Chapter 09

0Shares

அந்த வார இறுதியில் டிவியில் அரவிந்தன் எடுத்த டெலிபிலிம் ஒளிபரப்பானது. அந்த வாரத்துக்கான சிறந்த பிலிமாக அரவிந்தனின் படம் தேர்வு செய்யப் பட்டிருந்தது.

அந்தத் தெருவிலிருந்த பெண்கள் எல்லோரும்… ஏற்கெனவே அரவிந்தனின் கொள்கை பரப்பு செயலாளர்களாக மாறிப் போயிருந்தார்கள்.

அவனது படத்தை ஒளிபரப்பிய சேனலை மட்டுமே… அந்தச் சுற்றுப் புறத்தில் இருப்பவர்கள் அன்று பார்த்தார்கள்.

“ஏய்ய்ய்… நம்ம அரவிந்த் எடுத்த படம் டி…”

எதிர்வீட்டு டீன் ஏஜ் பெண்ணின் பரபரப்பைக் கண்ட ஷாலினி… அவஸ்தைக்கு ஆளானாள்…

அன்று மாலையிலிருந்தே அரவிந்தனைப் பாராட்டுகிறேன் பேர்வழியென்று பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொள்ள… அவள் கலவரமானாள்..

“வாவ்… என்னமா படம் எடுக்கறீங்க அரவிந்த்…”

“அந்த சீன் ரொம்ப பிரமாதம்…”

“கதை இப்படி முடியும்ன்னு நான் நினைக்கவே இல்லை…”

“கிளைமாக்ஸ் அற்புதம்…”

“பென்டாஸ்டிக் பிலிம்…”

“சொல்ல வார்த்தைகளே இல்லை…”

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாமலா… தினமும் இவர்கள் மணிக்கணக்கில் அரவிந்தனைச் சூழ்ந்து கொண்டு ‘ஜொள்ளுகிறார்கள்…’ என்று எரிச்சல் பட்டாள் ஷாலினி…

அவளுடன் அரவிந்தன் கழிக்கும் நேரம் குறைய ஆரம்பிக்க.. தன் காதலனைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவள் ஆளானாள்…

“ஏன் லேட்…?”

“வழியில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க பார்த்துட்டாங்கடி…”

“உங்க படத்தை புகழ்ந்திருப்பாங்களே….”

“ஹைய்யோ… எப்படிடீ கண்டு பிடிச்ச…?”

“இதைக் கண்டுபிடிக்க ஜோஸியரையா தேடிப் போகணும்? அதுதான் தினமும் இந்த அலப்பறையை பார்த்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருக்கேனே…”

“என்னை ஊரே புகழுது.. உனக்குத்தான் அது பிடிக்க மாட்டேங்குது…”

“ஊரே புகழட்டும்… அதில் எனக்குப் பெருமைதான்… ஆனா… அந்த ஊருக்குள்ள உங்களைப் புகழ ஒற்றை ஆம்பளை கூட இல்லையா…? எல்லாமும் தாய்க்குலம் தானா…?”

“அது… வந்து… என்னடி இது…? ரசிக்கிறதில ஆண் ரசிப்பு வேற… பெண் ரசிப்பு வேறன்னு இருக்கா..?”

“பெண்களுக்கு மட்டும்தான் உங்க படத்தை ரசிக்கத் தெரியுமா? ஆண்களுக்குத் தெரியாதா..? ஏன்.. உங்க பிரண்ட் கார்த்திக் இருக்காரில்ல.. அவருக்கு உங்க படத்தைப் பிடிக்காதா..? அவர் ரசிக்கலையா..?”

கார்த்திக் வெகுவாக பாராட்டத்தான் செய்தான்… ஆனால் அதன் பின்னால் அதை மறந்து விட்டு… இயல்வாக மற்றவேலைகளில் மூழ்கிவிட்டான்.

பெண்குலம் மட்டும்தான் அதை மறக்காமல் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்…

“என்ன பதிலையே காணோம்…”

“சொல்லிட்டாலும் நீ கேட்டுட்டுத்தான் வேற ஜோலியைப் பார்ப்ப… ஏறுடி வண்டியில… எப்பப் பாரு முறைச்சுக்கிட்டு இருக்கிறதே உன் வேலையாப் போச்சு… என்னடா… நம்மளையும் மாய்ஞ்சு.. மாய்ஞ்சு… ஒருத்தன் காதலிக்கிறேனே… அவன்கிட்ட சிரிச்ச முகமாய் இரண்டு வார்த்தை பேசுவோம்ங்கிற அறிவே இல்லை…”

“இதுக்கான பதிலை நேத்தே சொல்லிட்டேன் அரவிந்த்…”

“ஆமாண்டி… என்னைக் காதலிச்ச பின்னாலதான் நீ சிரிக்க மறந்த… அதுக்கு முன்னால புன்னகை அரசியாய் இருந்தியா..?”

