Chapter 20

0Shares

“அவ ரெடியாகிட்டாளாம்மா..?”

தனஞ்ஜெயன் கைக்கடிகாரத்தைக் கட்டியபடியே வினவினான்.. 

“அத்தை..” என்ற சப்தத்தில் அவன் பார்வை திரும்பியது..

மாடிப்படியில் ஒயிலாக இறங்கி வந்து கொண்டிருந்தாள் சுமித்ரா.. கெட்டி ஜரிகையிட்ட பட்டுப் புடவையும்.. வைர நகைகளுமாக.. ஜமீன் குடும்பத்தின் மருமகளாக இறங்கிக் கொண்டிருந்தவளின் சோபையில் மயங்கி விட்டான் தனஞ்ஜெயன்..

“நான் ரெடி..” இந்திராதேவியிடம் சொன்னாள் சுமித்ரா..

அதில் தனஞ்ஜெயன் பல்லைக் கடித்தான்..

‘இவ என்கூட விருந்துக்கு வரப் போகிறாளா.. இல்லை.. என் அம்மா கூடப் போகப் போகிறாளா..? கட்டின புருசன் செஞ்சு வைச்ச சிலையாட்டம் இவ முன்னால நிக்கிறான்.. என்கிட்டப் போசாம எங்கம்மா கிட்டப் பேசறா..’

அவனிடம் சுமித்ரா இயல்பாக பேசிய சில தினங்களை அவன் நினைத்துப் பார்த்தான்.. அந்த சுமித்ரா எங்கே போனாள்..?

“பூ வைச்சுக்கம்மா..”

இந்திராதேவியின் கண்பார்வையில் நெருக்கமாகத் தொடுத்திருந்த மல்லிகைச் சரத்தைக் கொண்டு வந்து நீட்டினாள் தேவகி..

அவள் பார்வை மாய, மந்திரம் தெரிந்த சின்ன எஜமானியை பயபக்தியுடன் பார்த்தது..

‘அம்மா நினைச்சா இந்த மல்லிகைப் பூவை ரோசாப் பூவா மாத்தினாலும் மாத்திருவாக..’

அவள் நினைத்து முடிப்பதற்குள் அவள் கையில் மல்லிகைப் பூ காணாமல் போய் அங்கே ரோஜாப்பூ வந்திருந்தது..

‘எப்புடி..?’ தேவகி அரண்டு விட்டாள்..

தலையில் செருகியிருந்த ரோஜாப் பூவை எடுத்து அவள் கையில் வைத்து விட்டு மல்லிகைச் சரத்தை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டிருந்த சுமித்ரா தேவகியின் அரண்ட பார்வையில் புருவங்களை உயர்த்தினாள்..

“ஒன்.. ஒன்.. ஒன்னுமில்லேம்மா..”

செய்தியை சுசிலாவிடம் ஒலிபரப்ப உள்ளே ஓடிவிட்டாள் தேவகி.. விசித்திரமாக அவளைப் பார்த்தபடி தோளைக் குலுக்கிய சுமித்ராவைத் தின்று விடுவதைப் போல பார்த்து வைத்தான் தனஞ்ஜெயன்..

“போகலாமா அத்தை..”

சுமித்ரா இந்திராதேவியிடம் கேட்டு வைத்து தனஞ்ஜெயனின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்..

“அதுசரி… விருந்து எனக்கா.. இல்லை உங்களுக்கா..?” கேலியாகக் கேட்டாள் இந்திராதேவி..

“நீங்களும் கூட வந்தா என்னவாம்..?” சுமித்ரா சிணுங்கினாள்..

மருமகளின் அன்பில் மனம் கரைந்தாலும் இந்திராதேவி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டாள்..

“நாட்டு வழக்கம்ன்னு ஒன்னு இருக்கும்மா.. தாய்க்குப் பின்னால தாரம்.. இனி தனஞ்ஜெயனுக்கு நீதான்.. எங்கே போனாலும் உன்கூடப் போய் நின்னாத்தான் அவனுக்கு மதிப்பு..”

“அதுசரி… அன்னவாசல் ஜமீன்தாரர் இந்த சுமித்ராவை பக்கத்தில் நிறுத்தித்தான் மதிப்பைத் தேடிக்கனுமாக்கும்.. அவருக்கான மதிப்பும், மரியாதையும் மலை போல குவிஞ்சிருக்கு அத்தை..”

