Chapter 10
“இவ்வளவு வேகமா பேச வேண்டிய அவசியமில்லை மணிவாசகம்..” என்றார் தலைமை தாங்கியவர்..
“நெஞ்சு கொதிக்குதுங்க..” என்றார் மணிவாசகம்..
அட அப்பாவியே என்பதைப் போல தனஞ்ஜெயன் அவரை ஓர்பார்வை பார்த்து வைத்தான்.. அதில் கொதித்த அவரின் நெஞ்சம் அடைத்தது..
‘இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..?’ அவர் மனதில் கேள்வி குடைந்தது..
“இந்த அன்னவாசல் ஜமீன்தாருக்கு என் பொண்ணக் கட்டிக்கனும்னு தோணியிருந்தா என்ன செஞ்சிருக்கனும்..? பரமசிவம் பொண்ணு கேட்டதைப் போல என்கிட்டப் பொண்ணு கேட்டிருக்கனும்.. அதை விட்டுட்டு.. ஒன்னும் தெரியாத என் மச்சினனை மடக்கி.. காருக்குள்ள உட்கார வைச்சு.. ஊத்திக் குடுத்து குடிக்க வைச்சதும் இல்லாம.. பரமசிவத்தோட மகனுக்கு குணம் சரியில்லைன்னு சொல்லிரு.. அதுக்குப் பதிலா எனக்குக் கட்டிக் கொடுக்க வைச்சா உனக்கு ஐஞ்சு ஏக்கரு புஞ்சை நிலத்தை எழுதி வைக்கறேன்னு ஆசை வார்த்தை காட்டியிருக்கார்.. அவன் மாட்டேன்னு சொல்லி காரை விட்டு இறங்கி ஓடியிருக்கான்.. அப்படி ஓடினவன் மேலே காரை ஏத்திக் கொல்லப் பார்த்திருக்கார்.. எந்தச் சாமி புண்ணியமோ.. அவன் லேசான அடியோடு தப்பிச்சிட்டான்.. அவனைக் கொண்டு போயி நல்லவர் போல ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு இது எதுவுமே நடக்கலைன்னு சாதிக்கிறார்..”
மணிவாசகம் சொல்வதை கூர்மையான பார்வை யோடும்.. சலனமில்லாத முகத்தோடும் கேட்டுக் கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்.. கூட்டம் சலசலத்தது.. மணிவாசகத்தை நோக்கிக் கை நீட்டிக் கூச்சலிட்டது.. தலைமை தாங்கியவர் கூட்டத்தை அமைதி படுத்தினார்..
“அன்னவாசல் ஜமீன்தாரரே அமைதியா இருக்காரு.. இதில மத்தவங்க எதுக்காக சத்தம் போடறிங்க..?”
“எங்கே வந்து.. யாரைப் பார்த்து.. ஊத்திக் கொடுத்ததா சொல்கிறாங்க..? ஐயாவைப் பத்தி இப்படிப் பேசற துணிச்சல் எப்படி இவங்களுக்கு வந்தது..?”
“அதைக் கேட்டுக் கொடுக்கத்தானே பஞ்சாயத்து கூடியிருக்கு.. ஆளுhளுக்கு நியாயம் பேசினா.. நான் எப்படி விசாரிக்கிறது..?”
அவர் போட்ட அதட்டலில் கூட்டம் சப்தத்தைக் குறைத்தது.. ஆனால் மௌனமாகி விடவில்லை.. சன்னக்குரலில் மணிவாசகத்தையும்.. அவருடைய தங்கை கணவரையும் அவர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள்..
தலைமை தனஞ்ஜெயனின் பக்கமாக திரும்பினார்..
“லட்சுமிபுரத்து மணிவாசகம் சொல்கிறது இப்படி இருக்கு.. உங்க தரப்பில நீங்க என்ன கேட்டுக்கறிங்க..?”
“இந்தப் பஞ்சாயத்தில நான் கேட்டுக்கிறது இதைத் தான்ங்க ஐயா.. இந்த மணிவாசகத்தின் தங்கச்சி புருசன் சொன்னது எல்லாமே பொய்ன்னு நிரூபிக்க என்னிடம் சாட்சி இருக்கு.. அதைப் போல அவங்க என்னைப் பத்திச் சொன்னதை உண்மைன்னு அவங்க சாட்சியோட இந்தப் பஞ்சாயத்திலே நிரூபிக்கனும்.. அப்படி நிரூபிக்கத் தவறினா..” தனஞ்ஜெயன் நிறுத்தினான்..
