Chapter 14
சுமித்ராவுக்கு நடக்க வேண்டும் போல இருந்தது.. அவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.. மாடி ஹாலை ஒட்டியிருந்த நீண்ட காரிடார் போன்ற பகுதியில் நடந்தாள்.. இரு பக்கமும் இருந்த அறைகளைப் பார்த்தவளுக்கு வழிதப்பி ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் வந்து விட்டதைப் போல இருந்தது.. அந்த வீட்டின் தோட்டத்தின் அளவு கூட மணிவாசகத்தின் வீடு இருக்காது என்ற உண்மையில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அதற்கே அவள் எங்கள் வீட்டைப் போல உண்டா என்று தோழிகளின் மத்தியில் பெருமையாக பேசுவாள்..
இருபக்கமும் இருந்த அறைகளில் எந்த அறையில் தனஞ்ஜெயன் இருப்பான் என்று அறியும் ஆர்வம் அவளுக்குள் எழுந்தது.. யாரிடம் அதைக் கேட்பது..? கட்டிய கணவன் எந்த அறையில் இருக்கிறான் என்பதைக் கூட அறியாமல் இருக்க நேர்ந்த துர்பாக்கியத்தில் அவள் மனம் கனத்தது..
அந்த ஒரு வாரமாக தனஞ்ஜெயன் அவள் அருகில் தான் இருந்தான்.. அவள் கண் விழித்து அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்த அந்த தினத்திலிருந்து இரவு படுக்க மட்டும் அவனது அறைக்குப் போய் விடுவான்.. போவதற்கு முன் லேசாக தயங்கி நின்று அவளைப் பார்ப்பான்.. மாத்திரைகளை எடுத்துப் பார்ப்பதைப் போல தேங்கி நிற்பான்.. அப்படியே அவன் நின்று விட மாட்டானா என்று அவள் மனம் ஏங்கும்.. அவள் முகத்தை முகத்தைப் பார்க்கிறவனின் மனதில் என்ன ஓடுகிறது என்று அறியத்துடிப்பாள்
சுமித்ரா.. அவன் ஒரு நீண்ட பெரு மூச்சோடும்.. சின்னத் தலையசைவோடும்.. போய் விடுவான்.. சுமித்ராவின் விழியோரம் நீர் வழியும்..
‘ஏன் இந்தக் காய்ச்சல் வந்தது..?’
அவள் காய்ச்சலை நொந்து கொண்டாள்.. அதுதானே அவனையும் அவளையும் தனித்தனி அறைகளில் பிரிந்திருக்க வைத்திருக்கிறது..!
பால்கனி பரந்த விளையாட்டு மைதானம் போல பெரிதாக இருந்தது… தோட்டத்துச் செடிகளின் குளுமையான காற்றும்.. அதன் கைப்பிடி வளைவுகளில் படர்ந்து பூத்திருந்து முல்லைக் கொடிகளில் அரும்பியிருந்த முல்லை அரும்புகளின் வாசனையும் அவள் மனதைக் கவர்ந்து இழுத்தன..
சுமித்ராவுக்கு அந்தச் சூழலை பிடித்துப் போய் விட்டது..
அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து காலை விந்தித் தள்ளியவளுக்கு லேசான சந்தோசம் வந்தது..
‘இங்கே உட்கார்ந்து பாட்டுக் கேட்கலாம்.. கதை படிக்கலாம்..’
இன்னும் என்னவெல்லாம் அந்த பால்கனியில் அமர்ந்தபடி செய்ய முடியுமென்று அவள் மனது பட்டியல் போட்டது.. முல்லைக் கொடியின் மீது படிந்த பார்வை..
‘பூக்கட்டலாமே..’ என்று புதிதாக ஒரு வேலையை கண்டுபிடித்தது..
“அம்மா..”
சுமித்ராவை அழைத்தபடி அங்கே வந்து நின்றாள் தேவகி..
“ஹாய் தேவகி.. குட்மார்னிங்..” உற்சாகமாக சொன்னாள் சுமித்ரா..
