Chapter 08
திலகவதியின் கோபம் பல ஆண்டுகளாய் பதுங்கியிருந்தது.. சமயம் கிடைத்ததும் சீறிப் பாய்ந்து விட்டது..
“சேச்சே.. என்னப் பேச்சுன்னு பேசற..? வாயை மூடு..”
“உங்களுக்குத்தான் நான் பேசினாலே பிடிக்காதே.. வாயை மூடிரனுமே.. அதுவே உங்க மாமன்மகன் வாயைத் திறந்தா அது வில்லங்கமா இருந்தாலும் விழுந்து விழுந்து கேப்பீங்களே..”
“திலகவதி..”
“போதும்.. இந்த சத்தத்தை உங்க மாமன் மகன்கிட்டக் காண்பிங்க.. என்கிட்ட வேணாம்.. ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. ஆளைக்கடிச்ச கதையாய்.. நம்மள குடும்பத்தோட சுத்துப்பட்டி பஞ்சாயத்திலே நிக்க வைச்சிட்டான் உங்க மாமன் மகன்.. இனியும் நான் வாயை மூடிக்கிட்டு இருந்தா இந்தக் குடும்பம் என்ன கதிக்கு ஆளாகுமோ..”
“திலகா.. அவன் என் தங்கச்சி புருசன்டி..”
“பாவம் மல்லிகா..! உங்க கூடப் பிறந்த பாவத்துக்கு.. இவனைப் புருசன்னு சொல்லிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கா.. அவளுக்கு செஞ்ச கொடுமை பத்தாதுன்னு உங்க மகளுக்கும் கொடுமை செய்யத் துணிஞ்சிட்டிங்க..”
“ஏய்ய்.. ஏய்ய்.. சுமித்ராவுக்கு நான் என்னடி கொடுமை செஞ்சேன்..?”
“எவனாவது ஒரு காவாலிப்பயலுக்கு நம்ம மகளைப் பொண்ணு கேட்டு வந்தா.. நேராப் போயி நீங்க விசாரிக்கனும்.. அதை விட்டுட்டு.. இன்னொரு காவாலிப் பயலை அனுப்பி வைச்சு விசாரிக்கச் சொல்லியிருக்கக் கூடாது..”
“நாக்கு நீளுது திலகா..”
“மாட்டியிருக்கிறது என் மகளோட வாழ்க்கை.. நாக்கு நீளத்தான் செய்யும்..”
“சுமித்ரா என்னோட மகள்..”
“அந்த நினைப்பிருந்தா இப்படியொரு பஞ்சாயத்தைக் கூட்டித் தொலைச்சிருக்க மாட்டிங்க..”
“நானாடி பஞ்சாயத்தைக் கூட்டச் சொன்னேன்..?”
“உங்க மாமன் மகனை விட்டுக் கொடுக்காத உங்க பேச்சு பஞ்சாயத்தைக் கூட்ட வைச்சிருச்சு..”
மணிவாசகம் களைத்துப் போனார்.. மனைவி காட்டிய முழு வீச்சு எதிர்ப்பில் அவரின் மன நிம்மதி பறந்து போனது..
“சமாதானமாய் பேசிப் பாருங்க..” என்றாள் திலகவதி..
“எப்படிடீ..? அவன் என் மாமன் மகனை மன்னிப்புக் கேட்கச் சொல்றானேடி..”
“கேட்டா அவனொன்னும் குறைஞ்சு போக மாட்டான்..”
“செய்யாத தப்புக்கு அவன் ஏன் மன்னிப்புக் கேட்கனும்..?”
“அவன் தப்புச் செய்யலைன்னு உங்களுக்குத் தெரியுமா..?”
திலகவதி சமையலறையை விட்டுவிட்டு வெளிநடப்பு செய்து விட்டாள்.. பிள்ளைகள் விவரம் கேட்டபோது காய்ச்சல் என்று காரணம் சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்திப் படுத்து விட்டாள்.. மணிவாசகத்திடம் முகம் கொடுத்துப் பேசவில்லை..
சுமித்ராவும்.. சுந்தரமும் எதுவும் தெரியாதவர்களாக.. மல்லிகா சமைத்ததை நொட்டை சொல்லியபடி சாப்பிட்டார்கள்.. மல்லிகாவின் பெண்களிடம் வம்பிழுத் தார்கள்.. நாள்கள் உருண்டு.. விடிந்தால் புதன்கிழமை என்ற நிலையில் மல்லிகா தன்னைத் தனிமைச் சிறையில் இருத்திக் கொண்ட திலகவதியை அணுகினாள்..
