந்தது.. அவன் பெற்று வைத்திருக்கும் பெண்கள் இருவரும் மணிவாசகத்தின் கண்களுக்குத் தென்பட வில்லையா..?
திருக்குமரனிடம் கேட்டால் பெண் கொடுப்பதற்கும் வழியைச் சொல்லிக் கொடுப்பானே.. அத்தையின் கணவனான அவனே மைத்துனரின் மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள மாட்டானா..? அவனுக்கும் ஆண் குழந்தை வேண்டுமென்ற ஆசை இருக்காதா..? இப்போது ஒன்றும் இரண்டு தார மணம் தடைசெய்யப்பட்ட.. சட்ட விரோதமான செயல் போல தோன்றவில்லையே.. எத்தனையோ சீரியல்கள் இருதார மணத்தை சட்டரீதியான மணம் போல அங்கீகரிக்கின்றனவே.. ஒரு மனைவியின் கண் முன்னே.. இன்னொரு மனைவியுடன் அந்தக் கணவன் கூடி வாழ்வதும்.. அந்த ஆண்பிள்ளை சிங்கத்திற்காக.. இந்த சக்களத்திகள் இருவரும் ஒருவருக்கொருவர் வில்லிகளாக மாறி அடித்து உருள்வதும் அன்றாடம் சீரியலில் வரும் நிகழ்வுகளாக இருக்கின்றனவே..
அவன் என்ன அப்படியா மல்லிகாவிடம் சுமித்ராவை அடிபட விட்டு விடுவான்..?
இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கும் மணிவாசத்தை ‘மர மண்டை’ என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தான் அவன்..
‘அந்தச் சுத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு போகலைன்னா இத்தனை ஆதாயம் இருக்கா..?’
அவன் இஞ்சி திண்ற குரங்கைப் போல மனதுக்குள் இளித்தான்.. அந்த பரமசிவத்தின் மகனுக்கு சுமித்ராவை திருமணம் செய்து கொடுக்க வைத்தால் அவனுக்கு ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம்தான் கிடைக்கும்.. இந்த சுத்துப்பட்டிப் பஞ்சாயத்திற்கு போகா விட்டால் அவனுக்கு சுமித்ராவே கிடைத்து விடுவாள் போல இருக்கிறதே..
அந்த எண்ணத்துடன் மணிவாசகத்தை பஞ்சாயத்துக்கு கிளம்ப விடாமல் அவன் தடுத்துப் பார்த்தான்..
“எந்தக் காலத்தில இருக்கீங்க மாமா..? இவனுக அழைச்சா நாம போய்த்தான் ஆகனுமா..?”
“போய்த்தான் ஆகனும்.. நம்ம பக்கம் நியாயமும் தர்மமும் இருக்கு..”
சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாய் மணிவாசகம் ஜெபிக்க.. திருக்குமரனின் முகம் அஷ்ட கோணலானது..
‘இந்த ஆளு இந்த நாயத்தையும்.. தர்மத்தையும் விடவே மாட்டாரா..? பிடிச்சுத் தொங்கிக்கிட்டே இருக்காரு..’
“அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் மாமா..”
“அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது மாப்பிள்ளை.. பஞ்சாயத்திலே நாம சொன்னது உண்மைன்னு நாம நிரூபிக்கனும்.. அப்படி நிரூபிச்சுட்டு அந்த தனஞ்ஜெயனைக் குடும்பத்தோட நம்ம காலில விழ வைக்கனும்..”
சிவந்த கண்களுடன் மணிவாசகம் சூளுரைத்ததில் திருக்குமரனுக்கு குலை நடுங்கி விட்டது..
‘நடக்கிற காரியமா இது..?’
இது இப்படியிருக்க.. தியாகராஜனின் தரப்பிலிருந்து ஒரு செய்தி மணிவாசகத்திற்கு வந்து சேர்ந்தது.. அந்தச் செய்தியின் சாராம்சம்.. சுற்றுப்பட்டி பஞ்சாயத்திற்கு மணிவாசகம் குடும்பத்துடன் வந்து சேரவில்லை யென்றால்.. அவரின் தங்கையின் கணவன் தனஞ்ஜெயனின் காரிலிருந்த ஐம்பது லட்சரூபாய் ரொக்க பணத்தை திருடிக் கொண்டு போய் விட்டான் என்று போலிஸில் புகார் செய்யப்படும் என்று சொன்னது..
“இது என்ன மாமா வம்பா இருக்கு..? நானெங்கே அவன் காரில ஏறினேன்..?”
அவனையுமறியாமல் வாய் விட்ட திருக்குமரன் நாக்கைக் கடித்துக் கொண்டான்..
“நீதானேடா மாப்பிள்ள.. அவன் காருக்குள்ள உன்னை உட்காரவைச்சு ஊத்திக் குடுத்தான்னு சொன்ன..?” மணிவாசகத்தின் புருவங்கள் யோசனையுடன் உயர்ந்தன..
