Chapter 12

0Shares

“ஏம்மா… இன்னைக்கே பொண்ணு பார்க்கப் போயாகணுமா…?”

முதல் நாள் மாலையிலிருந்து தூங்க ஆரம்பித்த அரவிந்தனின் அக்கா ரேவதி… மறுநாள் காலையில்… குளித்து உடைமாற்றி.. நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் ஷாலினியின் வீட்டிற்கு பெண் கேட்கக் கிளம்புகையில் இப்படியொரு அபத்தமான கேள்வியைக் கேட்டாள்.

“சொன்னேன்ல்ல…” கார்த்திகைப் பார்த்தான் அரவிந்தன்…

“பொறுடா…” நண்பனை அமைதிப்படுத்திய கார்த்திக் ரேவதியின் முகம் பார்த்தான்.

“ஏன்க்கா.. கரூர்ல இருந்து கிளம்பி… எதுக்காக சென்னைக்கு வந்திருக்கீங்கன்னு நினைப்பிருக்கா.. இல்லையா…?” என்று கேட்டான்..

“எல்லாம் நினைப்பிருக்குப்பா.. எங்க வம்சத்திலேயே இல்லாத சோலியை எந்தம்பி பார்த்து வச்சிருக்கான்… எங்கேயாவது… தானாய் பெண்ணைத் தேடிக்கிறது நடக்குமா..? இவன் அந்தக் காரியத்தைப் பண்ணிட்டு… போதாக் குறைக்கு என் அப்பாம்மாவை கூட்டுச் சேர்த்துக்க பார்க்கிறான்…”

“அந்தக் கூட்டணியை உடைக்கத்தான் நீ கிளம்பி வந்தயா…?” அரவிந்தனின் உஷ்ணமாகக் கேட்டான்.

“இப்ப எதுக்குடா.. அக்காவும் தம்பியும் அடிச்சுக்கறீங்க…” அரவிந்தனின் தாய் விசாலாட்சி… அவர்களைப் பிரித்து விட்டாள்…

“இது எதுக்கு இன்னைக்கே பொண்ணு பார்க்கணுமான்னு கேட்குது…”

“ஏம்மா.. நல்ல நாளாப் பார்த்துப் பொண்ணு கேட்கப் போகலாமுன்னு கேட்டேன்… அது ஒரு குத்தமா…?”

“கிளம்பி வாரதுக்கு முன்னாடி நாள் பார்த்துட்டு வர வேண்டியதுதானே…”

“சொன்னாக் கேட்டால்தானே…”

“எல்லாக் கிழமையும் நல்ல கிழமைதான்… பொண்ணு பார்க்கக் கிளம்புகிற வழியைப் பாருங்க…”

“என்னப்பா… நீங்களும் இவனை அதட்டி வைக்காம வேடிக்கை பார்க்கறீங்க…?”

“ஆக… என்னை அதட்டி வைக்கத்தான் நீங்க எல்லாரும் கிளம்பி வந்திருக்கீங்க… எனக்காக பொண்ணு கேட்க வரலை…”

அரவிந்தனின் அப்பா வெள்ளிமலை… யோசனையுடன் மகனைப் பார்த்தார்.

“அவ உன் அக்கா அரவிந்த்…” என்றார்…

“நான் இல்லைன்னு சொன்னேனா…?”

“உன் எதிரியைப் போல ஏண்டா பேசறே…?”

“அதை அவனாப் பேசலப்பா.. அவன்கூடப் பழகிக்கிட்டு இருக்கிற அந்த மோகினிப் பேய் பேச வைச்சிருக்கிறா…”

“அப்பா வேண்டாம்… என் ஷாலினியை ஏதாச்சும் சொன்னா… நான் சும்மா கேட்டுக்கிட்டு நிற்கமாட்டேன்…”

“என்னப்பா பண்ணிடுவான்…?”

“நீ கொஞ்சம் சும்மாயிரு ரேவதி…”

“என் புருஷனே என்னை அதட்டினதில்ல… இவன் பொடிப் பயல்.. என்னை அதட்டிப் பார்க்கிறான்… நீங்களும் வேடிக்கை பார்க்கறீங்க…”

“நீயும்தான் அவன்கூட சரிக்கு சரியாய்… பேசணுமா…”

“ஊஹும்… இது சரிப்படாது… நான் ஊருக்குக் கிளம்பறேன்…”

“கார்த்திக்…! இவளை பஸ் ஏத்திவிட்டு வாடா…” அரவிந்தன் உற்சாகமானான்…

ரேவதி விழிகளில் வன்மத்துடன்…

“நான் தனியாய் போய் நின்னா… உங்க மருமகன் நம்மவீட்டைப் பத்தி என்னப்பா நினைப்பார்?” என்று கேட்டாள்.