படித்த சின்ன எஜமானியின் குட்மார்னிங்கில் மகிழ்ந்து போய் விட்டாள் தேவகி… பதிலுக்கு குட்மார்னிங்கை உதிர்க்காமல் சந்தோச சிரிப்பை மட்டும் உதிர்த்தாள்..
“குட்மார்னிங் சொன்னா பதிலுக்கு குட்மார்னிங் சொல்லனும்..”
“ஹி.. ஹி..”
“இதுதான் உங்க ஊரில குட்மார்னிங்கா..?”
“உங்களுக்கும் இதுதாம்மா ஊரு..”
“ஓ.. நீ அப்படி வர்றியா..”
சுமித்ரா மாடிப் பால்கனியின் கைப்பிடி வளைவில் இருந்த முல்லை கொடியை பார்த்தபடி சொன்னாள்.. அதில் தேவகி திகைத்துப் போய் விட்டாள்.. அவள் ஒன்றும் அப்படி வரவில்லையே.. அந்தப் பக்கம் வருவதற்கும் எந்தவிதமான மார்க்கமும் இல்லையே.. உயரமான பால்கனி.. எட்டமுடியாத உயரத்துடனும்.. அமைப்புடனும் இருந்தது.. ஏணி வைத்து ஏறினாலொழிய அந்தப் பக்கமாக யாரும் குழாயைப் பிடித்துக்கூட ஏறிவந்து விட முடியாது..
“அப்படி வர முடியாதேம்மா.. நான் இப்படித்தான் வந்தேன்..”
தேவகி காட்டிய திசையில் மாடிப் படிக்கட்டுகள் இருக்கவும் சுமித்ரா பல்வரிசை தெரிய அழகாக சிரித்தாள்.. தேவகியின் அப்பாவித்தனம் அவளைக் கவர்ந்தது..
“எதுக்கு என்னைக் கூப்பிட்ட தேவகி..?” என்று அன்புடன் கேட்டாள்..
அவளின் அந்த அன்பில் தேவகிக்கு சின்ன எஜமானியை மிகவும் பிடித்துப் போய் விட்டது..
“உங்களைப் பார்க்க.. உங்க ஊரில இருந்து உங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்கம்மா.. ஐயாவும்.. பெரியம்மாவும் உங்களாலே கீழே இறங்கி வர முடியுமான்னு கேட்டுட்டு வரச் சொன்னாங்க..” தேவகி சொன்னதும்..
“என்னது..?” என்று அவசரமாக எழுந்து கொண்டாள் சுமித்ரா..
“மெல்லம்மா.. காய்ச்சல் வந்த உடம்பு.. என் தோளை வேணும்னா பிடிச்சுக்கங்க..” தேவகி பதறினாள்..
“உங்க ஐயாதான் படுத்தறாருன்னு நீயும் சேர்ந்துக்கிட்டு என்னைக் காய்ச்சல்காரின்னு பட்டம் கட்டி மூலையில உட்கார வைச்சிருவ போல இருக்கே.. காய்ச்சலெல்லாம் ரெண்டே நாளில ஓடிப் போயிருச்சு.. இப்ப ஓட்டப் பந்தயம் ஓடறதுன்னாக் கூட நான் ரெடி.. நீ ரெடியா..?”
“எதுக்கும்மா..?”
“ஓட்டப் பந்தயத்துக்கு..”
“ஹி..ஹி…”
“வா.. போகலாம்…”
சுமித்ரா முன்னால் போக.. தேவகி பின் தொடர்ந்தாள்.. திரும்பிப் பார்த்த சுமித்ரா புருவங்களை உயர்த்தினாள்.. தேவகி திகைத்தாள்..
“அம்மா..?”
“இப்ப எதுக்காக மகாராணிக்குப் பின்னால வர்ற சேடிப் பொண்ணு போல என் பின்னால பதுங்கிப் பதுங்கி வர்ற..?”
“அம்மா..?”
“கூட.. வா..”
தேவகியின் முகம் ஜொலித்தது… அவளுடன் இணைந்து பேசியபடி படிகளில் இறங்கின சுமித்ராவுக்கு.. தன் பெயரில் இருந்த ஓட்டு வீட்டை எழுதிக் கொடுத்து விட அவள் சித்தமாகி விட்டாள்..
