Chapter 12

0Shares

சுமித்ராவின் விழிகள் விரிந்தன.. அவ்வளவு விரைவில் அவளுடைய பிறந்தவீடு அவளை விட்டுப் பிரியும் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.. அவளுடைய தவிப்பில் தாரா தயங்கி நின்றாள்..

“சுமி.. இந்த நிலைமையிலே உன்னை விட்டுட்டுப் போக மனசில்லைடி.. ஆனா.. நான் என்ன செய்யட்டும்..? உன்கூட இருக்கனும்னு வந்தேன்.. இரண்டுநாள் உன் கூடவே இருந்துட்டேன்.. எனக்கு இது போதும்டி.. நான் ஊருக்குக் கிளம்பறேன்..”

தோழியின் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்து விட்டு அவளும் போய் விட்டாள்.. சுமித்ரா தனித்து நின்றாள்.. அவள் கழுத்திலிருந்த மாலை கனப்பதைப் போல உணர்ந்தாள்.. புது ஊர்.. புது மனிதர்கள்.. புதிய சூழ்நிலை…

பிரமை பிடித்தவளைப் போல நின்றவளின்தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் இந்திராதேவி.. மிரண்டு விழித்தவளின் பார்வையில் அவளுக்குள் குற்ற உணர்வு வந்தது..

இந்தத் திருமணத்தில் பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டறிய இந்திராதேவி தவறி விட்டாளா..?

குலதெய்வம் கோவிலுக்குப் போய் வணங்கிவிட்டு.. மணமக்கள் தனஞ்ஜெயனின் வீட்டுக்குச் சென்றார்கள்.. உடல் சோர்வதை உணர்ந்தாள் சுமித்ரா.. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் சிரமப் பட்டே எடுத்து வைத்தாள்..

அவளுக்கு ஆரத்தி எடுத்த உறவினர் பெண்களுக்கு பணக்கற்றை பரிசாக கிடைத்தது..

“வலதுகாலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா.. இனிமே இதுதான் உன் வீடு..” அன்புடன் அழைத்துக் கொண்டாள் இந்திராதேவி..

பூஜையறைக்கு மருமகளை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னாள்.. நடுங்கும் விரல்களால் விளக்கேற்றியவளிடம்..

“உன் பெட்டிகளை உன்னோட அத்தையும்.. அம்மாவும் கொடுத்துட்டுப் போயிருக்காங்கம்மா.. மாடி ரூமில அதுகள்ளாம் இருக்கு.. தனா ரூமிலதான் அதுகளையெல்லாம் வைச்சிருக்கனும்.. ஆனா.. அங்கே பூ அலங்காரம் நடந்துக்கிட்டு இருக்கிறதால பெட்டிகளை வேற ஒரு ரூமில வைக்கச் சொல்லியிருக்கேன்.. நாளைக்கு அதுகளை உங்க ரூமுக்கு கொண்டு போய் பிரிச்சு அடுக்கி வைச்சுக்கம்மா..”

சுவாதீனமாய் சொல்லிக் கொண்டிருந்தாள் இந்திராதேவி..

“பொண்ணு மாப்பிள்ளைக்கு பால் பழம்.. கொடுங்க..” அங்கிருந்த மருக்கொழுந்து சொன்னாள்..

“தனா.. இங்கே வா..”

தாயின் அழைப்பில் புது மனைவியின் பக்கத்தில் வந்தான் தனஞ்ஜெயன்.. அவள் நிற்க முடியாமல் தள்ளாடுவதை அவன் கவனிக்கவில்லை.. இந்திராதேவியோ மணமக்களுக்கான பால்.. பழ ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தாள்..

“தனா.. நீயும் சுமித்ராவும் சோபாவில் உட்காருங்க..”

அன்னையின் கட்டளையில் புதுமனைவியின் முகத்தைப் போகலாமா என்ற பார்வையுடன் பார்த்த தனஞ்ஜெயன் திகைத்தான்..