“தவறினா..?” தலைமை கேட்டார்..
“ஒன்னு அவங்க குடும்பத்தோட இந்த பஞ்சாயத்துக்கு முன்னாலே என் காலிலயும் எங்கம்மா காலிலயும் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்கனும்.. இல்லைன்னா.. எந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கிறதுக்காக நான் இந்த வேலைகளையெல்லாம் பண்ணினதா இவங்க சொல்கிறாங்களோ.. அந்தப் பெண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாகனும்..”
தனஞ்ஜெயன் அழுத்தம் திருத்தமாக அவன் பக்கத்தைச் சொல்லி விட்டான்.. சுமித்ராவை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தாக்கியது.. அவள் பற்றுகோலைப் போல தம்பியின் கையை இறுக்கமாக பிடித்திருந்தாள்.. தாராவோ.. விழி விரிய ஆச்சரியத்துடன் நடந்து கொண்டிருந்த பஞ்சாயத்தை வேடிக்கை பார்த்தாள்..
“என்ன மணிவாசகம்.. பிராது கொடுத்தவர் சொன்னதைக் கேட்டிங்கள்ல.. நீங்க இவர் மேலே சொன்ன குற்றச்சாட்டை இப்ப.. இந்தப் பஞ்சாயத்தில நிரூபியுங்க..”
“என்னத்தை நிரூபிக்கச் சொல்கிறிங்க..? மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கப் போனவன் எப்படி குடிச்சான்..? பக்கத்து ஊரில இருந்து இவன் மெயின் ரோட்டுக்கு வந்தப்ப இவர் காரில அடிபட்டிருக்கான்.. அப்படின்னா மாப்பிள்ளை வீட்டிலே காபிக்குப் பதிலா சாராயத்தை ஊத்திக் கொடுத்து உபசரிச்சு அனுப்பினாங் கன்னு சொல்கிறிங்களா..?”
“ஒரு திருத்தம்..” என்றான் தனஞ்ஜெயன்..
“என்ன..?” என்றார் தலைமை..
“இவரோட தங்கச்சி புருசன் மாப்பிள்ளை வீடு பாக்கப் போன இடத்தில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க காபியை ஊத்தித்தான் இவன் கையிலே கொடுத்திருக்காங்க.. மாப்பிள்ளைதான் ஐயாவை தோப்புக்குக் கூப்பிட்டுக் கிட்டுப் போயி ஊத்திக் கொடுத்திருக்காரு.. சும்மாவும் கொடுக்கலை.. இந்த மணிவாசகம் பெத்து வைச்சிருக்கிற பெண்ணை அந்தக் குடிகாரனுக்கு கட்டிக் கொடுத்தா ஐஞ்சு ஏக்கர் புஞ்சை நிலத்தை எழுதித் தர்றதா சொல்லி ஊத்திக் கொடுத்திருக்கான்.. இந்தக் காவாலிப்பய.. அந்த பிளேட்டை அப்படியே என் பக்கமா திருப்பிப் போட்டு விட்டுட்டான்..”
“வேணாங்கய்யா.. பஞ்சாயத்தாச்சேன்னு பார்க்கறேன்.. வாய் இருக்கிறதுங்கிறதுக்காக எதையும் பழுது படிக்கப் பேசிரக்கூடாது.. இவர் மேலே குத்தம் சொன்னா நிரூபிக்கச் சொல்கிறாரே.. இவர் சொல்கிற இந்தக் குத்தத்தை எப்படி நிரூபிக்கப் போகிறாரு..?”
“இப்படித்தான்..”
தனஞ்ஜெயன் கையிலிருந்த லேப்டாப்பை உயிர்ப் பித்தான்.. அதில் பரமசிவத்தின் தோப்புத் தெரிந்தது.. மணிவாசகத்தின் தங்கையின் கணவனுக்கு பரமசிவத்தின் மகன் சரக்கை சப்ளை செய்து கொண்டிருந்தான்.. அதை ஆவலாக வாங்கி.. தங்கையின் கணவன் தொண்டையில் சரித்துக் கொண்டிருந்தான்.. அவன் வெளுத்துக் கட்டிய விதத்தில் தேர்ந்த குடிகாரனின் லாவகம் இருப்பதை அனைவருமே உணர்ந்தார்கள்.. குடிபோதையின் இடையில்.. பெண்ணைக் கட்டிக் கொடுத்தால்.. ஐந்து ஏக்கர் புஞ்சையை அவனுக்குக் கொடுப்பதாக பரமசிவத்தின் மகன் வாக்களித்தான்.. அப்படியே செய்வதாக சரக்குப் பாட்டிலின் மீது சத்தியம் செய்தான் மல்லிகாவின் கணவன்.. அவன் தள்ளாடியபடியே கிளம்பிச் செல்ல.. பரமசிவத்தின் மகன் மற்ற நண்பர்களைப் பார்த்து..
