Chapter 11
“எனக்கும் தெரியும்.. உனக்கும் தெரியும்.. உன்னைப் பெத்தவங்க ஒருநாளும் பஞ்சாயத்தில பெத்த மகளை விட்டுக் கொடுக்க மாட்டாங்கன்னு.. அதுக்காக எதை வேண்டும்னாலும் அவங்க செய்வாங்க.. மரியாதையை விட்டுட்டு மன்னிப்பும் கேட்பாங்க.. அம்மாடி சுமித்ரா.. அதுக்குப் பின்னாலே அவங்க என்ன ஆவாங்கன்னு யோசிச்சுப் பாரும்மா.. நீ நினைச்சா இது ரெண்டையும் தடுக்கலாம்.. பெண்ணைப் பெத்தவங்க பெண்ணை விட்டுக் கொடுத்ததாய் இருக்க வேணாம்.. பெண்ணே.. பெத்தவங்களை விட்டுப் பிரிஞ்சதா இருக்கட்டும்.. இது ஒன்னுதான் இப்போதைக்கு உன்னைப் பெத்தவங்களைக் காப்பாத்தறதுக்கு இருக்கிற ஒரே வழி.. நியாயம்ன்னு ஒன்னு இருக்கு.. அந்த நியாயம் அன்னவாசல் ஜமீன்தார் பக்கம்தான் இருக்கு.. உன் அத்தை புருசன் பக்கமும்.. அவர் எதைச் சொன்னாலும் கண்ணமூடிக்கிட்டு கேட்டுக்கிற உன் அப்பா பக்கமும் இல்லை.. நம்ம வீட்டாளுகளால ஒரு தங்கமான மனுசரோட மனசு புண்பட்டு.. இப்ப சுத்துப்பட்டி பஞ்சாயத்து வரைக்கும் வந்து நிக்குது.. அதையும் நினைப்பில வை..”
மல்லிகா சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டாள்.. மணிவாசகம் வியர்த்த முகத்தை துண்டினால் அழுந்தத் துடைத்தபடி..
“மன்னிப்புக் கேட்டிரலாம் திலகா..” என்று உடைந்த குரலில் மனைவியிடம் சொன்னார்..
அவள் பதில் சொல்ல முடியாமல் அழுகையை கட்டுப்படுத்த முயன்று தோற்றபடி தலையை ஆட்டினாள்..
“ஒரு நிமிசம்..”
கணிரென்ற குரலுடன்.. மணிவாசகத்தின் பின்னால் நின்றிருந்த சுமித்ரா விலகி.. பஞ்சாயத்தின் தலைமையின் முன்னால் வந்து நின்றாள்.. திலகவதி பதறினாள்..
“மல்லிகா.. இவ எங்கே போகிறா..?”
“தெரியலை அண்ணி.. என்ன பேசப் போறான்னு கேக்கலாம் பொறுங்க..”
அதற்குள் மணிவாசகம் மகளை அதட்டினார்..
“சுமித்ரா.. இங்கே வா..”
“இல்லேப்பா.. எனக்கு பஞ்சாயத்தில பேச வேண்டியிருக்கு..”
“நீ சின்னப் புள்ளை.. உனக்கென்ன தெரியும்..?”
“அதனாலதானேப்பா.. நம்ம மாமா.. ஐஞ்சு ஏக்கர் புஞ்சை நிலத்துக்காக குடிகார மாப்பிள்ளையை.. யோக்கியமான மாப்பிள்ளைன்னு சொன்னாரு..?”
“சுமித்ரா..”
மணிவாசகம் வாயடைத்துப் போனார்.. தனஞ்ஜெயன் சுமித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளது துடிப்பு அவனைக் கவர்ந்தது.. இந்திராதேவியோ.. ஜமீன் வீட்டுக்கு மருமகளாக வருகிறவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் சிலாகித்தாள்..
“பொறுங்க மணிவாசகம்.. இது பஞ்சாயத்து.. உங்க பொண்ணு சொல்ல நினைக்கிறதை இந்தப் பஞ்சாயத்தில தாராளமாச் சொல்லட்டும்…”
தலைமை சொல்லி விட்டபின்பு மணிவாசகத்தால் தடுக்க முடியாமல் போய் விட்டது.. அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று அவர் மனம் அடித்துக் கொண்டது..
“நீ சொல்லும்மா..”