சுமித்ரா கண்கள் சோர்ந்து மடிந்து கீழே விழப் போனாள்.. மயங்கிச் சரிந்தவளை தாங்கிக் கொண்டவனின் கைகள் அவள் உடலில் காய்ச்சலை உணர்ந்தன..

“அம்மா இவளைப் படுக்க வையுங்க.. நான் டாக்டருக்குப் போன் பண்ணிட்டு வரேன்..”

சுமித்ராவை சோபாவில் அமர வைத்து விட்டு தனஞ்ஜெயன் கூவியதில் இந்திராதேவியும்… மற்ற உறவினர் பெண்களும் சுமித்ராவை சூழ்ந்து கொண்டார்கள்..

வாடி.. வதங்கித் தெரிந்த சுமித்ராவின் தலை மயக்கத்தில் சாய்ந்திருந்தது.. இந்திராதேவி.. மருமகளை தன்மேல் சாய்த்துக் கொண்டு மணமக்கள் பகிர்ந்துண்ணக் கொண்டு வந்த பாலைப் புகட்டினாள்.. வெந்நீரில் அவள் முகத்தை துடைத்து விட்டபோது கண்விழித்த சுமித்ரா.. லேசாக அரற்றினாள்..

“இது தூங்கட்டும்..”

இந்திராதேவி.. உறவினர் வீட்டுப் பெண்களை அழைத்து மருமகளை கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்து வரச் சொன்னாள்.. திருமண வீடு.. உறவினர் நடமாட்டம் அதிகமாக இருந்ததில் தரைத்தளத்தில் இருந்த அறைகளில் ஒன்றில் சுமித்ராவைப் படுக்க வைத்தால் அவளுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது என்று அவள் நினைத்தாள்.. மாடிக்கு உறவினர்கள் போக மாட்டார்கள்.. தனஞ்ஜெயன் மனைவியின் அருகில் இருக்க விரும்பினால் மாடியறைதான் தோதாக இருக்கும்..

சுமித்ராவின் பெட்டிகள் இருந்த அறையிலேயே சுமித்ரா படுக்க வைக்கப்பட்டாள்.. தனஞ்ஜெயன் வந்து கேட்டபோது அவளை மாடியறையில் படுக்க வைத்திருப்பதாகச் சொன்னாள் இந்திராதேவி.. டாக்டரின் வரவுக்காக காத்திருந்த தனஞ்ஜெயன்.. அவர் வந்ததும் மாடியறைக்கு அழைத்துக் கொண்டு போனான்.. கட்டிலில் கண்மூடிக் கிடந்த புதுமனைவியைப் பார்த்தபோது அவளுக்கு அநியாயம் இழைத்து விட்டதைப் போல அவன் மனம் பதைத்தது..

“டெம்பரேச்சர் அதிகமா இருக்கு..” டாக்டர் கவலையுடன் சொன்னார்..

“எதுக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிடறது பெட்டர்..”

“வேண்டாம் டாக்டர்..” இந்திராதேவி மறுத்தாள்..

“இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. வீட்டுக்குள்ளே காலடி வைச்சதும் ஹாஸ்பிடலிலே அட்மிட் பண்ணினா நல்லாயிருக்காது.. ஊருக்குள்ளே நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க.. நீங்க கேட்கிற வசதியைப் பண்ணித்தரோம்.. இங்கேயே வந்து வைத்தியம் பார்த்துட்டுப் போங்க..”

இந்திராதேவியின் கெஞ்சுதலான குரலில்.. யோசனையான டாக்டர்.. சுமித்ராவின் இமைகளை உயர்த்தி கண்களை பரிசோதித்தார்..

“பிளட் டெஸ்ட் கொடுங்க.. ரிசல்ட் வந்ததும் என்ன வகையான ஃபீவர் அட்டாக்கியிருக்குன்னு பார்க்கலாம்.. இப்போதைக்கு டெம்பரேச்சரைக் குறைக்க இன்ஜெக்சன் போட்டுட்டு.. டேப்லெட்ஸ் கொடுத்திட்டுப் போறேன்..”

