Chapter 02

0Shares

புன்னகைத்த மல்லிகா பதினாறு வயதுப் பிராயத்தில் இருந்தாள்.. அவள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவன் என்ற முறையில்தான் அரவிந்தனைப் பார்த்து சிரித்து வைத்தாள்.

அதை மறந்து போன அரவிந்தன் சும்மா இருக்க மாட்டாமல் “வாவ்…” என்றான்…

“எதுக்கு இப்படி கொட்டாவி விடறீங்க…?” என்று கனல் கக்கும் பார்வையுடன் ஷாலினி கேட்டபோதுதான் அவள் அருகில் நிற்கும் உணர்வே அரவிந்தனுக்கு வந்தது…

‘விதி வலியது…’- அரவிந்தன் நொந்து கொண்டான்…

தானாக வந்து மேலே விழுவதைப் போலப் பேசுகிற பெண்களிடம் பதில் பேசினாலே ஷாலினி சும்மா விடமாட்டாள்…

இதிலே சாலையில் நடந்து போகிற ஸ்கூல்பெண் பரிவாக ஒரு புன்னகை செய்தால் பதிலுக்கு ‘வாவ்…’ என்று வாயைப் பிளந்து வைத்தால்… சும்மாவா விடுவாள்..?

“என்ன ஷாலினி இது…?”

“எது…?”

“நீ பேசறது உனக்கே நல்லா இருக்கா…?”

“நீங்க செய்யறதுதான் எனக்கு நல்லா இல்லை…”

‘உனக்கு எதுதான் நல்லா இருக்கும்..?’ – எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான் அரவிந்தன்…

‘கொஞ்சம் விட்டால் இவள் எனக்கு காவியை உடுத்தி விட்டு கையில் கமண்டலத்தைக் கொடுத்து… இமயமலைப் பக்கம் துரத்திவிட்டு விடுவாள்…’ – மனதிற்குள் பொருமினான்…

“அவளைப் பார்த்து அட்மைர் பண்ணினேன்.. அது உனக்கு கொட்டாவியா தெரியுதா…?”

“எது அட்மைர் பண்ணுவது…? ‘ஹாவ்’ன்னு வாயைப் பிளப்பதா? எங்க ஊரில் இதைக் கொட்டாவின்னு தான் சொல்லுவோம்…”

“உங்க அப்பாவை வைத்து… ஊரையே நீ எடை போடக்கூடாது…”

“ஓஹ்ஹோ… அவ்வளவுக்கு வந்துட்டிங்களா…?”

“எவ்வளவுக்குடி வந்தேன்..?”

“என் அப்பாவைக் கிண்டல் பண்ணுகிற அளவுக்கு வந்துட்டிங்களா…?”

“அதுக்கு எதுக்குடி அளவு கோல்…?”

“அதானே… உங்களுக்குத்தான் லிமிட்டுன்னா என்னன்னே… தெரியாதே.. மஞ்சள் கோட்டை விட்டுவிட்டு… ஹெவி டிராபிக்கில் ரோட்டைக் கிராஸ் பண்ணத்தானே ஐயாவுக்குப் பிடிக்கும்…”

“இப்ப எதுக்குடி என்னை வறுத்தெடுக்கிற…?

அதுவே பாவம்… பச்சை மண்ணு…”

“எது…?”

“மல்லிகா…”

“அடிப்பாவி… அதுவா பச்சை மண்ணு…? அது பதினாறு வயசுப் பொண்ணுடி…”

தாங்மாட்டாமல் ஜொள்ளினான் அரவிந்தன்… 

“ஸ்கூல் கேர்ள்ஸைக்கூட விட்டு வைக்கிறதில்லங்கிற முடிவோடு இருக்கீங்களா…?”

“இதோ பார் ஷாலினி…”

“பார்த்துத் தொலைத்ததால் தான் இந்தக் கண்றாவியையெல்லாம் பார்த்துத் தொலைக்கிறேன்…”

“நீயேன் அவளை ஸ்கூல் பொண்ணுன்னு நினைக்கிற…?”