“ஆமாம் மாமா.. ஆமாம்..” திருக்குமரன் இமயமலையின் உச்சியில் இருப்பதைப் போல வெடவெடத்தான்..
‘இப்புடியா.. முன்னாலயும் போக முடியாம.. பின்னாலயும் போக முடியாம அவன் வேலி போட்டு வைப்பான்..?’
தனஞ்ஜெயனின் வேட்டையாடுதலில் முதன் முதலாக திருக்குமரனுக்குள் பயம் எழுந்தது..
ஆழம் தெரியாமல் அவன் காலை விட்டு விட்டானா..?
“நீ வாயை வைத்துக்கிட்டு சும்மா இருந்திருந் தாலாவது அந்த தியாகராஜன்கிட்ட நான் துணிஞ்சு பதில் சொல்லலாம்.. நீதான் அவன் காருக்குள்ள ஏறி.. இறங்கினதை ஆஸ்பத்திரியில அத்தனை பேர் முன்னாடியும் ஒப்பிச்சு வைச்சிருக்க.. இப்ப அவன் பேக்டரியில வேலை பாக்கிற வொர்க்கர்ஸீக்கு கொடுக்கக் கொண்டு போன சம்பள பணம் ஐம்பது லட்சத்தக் காணோம்ன்னு சொல்லப் போகிறதாச்சொல்றான்.. இருக்கிற பிரச்னையில இதுவும் சேர்ந்திருக்கு…”
அதற்குமேல் திருக்குமரன் மறுத்துப் பேச வாயைத் திறக்கவில்லை.. குடும்பத்தினரிடம் விவரம் சொல்ல மணிவாசகம்தான் தயங்கினார்.. திருக்குமரனுக்கு அந்தத் தயக்கமெல்லாம் எதுவுமில்லை.. அவன் மல்லிகாவிடம் விவரத்தை சொல்லி விட்டான்..
“உண்மையைச் சொல்லுங்க.. அந்த தனஞ்ஜெயனா உங்களுக்கு ஊற்றிக் கொடுத்தான்..?” மல்லிகா நெற்றிக் கண்ணைத் திறந்தாள்..
“சத்தம் போடாதேடி.. உனக்குப் புண்ணியமாப் போகும்.. அந்த பரமசிவம் மகன்தான் ஊற்றியும் கொடுத்து.. ஐந்து ஏக்கர் புஞ்சை நிலத்தையும் கொடுக்கிறேன்னான்..”
“எதுக்கு..? என் அண்ணன் மகளை அவனுக்கு காவு கொடுக்கிறதுக்கா..?”
“மல்லிகா..”
“பேசாதீங்க.. உங்களை வளர்த்து ஆளாக்கி.. தங்கச்சியையும் கட்டிக் கொடுத்து.. குடும்பத்தோட வீட்டில உட்கார வைச்சு சோறு போடறாரே.. எங்கண்ணன்..! அவரு மகளை குடிகாரக் காவாலிப் பயலுக்கு கட்டிக் கொடுக்க விலை பேசிட்டு வந்தீங்களா..?”
மல்லிகா விடிய விடிய கொடுத்த கொடுப்பில்.. விடியும் போது திருக்குமரனின் இரண்டு காதுகளிலும் ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்ட ஆரம்பிக்கவா என்று கேட்டது..
‘பேச வாயைத் திறந்தா மூட மாட்டேங்கிறாளே..’
அந்தப் பேச்சும் அவனைத் திட்டுவதற்காக மட்டுமே பேசப்படும் பேச்சு என்பதில் அவனுக்கு மலையளவு வருத்தமிருந்தது..
பெரிய குடும்பத்தில் பிறந்த பெண்களால் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை என்றுமே பெற முடிந்ததில்லை.. அதற்கான உதாரணமாக விளங்குபவள் மல்லிகா.. அவளுடைய அழகுக்கும்.. குணத்துக்கும்.. அறிவுக்கும்.. அவளுக்கு திருக்குமரனைப் போன்ற கணவன்தான் வாய்த்திருக்க வேண்டுமா..?
‘விதி..!’
கட்டிலில் கண்மூடி படுத்திருந்த மல்லிகாவின் விழியோரம் கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.. அவளிருந்த மார்கழி மாத நோன்புகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன.. கடைபிடித்த விரதங்கள் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடின..
இந்தக் கணவனை மணவாளனாக அடைவதற்கா அவள் இத்தனை விரதங்களையும் கடைபிடித்தாள்..?
மல்லிகா சொல்லிய விவரங்களில் மலைத்து விட்டாள் திலகவதி…
“என்ன மல்லி சொல்லுற..?”
“ஆமாங்கண்ணி.. ராத்திரிதான் இந்த மனுசன் வாயத் திறந்தாரு..”
“உங்கண்ணன் அதையும் செய்யலையே..”
ரைஸ்மில்லில் இருந்து வீட்டுக்கு வந்த மணிவாசகம்.. கை.. கால்களை அலம்பி.. முகம் கழுவி.. தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தபடி ஹாலில் இருந்த சோபாவில்..
