Chapter 11

0Shares

அரவிந்தன் உன்மத்தம் பிடித்தவனைப் போல ஆனான்…

“நான் பாட்டுக்கு நானுண்டு… என் வேலையுண்டுன்னு இருந்தேண்டா… மகராசி வந்தா… உனக்கு ‘தில்’லிருக்கான்னு கேட்டு உசுப்பி விட்டா… இப்பப் பார்த்தியா… சைக்கிள் கேப்பில வேற எவன் பின்னாலேயோ போகப் பார்க்கிறா…”

“சைக்கிள் கேப்பில அவ ஏற வேண்டிய வண்டியில வேற எவளாவது ஏறிஉட்கார்ந்தா… இப்படித்தான் ஆகும்…”

“ஆக விட்டிருவேனா…?”

“என்னடா செய்யப் போகிற…?”

“அவளை வீடு புகுந்து தூக்கிக்கிட்டு வந்து தாலியைக் கட்டிறமாட்டேன்..?”

அப்படித்தான் ஆகப்போகிறதோ என்று வெகுவாக கவலைப்பட்டுப் போனான் கார்த்திக்…

அருமையான காதல் கதைக்கு இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுரை வந்த விடுமென்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வாசலில் நிழலாடியது… எட்டிப்பார்த்த கார்த்திக் ஆச்சரியப்பட்டுப் போனான்… ஷாலினி நின்றிருந்தாள்… அவர்களின் வீட்டிற்கு ஷாலினி வந்ததேயில்லை. முதன் முதலாக வந்தவளைப் பார்த்து…

“வாம்மா… வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வா…” என்று வரவேற்றான் கார்த்திக்.

ஷாலினி உம்மென்ற முகத்துடன் உள்ளே வந்தாள்…

“ஷால்…” பரவசப்பட்ட அரவிந்தனைக் கண்டு கொள்ளவில்லை…

“உட்காரும்மா…” கார்த்திக்தான் சொன்னான்.. கடினமான முகத்துடன் உட்கார்ந்தாள்… அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாத அரவிந்தனின் பரவசம் காணாமல் போனது.

“எதுக்குடா வந்திருக்கிறா…?” நண்பனிடம் முறைத்தான்… கார்த்திக் குளிர்பான தம்ளரைக் கொண்டு வந்து ஷாலினியிடம் நீட்டினான்… அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்…

“அவளே கல்யாண இன்விடேஷனைக் கொடுக்க வந்திருப்பா… அவளுக்கு ஜூஸ் கொடுத்து உபசரணை பண்ணுகிறயா…?” எரிப்பதைப் போல கார்த்திக்கைப் பார்த்தான் அரவிந்தன்…

இப்போது ஷாலினி விழிகளை உயர்த்தி அரவிந்தனை நேர்பார்வை பார்த்தாள்.

“இன்விடேஷன் கொடுத்தா… முத ஆளா வந்து… முதல் பந்தியில் உட்கார்ந்து கொட்டிக்கிறணும்கிற உத்தேசமா…?” என்று கேட்டாள்.

“ஏய்ய்…?” சுட்டு விரலை நீட்டி ஆவேசப்பட்டான் அரவிந்தன்…

அதைக் கொஞ்சம்கூடச் சட்டைசெய்யாமல் கார்த்திக்கைப் பார்த்த ஷாலினி…

“அண்ணா…” என்று அழைத்தாள்.

“என்னையாம்மா சொல்ற…?” அவன் பாசத்தில் சிக்குண்டான்…

“உங்களைத்தான் சொல்கிறேன்… பின்னே… இவரையா சொல்ல முடியும்….?” அவள் நையாண்டியாகக் கேட்டாள்…

“சொன்னாலும் சொல்லுவடி… கல்யாணம் பண்ணப் போறேல்ல… இப்படிக் கதை சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது..”

“அது உங்க புத்தி…”

“உன் புத்தி என்ன புத்தி…? காதலிக்கிறது ஒருத்தனை.. கல்யாணம் பண்ணிக்கிறது வேற ஒருத்தனையா…?”

“பழக்கதோஷம்… இப்படித்தான் பேசச் சொல்லும்..”

“உன்கூடப் பழகிய தோஷமா…?”