“நாளைக்கு இவன் வார்த்தை மாறிட்டான்னா என்ன செய்யறது..? அதான் வீடியோவ எடுக்கச் சொன்னேன்.. இப்ப இவன் குடுமி நம்ம கையில.. பொண்ணக் கட்டிக் குடுக்க முடியாதுன்னு இனி இவன் சொல்லிருவானா..?” என்று கேட்டுக் கொண்டிருக்க வீடியோ முடிந்து விட்டது..
மணிவாசகத்தின் மீசை துடித்தது.. சப்த நாடியும் ஒடுங்க உட்கார்ந்திருந்த திருக்குமரனை அந்த இடத்திலேயே பொலி போட்டு விட அவர் துடித்தார்..
“இந்த வீடியோவை பரமசிவத்தின் மகன்தான் என்னிடம் கொடுத்தான்..” உதட்டைச் சுழித்து லேசாக சிரித்தான் தனஞ்ஜெயன்..
எப்போது அன்னவாசலின் தனஞ்ஜெயன் களத்தில் இறங்கி விட்டானோ.. அதற்கு மேல் அவனை எதிர்த்து நிற்பவர்களின் கதி.. அதோ கதிதான் என்பதை அறிந்து வைத்திருந்த பரமசிவத்தின் மகன் முதல் ஆளாய் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வந்து தனஞ்ஜெயனிடம் ஒப்படைத்து விட்டு.. இனிமேல் மணிவாசகத்தின் மகளை அவன் மனதால் கூட நினைக்க மாட்டான் என்று அந்த வீடியோவின் மீதே சத்தியம் செய்து கொடுத்து விட்டுப் போய் விட்டான்..
“மீறி நினைச்சா.. உன் உடம்பில இருக்கிற அத்தனை எழும்புகளையும் எண்ணிருவேன்..” தனஞ்ஜெயனும் எச்சரித்துத்தான் அனுப்பி வைத்திருந்தான்..
“இந்த மாப்பிள்ளையைத்தான் உங்க தங்கச்சி புருசன்.. நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. வெத்தலைபாக்கு கூடப் போடமாட்டாரு.. சிகரெட்டுன்னா அலர்ஜி.. தண்ணின்னா அது பச்சைத் தண்ணியா.. சுடுதண்ணியான்னு கேட்கிற அப்பாவி.. பொண்ணுக அந்தப் பக்கம் வந்தா.. இந்தப் பக்கம் குதிச்சு ஓடிடற மனுசருன்னு அண்டப் புளுகு.. ஆகாசாப் புளுகை புளுகினான்.. இதில இருந்தே உங்க மாமன் மகனோட வருணாச்சலத்த நீங்க தெரிஞ்சுக்கங்க..” என்று மணிவாசகத்திடம் சொன்ன தனஞ்ஜெயன்.. தலைமையைப் பார்த்தான்..
“ஐயா.. இவரோட தங்கச்சி புருசன் என்னைப் பத்திச் சொன்ன அத்தனை அவதூறையும் பொய்யின்னு நான் புரூவ் பண்ணிட்டேன்.. உண்மை எதுங்கிறதையும் காட்டிட்டேன்.. எனக்கு குடிப் பழக்கம் கிடையாது.. இது சுத்துப் பட்டியில இருக்கிற அத்தனை ஜனங்களுக்கும் தெரியும்.. என்னிடம் வேலை செய்கிறவங்களும் குடிக்கக் கூடாதுன்னு நான் கண்டிசனா ஆர்டர் போட்டே வைச்சிருக்கேன்.. இதுவும் எல்லாருக்கும் தெரியும்.. இனி இவங்க என்ன செய்யப் போறாங்கன்னு.. கேட்டுச் சொல்லுங்க.. மன்னிப்புக் கேட்கப் போகிறாங்களா.. இல்ல.. பொண்ணக் கட்டித்தரப் போறாங்களா..?”
மணிவாசகத்தின் வியர்த்த முகத்தை பயத்துடன் பார்த்தாள் சுமித்ரா.. அவருக்கு இதயநோய் இருந்தது..
‘அப்பாவுக்கு இப்படி வியர்க்கக் கூடாதே..’