டாக்டர் போய் விட்டார்.. தனஞ்ஜெயன் அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.. இரவு நெருங்கிக் கொண்டிருந்தது..

“தனா..” இந்திராதேவி அறைக்குள் வந்தாள்..

தனஞ்ஜெயன் நிமிர்ந்து பார்த்தான்.. சிவந்திருந்த அவனது கண்களும்.. கலைந்திருந்த தலைமுடியும் இந்திராதேவிக்குள் துன்பத்தைக் கொண்டு வந்தன.. பட்டுவேட்டி சட்டையைக்கூட மாற்றாமல் மனைவியின் பக்கத்தில் இருந்தவனை கவலையுடன் அவள் பார்த்தாள்..

“போயி குளிச்சுட்டு டிரஸை மாத்திட்டு வா தனா..”

“இருக்கட்டும்மா..”

“குளிக்காம நீ சாப்பிட மாட்டியேடா..”

“சாப்பாடா..? எனக்கா..?”

“என்னடா தம்பி இப்படிக் கேட்கிற.. ராத்திரி ஆகிருச்சுப்பா.. வீட்டில எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு..”

“இவ சாப்பிடலையேம்மா..”

துயரத்துடன் கட்டிலில் கண்மூடிக் கிடந்த சுமித்ராவைக் காட்டினான் தனஞ்ஜெயன்.. வாடிக் கிடந்தவளைப் பார்த்த இந்திராவின் மனதை வருத்தம் சூழ்ந்தது..

“சூடா கஞ்சியைக் கரைச்சுக் கொண்டு வந்திருக்கேன்ப்பா.. புகட்டி விடலாம்.. வெறும் வயித்தில மாத்திரை சாப்பிட முடியாதில்ல..”

இந்திராதேவி அறை வாசலைப் பார்த்தாள்.. அங்கே பாத்திரத்தோடு நின்றிருந்த சுசிலா உள்ளே வந்தாள்.. அதை வாங்கிக் கொண்ட இந்திரா படுக்கையை நெருங்கினாள்..

“நீ போ தனா.. நான் இவளுக்கு கஞ்சி புகட்டி விட்டுக்கறேன்.. நீ போய் குளிச்சுட்டு வா..”

“இருக்கட்டும்மா.. நீங்க விலகுங்க.. நான் இவளுக்குக் கஞ்சியைக் கொடுக்கிறேன்..”

தனஞ்ஜெயன் சுமித்ராவைத் தன்மீது சாய்த்துக் கொண்டான்.. இந்திராதேவி மறுக்காமல் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்து விட்டு சுசிலாவை மௌன பார்வை பார்த்தாள்.. அந்தப் பார்வையில் சுசிலா போய் விட்டாள்.. கஞ்சியை புகட்டி முடித்ததும்.. சுமித்ராவின் வாயை சுடுநீரால் துடைத்து விட்டு.. அவளுக்கான மாத்திரைகளை விழுங்க வைத்துவிட்டு.. அவளைப் படுக்க வைத்துப் போர்த்தி விட்டான்..

புது மனைவியின் மீதான மகனின் அக்கறையிலும்.. சேவையிலும் இந்திராதேவியின் இதயம் நெகிழ்ந்தது.. தளைகள் இல்லாமல் வாழ்ந்த தனஞ்ஜெயனுக்கு சுமித்ரா தளையாகி விட்டதை அவள் உணர்ந்தாள்.. மருமகளின் உடல்நிலை சீக்கிரத்திலேயே குணமடைந்து விட வேண்டும் என்று அவள் மனம் பிரார்த்தித்தது..

“இனியாவது குளிக்கப் போடா.. சுமித்ரா பக்கத்திலே நானிருக்கேன்..” மகனை வற்புறுத்தினாள்..

“பசிக்கலைம்மா..” அவன் மறுத்தான்..

“நீ சாப்பிடாம நான் மட்டும் சாப்பிட முடியுமாடா தனா..?”

இந்திராதேவியின் தழதழத்த குரலில் அவன் பதறிப் போனான்..