தலைமை உத்தரவிட்டதும் சுமித்ரா மடமடவென்று சொல்லி விட்டாள்..
“இந்தப் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிற அன்னவாசல் ஜமீன்தாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கோ.. அதே போல பாதிப்பு எனக்கும் ஏற்பட்டிருக்கு.. என் மாமா பேசின பேச்சுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்..? பெண்ணோட விருப்பமில்லாம பெத்தவங்களும்.. அவளோட சொந்தக்காரங்களும்.. மத்தவங்களும்.. அவளைப் பஞ்சாயத்தில நிறுத்தி வைச்சு பணயப் பொருளா ஆக்கலாமா..? அதைத்தானே இப்ப அன்னவாசல் ஜமீன்தாரும் செய்திருக்கிறார்..? அவருக்கு எதிரா நான் பஞ்சாயத்தைக் கூட்டலாமா..?”
தனஞ்ஜெயனின் புருவங்கள் முடிச்சிட்டன.. இந்திராதேவியோ விவகாரம் வேறு கோணத்தில் திரும்பப் போகிறதோ என்று கவலையாகி விட்டாள்.. மணிவாசகத்தின் முகத்தில் கூட லேசான வெளிச்சம் வந்தது..
“தாராளமாக் கூட்டலாம்மா.. அப்பவும் முதல் குற்றவாளியா உன் அத்தை புருசனும்.. இரண்டாவது குற்றவாளியா உன் அப்பாவும்தான் முன்னால் நிற்பாங்க.. அன்னவாசல் ஜமீன்தார் மூன்றாவது குற்றவாளியாத்தான் நிற்பார்..”
தலைமையின் சுட்டிக் காட்டுதலில் இந்திரா தேவியின் மனதில் நிம்மதி பரவியது.. மணிவாசகத்தின் முகம் இருண்டது.. முதன் முதலாக அவர் அருகில் நின்நிருந்த திருக்குமரனை வெறுப்புடன் பார்த்தார்..
‘இவனால்தான் இத்தனையும்..’
சுமித்ரா முகம் மாறாமல் தலையை ஆட்டித் தலைமையின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டாள்..
“உண்மைதான் அய்யா.. அதனாலதான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.. என்னைப் பெண் கொடுக்க முடியாதுன்னுதானே என் மாமாவும்.. அப்பாவும் சொன்னாங்க..? என்னைப் பெண் கேட்டார்ன்னு தானே அன்னவாசல் ஜமீன்தார்மேலே பொய்ப்பழியை சொன்னாங்க..? என் மாமாவும்.. அப்பாவும் பெண் கொடுக்க மாட்டேன்னு சொன்ன இந்த சுமித்ரா முழு மனதா அன்னவாசல் ஜமீன்தாரரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறா… பஞ்சாயத்தில பெண்ணை விட்டுக் கொடுக்க வைச்சுத் தாலிகட்டினதா அன்னவாசல் ஜமீன்தாருக்கு ஏன் பேர் வரனும்..? என்னை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு ஏன் என் அப்பா மல்லுக்கு நிற்கனும்..? இது இரண்டுமே வேண்டாம்.. இந்த நிமிசமே அன்னவாசல் ஜமீன்தாரர் கையாலே தாலி வாங்கிக்க
நான் ரெடியா இருக்கேன்.. இதை பஞ்சாயத்தில் ஏத்துக்கிட்டு மேற்கொண்டு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லி இந்தப் பஞ்சாயத்தைக் கலைக்கச் சொல்லிக் கேட்டுக்கறேன்..”
தலைமையும் மணியக்காரரும்.. மற்ற முக்கியஸ்தர்களும் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள்.. பின்னர் தலைமை நிமிர்ந்து அமர்ந்து தொண்டையைக் கனைத்தார்.. அவர் தீர்ப்பைச் சொல்லப் போகிறார் என்பதில் சுற்றுப்பட்டி மக்களும் அமைதியாகி அவர் வாயையே பார்த்தார்கள்.. குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி நிலவியதில் தாரா ஆச்சரியப்பட்டுப் போனாள்..
தலைமை தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்தார்..
