Chapter 16
“மாப்பிள்ளையும்… பெண்ணும்… மாலையை மாத்திக்கங்க…”
கோவிலின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்த அய்யர் உத்தரவிட்டார்.
சுற்றிலும்… நண்ர்களும்… நண்பிகளும்… புடைசூழ… மணக் கோலத்தில் அமர்ந்திருந்த அரவிந்தனும்… ஷாலினியும்… மாலை மாற்றிக் கொண்டார்கள்…
“பொண்ணு கழுத்தில தாலியைக் கட்டுங்கோ…”
மந்திரங்களை உச்சரித்தபடி அய்யர் கூற.. அரவிந்தன் ஷாலினியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
ஷாலினி கண் கலங்கினாள்… மனதுக்குப் பிடித்தவர்களை மணந்து கொண்ட ஆனந்தம் ஒருபக்கம்… அதைப் பெற்றவர்களை எதிர்த்துச் செய்ய நேரிட்டு விட்ட மனவருத்தம் மறுபக்கம்.
“எதுக்குடா இப்ப இவ அழுகிறா…?” அரவிந்தன் ஷாலினியை முறைத்தான்..
“உன்னைப் போல என் தங்கச்சியும் இருக்க முடியுமாடா…? அது மனசில பெத்தவங்க மேல நினைப்பு வந்திருக்கும்…” கார்த்திக் சமாதானப்படுத்தினான்…
“நான் போதும்ன்னு வந்துட்டாளில்ல… இன்னும் எதுக்கு தேவையில்லாத பாசம்…?”
“அடேய்… அரவிந்தா… இப்பத்தான் என் தங்கச்சி கழுத்தில தாலியைக் கட்டியிருக்க… உடனே புருச லட்சணத்தை ஆரம்பிச்சுட்டியா… அடக்கி வாசி… இது கோவில்…”
“இதை அவளுக்குச் சொல்லு… பார்க்கிறவங்க.. என்னவோ இவளை நான் கடத்திக்கிட்டு வந்து தாலி கட்டியிருக்கேன்னு நினைத்துவிடப் போறாங்க…”
அதற்குள் தன்னைத் தேற்றிக் கொண்ட ஷாலினி கண்களைத் துடைத்துக் கொண்டாள்… அரவிந்தனின் அருகே நெருங்கி நின்றாள்..
அவள் கழுத்தில் மின்னிய புதுத் தாலிச் சரடு… அவளின் சொந்தத்தை உணர்த்த அரவிந்தனின் கோபம் பறந்துவிட்டது…
‘இவள் என் மனைவி…’
அவன் மனம் இனிக்க… அவளைப் பார்க்க… அவள் விழிகளில் அவனை அதட்டினாள்…
“சாமியைப் பார்த்துக் கும்பிடுங்க…”
தீபாராதனை ஒளியில் அம்மனின் முகம் ஒளிர்ந்தது.. கண் மூடி வேண்டிக் கொண்டிருந்த ஷாலினியைப் பார்த்தவன் தானும் கண் மூடி வேண்டி நின்றான்.
“பிரசாதம் வாங்கிக்கங்க…”
தீபாராதனைத் தட்டின் கற்பூர ஜோதியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவர்கள்… குங்கும பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்கள்.. அரவிந்தன், தன் கையிலிருந்த குங்குமத்தை ஷாலினியின் நெற்றியில் வைத்து விட… அவள் மனம் நெகிழ்ந்தாள்.
பிரகாரத்தை வலம் வந்த போது…
“தேங்க்ஸ்..” என்று அவளிடம் சொன்னான் அரவிந்தன்..
“எதுக்கு…?” புரியாமல் கேட்டாள் ஷாலினி.
“என்னை நம்பி என் பின்னால் வந்ததற்கு…”
“உங்களை நம்பாமல் வேறு யாரை நான் நம்புவேன்…?”
மீண்டும் அவனை கௌரவப் படுத்தினாள் ஷாலினி… அவர்கள் ரெஜிஸ்டர் ஆபிஸிற்கு போனார்கள். திருமணத்தை பதிவு செய்தார்கள். நண்பர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட… சட்டப்படி கணவன் மனைவியாக வெளியில் வந்தார்கள்.
ஸ்டார் ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து கொடுத்தான் அரவிந்தன்… கேலி செய்தபடி சூழ்ந்திருந்த நண்பர் பட்டாளம்… விடைபெற்று பிரிந்து போய்விட.. கார்த்திக் மட்டும் கூட இருந்தான்.