“அண்ணி..”
“ம்ம்ம்…”
“நாளைக்கு நாம குடும்பத்தோட அன்னவாசலுக்கு கிளம்பியாகனும்..”
“அதில உனக்கு மெத்த சந்தோசம் போல இருக்கு..”
குத்தலும்.. கோபமுமாக கேட்டாள் திலகவதி.. புண்ணான மனதை ஒரு புன்னகையில் மறைத்தபடி அண்ணன் மனைவியின் அருகில் அமர்ந்தாள் மல்லிகா.. அவள் கையை தன் கைக்குள் பத்திரப் படுத்திக் கொண்டாள்..
“உண்மையைச் சொல்லனும்னா எனக்குச் சந்தோசம் தான் அண்ணி..”
“மல்லிகா..”
“நினைச்சுப் பாருங்க அண்ணி.. வெறும் வாய் வார்த்தையில மன்னிப்புக் கேட்கிறதுக்கே மாட்டேன்னு சொன்ன நம்ம அண்ணன்.. குடும்பத்தோட பஞ்சாயத்தில எல்லார் காலிலயும் விழுந்து மன்னிப்பு கேட்டிருவாரா..?”
“வேணாம் மல்லிகா.. நானே நொந்து போயிருக்கேன்.. நீ அதில கபடி விளையாடிப் பார்க்காதே..”
“இல்லண்ணி.. நான் சொல்ல வந்ததே வேற..”
“என்னத்தைச் சொல்ல வந்த..? உங்க அண்ணன் மன்னிப்புக் கேட்கலைன்னா என்ன ஆகும்ன்னு நினைச்சுப் பார்த்தியா..?”
“என்ன ஆகும்..? எனக்குத் தெரிஞ்ச வரையில்.. அண்ணன் மன்னிப்புக் கேட்கலைன்னா நம்ம சுமித்ராவை அந்த அன்னவாசல் ஜமீன்தாருக்கு கட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும்.. அவ்வளவுதானே..?”
“மல்லிகா…”
திலகவதியின் விழிகளில் உயிர்ப்பு வந்தது.. அவள் வெகு சந்தோசமாக நாத்தனாரின் கையைப் பிடித்துக் கொண்டாள்..
“ஆமாங்கண்ணி.. என்னோட கணக்கு சரியாயிருந்தா அதுதான் நடக்கும்… அது நடக்கனும்னுதான் இந்த பஞ்சாயத்தையே அவங்க கூட்டியிருப்பாங்களோன்னு எனக்குத் தோணுது..”
“எதை வைச்சு அப்படிச் சொல்ற..?”
“இந்த மனுசன் சும்மாயிருக்க மாட்டாம அந்த தனஞ்ஜெயன் நம்ம சுமி மேலே ஆசைப்பட்டு பொண்ணு கேட்டதா பழி போட்டிருக்கார்.. நம்ம அண்ணனும் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு அந்த தனஞ்ஜெயன் காதுபட அவரோட அம்மாகிட்ட உனக்கு மருமகளா அனுப்பத்தான் என் பொண்ண பெத்து வளர்த்து வைச்சிருக்கேனான்னு கேட்டிருக்கார்.. அந்த தனஞ்ஜெயன் அண்ணனைப் பாத்து.. என் அம்மாவுக்கு உங்க மகளை மருமகளா அனுப்ப மாட்டிங்களோன்னு சவால் விட்டிருக்கார்..”
“ஆத்தாடி.. இம்புட்டுக் கதயும் உனக்கெப்படி தெரியும் மல்லி..? பக்கத்தில இருந்து பாத்ததைப் போல இல்ல பேசற..”
“நான் பக்கத்தில இல்லைன்னா என்ன அண்ணி..? அதான் நான் கழுத்தை நீட்டியிருக்கிற குணசாலி புருசன் பக்கத்தில இருந்திருக்காரே..” கசப்புடன் சொன்னாள் மல்லிகா..
இப்போது ஆறுதலாக கைபிடித்து தட்டுவது திலகவதியின் வேலையாக ஆகிப் போனது..
“நடந்ததை மாத்த முடியுமா மல்லிகா..?”