“அதுக்காக… இப்ப அப்பாவும்… அம்மாவும் என்ன பண்ணனும்ங்கிற?” அரவிந்தன் புருவங்களை உயர்த்தினான்…

“நீங்க ரெண்டு பேரும் வந்து அவர்கிட்ட என்னை ஒப்படைச்சுட்டு வாங்கப்பா…”

ரேவதியின் திட்டம் விளங்கிவிட… அரவிந்தன் பல்லைக்கடித்தான்…

“கூட வருவதைப் போல வந்து.. அப்பாம்மாவை பெண் கேட்க விடாம… கையோட கடத்திக்கிட்டுப் போறதுதான் உன் திட்டமா….?” நேரடியாகக் கேட்டு விட்டான் அவன்…

“இங்கே பாருடா அரவிந்தா… உனக்கும் எனக்கும் பேச்சில்ல… நான் எங்க அப்பாம்மா கிட்டப் பேசறேன்…”

“அவங்க எனக்கும் அப்பாம்மா… நினைவிருக்கட்டும்…”

“அப்பா… ஏற்கெனவே உங்க மருமகன் உங்க மேல கோபமா இருக்கார்… இப்ப இவன் என்னை திட்டிப் பேசறது தெரிஞ்சா என்ன செய்வாரோ…”

“ந்தா… என்கிட்டப் பேசு… அப்பாகிட்ட எதுக்கு பேசற…? உன் புருஷன் எதுக்கு என் அப்பாகிட்ட கோவமாயிருக்கார்…? சீர் வரிசை எதுவும் குறையிருக்கா…? அதுதான் கேட்டதை விட பத்து மடங்காய் அள்ளித் தந்தாச்சே..”

“உன் சீர் வரிசை யாருக்குடா வேணும்..?”

“அப்ப திருப்பிக் கொடுத்திரு…”

“நான் ஏண்டா திருப்பிக் கொடுக்கணும்…? அது என் அப்பாம்மா எனக்காக செய்த சீரு…”

“உனக்கு மட்டும்தான் செய்வாங்களா…? எனக்கு செய்ய மாட்டாங்களா…?”

“இதுக்கு மட்டும் உணக்கையாய் போட்டிக்கு வரயே.. சொந்தத்திலே பொண்ணு கட்டினாத்தான் அப்பாம்மாவுக்கு பாதுகாப்புன்னு மட்டும் ஏண்டா உன் மரமண்டையில் ஏறல…?”

“சொந்தத்தில பொண்ணா…? யாரு அது..?”

“வேற யாரு…? எல்லாம்… என் நாத்தனார்தான்…”

“யாரு…? அந்த மூக்குறிஞ்சி விமலாவா…?”

“கேட்டியாம்மா…? இது மட்டும் உன் மருமகன் காதில விழுந்தது… உண்டுஇல்லைன்னு பண்ணிடுவார்…”

“யாரை…? என்னையா…? உன் மூக்கொழுகி நாத்தனாரை என் தலையில் கட்டணும்னு அப்பாம்மாவை துரத்திக்கிட்டு பின்னாடியே நீ வந்திருக்கிற…” அரவிந்தன் குற்றம் சாட்டினான்.

ரேவதி வேஷம் கலைந்தவளாக தம்பியை முறைத்தாள்…

“ஆமாண்டா… அதுக்குத்தான் நான் வந்தேன்… என் புருசனின் தங்கையை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா… என் மாமியாரின் வீட்டுல என் செல்வாக்கும் கூடும்.. என் பிறந்த வீட்டிலும்… எப்போதும் போல கடைசி வரைக்கும் என்னை வைச்சுத் தாங்குவாங்க…”

“உன் சுயநலத்துக்கு என் கல்யாணம்தான் அகப்பட்டுச்சா…?”

“நீதான் சுயநலக்காரன்… கூடப்பிறந்தவளையும் பெத்தவங்களையும் மதிக்காம… தானா பொண்ணு தேடிக்கிட்டவன்…”

“அக்காங்கிறதுக்காக பார்க்கிறேன்…”

“அப்படி பார்க்கிறவனாயிருந்தா ஏண்டா… அடுத்தவங்க வீட்டில பொண்ணுகட்ட நினைக்கிற…?”

“ஊஹூம்… இது வேலைக்கு ஆகாது… அப்பா.. அம்மா… உங்க ரெண்டு பேருக்கும் ஒன்ணு சொல்றேன்.. நான் கட்டினா ஷாலினியைத்தான் கட்டுவேன்… இல்லேன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்… அப்புறம் உங்க இஷ்டம்…”

வெள்ளிமலை மனம் தளர்ந்தார்… விசாலாட்சி ஆடிப்போய் விட்டாள். தன் பாச வலை அறுபட ஆரம்பிப்பதை ரேவதி உணர்ந்தாள்.

“நமக்கிருக்கிறது ஒற்றை மகன்…”

“அப்பா… நான் உங்களுக்கு பிள்ளையில்லையாப்பா…?”

“நீ பொண்ணும்மா… அவன்தானே  கொள்ளி போடறவன்…” அரவிந்தனின் பெற்றோர் பெண் பார்க்க கிளம்பி விட்டனர்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link