“லட்சுமிபுரத்து மணிவாசத்தின் தங்கச்சி புருசன் அன்னவாசல் ஜமீன்தார் தனஞ்ஜெயனின் மீது பொய்பழி சொல்லியிருக்கிறார் என்பதை இந்தப் பஞ்சாயத்து
உறுதி செய்கிறது.. தேவையில்லாத மன உளைச்சலை தனஞ்ஜெயனுக்கு ஏற்படுத்தியதற்காக இந்தப் பஞ்சாயத்து அவர்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறது.. அதே சமயத்தில் தனஞ்ஜெயன் கேட்டுக் கொண்டபடி அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசிய மில்லாமல்.. அவர்கள் வீட்டுப் பெண் சுமித்ரா தானாகவே முன்வந்து தனஞ்ஜெயனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதித்து விட்டதால் இந்தப் பஞ்சாயத்து சுமித்ராவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு.. தனஞ்ஜெயனுக்கும்.. சுமித்ராவிற்கும் நாளைக் காலையில் அன்னவாசல் திருமண மண்டபத்தில் கல்யாணம் நடக்கும் என்று அறிவிக்கிறது.. இந்த வினாடியிலிருந்து சுமித்ரா அன்னவாசல் கிராமத்தின் ஜமீன் வம்சத்தின் மருமகள்.. தனஞ்ஜெயனுக்காக நிச்சயம் செய்யப்பட்ட பெண்.. சுமித்ராவைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டுத்தான் மணிவாசகத்தின் குடும்பத்தினர் லட்சுமிபுரத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்தப் பஞ்சாயத்து உத்தரவிடுகிறது.. மேலும்.. பிரச்னையை சுமித்ரா சுமூகமாக தீர்த்து விட்டதால்.. மணிவாசகம்.. குடும்பத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டியதில்லை.. பெண்ணையும் பஞ்சாயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை என்று இந்தப் பஞ்சாயத்து தீர்ப்பளிக்கிறது.. இத்துடன் இந்தப் பஞ்சாயத்து முடிந்து கலைகின்றது..”
மணிவாசகம் திக் பிரமை பிடித்துப் போய் நின்று விட்டார்.. இது அவருக்கான வெற்றியா..? இல்லை.. தோல்வியா..?
தனஞ்ஜெயனின் கணக்குப்பிள்ளை ரங்கசாமி பவ்யமாக அவரிடம் வந்து.. வணக்கம் வைத்தார்.. மணியக்காரர் தியாகராஜனும்.. அவர் மனைவி மரகதமும் வந்து மரியாதையுடன் அவர்களை வீட்டுக்குள் அழைத்தார்கள்..
“நாளைக்குக் காலையிலேதான் கல்யாணம்.. பொழுது சாயத்தான் பெண் அழைப்பு நடக்கிறதா இருக்கு.. நீங்க அதுவரைக்கும் நம்ம வீட்டிலே தங்கிக்கலாம்.. இது உங்க வீடு போல.. இப்ப விருந்து ரெடியா இருக்கு.. சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க..”
எதுவுமே நடக்காததைப் போல மாப்பிள்ளை வீட்டின் சார்பாக உபசரித்தவர்களின் மென்னியைப் பிடிக்க வேண்டும் போல மணிவாசகத்திற்கு வெறி ஏற்பட்டது..
‘யாருக்கு வேணும் உன் வீட்டு விருந்துச் சாப்பாடு..’ என்று கத்தத்தான் அவர் நினைத்தார்..
ஆனால் சோர்ந்திருந்த சுமித்ராவின் முகமும்.. கண்ணீருடன் இறைஞ்சிய திலகவதியின் முகமும் அவருடைய கோபத்தை கட்டுப்படுத்தி தியாகராஜன் சொன்னதற்கு ஒப்புதலாக தலையை அசைக்க வைத்தன..
“என்மக.. நம்மை மீறி எதையும் பேசாதவ.. தானா முன்னாடி போயி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கா.. ஏன்..? நம்ம குடும்பத்தோட மரியாதையைக் காப்பாத்தறதுக்காக..! அவ கல்யாணம் முடிவாகிருச்சு.. பெத்தவங்களா நாம அவ மனசு வருத்தப் படாம கல்யாணத்தை முடிச்சு வைச்சுட்டுப் போயிரலாம்ங்க.. இத்தனை நாளாத்தான் உங்க தங்கச்சி புருசனைப் பத்தி நான் சொன்னதை காதில வாங்கிக்காம பாடாய் படுத்தினீங்க.. இப்பவாவது என் பேச்சைக் கேட்டு.. என் பொண்ணு கல்யாணத்த நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.. கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்.. வாழ்க்கையிலே ஒரே ஒரு தரம்தான் வருகிறது.. அந்தக் கல்யாணத்தில நம்ம மக நிம்மதியில்லாம நிக்க வேண்டாங்க.. நமக்காக இந்தக் கல்யாணத்தை ஒப்புக்கிட்ட நம்ம மகளுக்கு நம்மால செய்ய முடிஞ்சது இது மட்டும்தாங்க..”