“அதனாலதான் சொல்றேன்… இனி நடக்கப் போகிறதையாவது நல்லவிதமா மாத்தலாம்.. எப்படியும் நம்ம சுமித்ராவை நல்ல இடத்தில கட்டிக் கொடுக்க என் புருசன் விடப் போறதில்ல…”
அதில் பொதிந்திருந்த உண்மையில் திலகவதி மௌனமானாள்.. அவளால் என்ன பேச முடியும்.. கட்டிய மனைவியே கணவனின் கயமைத்தனத்தைப் பற்றித் தெளிவாக மதிப்பிட்டுச் சொல்கிறாள்.. ஆமாம் என்று சொன்னால் அந்தப் பேதையின் மனம் வலிக்காதா..?
கயவனாக இருந்தாலும் அவன் அவளின் கணவணாகித் தொலைத்து விட்டானே.. ஃபுல்லாக குடித்தாலும் அந்தக் குடிகாரன் அவளுக்குப் புருசனாகித் தொலைத்து விட்டானே..
“அண்ணனும் மாமன் மகன் சொல்றதுதான் வேதம்ன்னு என் புருசன் பேச்சுக்குத் தலையை ஆட்டி வைச்சிருவாரு.. இந்த வீட்டுக்கு ஒரு மல்லிகா போதும் அண்ணி.. சுமித்ராவும் என்கூட கூட்டுச் சேர வேணாம்..”
நாத்தனாரின் தவிப்பில் திலகவதியின் மனம் கரைந்தது.. இவள்தான் எப்பேற்பட்டவள் என்று அவள் மனம் நெகிழ்ந்து போனாள்..
“அதனாலதான் சொல்றேன் அண்ணி.. நம்ம சுமித்ராவுக்கு கிடைத்திருக்கிறது அதிர்ஷ்ட வாய்ப்பு.. இதைப் பயன்படுத்தி அவளை அன்னவாசல் ஜமின்தாருக்கு கட்டிக் கொடுத்திடறதுதான் அவளுக்கு நல்லது அண்ணி..”
“அவங்க ஜமீன் வம்சம் மல்லிகா.. கோடிஸ்வரங்க.. நம்மால நினைச்சுப் பாக்க முடியாத உயரத்தில இருக்கிறவங்க..”
“அவங்களத்தான்.. உங்க புருசனும்.. என் புருசனும்.. கூட்டணி போட்டுக்கிட்டு அவமானப் படுத்தியிருக்காங்க.. அண்ணி.. சும்மாவும் பேசலை.. நீ எங்க வீட்டுப் பொண்ணக் கேட்ட.. நாங்க உனக்கெல்லாம் பொண்ணு கொடுப்போமான்னு பேசி வைச்சிருக்காங்க..”
“கடவுளே..!”
திலகவதி மனம் நொந்து போனாள்.. தேடினாலும் கிடைக்காத மாப்பிள்ளை தானாக தேடி வந்து நின்றால்.. கடவுளை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அந்த மாப்பிள்ளையை ஒரே அமுக்காய் அமுக்கி பெண்ணைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றுதானே பெண்ணைப் பெற்றவன் நினைப்பான்..? அதை விட்டுவிட்டு அப்பேற்பட்ட மாப்பிள்ளையுடன் அடிதடி சண்டைக்குப் போகிறவன் அறிவாளி ஆவானா..?
“இப்ப பஞ்சாயத்து வரைக்கும் பிரச்னை வந்து நின்னிருச்சு.. இவ்வளவு பெரிய வார்த்தையைக் கேட்டவங்க சும்மா விட மாட்டாங்க அண்ணி.. நாம எதுக்கும் தயாரா கிளம்பறதுதான் நல்லது அண்ணி..”
“எதுக்கும் தயாரான்னா..?”
திலகவதியின் கேள்விக்குப் பதிலைச் சொல்ல ஓர்நொடி தயங்கினாள் மல்லிகா.. அடுத்த நொடியில் பெருமூச்சுடன் விளக்கம் சொன்னாள்.. வேறு வழியில்லை.. நிலைமையை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்..?
“சுமித்ராவை அங்கேயே அவங்க கையில பிடிச்சுக் கொடுத்திட்டு வர வேண்டி இருந்தாலும் இருக்கலாம்..”
“என்ன மல்லி இப்படிச் சொல்ற..? கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதுன்னா சரி.. நீ சொல்கிறது வேற மாதிரியில்ல இருக்கு..”
“இல்லேண்ணி.. இங்கேயும் கல்யாணம் நடக்கும்.. அந்தக் கல்யாணம் நாளைக்கே நடந்துரும்ன்னு தோணுது..”