மணிவாசகம் நெஞ்சைப் பிடித்தபடி பேசத் திணறினார்.. திலகவதி கண்கலங்க.. அவரின் தோளைத் தட்டினாள்..
“என்ன செய்யலாம் சொல்லுங்க.. இத்தனை ஊராளுக முன்னாலே குடும்பத்தோட அவங்க காலில விழுந்து மன்னிப்புக் கேட்கலாமா.. இல்லை பொண்ணை அவருக்கே கட்டிக் கொடுக்கலாமா..?”
அவளுக்குத் துக்கமாக இருந்தது.. தங்கக் குத்தூசி என்பதினால் கீறும்போது வலி ஏற்படாமல் போய் விடுமா..? அன்னவாசல் ஜமீன்தாரரின் மனைவியாகும் வாய்ப்பு திலகவதியின் மகளுக்குக் கிடைத்திருக்கிறது என்பதினால்.. பஞ்சாயத்தில் பெண்ணை விட்டுக் கொடுத்து விட்டு வெளியேற முடியுமா..?
‘பாவிப்பய.. அவர்தான் பொண்ணு போட்டோவப் பார்த்திட்டு அழகா இருக்குன்னு சொல்லியிருக்காரே.. பிடிக்கிறவங்களைப் பிடிச்சு.. அவருக்கே பெண் கொடுக்கிறதாய் பேசி முடிச்சிட்டு வாரதை விட்டுட்டு.. அதை பெரும் பிரச்னையாக்கி பஞ்சாயத்தில கொண்டு வந்து நிப்பாட்டிட்டானே..’
அவள் மனம் நாத்தனார் கணவனை வறுத்து எடுத்தது.. அவனோ மனைவியின் பக்கமும்.. மாமன் மனைவியின் பக்கமும் திரும்பிக்கூடப் பார்க்காமல் துக்க வீட்டுக்கு வந்திருக்கிறவனைப் போல வாயில் துண்டை அமுக்கிக் கொண்டு தலையை வாகாய் குனிந்து மற்றவர்களின் பார்வையைச் சந்திக்கும் துன்பத்திலிருந்து தப்பித்து நின்றிருந்தான்..
“அண்ணி.. பொறுமையா இருங்க.. வெண்ணை திரண்டு வாரப்ப சட்டியை உடைச்சிராதீங்க..” மல்லிகா கிசுகிசுத்தாள்..
“எப்படி மல்லிகா..?” பெண்ணைப் பெற்றவள் குமுறினாள்..
“இத்தனை ஊரு சனங்க முன்னாடியும் பெண்ணை விட்டுக் கொடுத்திட்டுப் போகச் சொல்றியா..? என் மக கல்யாணம் இப்படியா நடக்கனும்..?”
“நாம பேசி வைச்சதை மறந்துட்டிங்களா அண்ணி..? இப்படியாவது நம்ம சுமித்ராவுக்கு நல்ல இடத்தில மாப்பிள்ளை அமையுதேன்னு சந்தோசப்பட்டுக்கங்க.. இங்கே நடந்த கூத்தைக் கவனிச்சீங்கள்ல.. இப்படியொரு பிரச்னை கிளம்பியிருக் கலைன்னா.. அந்த பரமசிவம் பெத்த குடிகாரப் பயலுக்கு நம்ம வீட்டுப் பெண்ணை தாரை வார்த்துக் கொடுத்திருப்போம்.. என் புருசன் ஐந்து ஏக்கர் புஞ்சை நிலத்துக்கு ஆசைப்பட்டு அவன் நல்லவன்னு சொல்லியிருப்பாரு.. என் அண்ணன் தங்கச்சி புருசன் சொல்றதே வேத வாக்குன்னு கண்ணை மூடிட்டு பெண்ணை பாழுங் கிணத்தில தள்ளியிருப்பாரு..”
“சொல்லதே மல்லிகா..”
ஈரக்குலை நடுங்க காதுகளைப் பொத்திக் கொண்டாள் திலகவதி.. இரக்கத்துடன் அவளை அணைத்துக் கொண்டாள் மல்லிகா..
“என் பொண்ணுகளைப் பத்திக் கவலையில்லை அண்ணி.. என்புருசன் ஊரான் வீட்டுப் பொண்ணுகளுக்குத் தான் கெடுதல் செய்வாரு.. அதுவே அவரு பெத்த பொண்ணா இருந்தா.. அருமை.. பெருமையா கல்யாணம் பண்ணி வைப்பாரு.. அதனாலே சுமித்ராவை தப்ப வைக்கிற வழியப் பாப்போம் அண்ணி..”