“இன்னும் நீங்க சாப்பிடலையா..?”

“எப்படிடா சாப்பிடுவேன்..? என் மருமக கண் திறக்காம கிடக்கா.. நீ அந்தக் கவலையிலே சாப்பிடாம கிடக்கே.. உங்களை விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா தம்பி சாப்பிடுவேன்..?”

அன்று காலையில்தான் சுமித்ரா அவளுக்கு மருமகளானாள்.. அதற்குள் ஆண்டாண்டு காலமாக சுமித்ராவை அறிந்தவளைப் போல.. மகனையும்.. மருமகளையும் பிரித்துப் பேசாமல்.. பிணைத்துப் பேசிய இந்திராதேவியின் மனம் மருமகளின் ஆரோக்கியத்திற்காக ஏங்கியது..

“என்னம்மா நீங்க.. உங்க மருமக மட்டும் வெறும் வயிறில மாத்திரை போட்டுக்கக் கூடாது.. நீங்க அதைச் செய்யலாமா..?”

தனஞ்ஜெயனும் சுமித்ராவை ஆண்டாண்டு காலமாக அறிந்தவனைப் போல பேசி வைத்தான்.. அவ்வாறு அந்தத் தாய்.. மகன் இருவருக்கும் ஒரே நாளில் உறவாகிப் போனதை அறியாதவளாய் கண்மூடி காய்ச்சலில் கிடந்தாள் சுமித்ரா..

இந்திராதேவிக்காக குளித்து உடை மாற்றி வந்தான் தனஞ்ஜெயன்..

மாடியறைக்கே இரவு உணவை கொண்டு வரச் செய்திருந்தாள் இந்திராதேவி… தாயும் மகனும் பேசியபடியே சாப்பிட்டதாக பெயர் பண்ணி முடித்தார்கள்.. தனஞ்ஜெயன் அந்த அறையில் இருந்த இன்னொரு கட்டிலில் படுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டான்.. அவனுடைய அறையில் இருந்த பூ அலங்காரத்தை நினைத்துப் பார்த்த இந்திராதேவியின் கண்களில் நீர் பெருகியது.. மகன் அறியாமல் அதைத் துடைத்துக் கொண்டவள் மனதில் பாரத்துடன் தளர்வாக மாடிப் படிகளில் இறங்கினாள்..

‘யார் கொடுத்த சாபம் இது..?’

அன்று இரவு முழுவதும்.. தாயும்.. மகனும்.. தூக்கமின்றி இரவைக் கழித்தார்கள்..

மறுநாள் காலையில் டாக்டர் வந்தார்.. சுமித்ராவின் ரத்தப் பரிசோதனையின் முடிவு வெறும் வைரஸ் ஃபீவர் என்று அறிவிப்பதாக சொன்னபின்புதான் தனஞ்ஜெயனின் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது..

“இருந்தாலும் கவனமா பார்த்துக்கங்க.. டெம்பரேச்சர் இறங்க மாட்டேங்குது..” டாக்டர் எச்சரித்துவிட்டுப் போனார்..

இந்திராதேவி கண்ணும் கருத்துமாக மருமகளைப் பார்த்துக் கொண்டாள்.. சுமித்ராவை எழுப்பி.. பல்துலக்க வைத்து.. பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று வந்து படுக்க வைத்தாள்.. சுசிலாவிடம் சொல்லி வெந்நீரால் அவள் முகத்தை துடைத்து விட்டாள்.. தனஞ்ஜெயன் மனைவியை விட்டு அகலாமல் பக்கத்திலேயே இருந்தான்.. அன்றைய நாள் கழிந்தது..

அடுத்த நாள் காலையில் சுமித்ராவின் காய்ச்சல் வெகுவாக குறைந்திருந்தது.. கண்விழித்தவள் அருகிலிருந்த தனஞ்ஜெயனைப் பார்த்ததும் அவசரமாக எழுந்தாள்..

“அலட்டிக்காம படு..” பரிவுடன் சொன்னான் தனஞ்ஜெயன்..