‘ஜமின்தாரோட பொண்டாட்டிங்கிற கர்வமில்லாம எப்படி வீட்டு மனுஷி போல என்னை நினைச்சு பேசிப் பழகுது இந்தம்மா..’
சுமித்ரா மாடிப் படிகளை விட்டு இறங்கி.. ஹாலில் கால் பதித்த போது.. பெரிய ஹாலில் போடப் பட்டிருந்த சோபாக்களில் உட்கார்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்..
“எப்படி இருக்கிற சுமித்ரா..?”
அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று கேட்டவனைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள் சுமித்ரா… அவளுக்கு பேச நா வரவில்லை.. நீண்ட காலமாக பார்க்காமல் இருந்து பார்த்ததினால் ஏற்படும் பல்வேறு உணர்ச்சிக் கலவைகள் அவள் முகத்தில் வந்து
போவதை இறுக்கமான முகத்துடன் கவனித்தபடி கால்மேல் கால் போட்டு தோரணையாக உட்கார்ந்திருந்தான் தனஞ்ஜெயன்..
அவனைக் கூடக் கவனிக்காமல் வந்திருந்த விருந்தாளியின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்த மனைவியின் செய்கை அவன் இதயத்தைப் பிளந்தது..
சுமித்ரா காய்ச்சலில் இருந்து மீண்டு எழுந்த அந்த மூன்றாவது நாளிலிருந்து.. அன்று காலைவரை.. தனஞ்ஜெயனிடம் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் எல்லாம் பொய்யா..? அவை கானல் நீரா..? வந்திருப்பவனைக் கண்டதும் அவையெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனவா..?
அந்த நான்கு தினங்களாக அவள் பார்த்த பார்வைகளும்.. பேசிய பேச்சுக்களும்.. அப்படி சூரியனைக் கண்ட பனித்துளிகளைப் போல மறைந்து போவதில் அவன் மனம் துயரம் கொண்டது..
அப்படிக் கணவனின் நினைவை மறக்கடிக்கும் அளவிற்கு வந்திருப்பவனின் வருகைக்கு சக்தி இருக்குமானால்..
‘யார்.. இவன்..?’
தனஞ்ஜெயனின் புருவச் சுளிப்பில் இந்திராதேவியின் மனம் நைந்தது.. அவளால் மகனின் மனப் போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.. அதனால்.. வந்திருப்பவனைப் பார்த்தபடி மலைத்து நின்றுவிட்ட சுமித்ராவை அவள் அழைத்தாள்..
“சுமித்ரா..!”
அந்த அழைப்பில் மலைப்பிலிருந்து மீண்டுவிட்ட சுமித்ரா..
“அத்தை..?” என்று இந்திராதேவியின் முகம் பார்த்தாள்..
“இப்படி உட்காரும்மா.. காய்ச்சல் வந்த பொண்ணு.. இன்னைக்குத்தான் மாடியை விட்டு கீழே இறங்கி வந்திருக்கிற.. நிற்கக் கூடாது..”
இந்திராதேவியின் கணிவான உத்தரவில் தன்னிச்சையாக தனஞ்ஜெயன் அமர்ந்திருந்த நீண்ட சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் சுமித்ரா.. அதில் தனஞ்ஜெயனின் புருவச் சுளிப்பு மறைந்து போனதில் இந்திராதேவியின் மனதில் நிம்மதி உண்டானது.. அவள் எழுந்து நின்றிருந்தவனைப் பார்த்து..
“நீயும் உட்காருப்பா..” என்று உபசரித்தாள்…
சுமித்ராவின் முகத்தையே ஆராய்வதைப் போல பார்த்தபடி அவன் உட்கார்ந்தான்.. மலரை மொய்க்கும் வண்டாக அவன் பார்வை சுமித்ராவின் முகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.. அதில் தனஞ்ஜெயனின் முகம் கடுத்தது..
