Chapter 05
பஸ்ஸின் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டுக் கீழே இறங்கிய ஷாலினி… கர்ம வீரனாகப் பின்னால் வந்த அரவிந்தனை முறைத்தாள்…
‘இப்ப எதுக்கு முறைக்கிறா?’
“ஹலோ…” ஷாலினி சொடக்குப் போட்டாள்…
அரவிந்தன் சுற்று முற்றும் பார்த்தான்.
“யாரைத் தேடறீங்க…?”
“நீங்க யாரையோ சொடுக்குப் போட்டு ஹலோன்னு கூப்பட்டிங்களே… அது யாருன்னு தேடினேன்…”
“கிண்டலா…?”
“உங்களைப் போய் கிண்டல் பண்ண முடியுமா..? இப்ப எதுக்கு ஹலோ போட்டிங்கங்கிறதை நீங்க சொல்லுங்க…”
“பஸ்ஸில கூட்டமிருந்தா அந்தச் சாக்கில் என்னைத் தொட்டுப் பார்க்கறீங்களா…?”
‘ஆஹா…’ அரவிந்தனின் விழிகள் மின்னின…
மறுநாள் பஸ்ஸில் ஷாலினியைச் சுற்றி வளைத்திருந்தன அரவிந்தனின் கரங்கள்…
அவளது கூந்தலில் இருந்து வந்த மென்மையான சீயக்காய் கலந்த மலரின் நறுமணம் அவனை மயக்கியது.. அவளது பின்னங்கழுத்தின் பவுடர் வாசனை அவனை ஈர்த்தது…
சென்னை மாநகரத்தின் குண்டுங் குழியுமான சாலையின் உபயத்தால்… பல இடங்களில் பஸ் தடுமாறிக் குலுங்க… அரவிந்தனும் தாராளமாக ஷாலினியின் மேல் படர்ந்து பரவினான்…
“இதுக்கெல்லாம் குறைச்சலில்லை…”
சில நாள்களில் அவள் முறைத்தாள்…
‘அடுத்து எதுக்கு அடிபோடுறா…?’
“நான் எதிலயும் குறைச்சலான ஆளில்லைங்க..”
“அதைத்தான் தினமும் பார்க்கிறேனே…”
“பார்த்துமா இந்த வார்த்தையைச் சொல்றீங்க..!”
“ஹலோ…”
“போன் பேசாம… நேரடியாய் விசயத்துக்கு வர்றீங்களா..?”
“பஸ்ஸுல கூட்டத்தை சாக்கா வைச்சு உரசுறதுதான் வீரமா…?”
“வேற எது வீரமுன்னு நீங்களே சொல்லுங்க…”
“‘தில்’லிருந்தா என்னை உங்க டூவீலரின் பின்னால உட்கார வைச்சு ஆபிஸ்ல கொண்டு போய் விடணும். அதை விட்டுட்டு… பஸ்ஸுல ஆயிரம் ஜனமிருக்கு… அதுக்குள்ள நானும் இருக்கேன்னு.. ஒளிஞ்சு மறைஞ்சு பின்னால வர்றது வீரமில்லை..”
கவனிப்பாரில்லாமல் கிடந்த அவனது டி.வி.எஸ். அப்பாச்சியை தூசி தட்டி துடைக்க ஆரம்பித்தான் அரவிந்தன்…
“மூலையில் கிடந்த வண்டிக்கு விடிவுகாலம் வந்துருச்சா? என்ன ஆச்சுடா.. செக்யூரிட்டி வேலைக்கு டாட்டா காண்பிச்சிட்டியா..?” கார்த்திக் கேட்டான்.
“அவ என் வீரத்தை சந்தேகப்படறாடா…” மர்மப் புன்னகையுடன் பதில் சொன்னான் அரவிந்தன்…
“அப்படிப் போடு அருவாளை… இப்ப என்ன சொல்லி உசுப்பேத்திவிட்டிருக்கா..?”
“‘தில்’லிருந்தா அவளை என் டூவீலரின் பின்னால உட்கார வச்சு… இந்த ஊரைச் சுற்றி ஊர்வலம் வரணுமாம்…”
“ஆக… உன் ‘தில்’லை நீ நிரூபிக்கப் போகிற…?”
“பின்னே…? சவாலில்ல விடறா…”
“தெரியாமல்தான் கேட்கிறேன்…”
“நீ தெரிஞ்சே கேளு… பதிலைச் சொல்றேன்..”
“அவளைத் தவிர வேறு யார் சவால் விட்டாலும்.. நீ இப்படி சவாலே.. சமாளின்னு கிளம்பிப் போவியா..?”