திலகவதியின் கெஞ்சலுக்குப் பலனிருந்தது..
“உங்க சொந்த பந்தத்தோட போன் நம்பர்களைக் கொடுங்க.. திடிர்ன்னு கல்யாணம் நிச்சயமாகிருச்சுன்னு சொல்லி மாப்பிள்ளை வீட்டு சார்பா நான் அழைப்புக் கொடுக்கிறேன்.. நீங்களும் அழைச்சிருங்க.. இன்னும் ஒரு நாள் ஊடே இருக்கு.. கல்யாணத்துக்கு வரனும்னு நினைக்கிறவங்க கிளம்பி வரட்டும்..” என்று மணியக்காரர் சொன்னபோது மறுத்துப் பேசாமல் அவர் பக்கத்து நெருங்கிய சொந்தங்களின் விலாசத்தையும்.. போன் நம்பர்களையும் எழுதிக் கொடுத்தார் மணிவாசகம்..
தனஞ்ஜெயன் திருமண ஏற்பாடுகளில் ஒரு குறைவும் வைக்கவில்லை.. அன்னவாசலுக்கும்.. லட்சுமி புரத்துக்கும் இடையே ஒரு தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து ஓட விட்டிருந்தான்.. திருமணத்தில் கலந்து கொள்ள லட்சுமிபுரத்தில் இருந்த மணிவாசகத்தின் உறவினர்கள் திரண்டு வந்தார்கள்.. வந்தவர்கள் தங்குவதற்கு ஜமீன் வீடுகளில் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது.. அவர்கள் மணிவாசகத்தைப் பார்த்துப்
பேச மணியக்காரரின் வீட்டிற்கு வந்து போய் கொண்டிருந்தார்கள்.. வந்தவர்களை வரவேற்று உபசரித்தது மணியக்காரரின் வீடு.. எல்லோரும் தவறாமல் கேட்ட ஒரே கேள்வி..
“என்ன மணி.. திடிர்ன்னு கல்யாணத்த வைச்சிருக்க..?”
‘நானா வைச்சேன்..?’ நொந்து போன மனதை மூடி மறைத்தபடி.. கீறல் விழுந்த ரிகார்டைப் போல ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் மணிவாகம்..
“திடிர்ன்னு முடிவான கல்யாணம்.. அதான் திடிர்ன்னு கல்யாணத்த வைச்சிருக்கோம்..”
இது ஒரு பதிலா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே தலையை ஆட்டி விட்டு அவர்கள் போனார்கள்..
மாலையில் பெண்ணழைக்க வந்து விட்டார்கள்.. கையோடு கொண்டு போயிருந்த நகைப் பெட்டியிலிருந்த சுமித்ராவின் நகைகளைப் போட்டு அவளை அழகு படுத்தி அழைத்துப் போனாள் மல்லிகா..
‘இவளுக்கு இந்தக் கல்யாணத்தில இம்புட்டு ஆனந்தமா..?’ அவள் கணவன் பல்லைக் கடித்தான்..
திருமண மண்டபத்தில் காத்திருந்த தனஞ்ஜெயனின் உறவினர்கள் ஆரத்தி எடுத்து பெண்ணை அழைத்துச் சென்றார்கள்.. தோழியைப் பார்க்க வந்த இடத்தில்.. அவளுடைய கல்யாணத்தையும் பார்க்க நேர்ந்து விட்ட சந்தோசத்தில் தோழிப் பெண்ணாக கூடவே இருந்தாள் தாரா.. இரவில் நிச்சயதார்த்தமும் நலங்கும் நடந்து முடிந்தது.. சின்னதாக ஒரு நாட்டிய கச்சேரியை ஏற்பாடு பண்ணியிருந்தான் தனஞ்ஜெயன்.. நாட்டியம் முடிந்ததும் இரவு விருந்து..
“தூள் கிளப்பறார்டி உன் ஹீரோ..” என்றாள் தாரா..