“உஸ்.. அப்பாடி..” என்று ஆசுவாசப் பெருமூச்சை விட்டபடி உட்கார்ந்தார்..
அவரை முறைத்தபடி வந்த திலவதியின் கையில் மோர் தம்ளரை எதிர்பார்த்து ஏமாந்து போனவராக..
“மோர் கொண்டு வரலை..?” என்று வினவினார்..
“இல்லை..” இறுக்கமாக பதிலைச் சொன்னாள் திலகவதி..
‘ஏன் இப்படிப் பேசறா..?’ மணிவாசகம் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தார்..
திலகவதி அப்படி அலட்சியமாகப் பேசக்கூடியவளல்ல..
“என்னடி..?”
“ஒன்னுமில்லை..”
“ஒன்னுமில்லாததுக்கா முகத்தை ஒரு முழ நீளத்துக்கு தூக்கி வைத்திருக்கிறவ..? அந்த ஃபேனைப் போடு..”
திலகவதி பேனின் சுவிட்சை ஓங்கி அடித்த அடியில் ஃபேன் அலறிக் கொண்டு சுழன்றது..
“என்னடி செய்கிற..?” மனைவியை விசித்திரமாக பார்த்தார் மணிவாசகம்..
“என்னத்தைச் செஞ்சேன்..?” எதிரியிடம் பேசுவதைப் போல கேட்டாள் திலகவதி..
“ஃபேனைப் போடச் சொன்னா.. சுவிட்ச் பாக்ஸை உடைக்கிற.. நீ ஒரு மார்க்கமாத்தாண்டி இருக்க..”
“என்ன செய்கிறது..? கட்டிக்கிட்ட ஆம்பளை உண்மை.. சண்மையை பொண்டாட்டிகிட்டச் சொல் கிறவரா இருந்தா பொண்டாட்டியும் ஒரு மார்க்கமா இல்லாம.. சாந்தமா.. பாந்தமா இருந்திருப்பா.. இங்கதான் அப்படியில்லையே..”
திலகவதி சமையலறைக்குள் போனாள்.. அவள் கைபட்ட பாத்திரங்கள் டாமால்… டுமால்… என்ற சப்தங்களை எழுப்பியதில் மணிவாசகத்தின் ஆசுவாசம் அம்போ எனப் பறந்து போய் விட்டது.. அவர் எழுந்து சமையலறைக்குள் சென்றார்.. அவர் வந்து
நிற்பதை உணர்ந்தும்.. பார்த்தும்.. பார்க்காதவளைப் போல திலகவதி தன்போக்கில் பாத்திரங்களை உடைத்துக் கொண்டிருந்தாள்..
“திலகவதி..”
“திலகவதிக்கு என்ன வைச்சிருக்கீங்க..?”
“வேலை முடிஞ்சிருச்சா..?”
“எப்படி முடியும்..? இருபத்தி நாலுமணி நேரமும் வேலை செஞ்சாலும் ஓயாத வேலை.. இந்த வீட்டு வேலைதான்.. ஒருநாள் செஞ்சு பாருங்க.. அப்பத் தெரியும்.. பொம்பளையாப் பொறந்தவள எப்படி அடிமையா வேலை வாங்கறோம்ன்னு..”
‘என்னடா இது..!’
திலகவதியின் உரிமைக் குரலில் சஞ்சலப் பட்டுப் போனார் மணிவாசகம்.. பெண்ணுரிமை வாதத்திற்கும்.. திலகவதிக்கும் அதிகதூரம் என்று அவர் போட்டு வைத்திருந்த கணக்கீடு தவறான கணக்கீடோ..?
“நீ இப்படியெல்லாம் பேச மாட்டியேடி..”
“அப்படி உங்ககிட்ட நான் வந்து சொன்னேனா..? நீங்களா அப்படியொரு முடிவுக்கு வந்தா அதுக்கு நான் பிணையாக முடியுமா..?”
“புதுசாப் பேசறியேடி..”
“மனசில இருக்கிறதைப் பேசறேன்.. மாடு மாதிரி உழைக்கிறதுக்குத்தான் பெண்ஜென்மம் இருக்குன்னு முடிவே பண்ணிட்டிங்களா..? உங்களுக்கு சமைச்சுப் போட நான் வேணும்.. துணிமணிகளை துவைச்சுப் போட நான் வேணும்.. வீட்டைப் பாத்துக்க நான் வேணும்.. பிள்ளை பெத்து வளர்க்கிறதுக்கும் நான் வேணும்.. ஆனா.. உண்மை சண்மையைப் பேச மட்டும் உங்க மாமன் மகன் வேணும்.. அப்படித்தானே..? அப்புறம் எதுக்காக என் கழுத்தில் தாலியைக் கட்டினீங்க.. அவன் கழுத்திலேயே அதைக் கட்டியிருக்கலாமே…”
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.