Chapter 06
“எங்க அம்மா சொல்லுவாங்க…”
“என்னத்தை சொல்லுவாங்க..?”
“நல்ல காரியம் செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணுமுன்னு…”
“அதுக்கு ஸ்வீட் ஸ்டாலுக்கில்ல கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்கணும்..?”
“ஐஸ்கிரீமும் ஸ்வீட்டாய் இருக்குமுன்னுதான் எனக்கு நினைவு… உங்க ஊரில் ஒருவேளை உப்புக் கரிக்குமோ?”
பதிலுக்கு பதில் அவன் வாரிய விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது… ஐஸ்கிரீம் பார்லரில் எதிரெதிரே அமர்ந்த போது… அவன் கைகளை மேஜை மேல் ஊன்றி அதில் முகவாயைப் பதித்து அவளைக் கூர்ந்து பார்த்தான்.
‘எப்படிப் பார்க்கிறான்…’ அவள் முகம் சிவந்தாள்…
“விளம்பரக் கம்பெனியில் வேலை பார்த்தா… டிவி விளம்பரத்தை உல்டா பண்ணிப் பேசணும்னு எதுவும் சட்டம் கிட்டம் இருக்கா..?” ஷாலினி புருவங்களை உயர்த்திக் கேட்டாள்…
அவன் சொன்னதை அவள் கண்டு கொண்டதில் அவன் சிரித்துக் கொண்டான்..
அவள்பக்கம் ஐஸ்கிரீமை நகர்த்தி வைத்தவன்…
“வெறும் இனிப்பு மட்டும் இருந்தால் போதாது… அதில் குளுமையும் சேர்ந்து இருக்கணும்-உங்களை மாதிரி! அதனாலதான் இங்கே கூப்பிட்டுக்கொண்டு வந்தேன்…” என்றான்…
அவள் முகம் இதைக் கேட்டதும் மென்மையாகி விட்டது. பதில் சொல்லாமல் மௌனமாக ஐஸ்கிரீமை சுவைக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்னை உசுப்பேத்தணும்னு ஏன் தோணியது…”-அவன் மெதுவான குரலில் குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்டான்…
அவள் முகம் சிவந்தாள்…
“ஊரையே சைட் அடிச்சவருக்கு… என்னை சைட் அடிக்கணும்னு ஏன் தோணலை…?”
அவளது பதிலில் அவன் விழிகள் மின்னின.
“அவங்களும்… நீங்களும் ஒண்ணா…?”
“அதை நீங்கதான் சொல்லணும்…”
“மின்மினிகளுக்கும்… நட்சத்திரத்திற்கும் வித்தியாசம் இருக்கு ஷாலினி…”
அவன் முதன்முதலாக அவளது பெயரை மென்மையாக உச்சரிக்கவும்… அவளது முகம் மலர்ந்தது…
“நினைவில்லையோன்னு நினைச்சேன்..”
“எதை…?”
“என் பெயரை…”
“அங்கே மட்டும் என்னவாம்… என்னைக் கூப்பிடணும்னா ‘ஹலோ’தானே வாயில் வருகிறது…”
“அது சும்மா…”
“இதுவும் சும்மாதான்…”
அவர்கள் சேர்ந்து சிரித்தார்கள்… ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்து கடற்கரை மணலில் கால் புதைய நடந்தார்கள். படகோரம் அமர்ந்து நிறைய பேசினார்கள்.
“ஒரு படம் பண்ணனும் ஷாலினி…”
“இதுதான் வாழ்க்கை லட்சியம் போல…”
“யெஸ்…”
“அப்புறம் எதுக்கு அட்வர்டைஸிங் கம்பெனியில வேலைக்கு சேர்ந்தீங்க…?”
“லட்சியம் சோறு போடாதுன்னுதான்…”
‘இதுதான் இவன்…’
ஷாலினிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது.. அவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தான்… அதே சமயம்… யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான வேலையோடும்… அது தரும் சம்பளத்தோடும் இருந்தான்…
பூமியில் நன்றாக கால் பதித்துக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்த அந்த அவனின் தன்மை… அவளை மிகவும் கவர்ந்தது….
