Chapter 09
“ஊருக்குப் போகனுமா..? எந்த ஊருக்கும்மா..?”
வியப்புடன் கேட்டாள் சுமித்ரா.. இரவு மணி பத்தைத் தாண்டியிருந்த அந்த நேரம் வரை அவர்களின் குடும்பம் ஊருக்குக் கிளம்பப் போகிறது என்றே அவளுக்கும் சுந்தருக்கும் தெரியவில்லையே..
“அன்னவாசலுக்குப் போகனும் சுமித்ரா..”
“அங்கே யாரிருக்காங்கம்மா..? நம்ம சொந்தத்திலே யாரும் அங்கே இல்லையே..”
“சொந்தம் இருந்தாத்தான் போகனுமா சுமி… நம்ம இனத்தில இருக்கிறவங்க வீட்டில ஒரு விசேசம்.. அதில குடும்பத்தோட கலந்துக்கனும்னு உங்க அப்பா சொல்கிறாரு.. அதனால விடியறதுக்கு முன்னாலேயே எழுந்திருச்சு குளிச்சுத் தயாராகிரு..”
“பார்க்கலாம்..”
இலகுவாக சொல்லிவிட்டு.. எந்தவிதமான மனக் கிலேசமும் இல்லாமல் நிம்மதியாக உறங்க ஆரம்பித்த மகளின் முகம் பார்த்த அந்தத் தாயின் மனம் கலங்கியது.. மகளின் முடி கோதி.. பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.. நள்ளிரவில் உறக்கத்தில் புரண்டு படுத்த சுமித்ரா தாயின் மடியை உணர்ந்தவளாய் தூக்கக் கலக்கத்துடன்..
“அம்மா..” என்றாள்..
“அம்மாதான் மகளே..! உன் அம்மாதான்.. தூங்கு..”
கண்ணீருடன் மகளைத் தட்டிக் கொடுத்தாள் அந்தத் தாய்.. உறக்கத்துடன் தாயின் மடியில் முகம் புதைத்த சுமித்ரா.. அவளின் இடுப்பைக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனாள்..
விடியும் வரை தூங்காமல் அந்த இரவின் ஒளியில் மகளின் முகத்தைப் பார்த்துக் கண்ணீரை உகுத்தபடி தூங்காமல் இருந்தாள் திலகவதி..
விடிந்தது.. வீடே மௌனமாக அன்னவாசலுக்குக் கிளம்பத் தயாரானது.. அந்த நேரம் பார்த்து தோளில் ஒரு டிராவல் பேக்குடன் குதிரை வண்டியில் வந்து வாசலில் இறங்கினாள் தாரா.. சுமித்ராவின் கல்லூரி சிநேகிதி..
“ஏய்ய்.. தாரா.. என்னடி திடிர்ன்னு வந்து நிற்கிற..?” சுமித்ரா கண்கள் மின்ன தோழியைக் கட்டிக் கொண்டாள்.
அழையாத விருந்தாளியாய் வந்து நிற்பவளை வரவேற்க முடியாமல் குடும்பத்தின் பெரியவர்கள் கைகளைப் பிசைந்தார்கள்..
“பக்கத்து ஊரில சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்.. இவ்வளவு கிட்டத்தில வந்துட்டு.. உன்னைப் பார்க்காம போக மனசில்லை.. அதான் அப்பாம்மாவுக்கு டாட்டா சொல்லி அனுப்பி வைச்சிட்டு.. உன்கூட ஒரு வாரம் இருந்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்..” தாரா உற்சாகமாக சொன்னாள்..
‘அதுசரி.. என் மகளே.. இன்னைக்கு சாயங்காலம் என் வீட்டுக்கு திரும்பி வாராளோ.. இல்லியோ.. இந்த லட்சணத்தில இவகூட ஒருவாரம் தங்கியிருக்கப் போறியா..’ திலகவதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
“வெளியே கிளம்பிக்கிட்டு இருக்கீங்களா..?”
அப்போதுதான் குடும்பத்தினரின் பரபரப்பைக் கவனித்த தாரா வினவினாள்.. என்ன சொல்வது என்று தெரியாமல் பெரியவர்கள் தடுமாறிய போது..
“ஆமாண்டி.. நீயும் கிளம்பு.. ஜாலியா ஒரு டிரிப் அடிச்சுட்டு வரலாம்..” உற்சாகத்துடன் தோழியின் கை பற்றிச் சொன்னாள் சுமித்ரா..