“சும்மா சிலுப்பிக்க வேண்டாமுன்னு சொல்லுங் கண்ணா… எப்பப்பாருங்க… யாராவது ஒரு பெண்ணுகிட்ட இவரு கடலை போடறாரு… இல்லேன்னா… இவர்கிட்ட பொண்ணுக கடலை போடறாங்க… இதைப் பார்த்துக்கிட்டு இருக்கிறதே எனக்கு பிழைப்பாய் போயிடுச்சு…”

“அதுக்குத்தான் ரெண்டு வாரமாய் பிடி கொடுக்காம ஓடறியேடி… இன்னும் என்ன?”

“எந்த செகண்டில்… எந்தப் பொண்ணு… இவர் பின்னால தொத்திக்குமோன்னு… பயந்து… பயந்து.. இவரு வண்டியில ஏறுறதுக்கு… பேசாம ஆட்டோவிலிலேயே நிம்மதியா போய்விடலாம்…”

“அதோடு ஏண்டி நிறுத்திக்கிட்ட…? அடுத்தவனை நிம்மதியா கல்யாணம் பண்ணிக்கலாமுன்னும் சொல்ல வேண்டியதுதானே…?”

அரவிந்தன் கோபத்துடன் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது… அமைதியாக அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் ஷாலினி… அவள் விழிகளில் எதுவோ தெரிந்தது..

“‘தில் இருக்கா..?'” என்றாள்..

“என்னது..?” அரவிந்தன் சோபாவை விட்டு எழுந்தே விட்டான்..

நடப்பதை சுவராஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.. எப்போது ஷாலினி தில்லைப் பற்றிப் பேசி விட்டாளோ.. அப்போதே அவன் மனதிலிருந்த கவலை அகன்று விட்டது…

‘கெட்டிக்காரியில்ல இந்தப் பொண்ணு…?’ அவன் மனம் ஷாலினியை மெச்சிக் கொண்டது…

“எதுக்கு இந்த அலட்டல்…?”

“யாரைப் பார்த்து.. என்ன கேள்வியைக் கேட்ட..?”

“உங்களைப் பார்த்து… ‘தில்’லிருக்கான்னு கேட்டேன்… அதுக்கு இப்ப என்னாங்கறிங்க…”

“திமிராடி உனக்கு…?”

“ஆமாம்ன்னுதான் வைச்சுக்கங்க…”

“என் ‘தில்’ லைப்பற்றி உனக்குத் தெரியாதா…?”

“அது அப்போ… இது இப்போ…”

“ஓகே… என் ‘தில்’லை புரூவ் பண்ண இப்ப என்னடி செய்யணும்…?”

“‘தில்’லிருந்தா எங்க வீட்டுக்கு உங்க அப்பாம்மாவோட பெண் கேட்டு வாங்க பார்ப்போம்…”

அவள் போய் விட்டாள்… அரவிந்தன் போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான். பலத்த வாக்கு வாதத்திற்குப் பின் போனை வைத்தான். கார்த்திக்கைப் பார்த்தான்.

“நாளைக்கு அப்பாம்மா வருகிறாங்களாம்…” என்று சொன்னான்…

மறுநாள் மாலையில்… அரவிந்தனின் பெற்றோருடன் அவனுடைய அக்காவும் வந்து சேர்ந்தாள்…

“இவ எதுக்குடா வந்து நிற்கிறா…” கார்த்திக்கின் காதைக் கடித்தான் அரவிந்தன்…

“ஏண்டா… ஒரே தம்பிக்கு பெண் பார்க்க தானும் வரணும்னு அவங்களுக்கும் ஆசையிருக்காதா…?” நண்பனைக் கடிந்துகொண்டான் கார்த்திக்.

“உனக்கு இவ குணம் தெரியாது…”

“என்னடா விசயம்…?”

“இவ வாய்… எட்டு ஊரையும் நாட்டாமை பண்ணுகிற வாய்…”

“இருந்துட்டுப் போகட்டுமே…”

“பேசாமலிருந்தால்… இருந்துட்டு போகட்டும்ன்னு விட்டு விடலாம்… எனக்குப் பெண் பார்க்கப் போகும்போது இது வாயைத் திறக்காமல் இருந்து தொலைக்காதே…”

“வீணாய் பயப்படாதே…”

“உனக்கு என் பயம் புரியாது கார்த்தி… எனக்கே இருந்திருந்து ஒரேயொரு உண்மையான காதலி கிடைச்சிருக்கா… இந்த அக்காவோட திருவாயால… என் காதல் கூடு கலைஞ்சிருமோன்னு பயமாய் இருக்குடா…” அரவிந்தன் தலையில் கைவைத்தான்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link