சுமித்ராவின் பேச்சில் இந்திராதேவி பெருமையுடன் புன்னகை செய்தாள்.. அவள் விழிகள் பார்த்தாயா என் மருமகளை.. என்று தனஞ்ஜெயனிடம் கேட்டன.. அவனுக்கும் சுமித்ராவின் பேச்சில் சந்தோசமாகத்தான் இருந்தது.. அந்த சந்தோசத்தில்..

“மலை போல மரியாதையும், மதிப்பும் குமிஞ்சிருந்தாலும்.. அன்னவாசல் ஜமீன்தாரிணிகூடப் போய் நிற்கிறதைப் போல ஆகுமா..?” என்று சுமித்ராவைப் பார்த்தபடி சொல்லி வைத்தான்..

“தனா சொன்னதைக் கேட்டுக்கிட்டியா.. சுமித்ராங்கிறது தனி மனுஷியில்லம்மா.. தனஞ்ஜெயனின் பெண்டாட்டி..”

இந்திராதேவி சொல்லிய விதத்தில் கணவன், மனைவி இருவர் மனதிலும் உல்லாசம் புகுந்தது.. அவர்கள் மணியக்காரர் அளிக்கும் விருந்திற்குக் கிளம்பினார்கள்.. தனஞ்ஜெயன் கார் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.. அவன் பக்கத்தில் உட்கார்ந்த முதல் பயணத்தில் அவள் புல்லரித்துப் போனாள்..

குலதெய்வம் கோவிலுக்குப் பொங்கல் வைக்கப் போனபோது.. இந்திராதேவியுடன் காரின் பின்சீட்டில் அமர்ந்து விட்டாள் சுமித்ரா.. தனஞ்ஜெயனின் பக்கத்தில் உட்காரவில்லை.. முதன் முதலாக அவன் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததில் புது மணப்பெண்ணாக அவனருகில் அவள் உட்கார்ந்து வந்த தினம் அவன் நினைவுக்கு வந்தது..

சுமித்ராவின் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் கதவுகள் மூடப்பட்டிருந்த அந்த ஏஸி கார் முழுவதும் நிறைந்தது.. தனஞ்ஜெயனின் மனம் மயங்கியது.. காரில் இருந்த சிடியைப் போட்டான்..

“தட்டுத் தடுமாறி நெஞ்சம் -கை

தொட்டு விளையாடக் கொஞ்சும்..

சிட்டு மலர்மேனி துள்ளும்..”

காரில் ஒலித்த பாடலில் ஒளிந்திருந்த மன்மத போதை அவர்களின் மனங்களில் நிறைந்தது.. சுமித்ராவின் மனதையும்.. உடலையும் அந்தப் பாடல் ஏதோ செய்தது.. அவள் ஓரக்கண்ணால் தனஞ்ஜெயனைப் பார்த்தாள்.. அதே நொடியில் அவனும் அவளைப் பார்த்து வைத்ததில் உதட்டைக் கடித்துக் கொண்டு முகம் சிவந்தாள்..

“உன் மேல கொண்ட ஆசை..

உத்தமியே மெத்தையுண்டு

சத்தியமாச் சொல்லுறேண்டி..

தங்க ரத்தினமே..!

தாள முடியாது கண்ணே..!

பொன்னு ரத்தினமே..!”

பாடல் மாறியதில் அவள் தவிப்பு அதிகரித்தது.. முதல் பாடலை விட இந்தப் பாடல் கிளப்பி விட்ட மோகத் தீயின் ஜ்வாலை தாங்காமல் சுமித்ரா தவித்தாள்.. இப்போது தனஞ்ஜெயன் அவளை நேரடியாகவே பார்த்து வைத்தான்.. அவன் விழிகளில் தெரிந்த வேட்கையில் அவள் உடலை இதமான இம்சை ஆட்டிப் படைத்தது..

‘எங்கேயிருந்து இப்படியாப்பட்ட பாட்டுக்களா தேடிப் பிடிச்சான் இவன்..?’ சுமித்ராவின் கன்னம் ரத்தமெனச் சிவந்தது..