குடும்பத்தினர் பதறிப் போய் விட்டார்கள்.. மல்லிகாவோ.. திலகவதியின் கையைப் பிடித்து அழுத்தி..
“அவளும் வரட்டும் அண்ணி..” என்றாள்..
“புரிஞ்சுதான் பேசறியா.. நாம போகப் போறது பஞ்சாயத்துக்கு.. அதை இவ தெரிஞ்சுக்கனுமா..?”
“சுமித்ராவே தெரிஞ்சுக்கிறப்ப.. அவளோட தோழியும் தெரிஞ்சுக்கிறதில தப்பு எதுவும் இல்லை அண்ணி.. அதோட.. சுமித்ராவுக்கும் தோழிப் பொண்ணு வேணுமில்லையா..?”
“மல்லிகா…”
திலகவதியால் பேச முடியவில்லை.. மணிவாசகம் மனைவியுடன் பேச முயன்று தோற்றார்.. முகம் இறுகிப் போயிருந்த திலகவதி கணவரிடம் பேசுவதை தவிர்த்தாள்.. ஏஸி செய்யப்பட்ட சொகுசு வேன் வாசலில் வந்து நின்றது.. தாராவுடன் பேசிக் கொண்டிருந்த சுமித்ரா எதையும் கவனிக்கவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்ட மல்லிகாவும் திலகவதியும்.. அவள் அறையில் கட்டிலுக்கு அடியிலிருந்த பெட்டிகளை எடுத்து வேனில் அடுக்கினார்கள்.. மறக்காமல் நகை இருந்த சிறு பெட்டியை தன் வசத்தில் வைத்துக் கொண்டாள் திலகவதி..
“எதுக்குடி இத்தனை பெட்டிக..?”
சந்தேகம் கேட்ட மணிவாசகம் மனைவி முறைத்த முறைப்பில் அடங்கி விட்டார்.. மாமன் தனது மனைவியுடன் பேச விழைவதைக் கவனித்த திருக்குமரன் அப்படியேதும் நிகழ்ந்து கணவன் மனைவிக்கு இடையினில் பாசப் பிணைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக.. மணிவாசகத்தின் பக்கத்தில் அட்டை போல ஒட்டிக் கொண்டான்..
“ம்மா.. என் ஹேண்ட் பேகில எதுக்கும்மா டூத்பிரஷ்.. பேஸ்டுன்னு இத்தனை திங்ஸை அடுக்கியிருக்கீங்க..?”
சுமித்ரா அவற்றை கீழே கொட்டப் போனதில் திலகவதி..
“கொட்டாதே.. கொட்டாதே..” என்று பதறியதில் அவள் திலகவதியை விசித்திரமாக பார்த்தாள்..
“என்னம்மா..?”
“ஒன்னுமில்ல.. நீ தாராவை சாப்பிடக் கூப்பிட்டு வா.. பாவம்.. பிள்ளை எப்பச் சாப்பிட்டுச்சோ என்னவோ..”
திலகவதியின் திருப்பி விடலுக்குப் பலன் இருந்தது.. சுமித்ரா கைப்பையில் இருப்பதை கீழே கவிழ்க்கும் உத்தேசத்தை மறந்து தோழியைக் கவனிக்க ஓடிவிட்டாள்.. அந்த நேரம் பார்த்து தாராவின் டிராவல் பேகையும் தூக்கி சுமித்ராவின் பெட்டிகளுடன் வைத்துவிட்டாள் மல்லிகா..
“எதுக்கு மல்லிகா..”
“இருக்கட்டும் அண்ணி.. போகிற இடத்தில நிலைமை எப்படியிருக்மோ என்னவோ.. இந்தப் பெண்ணோட பேகை நாம என்ன தூக்கிச் சுமந்துக்கிட்டாப் போகப் போறோம்..? வேனில போட்டுக்கிட்டுப் போகப் போறோம்.. வேன்தானே சுமக்குது..? நாம சுமக்கலையே..”
மல்லிகா காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டாள் என்பதினால் திலகவதியும் மறுத்துப் பேசவில்லை.. இளையவர்கள் என்னவோ உல்லாசப் பயணம் போவதைப் போல ஒருவருக்கொருவர் சீண்டிப் பேசி விளையாடியபடி வேனுக்குள் ஏற.. பெரியவர்கள் கருங்கல்லைப் போல இறுக்கமான முகத்தோடும்.. மனத்தோடும் வேனில் ஏறினார்கள்..