“தம்பி யாருன்னு தெரியலை சுமித்ரா.. நம்ம தனஞ்ஜெயன் தோட்டத்தில் உலாத்திக்கிட்டு இருந்திருக்கான்.. இந்தத் தம்பி காம்பவுண்டுக்கு வெளியே நின்னிருக்கு.. தோட்டக்கார முனுசாமி யாருன்னு கேட்டதுக்கு.. உன்னோட உறவுக்காரன்னு சொல்லுச்சாம்.. முனுசாமி தனாகிட்ட வந்து சொல்லியிருக்கான்.. உள்ளே வரச்சொல்லி தனா விசாரிச்சப்பவும் உறவுக்காரன்னு மட்டுமே தம்பி சொல்லியிருக்கு.. யாரு.. எவருன்னு சொல்லலை.. அதான்.. காபி சாப்பிடச் சொல்லி உட்கார வைச்சுட்டு உன்னை வரச் சொன்னோம்.. தம்பி யாரும்மா..?”
இந்தராதேவியின் பேச்சில் வந்திருந்தவன் முகம் சுளித்தான்..
“இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க..? சுமித்ராகிட்ட நான் வந்ததைப் பத்திச் சொல்கிறீங்களா..? இல்லை.. நான் யார் எனக்கும் சுமித்ராவுக்கும் என்ன உறவுங்கிறதைப்
பத்தி விசாரணை கமிசன் நடத்தறிங்களா..? உங்க பேச்சே சரியில்லையே…”
வந்திருந்தவனின் பேச்சு சரியில்லாமல் இருந்ததில் சுமித்ராவுக்கு கோபம் வந்தது.. அவள் பல்லைக் கடித்தாள்..
‘யார் வீட்டுக்கு வந்து இவன் என்ன பேச்சுப் பேசுகிறான்.. அதுசரி.. யாரு இவன்..? என் அத்தையைக் கட்டின சுந்தர புருசனான திருக்குமரனோட ஒன்று விட்ட ரெண்டும் கெட்டான் தம்பியில்ல.. வேற எப்படிப் பேசுவான்..’ எரிச்சல் பட்டாள்..
அதே எரிச்சல் தனஞ்ஜெயனுக்கும் வந்திருக்க வேண்டும்.. சும்மாவே அவன் இந்திராதேவிக்கு
ஒன்று என்றால் பதறி விடுவான்.. உன் வீட்டுக்கு மருமகளாக அனுப்புவதற்காகத்தான் நான் என் மகளை பெற்று வளர்த்திருக்கிறேனா என்று மணிவாசகம் இந்திராதேவியைப் பார்த்துக் கேட்ட வார்த்தைகளுக்காக அவர் மகளையே மணம் முடித்து இந்திராதேவியின் மருமகளாக ஆக்கிக் காட்டியவன் அவன்..
அவன் முன்னிலையில் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி அப்படிப் பேசினால் எப்படிப் பொறுத்துக் கொள்வான்..? என்னதான் வந்திருப்பவன் புது மனைவியின் உறவினன் என்று இருந்தாலும்.. அவன் தனஞ்ஜெயனின் அம்மாவிடம் முகம் சுளித்துப் பேசக் கூடாதே…
அந்த தைரியத்தை யார் அவனுக்குக் கொடுத்தது..?
தனஞ்ஜெயன் சுமித்ராவை முறைத்தான்.. முதன் முதலாக உணர்ந்த அவனது முறைப்பில் அவள் தடுமாறினாள்..
‘நான் என்ன செய்தேன்..?’ அவள் கண்கள் கேள்வி கேட்டன..
“உங்க பேச்சுத்தான் சரியில்லை.. உங்க சொந்தக் காரங்களைப் பார்க்க வந்திருக்கீங்க.. வீட்டில இருக்கிற பெரியவங்ககிட்ட எப்படிப் பேசறதுன்னு தெரியாதா..?”
கண்டிப்புடன் பேசிய தனஞ்ஜெயனை கண்டு கொள்ளவே இல்லை அந்த நித்தியானந்தம்..