“ஸ்கூலுக்குப் போகிற பெண்ணை ஸ்கூல் பொண்ணுன்னுதானே நினைக்க முடியும்..? வேற எப்படி நினைக்க…?”

“டீன் ஏஜ் பொண்ணுன்னு நினைடி…”

“ஓஹ்ஹோ…”

“எண்ணிரண்டு பதினாறு வயதுன்னு கண்ணதாசன் பாடியிருக்கிறார்…”

“அப்படிப் போடுங்க…”

“வயது பதினாறிருக்கும் இளவயது மங்கைன்னு பாரதி பாடியிருக்கிறார்…”

“பாரதியையும் கூட்டுசேர்த்தாச்சா… விளங்கிடும்…”

“பதினாறு வயதினிலேன்னு பாரதிராஜா சினிமாவே எடுத்திருக்காரு…”

“இதிலேயிருந்தெல்லாம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ…?”

“பதினாறு வயதுங்கிறது… ரசிக்கக்கூடிய பருவம்…”

“ம்ம்… நெக்ஸ்ட்…?”

“அதைக் கலைக் கண்ணோடு ரசித்தேண்டி… அது ஒரு தப்பா…?”

“உங்க கண்ணு கலைக்கண்ணு.. எங்க பக்கத்து வீட்டு ரமேஷுக்கும்… மாடி வீட்டு வினோத்துக்கும் அலைகிற கண்ணு… என்னே ஒரு நியாயம்..! அப்பப்பா… தாங்கலைடா சாமி…”

“நீயேண்டி அவனுகளை இப்ப இழுக்கிற..?”

அரவிந்தன் எரிச்சலுடன் சொன்னான்.. ஷாலினி அவசரமாக சுற்றுமுற்றும் பார்த்தாள்…

‘எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறா…’ அரவிந்தனுக்கு புரியவில்லை…

“என்னடி…?”

“பேசாத வார்த்தைக்கு நாம எஜமான்… பேசின வார்த்தை நமக்கு எஜமான்…”

“உஸ்ஸ்…”

“இப்போ… எதுக்கு இந்த பெருமூச்சு..?”

“ஏண்டி இப்படி உபதேசமாய் பண்ணிக்கொல்ற..? இப்ப எதுக்கு இந்த புராவெர்பை சொல்ற…?”

“எக்குத் தப்பாய் பேசி வைக்கிறது நீங்கதான்… அவனுகளை நான் என்ன கையைப் பிடிச்சா இழுத்தேன்..?”

“அறைஞ்சேன்னா… அத்தனை பல்லும் உதிர்ந்து விடும்…”

“பொங்குதில்ல… அப்புறமெதுக்கு அப்படி வாயை விடணும்..?”

“ஒரு பேச்சுக்கு சொன்னேன்டி…”

“பேச்செல்லாம் ஒழுங்காய் வரணும்..”

“நீ ஒழுங்கிலேயே… இரு…”

அரவிந்தன் பார்வையால் அவளை மேய்ந்தான்.. ஷாலினியின் வயிற்றில் பட்டாம் பூச்சிகள்  பறந்தன… வழக்கப்படியான  பார்வையை அவன் பார்த்து வைத்ததும்.. அவள் கிளர்ச்சியுற்றாள்…

‘ராஸ்கல்…’ மனதிற்குள் செல்லமாகத் திட்டிக் கொண்டாள்…

‘எப்படிப் பார்க்கிறான் பாரேன்… இப்படிப் பார்த்தே மயக்கி விடுவான்… டேஞ்சரஸ் ஃபெல்லோ…’

“ஏண்டி… இத்தனை அழகாய் இருக்கே…”

“ஐஸ்…”

“ஆமாமாம்… இந்த டிசம்பர் குளிரில் உன்மேல் ஐஸை இறக்கி வைக்கணும்னு எனக்கு ஆசை…”

“நான்தான் உங்க கண்ணுக்கு அழகாட் தெரியறேனில்லை…? அப்புறம் எதுக்கு… ஊரையே சைட் அடிக்கறீங்க…”

 “இந்தா பாரு… மேய்ச்சல் நிலத்தைக் கண்டா… பார்வை கொஞ்சம் மேயத்தான் செய்யும்…”

“என்ன ஒரு லாஜிக்..!”