அன்னவாசலில் மணியக்காரர் வீட்டு வளாகத்தில் பஞ்சாயத்து நடைபெறுவதாக இருந்தது.. விசாரிக்கப்படும் இரு வீட்டாரும் கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதினாலும்.. அதில் அன்னவாசலின் ஜமீன்குடும்பம் சம்பந்தப் பட்டிருந்ததாலும்.. வயதுப் பெண்ணை ஊடே வைத்துப் பஞ்சாயத்து பண்ண வேண்டியிருந்ததாலும்.. பஞ்சாயத்தின் இருப்பிடம்.. ஆலமரத்தடியிலிருந்து.. மணியக்காரர் வீட்டு வளாகத்திற்கு மாறியிருந்தது..
மணியக்காரரின் வீடும் தனஞ்ஜெயனின் வீட்டைப் போல அகன்ற பெரிய தூண்களுடன் கூடிய போர்டிகோவைக் கொண்டது.. அங்கே சேர்கள் போடப் பட்டிருக்க.. சுத்துப் பட்டியிலிருந்து வந்திருந்தவர்கள் எல்லோரும் தோட்டத்தில் நிரம்பியிருந்தார்கள்..
தாராவுடன் பேசியபடியே வந்த சுமித்ரா மணியக்காரரின் வீட்டுத் தோட்டத்தைக் கண்டதும்..
“விசேச வீடுங்கிறது சரியாத்தான் இருக்கு.. தோட்டம் பூராவும் ஜனங்களா இருக்கிறாங்களே..” என்று சொன்னாள்..
“இவங்க உங்க சொந்தக்காரங்களா..?” தாரா கேட்டாள்..
“அப்படித்தான் அம்மா சொன்னாங்க…” என்றாள் சுமித்ரா..
மல்லிகாவின் பெண்களின் சடைபின்னல்களை இணைத்து ஒரே ரிப்பனில் ஒன்றுமறியாதவனைப் போல கட்டிவிட்டு சுந்தர் கீழே இறங்கி விட.. எதிரும் புதிருமாக எழுந்த மல்லிகாவின் பெண்கள் பின்னல் இழுபட்டதில் தொபுகடிர் என்று வேனில் குப்புற விழுந்து வைத்தார்கள்..
“இவன் இருக்கானே..”
சுமித்ரா கலகலத்து சிரித்தபடி தாராவுடன் இறங்கினாள்.. அவளின் கலகலத்த சிரிப்பில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவளை விசித்திரமாக திரும்பிப் பார்த்து விட்டுத் தங்களுக்குள் கிசுகிசுத்தது..
போர்டிகோவில் போடப்பட்டிருந்த சேர்களில் ஒரு பக்கமாக அமர்ந்திருந்த தனஞ்ஜெயனும்.. இந்திரா தேவியும்.. சிரித்தபடி வேனை விட்டு இறங்கிய சுமித்ராவை பார்த்தார்கள்..
‘போட்டோவை விட நேரில் அதிகமான அழகோடு இருக்கா..’ தனஞ்ஜெயன் நினைத்துக் கொண்டான்..
‘இவதான் சுமித்ராவா..? எப்பேர்பட்ட பேரழகி..! என் மகனுக்கேத்த பொண்ணு..! இவளை என் மகனுக்கு கட்டி வைக்கலேன்னா நான் அன்னவாசல் ஜமின்தாரிணியா இருந்து என்ன பிரயோசனம்..?’ இந்திராதேவி.. தீர்க்கமான முடிவை எடுத்தாள்..
தனஞ்ஜெயனுக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மணிவாசகத்தின் குடும்பம் அமர்ந்தது.. நடுநாயகமாக மணியக்காரரும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்தார்கள்..
அது பஞ்சாயத்து என்பதை உணராமல் சுமித்ரா.. தாராவுடனும்.. சுந்தருடனும் தாழ்ந்த குரலில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.. அவளின் ஒவ்வொரு சிரிப்புச் சத்தத்திற்கும் தனஞ்ஜெயனின் பார்வை அவள் மீது தாவிப் படிந்து திரும்பி வந்தது..
