Chapter 22
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துச்..
சேர்ந்திடக் கண்டேனே..”
சுமித்ராவின் ஏக்கம் இழையோடிய பாடல் தனஞ்ஜெயனின் மனதைத் தொட்டு இழுத்தது..
“அண்ணா.. உங்க பெண்டாட்டி என்னமா பாடறாங்க…”
வியந்து போனாள் வனிதா.. நண்பன் வீட்டுத் திருமண வரவேற்பிற்கு தனஞ்ஜெயன் அழைத்ததும் மறுக்காமல் சுமித்ரா வந்து விட்டதில்.. நண்பர்கள் குடும்பத்துடன் போன ஒரு நாள் உல்லாசப் பயணத்திற்கும் சுமித்ராவை அழைத்தான் தனஞ்ஜெயன்.. கிளம்பும் வரை அவள் வருவாளா மாட்டாளா என்று தவிக்க வைத்த போதும் அவள் வந்து விட்டாள்.. அருகிலிருந்த அருவிக் கரையில் அவர்கள் குடும்பங்களாக ஒன்று கூடிக் குதூகலித்தார்கள்..
ஒருபுறம் அருவிக் குளியல்.. மறுபுறம் அருவியின் ஆற்றுத் தண்ணீரில் மீன்பிடித்து அங்கேயே பொறித்த மீன் பொறியல் என்று அந்த உல்லாசப் பயணம் களை கட்டிக் கொண்டிருந்தது..
உணவுக்குப் பின்னால் ஆடி ஓய்ந்தவர்கள் அருவிக் கரையின் அடர்ந்த மர நிழலில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் ‘அக்கடா’ என்று படுத்து ஓய்வெடுத்தார்கள்..
அப்போதுதான் அங்கே பாட்டுக் கச்சேரி ஆரம்பமானது.. அவரவர் வாய்க்கு வந்த பாடல்களை பாடித்தள்ள.. சுமித்ராவின் முறை வந்தது.. அவள் விழிகள் உயர்ந்து தனஞ்ஜெயனைப் பார்த்துச் சுண்டியிழுத்தன..
“சிட்டுக்குருவி.. முத்தம் கொடுத்துச்..
சேர்ந்திடக் கண்டேனே..
செவ்வானம் கடலினிலே..
கலந்திடக் கண்டேனே..
மொட்டு விரித்த மலரினிலே..
வண்டு மூழ்கிடக் கண்டேனே..
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே…
ஹோய்…”
சுமித்ராவின் பாடல் அவளைச் சுற்றி நடக்கும் அத்தனை கலவிகளையும் அறிவுறுத்தின.. தனஞ்ஜெயன் உதட்டைக் கடித்தபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.. அவள் பாடலில் ஒளிந்திருந்த சூட்சுமமான உணர்வலைகளில் அவன் சிக்கிக் கிறங்கித் தவித்தான்..
“ஒரு பொழுது.. மலராக..
கொடியில் இருந்தேனா..?
ஒரு தடவை தேன் கொடுத்து
மடியில் விழுந்தேனா..?
இரவினிலே.. நிலவினிலே..
என்னை மறந்தேனா..?
இளமை தரும் சுகத்தினிலே..
கன்னம் சிவந்தேனா..?
ஹோய்..”
தனஞ்ஜெயனுக்கு அவளைக் கொய்து மடியில் போட்டுக் கொள்ள வேண்டும்
போல இருந்தது.. அவளின் இளமை ததும்பும் யௌவனத் தோற்றத்தில் அவன் சுற்றியிருப்பவர்களை மறந்து கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தான்..
வனிதா அதைக் கவனித்து மற்றவர்களிடம் சொல்ல.. அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக் கொண்டார்கள்..
சுமித்ராவும் தனஞ்ஜெயனும் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரவே இல்லை.. அவர்களுக்கான ஓர் மாய உலகில் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்..
“பறந்து செல்ல மனமிருந்தும்..
எனக்கும் சிறகில்லையே..
பழக வந்தேன்.. தழுவ வந்தேன்..
பறவை துணையில்லையே..
எடுத்துச் செல்ல மனமிருந்தும்..