மல்லிகாவுக்குத் தோன்றினால் அதற்குப் பின்னால் ஆயிரம் காரண காரியங்கள் இருக்கும் என்பதை அறிந்த வைத்திருந்தவள் திலகவதி.. லட்சுமிபுரத்துக்கு அந்த காரண காரியங்கள் சரிப்பட்டு வரலாம்.. அன்னவாசலுக்கு எப்படி சரிப்பட்டு வரும்..?
“ஜமீன் வீட்டுல சொந்த பந்தங்கள் வந்து இறங்கியிருக்கிறதா சுத்து வட்டாரத்தில பேசிக்கிறாங்க அண்ணி.. வீட்டு வாசலிலே ஊரை அடைச்சு பந்தல் போட்டிருக்காங்களாம்.. அன்னவாசலில இருக்கிற அவங்க கல்யாண மண்டபத்திலே மூணு வேளையும் பந்தி நடக்குதாம்.. மண்டபமே ஜே.. ஜேன்னு இருக்கிறதாய் சொல்லிக்கிறாங்க.. சமையலுக்கு பெயர் வாங்கின கோஷ்டிய ஒரு வார சமையலுக்கு புக் பண்ணியிருக் காங்களாம்.. காய்கறியும்.. மளிகை ஜாமானும் லாரி.. லாரியா வந்து இறங்கியிருக்காம்..”
மல்லிகா சொன்ன விவரங்களில் கலவரப் பட்டுப் போனாள் திலகவதி.. அவளின் மகளுடைய திருமணம்.. திடிர் திருமணமாக நடக்கப் போகிறதா..?
“நமக்குத்தான் இது திடிர் திருமணம்.. அவங்க பக்கம் பத்திரிக்கையே அடிச்சு ரகசியமா கொடுத்துக்கிட்டு இருக்காங்களாம்.. நெருங்கின சொந்த பந்தத்த நேரில போய் அழைச்சிருக்காங்களாம்..”
“ஒரே பொண்ணு மல்லிகா.. ஊரைக் கூட்டி பந்தல் போட்டு.. பாக்கு வெத்திலையோட பத்திரிக்கை வைச்சு.. பரிசம் போட்டு.. பொண்ணழைக்க வர்ற காரில பெண்ணைக் கூப்பிட்டுக்கிட்டு.. நம்ம ஊரு ஜனங்களுக்கு நாலு பஸ் ஏற்பாடு பண்ணி.. மண்டபத்தில போய் இறங்கி.. நலங்கு வைச்சு.. முகூர்த்த நேரத்திலே பெண்ணை தாரை வார்த்துக் கொடுத்து.. அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைச்சு.. மறுநாளிலே போயி மறு வீட்டு விருந்துக்கு அழைச்சு.. வீட்டுக்கு வார பொண்ணு மாப்பிள்ளைக்கு ஊரு மெச்ச மறுவீட்டு விருந்தை ஆக்கிப் போட்டு.. லாரி.. லாரியா சீர்வரிசை சாமான்களை சம்மந்தி வீட்டில கொண்டு போயி மெப்பனையா இறக்கி வைச்சிட்டு வாரது எப்படியிருக்கும்..? இப்படி பஞ்சாயத்தில நின்னு பொண்ணை தாரை வார்த்துக் கொடுத்துட்டு வாரது எப்படியிருக்கும்..? நினைச்சாலே நெஞ்சம் பதறுது மல்லிகா..”
பெண்ணைப் பெற்றவளின் பரிதவிப்பில் மல்லிகாவின் மனம் கலங்கியது.. அவளும் ஒன்றுக்கு இரண்டாய் பெண் குழந்தைகளை பெற்று வைத்திருக் கிறாளே.. இதே நிலைமை அவள் மகளுக்கு வந்தால் அவளுக்கு எப்படியிருக்கும்..?
அதை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தால் நடைபெறப் போவதை எப்படி எதிர் கொள்வது..? அதற்கான மனோதிடம் வேண்டாமா..?
“நீங்க சொன்ன அத்தனை சடங்கு.. சாங்கியத்தையும் ஒன்னு விடாம என் கல்யாணத்தில பண்ணினீங்களே அண்ணி.. நான் என்னத்த வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்..? வாழ்க்கைங்கிறது சடங்கு.. சாஸ்திரத்தில இல்லை அண்ணி.. நாம வாழற வாழ்க்கையில இருக்கு.. அப்படிப் பார்க்கப் போனா.. நம்ம சுமித்ரா அருமை.. பெருமையா வாழ்வா பாருங்க..” மல்லிகா தைரியம் கொடுத்தாள்..
