Chapter 15
“சைட்டுன்னா சைட்.. செம சைட்டுடி.. எங்க வீட்டுக்கு கெஸ்டா வந்துட்டு.. என்னையே சைட் அடிப்பாண்டி அவன்..”
“பதினாறு வயசு மயிலுன்னு நினைச்சிருப்பான்..”
“என்ன கழுதையோ.. எனக்கு எட்டிக்காயா இருக்கும்..”
“ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரைன்னு நீயும் பதிலுக்கு சைட் அடிச்சிருப்ப..”
“ச்சீ.. அப்ப ரெண்டும் கெட்டான் வயசுடி.. நம்மையும் ஒருத்தன் உத்து உத்துப் பார்க்கிறானேன்னு
ஒரு மண்டைக் கனம் வந்ததென்னவோ உண்மைதான்.. மத்தபடி இப்ப நினைச்சுப் பார்க்கிறப்ப செம காமெடியா இருந்துச்சில்லன்னு சிரிப்புத்தான் வருது..”
சுமித்ரா தோழிகளிடம் சொல்லியதுதான் உண்மை.. சிறு வயதில் வெகுவாக மனதை தாக்கும் எத்தனையோ நிகழ்வுகளை பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும் போது வெகு அபத்தமாக இருக்கும்… நாமா இதுபோன்ற சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தோம் என்று மனம் ஆச்சரியப்படும்..
அது போன்றதொரு ஆச்சரியத்தை சுமித்ராவுக்கு கொடுத்தவன்தான் நித்தியானந்தன்.. அவன் ஆறு ஆண்டு காலம் கழித்து இப்போது என்ன அலுவலுக்காக அவளைப் பார்க்க வேலை மெனக்கெட்டு அன்னவாசலுக்கு வந்திருக்கிறான்..? அவன் போக வேண்டிய இடம் லட்சுமிபுரமல்லவா..?
“என்ன விசயமா வந்தீங்க மாமா..?”
சுமித்ரா கேட்டு விட்டாள்.. நித்தியானந்தனின் முகத்தில் லேசான மாறுதல் வந்தது..
“ஏன் சுமித்ரா.. ஏதாவது விசயமிருந்தாத்தான் உன்னைப் பார்க்க நான் வரனுமா..?” அவன் குரல் கரகரத்தது..
தனஞ்ஜெயனின் முகத்தில் படிந்த கோபத்தின் நிழலில் சுமித்ரா பயந்தாள்.. எதற்காக இந்த நித்தியானந்தன் சீன் கிரியேட் பண்ணுகிறான் என்று மனம் நொந்தாள்..
“நிச்சயமா மாமா.. ஏதாவது விசயமிருந்தாத்தான் என்னைப் பார்க்க நீங்க வரனும்.. அதோட.. என்னையேன் நீங்க பார்க்க வரனும்..? நீங்க எங்க அத்தை புருசனோட ஒன்னு விட்ட தம்பி.. எங்க மாமாவைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்து போவீங்க.. கொஞ்சநாளா அந்தப் போக்குவரத்தும் இருந்ததில்லை.. இப்பத் திடிர்ன்னு வந்து நிற்கிறவங்க.. உங்க அண்ணனைப் பார்க்க எங்க அப்பா வீட்டுக்குத்தானே போகனும்..? என் வீட்டுக்கு ஏன் வரனும்..?”
சுமித்ராவின் கோர்வையான பேச்சில் இந்திரா தேவியின் கேள்விக்கானஅத்தனை விடைகளையும் சுமித்ரா தந்துவிட.. அவள் மனதிற்குள் மருமகளை மெச்சிப் போனாள்..
ஆனால் அப்போதும் தனஞ்ஜெயனின் முகத்திலிருந்த கோபம் வடிந்து தொலைக்கவில்லை.. அது சுமித்ராவின் மனதிற்குப் பெருத்த இம்சையைத் தந்து வைத்தது..
நித்யானந்தனின் முகத்தில் தெரிந்த அடிபட்ட உணர்வில் சுமித்ராவின் மனதில் எந்தவிதமான வருத்தமும் எழவில்லை..