“நிச்சயமாய்… இது போல சிடுமூஞ்சியாய் இல்லை…”

அரவிந்தனின் கோபத்தின் பரிமாணமம்… அவன் வண்டியைக் கிளப்பிய வேகத்திலேயே வெளிப்பட்டது…

வேகத்தை தாங்க முடியாத ஷாலினி… கீழே விழுந்து விடாமலிருக்க.. அவனது இடுப்பில் கை கொடுத்து இறுக்கி… முதுகோடு ஒட்டிக் கொள்ள… அவனது கோபம் காற்றில் கரைந்த கற்பூரமாய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது…

எதிர்காற்றில் அவளது முந்தானை பறந்து அவன் தோள்மீது படிய… கிறக்கமாக…

“ஷாலினி…” என்று அழைத்தான் அரவிந்தன்…

“ம்ம்ம்…”

“இன்னைக்கு நான் மீட் பண்ணினவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா…?”

“என்ன சொன்னாங்க…?”

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெண் கொடுத்து வைத்தவள்ன்னு சொன்னாங்க…”

“ஓஹோ… சொன்னது ஒரு பெண்தானே..?”

“எப்படிடீ… கண்டுபிடிச்ச..?”

“உங்ககிட்ட வேற யாரு இப்படி ஜொள்ளி-யிருப்பாங்க…? எல்லாம் உங்களைச் சுற்றும் ரசிகைகளில் ஒருத்திதானே இதை ஜொள்ளியிருப்பாள்ங்கிற கணக்குத்தான்…”

அது எப்படித்தான் இவளால் இப்படியான சரியான கணக்கீடுகளைப் போட முடிகிறதோ என்று ஆதங்கப்பட்டுப் போனான் அரவிந்தன்…

இறுக்கிப் பிடிக்காமல் ஷாலினி கொஞ்சம் சுதந்திரமாக அவனை உலவ விட்டால் தேவலையென்று அவனுக்குத் தோன்றியது.

அன்று இரவு… தூங்குவதற்கு முன்னால் நடந்த பேச்சு வார்த்தையில்… கார்த்திக்கிடம் இதை அவன் கூறியபோது… கார்த்திக் ஒரு மௌனப் பார்வையை பார்த்து வைத்தான்.

அரவிந்தன் அருமையாக படம் இயக்குபவன் தான்… ஆனால் அவனுக்கு இப்படிப்பட்ட சூட்சுமப் பார்வைகளுக்கெல்லாம் அவ்வளவு எளிதாக அர்த்தம் கண்டு பிடிக்கத் தெரிவதில்லை.

‘இவனும் சரி… ஷாலினியும் சரி… ஏன்தான் இப்படி பார்த்து வைக்கிறாங்களோ…’ எரிச்சல் பட்டான் அவன்.

“எதுக்குடா இப்படிப் பார்க்கிற…?”

அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத அரவிந்தன் வேறு வழியின்றி விளக்கம் கேட்டான்.

“அதாவது… உன்னை… ஷாலினி… தண்ணீரைத் தெளித்து இந்த ஊருக்கு நேர்ந்து விட்டுறணும்னு நியாயம் சொல்ற…”

“என்னடா… நீயும் அவளைப் போலவே விதண்டா வாதமாய் பேசற…?”

“அவ யார் கூடவாவது நின்னு பேசியிருக்காளாடா…?”

“என்கூடத்தான் பேசுவா… வேற யாரையும் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டாளே… இவ்வளவு ஏன்.. உன்கூட இத்தனை நாள் பழக்கத்திலே ஒண்ணு… ரெண்டு வார்த்தைதானே பேசியிருக்கா…”

இதைச் சொல்லும்போது அரவிந்தனின் முகம் பெருமையில் ஜொலித்தது.

“அடேங்கப்பா… பெருமை பீத்தல் களஞ்சியம்தான்.. நீ மட்டும், அவ உன்னைத்தவிர வேற யார்கூடவும் பேசக்கூடாதுன்னு நினைக்கறியே… இதையே அவ நினைச்சா மட்டும்… உன் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தறதா ஏன் நினைக்கிற…?”

“நானாடா இந்தப் பொண்ணுகளைத் தேடிப் போய் பேசறேன்…?”

“ஷாலினியையும் தேடிவந்து பேசற ஆம்பளைகள் இருக்காங்கடா… ரமேஷையும்… வினோத்தையும் மறந்துட்டியா..?”

அன்றைய இரவில் கார்த்திக் பேசியதன் சாரம்சம் ஒன்றே ஒன்றாக இருந்தது… அது பிறப்பிலிருந்தே… பெண்களால் சீராட்டப்படும் அரவிந்தன் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்…

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link