அரவிந்தன் பதில் சொல்லாமல் கண்களைச் சிமிட்டினான்…
“நீ ஒரு மார்க்கமான ஆளுடா…”
“அவளே இதை பலதரம் சொல்லிட்டா…”
“அது எப்படிடா மச்சான்… எந்த பொண்ணுகிட்டயும் தள்ளி நின்னு நூல் விடுவ.. இவகிட்ட மட்டும் பச்சக்குன்னு ஒட்டிக்கிட்ட…”
‘அவளைப் பார்த்ததுமே அவ முகம் என் நெஞ்சில் பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சுடா மச்சான்…’ புன்னகைத்தான் அரவிந்தன்..
“என்னன்னு சொல்லிட்டுச் சிரியேண்டா…”
“ஒண்ணுமில்லை…”
“இதை வேற யாராவது சொல்லியிருந்தா நம்பியிருப்பேன்… நீ சொல்றதால சுத்தமா நம்பமாட்டேன்.. எனி வே… நாளைக்கு காலையில… முதன்முதலா உன் வண்டியில் அவ ஏறப்போறா… கங்கிராஜுலேசன்ஸ்… “
“ஏய்ய்… படுடா… படுடா…”
தெரு முனையில் ஷாலினியை அப்பாச்சி வண்டியில் அமர்ந்தபடி வழி மறித்தான் அரவிந்தன்…
ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு,
“ஏன் சார்.. என் வழியை மறிக்கறீங்க…?” என்று கேட்டாள் ஷாலினி.
“எனக்கு ‘தில்’ இருக்குன்னு புரூவ் பண்ணத்தான்… வண்டியில ஏறுங்க..”
“நான் ஏறினா… மேடு பள்ளமா பார்த்து வண்டியை ஓட்டி.. உங்களை இறுக்கி கட்டிப் பிடிச்சுக்க வைக்கணும்னு தானே பிளான் போட்டிருக்கீங்க…?”
“நான் எதுக்குங்க மண்டையைக் குடைந்து பிளான் போடணும்..? அதுதான் பிளான் போட்டுத்தர நீங்க இருக்கீங்களே…”
அவனது புருவங்கள் ஏறி இறங்க.. நமட்டுச் சிரிப்புடன் கூறினான். அவள் கடுகடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டே.. போனால் போகிறதென்று ஏறுவதைப் போல அவன் பின்னால் ஏறினாள்.
வழியில் மேடு பள்ளங்கள் இருந்தன… விலகிப்போக வழியிருந்தும்.. வேண்டுமென்றே அதிக வேகத்தில் பள்ளத்திற்குள் வண்டியை விட்டான் அரவிந்தன்..
விழுந்து விடாமலிருக்க… அவனது தோளை இறுக்கிப் பற்றிக் கொண்டாள் ஷாலினி…
அவனது முதுகோடு அவள் ஒட்டியிருக்க.. சென்னையின் நெருக்கடி… அவனுக்கு என்றுமில்லாத இன்பத்தைக் கொடுத்தது…
அவள் தெருமுனையில் அவன் வண்டியில் ஏறி மீண்டும் தெரு முனையிலேயே இறங்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
அவளது அலுவலகத்திற்கு மட்டுமே சென்ற வண்டி ஒரு நாள் ஐஸ்கிரீம் பார்லருக்கு தடம் மாறிச் சென்றது.
“என்ன சார் ரூட் மாறுது…”
“எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்…”
“முன்னெச்சரிக்கையா..?”
“பின்னே..? அடுத்து என்ன கேள்வி வரும்ன்னு எனக்குத் தெரியாதா…? நான் அனுபவஸ்தன்ங்க…”
“ஓஹோ.. அப்படி என்ன கேள்வி வரும்ன்னு எதிர்பார்த்து செயல்படறீங்களாம்..?”
“உண்மையிலேயே உங்களுக்கு ‘தில்’லிருந்தா என்னை மெரினா பீச்சுக்கு கூப்பிட்டுக் கொண்டு போங்க பார்ப்போம்’ன்னு சொல்லுவீங்க…”
அன்று உண்மையிலேயே அதைத்தான் ஷாலினி சொல்வதாக இருந்தாள்.
‘கில்லாடி..’-அவள் தன்னையறியாமல் புன்னகைக்க… அவன் விழிகள் வழக்கம் போல மின்னின…
“என்ன..? அதுதானே உங்க பிளான்..?”
“அதை விடுங்க.. இதைப் பார்த்தா ஐஸ்கிரீம் பார்லர் போல இருக்கே… உங்க ஊர்ல இதுதான் மெரினா பீச்சுன்னு சொல்லுவாங்களா..?”
அவள் மறுக்காமல் உண்மையை ஒப்புக்கொண்ட விதத்தில் அவன் உல்லாசமாக நகைத்தான்.
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.