‘இவனெல்லாம் என்ன மனிதன்…?’ என்ற கசப்புணர்வுதான் அவளுக்குள் எழுந்தது..
அவளின் புகுந்த வீடு இது என்று தெரிந்து கொண்டு வந்திருப்பவனுக்கு… அவளின் திருமணம் எந்த நிர்பந்தத்தில் நடந்தது என்பது மட்டும் தெரியாமல் இருந்திருக்குமா..? அப்படிப்பட்ட சூழ்நிலையில் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்திருப்பளைத் தேடிப் போய் பார்க்கப் போகிறோமே.. இதனால் அவளுக்கு
என்ன சிரமங்கள் உண்டாகுமோ என்று நினைத்துப் பார்த்திருந்தால் அவன் இப்படி வந்திருப்பானா..?
“நீயா இப்படிப் பேசற சுமித்ரா…”
வருத்தம் தோய்ந்த நித்தியானந்தனின் குரலில் அவளுக்கு கையில் கிடைத்ததை எடுத்து அவன் தலையில் போட வேண்டுமென்ற ஆதங்கம் உண்டானது..
‘இவன் இம்சையைக் கூட்டுகிறானேயொழிய.. அதைக் குறைக்கனும்னு நினைத்தாவது பார்க்கிறானா..?’
சுமித்ராவின் கண்களில் நீர் ததும்பவா என்று கேட்டது.. இமை சிமிட்டி அதை அடக்கிக் கொண்டாள்..
“நான்தான் பேசறேன் மாமா… பின்னே என் குளோனிங்கா வந்து பேசுது..? நல்லா காமெடி பண்றிங்க போங்க..”
“கடைசியில என்னைக் காமெடியனா ஆக்கிட்டேல்ல..”
நித்யானந்தன் விடாமல் சுமித்ராவுக்கு துயரம் தருவதிலேயே குறியாக இருந்தான்.. இது என்னடா வம்பு என்று சுமித்ரா இந்திராதேவியை இறைஞ்சலுடன் பார்த்தாள்..
தனஞ்ஜெயனிடம் அவள் உதவி கேட்டு விட முடியாது.. நித்தியானந்தம் பண்ணிக் கொண்டிருந்த அலும்பில் அவன் கண்களில் சிகப்பு ஏறிக் கொண்டே இருந்தது..
‘இந்த அரைவேக்காடு இவனைக் காமெடியனா ஆக்கிட்டேன்னு சொல்லுதே.. காமெடியனை காமெடியனா ஆக்காம ஹீரோவாகவா ஆக்க முடியும்..?’
சுமித்ராவுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது.. நித்யானந்தம் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அங்கே வந்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.. திருக்குமரன்கூட அவனை அனுப்பி வைத்திருக்கலாம்.. அது போன்ற கீழ்த்தரமான செய்கைகளை அவன் செய்யக் கூடியவன்தான்.. அடுத்த வீட்டுப் பெண்களின் வீட்டு விவகாரங்களை வேவு பார்ப்பதில் திருக்குமரனுக்கு நிகர் திருக்குமரனேதான்.. அவன் குடும்பத்தை மட்டும் அவன் காபந்து பண்ணிக் கொள்வான்..
நித்தியானந்தம் சுமித்ராவை ஒரு மாதிரிப் பார்க்க ஆரம்பித்ததை உணர்ந்து விட்ட மணிவாசகம்.. இனி திருவிழாக்களுக்கு அவன் வரக்கூடாது என்று சொல்லி விட்டார்..
இத்தனைக்கும் மணிவாசகத்தின் வீட்டில் திருவிழா என்றோ.. மற்ற குடும்ப விஷேசங்கள் என்றோ உறவினர் கூட்டம் வந்தால் வீட்டின் தரைத் தளத்தில்தான்
அவர்கள் தங்குவார்கள்.. மாடிப் பக்கம் போக மாட்டார்கள்.. அதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது.. அது வீட்டுப் பெண்கள் இருக்கும் இடம்.. விருந்தாளிகளின் இருப்பிடம் கீழ்பகுதிதான்..
