Chapter 13

0Shares

ஷாலினியின் பெற்றோர் முக இறுக்கத்துடன் அவர்களை வரவேற்றார்கள். அவர்களுக்கு அரவிந்தன் பெண் கேட்டு வந்ததில் சற்றும் உடன்பாடில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படையாகத் தெரிந்தது.

போனால் போகிறது… என்ற பாவனையுடன் “உட்காருங்க…” என்றார் வேதாச்சலம்-ஷாலினியின் அப்பா…

“என்னடா இது… எதிரிகளை ரிஸீவ் பண்றதைப் போல… ரிஸீவ் பண்றாங்க…” கார்த்திக் முணுமுணுத்தான்…

“விடுடா… அந்த வினோத் கடன்காரன் முந்திக்கிட்டு பெண்ணைக் கேட்டுத் தொலைச்சிட்டான். நாம இதையெல்லாம் கண்டுக்க கூடாது…” அரவிந்தன் சன்னக் குரலில் பதில் சொன்னான்.

“உன் டெலிபிலிம் பெருமையை டீன்ஏஜ் கேர்ள்ஸ்ங்க மத்தியில பரப்புகிற வேலையைப் பார்த்த நேரத்தில் நீ உருப்படியாய் இந்த வேலையைப் பார்த்திருக்கலாம்… இப்பப் பாரு… சைக்கிள் கேப்பில… பானுவும்… சாதனாவும்… ஷாலினியை முந்திக்கிட்டு உன் டூவீலரின் பின்சீட்டைப் பிடிச்சாங்க… அதே சைக்கிள் கேப்பில… அந்த வினோத் உன் ஆளோட வீட்டையே வளைச் சிட்டான்…” கார்த்திக் இரக்கமில்லாமல் சொன்னான்…

“நீயுமாடா கார்த்தி…” என்று தீனக்குரலில் கேட்ட அரவிந்தனின் வார்த்தைகளில்… ‘யூ டூ புருட்டஸ்…?’ என்ற சீஸரின் வேதனை தொனித்தது…

“நண்பேன்டா…” கார்த்திக் போர் முரசைக் கைவிட்டு… நண்பனின் தோள் பற்றித் தட்டிக் கொடுத்தான்..

எல்லோருக்கும் ஷாலினியின் வீட்டில் ஜூஸ் கிடைத்தது.

இரு வீட்டாரும் பேச்சை ஆரம்பிக்காமல்… ஒரு பொய் முகமூடியைப் போட்டுக் கொண்டு உரையடினார்கள்.. பொத்தாம் பொதுவான பேச்சின் சாராம்சத்தில் ஷாலினியின் அண்ணன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜீனீயராக இருப்பது தெரியப்படுத்தப் பட்டது…

ரேவதி உடனே.. தன் பங்குக்கு தன் கணவரின் பெருமைகளை அள்ளி விட்டாள்… ஃபாரெஸ்ட் ஆபிசரான அவரின் தங்கையைப் பற்றி மறக்காமல் சொன்னாள்.

ஷாலினியின் பெற்றோர் அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை…

வார்த்தைகள் விரயமாகிக் கொண்டிருந்த அந்த முற்பகல் வேளையில்… பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த கார்த்திக்… பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டான்.

“எல்லாம் சரிதான்ம்மா… நாம இப்ப எதுக்கு வந்திருக்கிறோமுன்னு இவங்ககிட்ட நீங்க சொல்லவே இல்லையே..” என்று விசாலாட்சியைப் பார்த்து கேட்டு வைத்தான்…

‘உன்னை யாரும் இது பத்தி சொல்லச் சொல்லிக் கேட்டாங்களா…’ ஷாலினியின் தாய் கோமளம் கார்த்திக்கை பார்வையால் சுட்டாள்.

வேறு வழியின்றி.. வந்த வேலையைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் வெள்ளிமலை…

“இவன் அரவிந்தன்… எங்கள் மகன்.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்…” வேதாச்சலத்திடம் அவர் கூற…

“ஏன் தெரியாம…? அதுதான் தம்பி… எப்பப் பார்த்தாலும் ரோட்டில் ஏதாச்சும் பொண்ணுகூட பேசிக்கிட்டே இருப்பாரே…” என்று அவர் கிண்டலாகப் பதில் சொன்னார்.