சுமித்ராவுக்கு குளிக்க வேண்டும் போல இருந்தது.. அதை அவனிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சங்கடப் பட்டாள்.. அவளையே பார்த்த தனஞ்ஜெயனின் புருவங்கள் சுருங்கின.. வெளியே போனவன் இந்திரா தேவியை அழைத்தான்..

“என்னப்பா..” என்று விரைந்து வந்தவளிடம்..

“அவ கண்ணை முழிச்சிட்டாம்மா.. எதையோ சொல்ல நினைக்கிறா.. என்னன்னுதான் தெரியலை..” என்றான்..

“இரு.. நான் போய் விசாரிக்கறேன்..”

மகனை அமைதிப் படுத்தி விட்டு சுமித்ராவிடம் போனாள் இந்திராதேவி.. மாமியாரைக் கண்டதும் சுமித்ராவின் சங்கடம் கொஞ்சமாக குறைந்தது..

“ஏம்மா எழுந்திருச்சுட்ட..? படு..”

“இல்லை.. எனக்கு உடம்பெல்லாம் கசகசன்னு வியர்த்துக் கொட்டுது.. குளிச்சாத் தேவலை..”

சன்னமான குரலில் சொன்ன சுமித்ராவின் உடல் வியர்க்க ஆரம்பித்திருந்தது.. இந்திராதேவி.. குளியலறையைக் காட்டினாள்..

“ஹீட்டரைப் போட்டுக்கம்மா.. சுடுதண்ணீரில் குளி..”

அவளின் பரிவான அக்கறையில் சுமித்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. வேற்று மனுஷியைப் போல இல்லாமல்.. தாயைப் போல சாலப் பரிந்த அவளது குணத்தில் சுமித்ராவின் மனதிலிருந்த தனிமையுணர்வு லேசாக மறைந்தது..

குளியலறைக்குள் புகுந்தாள்.. சுடுநீரில் குளித்து முடித்தபின்பு உடலுக்கு புத்துணர்வு வந்ததைப் போல இருந்தாலும்.. அந்தச் சிறிய அளவிலான நடமாட்டத்தைத் தாங்க முடியாமல் அவள் உடல் தள்ளாடியது..

அப்போதுதான் அறைக்குள் நுழைந்த தனஞ்ஜெயன் அவளைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிக் கொண்டான்.. அவள் மீதிருந்து வந்த சோப்பின் நறுமணம் அவனை எங்கோ அழைத்துச் சென்றது.. அவனது ஸ்பரிசத்தை உணர்ந்ததினால் உண்டான அதிர்வு அவளை எங்கோ அழைத்துச் சென்றது..

அதற்கு முன்னால் அவள் மயங்கி விழுந்து அவன் தாங்கிப் பிடித்தபோது அவள் தன்னுணர்வில் இல்லை.. இப்போது அப்படியில்லை.. அவள் சுயநினைவுடன் இருந்தாள்.. அவனது தொடு உணர்வை உணர்ந்தவளாக இருந்தாள்.. முதன் முதலாக அவனது ஸ்பரிசத்தை அறிகிறவளாக இருந்தாள்..

சுமித்ராவின் மனதில் பூப் பூத்தது.. அவள் கழுத்தில் கிடந்த தாலி.. அவனுடனான அவளது சொந்தம் எதுவென்பதை சொல்லிக் கொண்டிருந்தது.. அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவனின் கைமீது படிந்து புரண்ட தாலிச்சரட்டில் அவனும் அவள் முகம் பார்த்தான்.. இருவர் பார்வைகளும் பின்னிப் பிணைந்தன.. சுமித்ரா காய்ச்சல் தந்த அயர்வோடு கண்களை மூடிக் கொண்டாள்.. அவள் மனதில் ஓரமாக ஒரு குரல் ஒலித்தது..

‘சுமித்ரா.. உனக்கு கல்யாணமாகிருச்சுடி.. இவன் உன் கணவன்.. உன்னுடையவன்..’

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link