மெத்தைக்கு அழைக்கும் அந்தப் பாட்டில் அவன் வெட்கமில்லாமல் அவளைத் தின்று விடுவதைப் போலப் பார்த்தபடி விசில் அடித்து வைத்தான்.. சுமித்ராவின் ரத்த நாளங்கள் சூடேறின..

‘பாருடா.. இந்த ரிஷிய சிருங்கர் போடற போட்டை.. இந்த லட்சணத்திலே ஐயா பொண்டாட்டியக்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டாராம்..’

இளமையின் தாபமும்.. மனைவியென்ற சொந்தமும் சேர்ந்து அவளைப் பாடாய் படுத்தின… அவளின் உணர்வுகளுக்குத் தீ மூட்டி அதில் அவன் குளிர் காய்வதாக அவள் நினைத்தாள்.. அவன் பார்வையில் மெத்தைக்கான அப்பட்டமான அழைப்பிருந்தது.. அதை விரல் நகம் கூடப் படாமல் பார்வையில் மட்டும் அவன் சொல்லி வைத்ததில் அவள் வெந்து தணிந்தாள்..

  “அம்மாக் கண்ணு.. 

  சும்மா சொல்லு..

        ஆசையில்லையோ – என்மேல்

  ஆசையில்லையோ..?”

அடுத்த பாடல் கேள்வி கேட்ட போது சுமித்ரா ஒரு வழியாகி விட்டாள்.. அவளின் தவித்த பார்வையில் அவன் பார்வை பின்னிப் பிணைந்த போது மணியக்காரரின் வீடு வந்து விட்டது.. அவன் இறங்கி அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்டான்.. அவன் பார்வை அவளை அழைத்ததில்..

‘இந்த பணிவிடையைச் செய்யச் சொல்லி நான் கேட்டேனா..?’ என்ற சினத்துடன் கீழே இறங்கினாள் சுமித்ரா..

தனஞ்ஜெயனின் புருவங்கள் முடிச்சிட்டன.. எதற்காக இந்த கோபம் என்று அவன் விழிகள் கேட்டதில் அந்தக் காரைப் புரட்டி அவன் தலையில் போட்டால்தான் என்ன என்ற பெருங்கோபம் அவளுக்குள் வந்தது..

‘பருகு.. பருகுன்னு பார்த்து வைப்பான்..’  மனதுக்குள் கணவனைத் திட்டித் தீர்த்தாள்..

அவன் விரல் படாத ஏக்கத்தில் அவள் உடல் உருகிக் கொண்டிருந்தது.. அந்தக் கொதிப்பில் அவன் பார்வையைத் தவிர்த்தாள்..

“வாங்க மாப்பிள்ளை.. வாம்மா சுமித்ரா..”

தியாகராஜன் வாசலுக்கே வந்து வரவேற்றார்.. மரகதம் வந்து சுமித்ராவின் கையைப் பிடித்துக் கூப்பிட்டுக் கொண்டு போனாள்.. அவளுடன் போன சுமித்ராவைத் தொடர்ந்த தனஞ்ஜெயனின் பார்வையால்..

“பூ கொடுக்கக் கூப்பிட்டுக்கிட்டுப் போறா.. இப்ப சுமித்ரா வந்திரும் மாப்பிள்ள.. கவலைப் படாதீங்க..” என்று கேலிச் சிரிப்புடன் அவனைத் தேற்றினார் தியாகராஜன்..

“மாமா.. நீங்க இருக்கீங்களே..” தனஞ்ஜெயனின் சிரிப்பில் இழையோடிய லேசான வெட்கத்தில் தியாகராஜன் வியந்து போனார்..

எப்பேற்பட்ட இரும்பு மனிதனையும் இளக்கி விடும் மென்மை படைத்ததா பெண்மை..?

திரும்பி வந்த சுமித்ராவை தனஞ்ஜெயனின் பக்கத்தில் உட்கார வைத்துப் பால், பழம் கொடுத்து உண்ண வைத்தாள் மரகதம்..

“தள்ளி உட்காரும்மா..” என்று அவள் தள்ளிய வேகத்தில் தனஞ்ஜெயனின் மடியில் போய் விழுந்தாள் சுமித்ரா..