அப்படி அந்த வீட்டிற்கு வந்து போன நித்தியானந்தனிடம் சுமித்ரா ஓர் வார்த்தை கூட நின்று பேசியதில்லை.. அரை வினாடிக்கு மேல் அவன் பார்வையைச் சந்தித்ததில்லை..
காபி.. தண்ணீர்.. சாப்பாட்டு பந்தியில் பரிமாறுவது என்று உறவினரை உபசரிக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை வீட்டின் வேலையாள்கள் மூலமாகத்தான் திலகவதி செய்வாள்.. மல்லிகா திலகவதியுடன் இணைந்து கொள்வாள்.. மற்றபடி சுமித்ராவோ.. மல்லிகாவின் இரு பெண்களோ.. அந்த உபசரிப்பில் பங்கெடுத்து விட முடியாது.. கோவிலுக்குப் போய்வர.. சாப்பிட.. என்று கீழே இறங்கி வருவதோடு சரி.. மற்ற நேரங்களில் எல்லாம் அவர்கள் மாடியில்தான் இருக்க வேண்டும்.. கீழ்தளத்தில் காலடி வைத்துவிட முடியாது..
அப்படி வரும் தருணங்களுக்காக கொக்கு போல காத்திருந்து.. சுமித்ரா வந்து போகும் சமயங்களில் கிடைக்கும் அரைவினாடியைக் கூடப் பயன்படுத்திக் கொண்டு அவளை உற்று உற்றுப் பார்த்து வைத்த நித்தியானந்தனின் பார்வையை மணிவாசகம் ஓர்நாள் பார்த்து விட்டார்.. அன்றே திருக்குமரனை அழைத்துக் கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டார்..
“இங்கே பாருடா.. உனக்குச் சொந்தக்காரன்ங் கிறதுக்காக.. வீட்டுக்குள்ளே விட்டா.. இவன் மட்டு மரியாதையைக் காப்பாத்திக்க மாட்டான் போல இருக்கு.. இனிமே இவன் நம்ம வீட்டுக்கு திருவிழா கொண்டாட வரக் கூடாது.. சொல்லி அனுப்பி வைச்சிரு..”
இப்படிச் சொன்ன மணிவாசகத்திடம் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் நித்தியானந்தத்திடம் சொல்லுகிற விதமாக சொல்லி அவனை அனுப்பி வைத்துவிட்டு மல்லிகாவிடம் வந்து பொங்கினான் திருவாளர் திருக்குமரன்..
“வீட்டோட மாப்பிள்ளைன்னா உன் அண்ணனுக்கு இளக்காரமாப் போச்சா..? இதுவே என் வீடா இருந்திருந்தா என் சின்னம்மா மகனை இனிமே என் வீட்டுப் பக்கம் வராதேன்னு நான் சொல்லி அனுப்ப வேண்டிய நிலை வந்திருக்குமா..?”
அதைக் கேட்டுக் கொண்ட அவனின் தர்ம பத்தினி உடனடியாக எழுந்து ஒரு டிரங்கு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டாள்..
“என்னடி..?” என்று திகைத்த அவளின் உத்தம புருசனிடம்..
“இந்த டிரங்கு பெட்டிதானேங்க உங்களோட சொத்து..? உங்க அப்பா உங்களுக்குன்னு இதை மட்டும் தான் விட்டுட்டுப் போயிருக்காரு..” என்று கேட்டாள்..
‘எந்த நேரத்தில எதைச் சொல்லிக் காட்டறா பாரு..’ எரிச்சல் பட்ட அந்த வல்லாள கண்டன்..
“அதை இப்ப என்னத்துக்குடி தூக்கற..?” என்று பல்லைக் கடித்தான்..
“வீட்டை விட்டு வெளியில போகத்தான்.. வேற எதுக்கு..? பிள்ளைகளை எழுப்புங்க.. நாம கிளம்பலாம்..” மல்லிகா.. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டாள்..
“எங்கேடி கிளம்பச் சொல்கிற..?” திருக்குமரனுக்கு திகில் பிடித்து விட்டது..