“ஆம்பளைன்னா கொஞ்சம் அப்படி.. இப்படின்னு தான் இருப்பான்…”

“இதை யாரு சொல்லி வெச்சது சார்…”

“உங்க அம்மா சொன்னதே இல்லையா..!”

‘இவன் என்ன யட்சனா..?’ என்று வாய் பிளந்தாள் ஷாலினி… அவளுடைய அம்மா அடிக்கடி இப்படித்தான் சொல்லி வைப்பாள்… கணவனின் அலைகிற புத்தியைத் தாங்க மாட்டாமல் பெட்டியைக் கட்டிக் கொண்டு வந்து விட்ட… எதிர்வீட்டுப் பெண்மணியின் மகளிடம் இந்த அறிவுரையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்…

“ஆம்பளைன்னா கொஞ்சம் அப்படி… இப்படின்னுதான் இருப்பாங்க நிஷா.. நாமதான் விட்டுப்பிடிக்கணும்…”

தாயின் அறிவுரையைக் கேட்டுக் கொண்டிருந்த ஷாலினிக்கு கோபம் வந்துவிட்டது..

“ஏம்மா… விட்டால் பிடிக்க முடியுமா…?”

“நீயேண்டி இங்கே உட்கார்ந்து வாய் பார்க்கிற… உன் ரூமுக்கு ஓடு…”

 “ஏன்…? நான் இங்கே இருந்தா என்னவாம்…”

“இதெல்லாம் கல்யாணமானவங்க பேசற பிரச்சனைடி…”

‘நாளைக்கு எனக்கும் கல்யாணமாகாதா…?’

நினைத்துக் கொண்டதைக் கேட்காமல் அங்கிருந்து விலகி விட்டாள் ஷாலினி… மகள் கேட்கவில்லை என்ற நிம்மதியுடன் சாந்தி நிஷாவிடம் பேசிய வார்த்தைகள்.. காற்றில் கலந்து வந்து அவள் காதினில் நுழைந்தன..

“மேய்கிற மாடு எப்படியிருந்தாலும் தொழுவத்துக்கு திரும்பித்தானே ஆகணும்..? உன் புருஷன் எங்கே சுத்தினாலும் ராத்திரி படுக்கைக்கு வீட்டுக்கு வந்துடறாரில்லை… அப்புறம் எதுக்குக் கவலைப்படற? எல்லாம் போகப் போக சரியாகிவிடும்…”

இப்போது அரவிந்தன் சொன்ன மேய்ச்சல் நிலத்தையும்… அம்மா சொன்ன மேய்கிற மாட்டையும் நினைத்துக் கொண்டவளுக்கு அவற்றின் பொருத்தத்தை நினைத்து சிரிப்பு வந்து விட்டது…

“ம்ம்.. இப்படித்தான் சிரிச்ச முகமா இருக்கணும்…” திருப்தியுடன் சொன்னான் அரவிந்தன்..

“ம்ம்… இப்படித்தான் சிரிச்ச முகமா இருந்தேன் அரவிந்த். என்றைக்கு உங்களைக் காதலிக்க ஆரம்பித்தேனோ.. அன்றைக்கே அந்தச் சிரிப்பு தொலைந்து விட்டது…” சிரிக்காமல் சொன்னாள் ஷாலினி…

அரவிந்தனின் முகம் விளக்கெண்ணெயைக் குடித்ததைப் போல மாறிவிட்டது.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link