தோதாக மடியில் விழுந்தவளை வாகாக இறுக்கிக் கொண்டவனைப் பார்த்து தியாகராஜன் சிரித்த சிரிப்பில் தனஞ்ஜெயனும் சுமித்ராவும் லேசாக விலகி உட்கார்ந்தார்கள்..

“முதல்ல நீ சாப்பிட்டுட்டு.. அதுக்கப்புறமா சுமித்ராவுக்கு கொடுக்கனும் தனா..”

மரகதத்தின் கட்டளையில் அவர்கள் இருவரும் பகிர்ந்துண்ட பால், பழம் எல்லையற்ற ருசியுடன் இருந்ததைப் போல உணர்ந்தாள் சுமித்ரா.. தனஞ்ஜெயனுக்கும் அப்படியே என்பதை அவனது மயக்கும் பார்வை சொல்லியது..

விருந்தின் போது அவர்கள் இருவரின் இலையிலும் பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் ஊட்டி விட வேண்டுமென்று மரகதம் சொல்லி விட்டாள்..

சுமித்ரா வெட்கத்துடன் தயங்கினாள்.. வெட்க மில்லாத தனஞ்ஜெயன் உடனடியாக அவன் இலையி லிருந்து அல்வாவை எடுத்து சுமித்ராவுக்கு ஊட்டி விட்டு விட்டான்..

“பாரு மரகதம்.. அதுக்குள்ளே என் மாப்பிள்ள பெண்டாட்டிக்கு அல்வாவும், பூவும் தான் பிடிக்கும்ங் கிறதை கண்டு பிடிச்சு வைச்சிருக்காரு..”

தியாகராஜனின் சிரிப்புடன் மரகதத்தின் சிரிப்பும் இணைந்து கொண்டது.. பதிலுக்கு தனஞ்ஜெயனுக்கு ஊட்டிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சுமித்ரா.. அதே அல்வாவை எடுத்து அவன் வாயில் ஊட்டி விட்டாள்..

அவளைப் போல வாயைத் திறந்து ஊட்டி விட்டதைப் பட்டும் படாமலும் வாங்கிக் கொள்ளாமல் தனஞ்ஜெயன் அவள் விரல்களோடு சேர்த்து அல்வாவை சுவைத்து வைத்தான்.. அவனது எச்சில் தோய்ந்த விரல்களில் சுமித்ரா வேறு உலகிற்குப் போய் வந்தாள்..

“தனா.. விரலை விட்டிரு பாவம்..” மரகதம் சிபாரிசு செய்ததில் சுமித்ராவுக்கு லஜ்ஜையாகி விட்டது..

‘இவன் இருக்கானே..’

வெட்கத்துடன் அவள் விரல்களை இழுத்துக் கொண்டபோது அவள் விரல்களில் ஒட்டியிருந்த அல்வாவின் நெய் தனஞ்ஜெயனின் சட்டையில் சொட்டாக பட்டு விட்டது..

“அடடா..” சுமித்ரா பதறிப் போய் அவளுடைய பட்டுப் புடவையின் முந்தானையில் அவன் சட்டையில் படிந்திருந்த நெய்யை துடைத்து விட முனைந்ததில் மரகதம் வியந்து விட்டாள்..

“காஞ்சிபுரம் பட்டுப் புடவை சுமித்ரா.. பாழாகிரும்.. பொறு..” என்றவள் லேசான சோப்பின் துளியோடு கூடிய கைக்குட்டையில் தனஞ்ஜெயனின் சட்டையிலிருந்த நெய்கறையை எடுத்து விட்டாள்..

சுமித்ராவின் கண்கள் அதை ஏக்கத்துடன் பார்த்ததில்..

“அடுத்து நெய்கறை பட்டா நீயே இவனைக் குளிப்பாட்டி விடு என்ன..?” என்று சமாதானம் வேறு செய்து வைத்ததில் சுமித்ராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..

விருந்துக்குப் பின்னால் தாம்பூலத் தட்டை எடுத்து வந்த மரகதம்.. வெற்றிலையை எப்படிப் பாக்கு சுண்ணாம்புடன் வாகாக மடித்துக் கொடுப்பது என்று சுமித்ராவுக்கு பயிற்சி கொடுத்தாள்.. அதன்படி சுமித்ரா மடித்த வெற்றிலையை தனஞ்ஜெயனிடம் கொடுக்கச் சொன்னாள்.. அவன் போதை ததும்பும் விழிகளுடன் அவளை உற்று உற்றுப் பார்த்தபடி வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்..