திலகவதி கேவி அழுதாள்.. அழுகட்டும் என்று மல்லிகாவும் விட்டு விட்டாள்.. மனம் விட்டு அழுது விடட்டும்.. மனதில் உள்ள சுமையெல்லாம் கண்ணீரில் கரைந்து விட்டால் எதையும் எதிர்கொள்ளும் திடம் அங்கு வந்து விடும்..
அழுது.. அழுது.. ஓய்ந்த திலகவதி.. கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. அந்த இரவு வேளையில் மகளின் அறையை அடைந்தவள்.. கட்டிலில் படுத்தபடி நாவல் படித்துக் கொண்டிருந்த சுமித்ராவிடம்..
“சுந்தர் உன்னைக் கூப்பிட்டான் சுமித்ரா.. போயி.. என்னன்னு கேட்டுட்டு வா..” என்று சொன்னாள்..
“இப்பத்தான் புக்கை கையில எடுத்தேன்.. அதுக்குள்ள உங்களுக்கும் உங்க மகனுக்கும் மூக்கு வியர்த்திருச்சா..?” சுமித்ரா அலுத்தபடி புத்தகத்தை மூடி வைத்து விட்டு போனாள்..
திலகவதியும்.. மல்லிகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அவர்களுக்குத் தெரியும்.. சுந்தர் கூப்பிடவில்லை என்று சொன்னாலும்.. சுமித்ரா அவனுடன் உட்கார்ந்து வாயடித்து விட்டுத்தான் வருவாள் என்று..
“இன்னைக்கு தம்பிகூட விளையாடிக்கிட்டு இருக்கா.. நாளைக்கு எங்கே இருப்பாளோ..” திலகவதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது..
“எங்கே இருக்கப் போகிறா.. அன்னவாசல் ஜமீனில மகாராணியா இருக்கப் போகிறா.. இதுக்குப் போயி வருத்தப்பட்டு நின்னா ஆகிற வேலையை யாரு பார்க்கிறது அண்ணி..?” மல்லிகா அதட்டல் போட்டு சூழ்நிலையை உணர்த்தினாள்..
அவர்கள் படுவேகமாக செயல்பட்டார்கள்.. சுமித்ராவின் பெட்டிகளில் சுவர் அலமாரியிலிருந்த அவளுடைய துணிகளை அடுக்கி முடித்தார்கள்.. இன்னொரு பெட்டியில் அவள் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள்.. அவளுடைய பள்ளி.. மற்றும் கல்லூரி படிப்புகளின் சான்றிதழ்கள்.. குடும்பத்தினர் சேர்ந்து
எடுத்த போட்டோ ஆல்பம் இவற்றை பார்த்துப் பார்த்து சேகரித்து பத்திரப் படுத்தி வைத்தார்கள்.. அவளுடைய கைப்பையில் டூத்பிரஷ்.. பற்பசை.. சோப்பு.. சீப்பு..
பவுடர்.. மற்றும் ஒப்பனைப் பொருள்கள் அடங்கிய பெட்டியையும்.. மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டியையும் வைத்தார்கள்.. சுமித்ராவுக்கான நகைகளையும்.. கொஞ்சம் பணத்தையும் ஒரு சிறு பெட்டியில் வைத்து அதை திலகவதி கையில் எடுத்துக் கொண்டாள்..
வெளியே காலடி சப்தம் கேட்டது.. சுமித்ரா வந்து கொண்டிருப்பதை உணர்ந்த மல்லிகா பரபரப்புடன் பெட்டிகளை கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டாள்.. உள்ளே வந்த சுமித்ரா..
“அந்த பொய் சொல்லி.. என்னைக் கூப்பிடவே இல்லைன்னு சாதிக்கிறான்ம்மா.. முதுகில் ரெண்டு போடு போட்டேன்..” என்று சுவாதீனமாக சொல்லியபடி அவள் விட்டுவிட்டுப் போன புத்தகத்தை தேடினாள்..
அதைத்தான் திலகவதியும்.. மல்லிகாவும்.. பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்களே.. வேறு வழியில்லாத திலகவதி.. அவளையுமறியாமல்..
“படுத்துத் தூங்கு சுமித்ரா.. நாளைக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு..” என்று சொல்லி விட்டாள்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.