அரவிந்தனின் ‘கன்னிராசி’ மகிமையைப் பற்றி அவன் பிறந்ததிலிருந்து அறிந்திருந்த வெள்ளிமலை வேதாச்சலத்தின் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

“அட்வர்டைஸிங் கம்பெனியில் வேலை பார்க்கிறான்…”

“அதுவும் தெரியும்…”

“இவனுக்கு உங்க பொண்ணு ஷாலினியைக் கேட்டுத்தான் நாங்க இப்ப வந்திருக்கோம்…”

வெள்ளிமலை.. மகனுக்காற்ற வேண்டிய கடமையை ஆற்றிவிட்டார். வேதாச்சலத்தின் முகம் இருட்டுக்குப் போனது.

“ஷாலினிக்கு ஒரு என்ஜினீயரைத்தான் மாப்பிள்ளையா தேடிக்கிட்டு இருந்தோம்…”

“என் மகனுக்கும் அதே அளவு சம்பாத்தியமிருக்கு…”

“இருக்கலாங்க… ஆனா… என்ஜினீயர் மகனைப் பெத்தவங்க ஒரு என்ஜினீயருக்குத்தான் பொண்ணு கொடுக்கணுமுன்னு நினைச்சதில தப்பில்லையே…”

“எங்க பையன் உங்க பெண்ணை விரும்பறான்..”

“எங்க பொண்ணு பதிலுக்கு விரும்பணுமே…”

இதைக் கேட்ட வெள்ளிமலையின் முகத்தில் மெலிதான கோபம் படற.. ‘தேவையாடா எனக்கு…?’ என்ற கேள்வியுடன் மகனைப் பார்த்தார்.

அவன் வீட்டுக்குள் பார்க்க… ஷாலினி வெளிப்பட்டாள். அழகான அவளைக் கண்டதும் விசாலாட்சியின் முகம் மலர்ந்து விட்டது… ரேவதியின் முகம் விழுந்து விட்டது.

“அப்பா… நானும் இவரை விரும்பறேன்…” என்று ஷாலினி சொல்லியதும்… வெள்ளிமலையின் முகத்தில் வெளிச்சம் படர்ந்தது.

‘இப்ப என்ன சொல்றீங்க…?’ என்ற பார்வையுடன் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார் அவர்…

“ஷாலினி..! உள்ளே போ…” – வேதாச்சலம் அதட்டினார்.

“இது என் கல்யாணத்தைப் பத்தின பேச்சுப்பா… நான் ஏன் உள்ளே போகணும்…?” அவள் சட்டமாக அமர்ந்து கொண்டாள்..

“ஆக்சுவலா… உன்னைவிட இவளுக்குதாண்டா ‘தில்’லு அதிகமா இருக்கு…” கார்த்திக் ரகசிய கமெண்ட் அடித்தான்.

வேதாச்சலம் என்ன செய்வதென்று புரியாமல் மனைவியைப் பார்த்தார். இக்கட்டான நேரங்களில் ஆண்கள் ஏன் பெண்களின் உதவியை நாடுகிறார்கள் என்று கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான்.

அது ஏன் என்பதை சற்ற நேரத்தில் கோமளம் அவனுக்கு புரிய வைத்தாள்.

“இங்கே பாருங்க… எங்க ஷாலினிக்கு விவரம் பத்தாது… அவளைப் பெண் கேட்டு.. என்ஜினீயர் மாப்பிள்ளை வந்து கல்யாணத்தை பேசி முடிச்சாச்சு… அந்த தம்பி தங்கக்கம்பி.. உங்க பிள்ளையைப் போல எப்பப் பார்த்தாலும் பொண்ணுககிட்ட பேசிப் பழகற ரகமில்ல.. மாடியிலதான் குடியிருக்கிறார். எங்க ஷாலினியின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்த்தில்ல… உங்க பெண்ணாயிருந்தா.. நீங்க எந்த மாப்பிள்ளைக்கு பெண் கொடுப்பீங்க..?”

கோமளம் பேசிய விதத்தில் விசாலாட்சியின் மனம் வெகுவாக காயப்பட்டு விட்டது.

அவள் உடனடியாக கோமளத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்..

“ஆம்பளைகன்னு இருந்தா… அப்படியிப்படின்னு பொம்பளைப் புள்ளைக்கிட்ட பேசிச் சிரிக்கத்தான் செய்வாங்கம்மா… இதைப் போய் ஒரு பேச்சாய் பேசறிங்களே…?” என்று போரை ஆரம்பித்து வைத்தாள்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link