“அக்காவுக்கு கல்யாணமாகி விட்டது போல…”
“ஆறுவயதில் மகனும்… மூன்று வயதில் மகளும் இருக்கிறாங்க… இப்பப் போய் இந்தக் கேள்வியைக் கேட்கறியே…”
அவன் இயல்பாக ஒருமையில் அழைக்க… அவள் மனம் சிறகடித்தது..
“வா… போன்னு பேசறாப்புல இருக்கு…”
“வாங்குப் பெறாமல் தப்பிக்கத்தான்..”
“புரியலையே…”
“மெரினா பீச்சு வரைக்கும் உன் பின்னாலேயே வந்துட்டேண்டா மடையா… நீயின்னும் வாங்க… போங்கன்னே சொல்றியே… வா… போன்னு சொல்ல உனக்குத் தைரியம் பத்தலையான்னு நீ கேட்டு வைக்கக்கூடாது பாரு… அந்த முன்னெச்சரிக்கைதான்…”
“இப்பல்லாம்… முன்னெச்சரிக்கை பலமாயிருக்கு…”
“இனிமேலயும் பேசுறாப்புல வைச்சிக்கக் கூடாதுன்னுதான்..”
“அதையும் பார்த்திரலாம்…”
அவள் பின்னலைத் தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு தலையை ஒரு பக்கமாக சாய்த்துப் பார்த்ததில் அவன் கிறங்கிப் போனான்… அவளருகே நகர்ந்து அமர்ந்தான்…
“என்ன…?”
“என்ன… ‘என்ன’?”
அவன் அறியாதவனைப் போலக் கேட்டான்…
“உங்களுக்கு நான் எதைக் கேட்கிறேன்னு தெரியலையா..?”
“நிஜமாகவே தெரியலை…”
அவன் இன்னும் அவளை ஒட்டி அமர… அவளது உடலுக்குள் ஒருவிதமான இன்ப அவஸ்தை உருவானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் அரும்பாடுபட்டாள்
“கள்ளன்…”
“யாரை சொல்ற…?”
“வேற யாரைச் சொல்வேன்…?”
“என்னைச் சொல்றியா…?”
“அது தெரியாதாக்கும்…”
“அப்படி எதைக் கைப்பற்றினேனாம்…”
இப்போது அவளது இடையைச் சுற்றி அவனது கரம் வளைக்க அவள் பேச்சிழந்தாள்…
அவளை இழுத்து மடியில் சரித்துக் கொண்டவன் அவள் காதோரமாக சொன்னான்….
“இப்போத்தான் ஆரம்பிச்சிருக்கேண்டி… இனிமேல் தான் எல்லாத்தையும் களவாடி முடிக்கணும்…”
அந்த உள்ளங்கவர் கள்வன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்…
”தில்’லிருக்கா’ என்று சொடக்குப் போட்டு அவனை அழைத்து வம்பிழுத்தவள் அவனுடன் ஒன்றிப் போனாள்…
“எவ்வளவு தூரத்திலேடா இருக்கு…?” கார்த்திக் வினவினான்…
“எதைக் கேட்கிற…?”
“உன் ‘சவாலே சமாளி’யைத்தான் கேட்கிறேன்…”
“நானில்லாம அவ இல்லைங்கிற லெவலில் இருக்கு…”
“இதைப் பார்றா.. நிஜமாகவே அவ மனசை ஜெயிச்சுட்டியா…? ஆச்சரியமாயிருக்கே…”
“நான்தான் அவ உயிர்ங்கிறா…”
“இந்தப் பெண்களோட சைக்காலஜியே பிடிபட மாட்டேங்குதுடா மச்சான்…”
“திடீர்ன்னு என்னடா… பெண்களைப் பத்தி ஆராயக் கிளம்பிட்ட…?”
“நல்லவனாத் தெரியறவனை எந்தப் பொண்ணுக்கும் பிடிக்க மாட்டேங்குது… பொறுக்கியாத் திரியறவனை உயிராய் நினைச்சிடறாங்க… இது எப்படிடா…?”
அரவிந்தன் முறைத்த முறைப்பில் அனல் பறக்க… கார்த்திக் கைகளை உயர்த்திச் சிரித்தான்..
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.