“ஆமாமாம்.. நம்ம சுத்து வட்டாரத்தில யாரோட கல்யாணம் இவ்வளவு தடபுடலா நடந்திருக்கு..?” மல்லிகா கேட்டாள்..
திலகவதிக்கும் மனது அமைதியடைந்திருந்தது.. அவளது மனக்காயம் ஆறுவதைப் போல இருந்தது.. மகளின் திருமண நிகழ்வுகளின் பிரம்மாண்டத்தில் அவள் மனம் பூரிப்படைய முயற்ச்சித்தது.. சுந்தரின் இறுகிய முகம்கூட லேசாக இளக்கமானது.. மல்லிகாவின் பெண்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததில் மண்டபம் களை கட்டியது..
அன்றைய இரவில் யாரும் உறங்கவில்லை.. உறக்கமின்றி விழித்திருந்தார்கள்.. விடியலுக்கு முன்னரே சுமித்ராவை எழுப்பி குளிக்க வைத்து.. மணப்பெண் அலங்காரத்தை ஆரம்பித்து விட்டார்கள்..
காலை விருந்து முடிந்தவுடன் கல்யாண நிகழ்வுகள் ஆரம்பமாகின.. மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த தனஞ்ஜெயனைப் பார்த்தபோது இந்திரா தேவியின் மனம் நிறைந்தது.. அத்தனை நாளாக எதைப் பார்க்க அவள் ஏங்கிக் கொண்டிருந்தாளோ.. அது.. அவளுடைய மகனின் திருமணம்.. அப்போது நடக்கப் போகிறது.. கண்களில் பனித்த ஆனந்தக் கண்ணீரை நெகிழ்வுடன் அவள் துடைத்துக் கொண்டாள்..
“பொண்ண அழைச்சிட்டு வாங்கோ..” அய்யர் உத்தரவிட்டார்..
சர்வாலங்கார பூஷிதையாக சுமித்ரா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்… மணிவாசகத்தின் கண் நிறைந்தது.. திலகவதி.. மகளின் திருமணக் கோலத்தில் பெருமிதம் கொண்டாள்.. அவள் பெற்ற மகளுக்கு மிகப் பெரிய இடத்தில் திருமணம் நடக்கப் போகிறது.. அந்தத் திருமணம் எந்த வகையில் முடிவானால் என்ன..?
திருமணம்.. திருமணம்தானே…
தனஞ்ஜெயனின் அருகே பதுமை போல அமர்ந்தவளை லேசாக பார்த்தான் அவன்.. அவளின் அழகில் அவன் மனம் மயங்கியது.. இமை உயர்த்தி அவனைப் பார்த்த அவள் பார்வையில் இருப்பது என்னவென்று கண்டு கொள்ள அவனால் முடியவில்லை..
“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..”
நாதஸ்வர ஒலியுடன் கெட்டிமேளம் முழங்க.. தனஞ்ஜெயன் தாலியை எடுத்து சுமித்ராவின் கழுத்தில் கட்டினான்.. சுற்றிலும் இருந்தவர்கள் அட்சதை போட்டு வாழ்த்தினார்கள்..
“பொண்ணும்.. மாப்பிள்ளையும்.. அக்கினியைச் சுத்தி வலம் வரனும்..”
அய்யரின் கட்டளையில் தனஞ்ஜெயனின் கரம் பிடித்து அக்கினியைச் சுற்றி வலம் வந்தாள் சுமித்ரா.. மணமக்கள் இந்திராதேவியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.. அடுத்து மணிவாசகத்திடமும்.. திலகவதியிடமும் ஆசிர்வாதம் வாங்கப் போன போது.. அதைத் தடுத்த மணிவாசகம்.. மகளின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தார்..
“தீர்க்க சுமங்கலியாய் இரும்மா.. நீ நல்லா வாழனும்.. உன் மனசுப்பிரகாரம் கல்யாணத்தை முடிச்சுக் கொடுத்திட்டேன். இனி நாங்க கிளம்பறோம்.. இதுக்கு மேலே இங்கே நிற்க என்னால முடியாதும்மா.. எப்பவுமே உன் பிறந்த வீடு உன்னைத் தாங்க காத்திருக்கும்.. இதை நீ மறக்காதே.. திலகா.. நாம போகலாம்..”
மணிவாசகம் குடும்பத்துடன் வெளியேறி விட்டார்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.