“எல்லோரும் வந்தாச்சா..? பஞ்சாயத்தை ஆரம்பிக் கலாமா..?”
பஞ்சாயத்திற்கு தலைமை தாங்கியவர் கேட்டார்.. சுமித்ரா அவரைப் பார்த்து விட்டு சுந்தரிடம் முணுமுணுத்தாள்..
“என்னடா இது..? விசேச வீட்டில பஞ்சாயத்துப் பண்ணிக்கிட்டு இருக்காங்க..?”
“ஏதாச்சும் விவகாரமா இருக்கும்.. நமக்கென்ன வந்தது..? வேடிக்கை பார்த்து விட்டுப் போக வேண்டியது தானே..”
“அப்படிங்கற..?”
“ஆமாம்கிறேன்..”
“தாரா.. நீ என்னடி சொல்ற..?”
“உன் தம்பி சொன்னதை வழி மொழியறேண்டி..”
“இவன் சொல்கிறதுக்கு வழிமொழியற ஒரே ஆள் நீதாண்டி..”
சுமித்ரா பொங்கிச்சிரித்தாள்.. எதிர் தரப்பில் இருந்த தனஞ்ஜெயனின் மௌனப் பார்வை அவளை துளைத்தது.. சுமித்ராவுக்கு என்னவோ போல இருந்தது.. அவளும்
அங்கே வந்து இறங்கியதிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. அந்தக் கம்பீரமான ஆண்மகன் அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்..
“யாருடி அது..?” தாரா அவள் காதோரமாக கேட்டாள்.
“தெரியலையே..” என்றாள் சுமித்ரா..
“ஆளு உன்னையே செமத்தியா சைட் அடிக்கிறாண்டி..”
“உஸ்ஸ்.. அப்பா.. இருக்கிறார்.. அவர் காதில விழுந்திரப் போகுது..”
“அவருக்குக் கேட்காது.. ஆளைப் பார்த்தியா.. ஹீரோ போல ஜம்முன்னு இருக்கானில்ல..?”
சுமித்ரா அவனை இப்போது நன்றாக பார்த்து வைத்தாள்.. தாரா சொன்னதைப் போல படு கவர்ச்சியான கம்பீரத்தோடு இருந்தான்.. அவள் பார்ப்பதை உணர்ந்தவனின் பார்வையில் மின்னல் வந்தது..
‘ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான்..’
சுமித்ரா பார்வையை விலக்கிக் கொண்டாள்.. தாராவிடம் பேசுவதைப் போல இருந்தாலும்.. அடிக்கடி அவளின் பார்வையும் அவன் பக்கமே தாவியது..
“ஆரம்பிச்சுரலாம்..” என்றார் மணியக்காரர்..
மணிவாசகத்தின் உடலில் தோன்றிய விறைப்பை அப்போதுதான் கவனித்தாள் சுமித்ரா.. எவரோ ஒருவர் வீட்டுப் பஞ்சாயத்திற்காக அவளுடைய அப்பா எதற்காக மிலிடிரி மேன் போல விறைப்பாக உட்கார வேண்டும் என்று இருந்தது அவளுக்கு..
அம்மாவிடம் அதைப் பற்றிச் சொல்லலாம் என்று பார்த்தால்.. அவள் அவரைவிட அதிக விறைப்புடன் உட்கார்ந்திருந்தாள்..
‘என்னாச்சு இவங்களுக்கு..’
பஞ்சாயத்திற்கு தலைமை தாங்கியவர் தனஞ்ஜெயனின் பக்கமாகத் திரும்பி..
“பிராது கொடுத்திருக்கிறது அன்னவாசலோட ஜமீன்தாரர் அதனாலே அவர் முதலில் சொல்லட்டும்..” என்றார்..
“ஏய்ய்.. நம்ம ஆளுதான் யாரையோ பஞ்சாயத்துக்கு இழுத்திருக்கிறாரு போல இருக்குடி..” என்றாள் தாரா..
ஏனோ அவள் ‘நம்ம ஆளு..’ என்று தனஞ்ஜெயனை விளித்ததை சுமித்ரா விரும்பவில்லை.. அது எதனால் என்றும் அவளுக்குத் தெரியவில்லை.. அதனால் அசுவராஸ்யம் போலக் காட்டிக் கொண்டபடி..
“ஓயோ..” என்றாள்..