வார்த்தை வரவில்லையே..
என்னென்னவோ நினைவிருந்தும்..
நாணம் விடவில்லையே..
ஹோய்..”
தனஞ்ஜெயன் சுமித்ராவை ஸ்வாஹா பண்ணி விடுபவன் போலப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவள் பாடலை முடித்தாள்.. திரும்பி வரும்போது அவர்களுக்கு இடையே அழகான ஒர் மௌனம் குடிகொண்டிருந்தது.. அன்று இரவு தனஞ்ஜெயன் அவளை அடிக்கடி பார்த்து வைத்தான்.. அவள் தூங்கப் போகும் போது அவன் அறைக்கதவு முழுவதுமாக திறந்திருந்தது.. சுமித்ராவின் மனம் அடித்துக் கொண்டது.. அந்த அறையைக் கடக்கும் போது அவள் கால்கள் பின்னின.. அவளையுமறியாமல் அறைக்குள் அவள் பார்த்தாள்.. அங்கே வெற்று மார்புடன் சுவரில் சாய்ந்து தனஞ்ஜெயன் நின்றிருந்தான்..
ஒரு நொடி.. அனைத்தையும் மறந்து அவன் அறைக்குள் போய் விடலாமா என்று நினைத்தாள் சுமித்ரா..
அது யாருடைய அறை..? அவளது கணவனின் அறையல்லவா..? அங்கே கால் பதிக்க அவளுக்கு இல்லாத உரிமையா..?
இதயம் உரிமைப் போராட்டத்தை அறிவித்த போதும்.. அறிவு அவன் அவளை அந்த அறைக்குள் ‘வா’ என்று அழைக்கவில்லை என்பதை அறிவுறுத்தியது..
சுமித்ரா நகர யத்தனித்தாள்.. கால்களில் இரும்புக் குண்டைக் கட்டி விட்டதைப் போல நகர முடியாமல் துடித்தாள்.. தனஞ்ஜெயனின் பார்வை அவளைத் துளைத்தது..
ஒருவழியாக அவன் அறையைக் கடந்து அவள் அறையைத் தொட்டபோது உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்து விட்டதைப் போல அவள் தொய்ந்து விட்டாள்.. அறைக் கதவைத் தொட்டவள் அனிச்சையாக திரும்பிப் பார்த்த போது.. தனஞ்ஜெயன் அவனுடைய அறை வாசலுக்கு வந்திருந்தான்..
‘இவன் மனசில் என்னதான் நினைப்பிருக்கு..?’
சுமித்ராவுக்கு அழுகை.. அழுகையாக வந்தது.. ஒன்று ஒட்டியிருக்க வேண்டும்.. இல்லையெனில் தள்ளி நிற்க வேண்டும்.. இரண்டும் இல்லாமல் அவளை இந்தப்பாடு படுத்துகிறானே.. அவனுக்கு மனச்சாட்சியே இல்லையா..?
அடுத்த இரு வாரங்களில் ரகுநாதனின் உறவு வகையில் ஒரு காதணி விழா நடந்தது.. அன்னவாசல் ஜமீன்தாரரான தனஞ்ஜெயன் பெண்டாட்டியோடு
போய் நின்றாக வேண்டும் என்று இந்திராதேவி சொல்லி விட்டாள்.. அந்தக் காதணிவிழா தொலைவான ஊரில் நடந்ததால் சுமித்ராவும் தனஞ்ஜெயனும் அந்த ஊருக்கு அருகிலிருந்த டவுனில் தங்க வேண்டி வந்தது..
“உன் அப்பா வழிச் சொந்தம்டா தனா.. நீ சுமித்ராவோடு போய் முன்னால நின்னாகனும்..”
இந்திராதேவியின் கண்டிப்பால் கிளம்பிவந்தவர்களை விசேச வீட்டினர் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.. அந்த கிராமத்தில் தனஞ்ஜெயனை தங்க வைக்க
முடியாது என்பதினால் பக்கத்து டவுனில் இருந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தயார் படுத்தி வைத்திருந்தார்கள்.. அவர்களின் உபசரிப்பைக் கவனித்த போது தனஞ்ஜெயனின் வரவை அவர்கள் உயர்வாக கருதுவதை சுமித்ராவால் புரிந்து கொள்ள முடிந்தது..