“தனி வீட்டுக்குத்தான்.. இந்த வீட்டில் இதுக்கு மேலேயும் இருக்கக் கூடாதுங்க.. கூழோ.. கஞ்சியோ.. கஞ்சி கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.. நீங்க உழைக்கிற உழைப்புக்கு கூழே அதிகம்.. அதைக் குடிச்சுக்கிட்டு.. குடிசையா இருந்தாலும் சந்தோசமா வாழலாம்.. குடிசையாவது கிடைக்குமில்ல.. இல்ல அதுவும் களத்து மேடுதானா..? எதுவோங்க.. நமக்கு கூழும், குடிசையும் முக்கியமில்லை.. நம்ம வீடு தேடி வாரவங்களுக்கு விருந்தாக்கிப் போடனும்.. அதுதான் முக்கியம்.. என்ன போகலாமா..?” மல்லிகா அவனை கதிகலங்க வைத்து விட்டாள்..
அதற்குப் பின்னாலும் அந்தப் பேச்சை எடுக்க திருக்குமரனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
அந்த நித்தியானந்தன்தான் வேலை மெனக்கெட்டு சுமித்ராவைப் பார்க்க என்று அன்னவாசலுக்கு அவளைத் தேடி வந்திருக்கிறான்..
‘என்ன துணிச்சல்…!’
அவனை கன்னம் கன்னமாக நாலு அப்பு அப்பினால் என்னவென்று சுமித்ராவுக்குத் தோன்றியது.. நித்யானந்தனின் பார்வையில் தெரிந்த கபடம் அவன் தானாக வரவில்லை என்பதைச் சொல்லியது..
திருக்குமரன்தான் அவனை அனுப்பி வைத்திருந்தான்..
“உனக்குப் பெண் கேட்டேன்டா தம்பி.. சுமித்ராவை என் சின்னம்மா மகனுக்கு கட்டிக் கொடுங்க மாமான்னு கேட்டேன்.. என் மாமனுக்கு மனசு இரங்கலை.. உனக்குப் பெண் கொடுத்ததே பெரிசுங்கிறதைப் போல ஒரு பார்வைய பாத்து வைச்சாரு.. உனக்குக் கிடைக்காத அந்த சுமித்ரா உருப்படியாய் வாழக்கூடாதுன்னுதான் அந்த பரமசிவம் மகனை மடக்கப் பார்த்தேன்.. அந்தக் களவாணிப்பய என்னடான்னா நான் பேசினத வீடியோவா எடுத்து அந்த அன்னவாசல் ஜமீன்தார்கிட்டக் கொடுத்துட்டான்.. என் மாமனுக்கு என்மேல இருந்த நம்பிக்கையும் பாசமும் போயிருச்சுடா தம்பி.. என் பெண்டாட்டி, பிள்ளைகள் கூட என்கூடப் பேசமாட்டேங்கிறாங்க.. இதைக்கூட தாங்கிக் கலாம் போல இருக்குடா.. ஆனா.. உனக்குக் கிடைக்காத அந்த சுமித்ராவுக்கு ஜமீன்
வாழ்க்கை கிடைச்சிருக்கு பாரு.. அதைத்தாண்டா தம்பி என்னால தாங்க முடியலை..”
நித்யானந்தனின் ஊருக்குத் தேடிப் போய் அவனைத் தூண்டி விட்டான் திருக்குமரன்.. எட்டாக்கனிக்கு ஆசைப் பட்ட நித்யானந்தனின் ரத்தமும் கொதித்தது..
“என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க அண்ணே.. நீங்ககோடு போட்டா.. அதில நான் ரோட்டைப் போட்டுக் காமிக்கறேன்..” என்று வீராதி வீர விக்கிரமாதித்த மகாராஜாவைப் போல சபதம் செய்தான்..
அதன்படி தீட்டிய திட்டத்தை செயல்படுத்தத்தான்.. விடிந்தவுடன் முதல் பஸ்ஸை பிடித்து அன்னவாசலுக்கு வந்து சேர்ந்திருந்தான் நித்தியானந்தன்..