“எப்படிங்க பேசிட்டேன்..? என் கண் முன்னாலேயே சுமித்ராவை இத்தனை கேள்வி கேட்கிறாங்கன்னா..
நான் போன பின்னாலே எத்தனை கேள்வி கேட்க மாட்டாங்க..?”
“கேட்க வேண்டிய தேவை இருந்தா கேட்கத்தான் செய்வாங்க… அவங்க சுமித்ராவோட மாமியார்… அவங்க கேட்கிற கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லித்தான் ஆகனும்… அது எங்க வீட்டுப் பிரச்னை… உங்களுக்கு என்ன வந்தது…? மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் நீங்க எப்படித் தலையிடலாம்..?”
“சுமித்ரா எங்க வீட்டுப் பெண்..”
“என்னது..?”
தனஞ்ஜெயன் வெகுண்டு விட்டதில் சுமித்ரா பயந்து விட்டாள்..
“தனா.. என்னப்பா இது..? தம்பிக்கு நம்ம வீட்டு நிலவரம் தெரியாதில்ல.. மனசில பட்டதை பேசிருச்சு.. நீ அதைப் பெரிசா எடுத்துக்கலாமா தம்பி..? நம்ம சுமியின் மனசை நினைச்சுப் பார்க்க வேணாமா..?” இந்திராதேவி மகனை அமைதிப்படுத்த முயன்றாள்..
“அவதான் நம்மைப் பத்தி.. நினைச்சுப் பார்த்து அதன்படி நடந்துக்கப் பழகிக்கனும்.. முதலில் இருந்ததைப் போல இருக்கக்கூடாது..”
தனஞ்ஜெயனின் கோபத்தில் முதலில் அவள் எப்படி இருந்தாள் என்ற கோபம் சுமித்ராவுக்குள் மேலோங்கியது..
எப்படி அவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லலாம்..?
சுமித்ராவின் முகமாறுதலைக் கவனிக்காமல் கண்டிப்புடன் தன் பேச்சைத் தொடர்ந்தான் தனஞ்ஜெயன்..
“அப்ப அவ லட்சுமிபுரத்தில பிறந்த பொண்ணு.. மணிவாசகத்தின் மக..”
‘ஓ.. இதைத்தான் இவன் இந்த லட்சணத்தில் சொல்லி வைத்தானா..?’ சுமித்ரா மனம் தெளிந்தாள்..
“இப்ப… அவ அன்னவாசல் ஜமீன்தாரரான தனஞ்ஜெயனோட பெண்டாட்டி.. ஜமீன்தாரிணி இந்திரா தேவியின் மருமகள்.. அன்னவாசல்தான் இனி அவளோட ஊர்.. இதை நினைவில வைத்துக்கப் பழகிக்கனும்…”
‘என்ன தேவைக்கு..?’ சுமித்ராவுக்கு கடுப்பாக இருந்தது..
திருமணமாகி வந்தவளிடம் கணவனாகப் பட்டவன் பழகிப் பார்க்க நினைப்பானா.. அதை விட்டுவிட்டு.. அவளிடம் நினைப்பை வைத்துக்கப் பழகிப் பார்க்கச் சொல்கிறான்..
‘கொடுமைடா சாமி..’
எப்போதுதான் இவன் அவளிடம் பழகிப் பார்க்க நினைக்கப் போகிறான் என்ற ஆயாசம் சுமித்ராவுக்கு ஏற்பட்டது..
‘இதில இது வேற..’
அவள் எதிரே சட்டமாக அமர்ந்திருந்த நித்தியானந்தத்தை முறைத்துப் பார்த்தாள்.. அவள் பார்வையில் அவன் நெளிந்தான்..
‘இவனை யாரு இங்கே வெற்றிலை பாக்கு வைத்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தது..?’
அந்த நித்தியானந்தம் அவளுடைய பதினாறு வயதுப் பிராயத்தில் ஊர் திருவிழாவுக்கு வருகின்ற சமயங்களில் அவளை ‘சைட்’ அடிக்க முயன்ற அற்புதக் காட்சிகள் அவள் மனக்கண்ணில் வந்து நின்றன..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.