புதிதான ஒரு சூழலில் இரவைக் கழிக்க வேண்டி வந்ததில் சுமித்ராவுக்கு ஒரு பொட்டுக்கூடத் தூக்கம் வரவில்லை.. அவளுக்குப் பழகிய இடத்தைவிட்டு வேறு இடத்தில் படுத்தால் தூக்கம் வராது..
அவள் அறையை விட்டு வெளியே போக முயற்ச்சித்தபோது தனஞ்ஜெயன்..
“வேண்டாம்..” என்று சொல்லி விட்டான்..
‘எதுக்காம்..? இங்கே உட்கார்ந்து உன் முகத்தை நானும்.. என் முகத்தை நீயும் விடியவிடியப் பார்த்துக்கிட்டு இருக்கிற கழுதைக்கு மொட்டை மாடிக்குப் போனாலாவது நட்சத்திரத்தை எண்ணிக்கிட்டே ராப்பொழுதை ஓட்டிரலாம்..’ சுமித்ராவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது..
“எனக்குத் தூக்கம் வரலை..” என்றாள் மொட்டையாக..
“எனக்கு மட்டும் வருதா..” என்று அவளிடமே கேட்டு வைத்தான் அவளது ஆருயிர் கணவன்..
“தூக்கம் வராம இங்கே உட்கார்ந்து என்ன பண்ண..?”
“வெளியே போனா மட்டும் தூக்கம் வந்திருமா..?”
“பொழுதாவது போகுமில்ல..”
“இல்லை.. வெளியே எங்க அப்பாவழிச் சொந்தக் காரங்க படுத்திருக்காங்க.. நீ தனியாப் போனா ஏதாச்சும் நினைச்சுக்குவாங்க..”
“தனியாப் போனாத்தானே பிரச்னை..?”
“துனைக்கு நானும் வந்தாலும் பிரச்னைதான்..”
“இதில என்ன பிரச்னை வந்திரப் போகுது..?”
“உனக்குப் புரியாது..”
‘உனக்கு மட்டும் புரிஞ்சிருச்சாக்கும்..’ சுமித்ராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“புரிஞ்ச வரைக்கும் புரிஞ்சுக்கறேன்.. நீங்க சொல்லுங்க..” என்றாள்..
“நாம புதுசாக கல்யாணமானவங்க..”
‘இதைச் சொல்லியே வெறியேத்து.. என்னமோ நாம புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு பாட்டுப் படிடறதைப் போலவே பேசிவை.. உன்னப் பாத்தா புதுசாக் கட்டிக்கிட்ட புருசனப் போலவா இருக்கு..?’ சுமித்ரா நெடுமூச்செரிந்தாள்..
“அதனால என்ன..?” என்று சுள்ளென்று கேட்டு வைத்தாள்..
“இதுக்குத்தான் உனக்குப் புரியாதுன்னு நான் சொன்னேன்.. புதுசாக்கட்டிக்கிட்டவங்க மொட்டை மாடியிலே காத்தாட நின்னா பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க..?”
“எதையோ நினைச்சுட்டுப் போகட்டும்…”
“உனக்கென்ன..? தூக்கம் வரலை.. அவ்வளவு தானே.. வா..”
தனஞ்ஜெயனின் அழைப்பில் முகம் சிவந்து விட்டாள் சுமித்ரா.. அப்படிப் பட்டவர்த்தனமாக அவன் அழைத்து வைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.. அடுத்த ஊருக்கு வந்து.. அடுத்தவரின் வீட்டில் தங்கிக் கொண்டு அவளை அழைத்து வைக்கிறானே.. அவன் அழைப்புக்கு இணங்கி அங்கேயே முதலிரவைக் கொண்டாடுவது சரியா என்று அவள் மனதில் பட்டி மன்றம் நடந்தது..
இதையெல்லாம் அவன் நினைத்துப் பார்க்காமலா அழைப்பான் என்ற நினைவில் அவள் உடல் நடுங்கியது.. இதமான இம்சை அவள் உடல் முழுவதும் பரவியதில் எதிர்பார்ப்பின் பெருந்தீ அவளை ஆட் கொள்ள ஆரம்பித்தது..