“கொஞ்ச நேரம் கண்ணசருங்க.. சாயங்காலம் காபி, பலகாரத்தை முடிச்சுட்டுத்தான் நீங்க கிளம்பிப் போகனும்..”

மரகதம் கட்டளையிட்டு விட்டு அவர்களுக்காக மாடியறையை கை காட்டி விட்டாள்.. உண்ட மயக்கத்தில் அவர்கள் இருவருக்குமே கண்களைத் தூக்கம் சுழற்றியதில் ஆட்சேபிக்காமல் மரகதம் காட்டிய அறைக்குப் போய் விட்டார்கள்.. உள்ளே போனதும்தான் சுமித்ரா திகைத்து நின்றாள்..

அந்த அறையில் ஒரேயொரு கட்டில்தான் இருந்தது..

திட்டம் போட்டு மரகதம் அவர்களை அங்கே அனுப்பியிருப்பதைப் புரிந்து கொண்டவளுக்குள் மோகம் மூண்டாலும்.. அவள் செய்வதறியாமல் நின்றாள்..

அதுநாள்வரை அவளும், தனஞ்ஜெயனும் தனித்தனி அறைகளில்தான் இருக்கிறார்கள்.. அப்படியிருக்க.. ஒரே அறையில் ஒரே கட்டிலில் அவர்களால் எப்படிப் படுக்க முடியும்..?

“எனக்குத் தூக்கம் வரலை..” சுமித்ரா வெளியே போகத் திரும்பினாள்..

“ஊஹீம்.. வெளியே போகாதே.. அத்தையும்.. மாமாவும் சந்தேகப் படுவாங்க..”

தனஞ்ஜெயன் அவளிடம் நேரடியாகப் பேசி விட்டான்.. அதில் கண்கள் பளபளக்க அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. இருவர் பார்வையும் கலந்தன.. அசையாமல் நின்றவர்களின் உடலும் மனமும் ஒருவரிடமொருவர் அடைக்கலமாகி விடத் துடித்தன.. முதலில் யார் அடைக்கலமாவது என்று புரியாமல் அவர்கள் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்..

‘தொட்டா என்ன சொல்லுவாளோ..? அன்னைக்கு என்னவோ உன் மனம் போல வாழ்க்கையை அமைச்சுத் தரேன்னு சொன்ன… இப்ப தனிமை கிடைத்ததும் புருசன்ங்கிற உரிமையை எடுத்துக்கப் பார்க்கறியான்னு கேட்டுட்டா..?’ தனஞ்ஜெயன் தயங்கினான்..

‘நானாப் போய் எப்படிச் சொல்கிறது..? அட மாங்காய் மடையா..! நீ என் புருசன்டா.. இப்படி எட்டி நிற்கா தேடான்னு நான் சொல்லித்தான் இவன் தெரிஞ்சுக் கனுமா..? நான் இவனோட பெண்டாட்டி யில்லையா..? புருசனா இவன் நடந்துக்க வேணாமா..?’ சுமித்ராவின் மனம் சிணுங்கியது..

“கட்டிலில் படுக்கத்தானே முடியாது..? உட்கார லாமில்ல..?”

தனஞ்ஜெயன் வகுத்த திட்டத்தில் போடா என்றிருந்தது சுமித்ராவுக்கு.. இருவரும் கட்டிலின் இருமுனைகளிலும் அமர்ந்தார்கள்.. சற்று நேரத்தில் தூக்கம் சொக்க சுமித்ரா கட்டிலின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தாள்.. அசதியுடன் கட்டிலின் மறு மூலையில் தனஞ்ஜெயன் படுத்தான்.. மாலைப் பொழுதின் மயக்கத்தின் அவர்கள் விழித்துப் பார்த்த

போது தனஞ்ஜெயன் சுமித்ராவைக் கட்டிப் பிடித்தபடி படுத்திருப்பதை உணர்ந்தார்கள்.. சுமித்ராவின் கைவளைவோ அவன் கழுத்தைச் சுற்றியிருந்தது.. எப்படி என்று புரியாமல் இருவரும் பதறி விலகி எழுந்தார்கள்..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link