“எப்படி மல்லிகா.. பெண்ணைப் பெத்தவ.. என் வாயாலே என் மகளை விட்டுக் கொடுக்கிறேன்னு பஞ்சாயத்தில வாயைத் திறந்து சொல்லச் சொல்றியா..? அதுக்குப் பதிலா உயிரை விட்டிருவேன் மல்லிகா..”
மல்லிகா செய்வதறியாது தவித்தாள்.. திலகவதியின் மன உணர்வுகளை பெண்ணைப் பெற்ற தாயாக அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனால்.. அந்தப் பஞ்சாயத்தில் சுமித்ராவின் வாழ்க்கையை தீர்மானித்தாக வேண்டுமே..
மணிவாசகம் குடும்பத்தோடு மன்னிப்புக் கேட்டாலும் கேட்பார்.. ஆனால் பெண்ணை விட்டுக் கொடுக்க மாட்டார்.. ஒருவேளை அதுபோல நடந்து அவர்கள் சுமித்ராவுடன் ஊர் திரும்ப நேரிட்டால் அதற்குப் பிறகு சுமித்ராவின் நிலைமை என்னவாகும்..?
சுற்றுப்பட்டியும் கூடியிருந்த அந்தப் பஞ்சாயத்தில் அவளின் சொந்த அத்தையின் கணவனே.. ஐந்து ஏக்கர் நிலத்திற்கு ஆசைப்பட்டு ஒரு குடிகார புறம்போக்கு மாப்பிள்ளைக்கு மாமன் மகளை தாரை வார்த்துக் கொடுக்க நினைத்தான் என்ற விவரம் வெளிப்பட்டு விட்டது.. அதற்குப் பின்னால் சுமித்ராவை நல்ல இடத்திலிருந்து பெண் கேட்டு வருவார்களா..?
சுற்றுப்பட்டி பஞ்சாயத்தில் குடும்பத்துடன் மன்னிப்புக் கேட்ட மணிவாசகத்தின் மகள் என்று அவளைச் சொல்லி விட மாட்டார்களா..? அதற்குப் பின்னால் அவர்களின் குடும்பம் லட்சுமிபுரத்தில் பெரிய மனிதர் வீட்டுக் குடும்பமாக தலை நிமிர்ந்து வாழ முடியுமா..?
மணிவாசகத்தின் கௌரவமும் காப்பாற்றப்பட வேண்டும்.. அதே சமயத்தில் சுமித்ராவின் வாழ்வும் வளமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் இருந்தது..
அந்த வழி எதுவென்பதை மல்லிகா தீர்மானித்து விட்டாள்.. எதை.. எப்போது.. யாரைக் கொண்டு செய்ய வேண்டுமென்பது வள்ளுவருக்கு மட்டும் தெரிந்த பாடமல்ல.. இந்தியக் குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்கும் தெரிந்த பாடம்தான்..
“சுமித்ரா..”
மல்லிகா அண்ணன் மகளின் காதோரமாக சரிந்து முணுமுணுப்பாக பேச ஆரம்பித்தாள்.. அவள் என்ன பேசினாள் என்பதை அருகிலிருந்த தாராவாலும் கேட்க முடியவில்லை.. பக்கத்திலிருந்த சுந்தராலும் கேட்க முடியவில்லை.. சுமித்ராவின் செவியில் மட்டுமே மல்லிகா பேசிய வார்த்தைகள் அட்சர சுத்தமாக விழுந்தன..
“அப்பாவை நினைச்சுப்பாரு சுமி.. அவர் ஹார்ட் பேசண்ட்.. அம்மா வீட்டை விட்டு வெளியே வராதவங்க.. இந்தப் பஞ்சாயத்தில மன்னிப்புக் கேட்க வேண்டி வந்தா அவங்க உயிரோட வீட்டுக்குத் திரும்பிருவாங்கன்னா நினைக்கிற..?”
சுமித்ராவின் இதயம் அதிர்ந்தது.. மல்லிகா சொன்னது அனைத்தும் கடைந்தெடுத்த உண்மை என்பதை அவள் மனம் ஒப்புக் கொண்டது..
‘இதை எப்படித் தவிர்ப்பது..?’
சுமித்ரா அவசரமாக யோசித்தாள்.. அதைப் புரிந்து கொண்ட மல்லிகா சுமித்ரா செய்ய வேண்டியது என்ன என்பதை கோடிட்டுக் காட்டிவிட்டாள்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.