‘இதோ தொடப் போகிறான்..’
அவனுடைய ஸ்பரிசத்திற்காக அவள் தேகம் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த போது அவள் முன்னால் வரிசையாக சீட்டுக்கள் வந்து விழுந்தன..
“என்ன இது..?” திகைப்புடன் அவள் கேட்டாள்..
“பார்த்தாத் தெரியலை…? சீட்டுக்கட்டு.. விளையாடலாம் வா.. பொழுதும் போய் விடும்.. தூக்கமும் வந்து விடும்..”
அவன் இலகுவாக சீட்டுக்களைக் கலைத்துப் போட்டதில் அவளை ஆக்ரமித்திருந்த உணர்வலைகள் அவளை ஆட்டிப்பார்த்தன..
‘இவன் என்னதான் நினைத்துக்கிட்டிருக்கான்..?’
சுமித்ரா எரிச்சலோடு கட்டிலில் குப்புற விழுந்தாள்..
“எனக்குத் தூக்கம் வருது..” கண்களை மூடினாள்..
“தூக்கம் வரலைன்னு சொன்ன..?”
“அது அப்ப.. இது இப்ப…”
கைக்கெட்டும் தொலைவில் கணவன் படுத்திருக்க.. கல்யாணமாகியும் கன்னியாக தவிப்பதில் உள்ள கொடுமையில் வெந்து தணிந்தபடி அந்த இரவைத் தூக்கமின்றிக் கழித்தாள் சுமித்ரா..
மறுநாள் அவனுக்கு மனைவியாக அவன் பக்க உறவினர் வீட்டு காதணி வைபத்தில் கலந்து கொண்ட போது ஏனோ அவள் மனம் வெறிச்சென்று இருந்தது..
அன்னவாசலுக்குத் திரும்பி வந்த பின்னால் அவனுக்கு உணவு பரிமாறுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்..
‘இது ஒன்னுதான் எனக்கும் இவனுக்கும் இடையில இருக்கிற உறவா..? நானென்ன இவனுக்கு பரிமாறுகிற வேலைக்காரியா..?’
அவள் மனம் சண்டித்தனம் செய்தது.. இந்திரா தேவியால் ஒர் அளவுக்கு மேல் அவளை வற்புறுத்த முடியவில்லை.. மற்ற நேரமெல்லாம் இந்திரா தேவியின் பின்னாடியே அலைகிறவள் தனஞ்ஜெயன் சாப்பிட வந்து விட்டால் மாயமாய் மறைந்து விடுவாள்.. அவளைத் தேடி ஏமாந்து போனவனாக தனஞ்ஜெயன் இந்திராதேவி பரிமாற சாப்பிட்டு விட்டு போய் விடுவான்..
அதையும் சுமித்ராவால் தாங்கிக் கொள்ள முடியாது..
‘இந்த மனுசனுக்கு நான் பரிமாறினாலும்.. பரிமாறலைன்னாலும் கவலையில்லை போல.. பரிமாற அவங்கம்மா இருக்காங்களே.. என்னை எதுக்காக தேடப் போகிறார்..?’
அவளுக்கு உலகமே வெறுத்தது..
இந்திராதேவிக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை.. தனஞ்ஜெயனும், சுமித்ராவும் தனித்தனி அறைகளில் இருப்பதில் அவளுக்கு சம்மதமில்லை.. வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் அதைக் கவனித்து வெளியில் சொல்லி விட்டால் என்ன செய்வது..?
அதைத் தனஞ்ஜெயனிடம் கோடிட்டுக் காட்ட அவளால் முடியவில்லை.. அவனுக்கே அது தெரிய வேண்டாமா..?
கண்ணுக்கு அழகாய் மருமகள் வந்தும்.. கருத்தான மகன் அவளுடன் இசைந்து வாழாமல் இன்னும் எட்டவே நிற்கிறானே என்ற துக்கத்தில் அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை..
எல்லாமும் இருந்து விட்டால் போதுமா..? மனதில் நிம்மதி இருக்க வேண்டாமா..?
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.