தனஞ்ஜெயன் சொல்ல ஆரம்பித்தான்..
“ஐயா.. இரண்டு வாரத்துக்கு முன்னாலே நான் பேக்டரியில இருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்தேன்.. அப்ப.. லட்சுமிபுரத்து மணிவாசகத்தோட தங்கச்சி புருசன் குடி போதையில என் காருக்கு முன்னாலே விழுந்தார்.. அப்ப என் கணக்குப் பிள்ளையும் கூட இருந்தார்.. ரோட்டில விழுந்து கிடந்த மனுசனுக்கு நெத்தியில அடி பட்டிருந்துச்சு.. அதனால ஐயோ பாவம்ன்னு பரிதாபப்பட்டு என் காரில தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயி ஆஸ்பத்திரியில சேத்தேன்.. இதுதான் நான் செஞ்சது.. அதுக்கு லட்சுமி புரத்து மணிவாசகம் அவரோட தங்கச்சி புருசனுக்கு குடிக்கவே தெரியாதுன்னும்.. அவரோட பெண்ணைக் கட்டிக்க ஆசைப்பட்டு நான்தான் அவரோட தங்கச்சி புருசனுக்கு ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்தேன்னும்.. போதாக் குறைக்கு அவரை ரோட்டில தள்ளி காரை விட்டு மோதி.. ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்தேன்னும் அபாண்டமா என் மேல பழி போடறார்.. இதை உண்மைன்னு அவங்க புரூவ் பண்ணனும்.. இதை பொய்யின்னு புரூவ் பண்ண என்கிட்ட சாட்சி இருக்கு..”
தனஞ்ஜெயன் பேசப் பேச.. ஓர்விதமான குறுகுறுப் போடு அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா உறைந்து போனாள்..
நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்தின் நாயகி அவள்தானா..?
“என்னடி சுமி இது..?” தாரா பதட்டமானாள்..
“என்னன்னே தெரியலையேடி.. விசேச வீட்டுக்குப் போகலாம் வான்னுதான் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு வந்தாங்க..”
சுமித்ரா நடுங்கும் கைகளுடன் தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.. சுந்தர் கோபத்தில் கொதித்தான்..
“எல்லாம் இந்த மாமாவாலே வந்திருக்குக்கா..”
தலைமை தாங்கியவர் இப்போது மணிவாசகத்தின் பக்கமாக திரும்பினார்..
“ஜமீன்தாரர் சொன்னதைக் கேட்டிங்கள்ல.. உங்க பக்கத்து பதிலைச் சொல்லுங்க..”
“ஜமீன்தார்ன்னா கொம்பு முளைச்சிருக்கா..?”
“அப்படியாரும் இங்கே சொல்லலையே மணிவாசகம்..”
“அவர் சொல்கிறதுதான் நியாயம்.. மத்தவங்க சொல்கிறது அநியாயமா..?”
“நீங்களா அப்படி நினைச்சுக்கிட்டா எப்படி..? உங்க பக்கத்து நியாயத்தைச் சொல்லுங்க.. கேப்போம்.. அதுக்காகத்தானே இன்னைக்கு பஞ்சாயத்தே கூடியிருக்கு..?”
“என் தங்கச்சி புருசன் உத்தமன்ங்க.. அவனுக்கு குடிப்பழக்கம் கிடையாது.. அவன் குடிச்சுட்டு வந்தான்னு இவர் சொல்கிறது அக்கிரம்ங்க… பக்கத்து ஊரு பரமசிவம் அவரு மகனுக்காக என் மகளை பொண்ணு கேட்டாரு.. மாப்பிள்ளை வீட்டைப் பாத்துட்டு வர.. என் மகளோட போட்டோவையும்.. ஜாதகத்தையும் கொடுத்து என் தங்கச்சி புருசனை அனுப்பி வைச்சேன்.. அவனும் மாப்பிள்ளை வீட்டைப் பாத்து பேசிட்டு.. எல்லாம் திருப்தியா இருக்கவும் என் மாமன்கிட்ட கலந்து பேசிட்டு தகவல் சொல்றோம்ன்னு சொல்லிட்டு ஊரைப் பாத்து வந்திருக்கான்.. ஊடே இவரு பார்த்துட்டு கதையையே மாத்திட்டாரு..” மணிவாசகம் கோபாவேசத்துடன் பேசித் தள்ளினார்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.