சுமித்ராவுக்குத் தலை வேதனையாக இருந்தது.. நித்தியானந்தன் யார்..? அவள் யார்..? வேலை மெனக் கெட்டு எதற்காக அவன் அவள் வீட்டுக்குள்ளே வந்து வேவு பார்க்கிறான்..?
‘இவனையெல்லாம் பொலி போடனும்..’
அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.. ஓரக் கண்ணால் தனஞ்ஜெயனின் முகத்தைப் பார்த்தாள்.. அதே சமயத்தில் அவனும் அவளைப் பார்த்து வைத்ததில் அவள் மனதில் பூப்பூத்தது.. நாணத்துடன் நித்தியானந்தனை மறந்து அவன் பார்வையை ஆவலுடன் சந்தித்த சுமித்ரா திகைத்தாள்..
தனஞ்ஜெயன் சுமித்ராவைப் பார்த்த பார்வையில் கடுகளவும் காதல் இல்லை.. எவளோ ஒருத்தியைப் பார்ப்பதைப் போல ‘யார் நீ..’ என்ற பாவனையில்
அவன் பார்த்து வைத்ததில் சுமித்ராவிற்கு அழுகையே வந்து விட்டது..
‘இந்த கேடுகெட்டவன் வீடு தேடி வந்ததிற்கு நானா காரணம்..?’
அவள் மனம் வெம்பியது.. இப்படி ஒரு விருந்தாளி அந்த அதிகாலையில் அவள் வீட்டிற்கு வந்து நிற்க வேண்டும் என்று அவள் என்ன வரமா கேட்டாள்..?
“என் நினைவே உனக்கு வரவில்லையா சுமித்ரா..?” படு உருக்கமாக நித்தியானந்தன் கேட்ட விதத்தில் சுமித்ரா கடுப்பாகிப் போனாள்..
அவளே கட்டிய கணவனின் மனதில் அவள் மீது காதல் இருக்கிறதா, இல்லையா என்ற தவிப்பில் இருக்கிறாள்.. இதில் அவன் வேறு அழையாத விருந்தாளியாக அங்கு வந்து உட்கார்ந்து கொண்டு இம்சை செய்கிறான்..
“நீங்க யாருன்னு கூட எனக்கு நினைவுக்கு வரலை மாமா.. சொந்தக்காரங்களை ஓரளவுக்குத்தான் நினைவில வைச்சுக்க முடியும்.. உங்களை வீட்டில் கூட அப்பா
சேர்க்க மாட்டாரே.. எப்பவோ ஒரு சிலதடவை உங்களை கூட்டம் கும்பலில் பார்த்திருக்கிறேன்.. அதை வைத்து நீங்க இன்னார்ன்னு நான் அடையாளம் வேணும்னா கண்டுக்கலாம்.. நினைவில் வைச்சுக்கிறதுன்னா எப்படி மாமா..?”
சுமித்ராவும் நன்றாகத்தான் கொடுத்துக் கட்டினாள்.. அந்த மானங்கெட்டவன் அசைந்து கொடுக்கவில்லை.. மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் துர் எண்ணம் கொண்டவன்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான்கள்.. என்னதான் செருப்பைக் கழட்டி அடித்தாலும் தட்டி விட்டுப் போய் விடுவார்கள்.. அவர்களுக்கும்
ஒரு குடும்பமிருக்கிறது… மற்றவர்களுக்கு அவர்கள் விளைவிக்கும் துன்பத்தை அவர்களின் குடும்பத்திற்கு மற்றவர்கள் விளைவித்தால் அவர்களுக்கு எப்படியிருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள்..
இது சாத்தான்கள் வாழும் பூமி..! இங்கே தேவதைகள் வாழப் போராட வேண்டும்..
சுமித்ரா தேவதை..! அவள் எப்படிப் போராடுவது என்று யோசிக்க ஆரம்பித்தபோது அவளுக்கு அந்த வேலையை வைக்காமல் இந்திராதேவியே இடையில் புகுந்தாள்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.