“ஷாலினியோட வீட்டுக்கு போகலையா அரவிந்த்…?” காரில் வரும் போது கார்த்திக் கேட்டான்.
“வேண்டாம்…”
“ஏண்டா.. ஆயிரம்தான் இருந்தாலும்.. அவங்க ஷாலினியைப் பெத்தவங்க…”
“எனக்கும் பெத்தவங்க இருக்காங்கடா…”
கார்த்திக் ஷாலினியைத் திரும்பிப் பார்த்தான்.. பின் சீட்டில் அரவிந்தனின் அருகே அமர்ந்திருந்தவள்… மௌனமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள்.
ஒரு பெருமூச்சுடன் சாலையைப் பார்த்தான் கார்த்திக்.
அரவிந்தனின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
“வீட்டை பூட்டிட்டுத்தானே வந்த..?” கார்த்திக்கிடம் கேட்டான் அரவிந்தன்…
“பக்கத்து வீட்டு மாமிகிட்ட சாவியைக் கொடுத்திருந்தேண்டா…”
“வீட்டில் லைட் எரியுதே… யார் வந்திருப்பா…?”
அரவிந்தன் சந்தேகத்துடன் கேட்டபடி… மாலையும் கழுத்துமாக காரை விட்டு இறங்க… அவனுடன் ஷாலினியும் இணைந்து நின்றாள்.
“அப்படியே நில்லுங்க…”
வீட்டுக்குள்ளிலிருந்து வெளிப்பட்டாள் விசாலாட்சி. அவள் கையில் ஆரத்தி தட்டு இருந்தது.
“அம்மா…” அரவிந்தனின் நா தழுதழுத்தது.
“நல்ல நாளும் அதுவுமா ஏண்டா உணர்ச்சி வசப்படற…? மருமக பக்கத்தில் நில்லு…”
எதுவுமே நடக்காததைப் போல… விசாலாட்சி… இயல்பாக ஆரத்தி எடுத்து… மருமகளின் நெற்றியில் பொட்டிட்டு வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள்…
“வாழ்த்துக்கள் அரவிந்தா…” வெள்ளிமலை வீட்டுக்குள் கை கொடுத்தார்.
“அப்பா…” என்று தோளில் சாய்ந்த மகனின் முதுகில் தட்டிக் கொடுத்து…
“இட்ஸ் ஆல்ரைட் மை டியர் சன்..” என்று பரிவாகச் சொன்னார்.
பூஜை மாடத்தில் காமாட்சி விளக்கை ஏற்றச் சொன்னாள் விசாலாட்சி… முறைப்படி அவள் கற்றுக் கொடுத்த சாஸ்திர சம்பிரதாயங்களினால்-அலைபாய்ந்த ஷாலினியின் மனம் அமைதியடைந்திருந்தது.
“அம்மாவோடு சேர்ந்து நில்லுங்கப்பா…”
அரவிந்தனும்… ஷாலினியும்… அவர்களின் பாதம் பனிந்து எழுந்தார்கள்.
“இதைப் போலவே… ஷாலினியைப் பெத்தவங்க கிட்டயும் இவங்க ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டா தேவலைங்க…”
ஷாலினியின் மனமறிந்த மாமியாராகச் சொன்னாள் விசாலாட்சி…
“கார்த்திக்கை முதலில் அனுப்பி… விசயத்தை சொல்லச் சொல்லுவோம்… பின்னாடியே இவங்களைக் கூப்பிட்டுக்கிட்டுப் போவோம்…” வெள்ளிமலை யோசனை சொன்னார்.
கார்த்திக் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டு ஷாலினியின் வீட்டை நோக்கிச் சென்றான்.
சென்றவன் போன வேகத்தில் திரும்பி வந்து விட்டான்.
“என்னப்பா…?” வெள்ளிமலை விசாரித்தார்.
“அவங்க ஷாலினியின் அண்ணனிடம் போய் விட்டாங்களாம்ப்பா.. வீடு பூட்டிக் கிடக்கு… மாடி வீட்டு வினோத் தான் அவங்க அமெரிக்கா போய்விட்ட தகவலைச் சொன்னான்…”
ஷாலினியின் முகம் கன்றிவிட்டதை இரக்கத்துடன் பார்த்தாள் விசாலாட்சி…
“கவலைப்படாதேம்மா…” மருமகளின் தலையை வருடினாள்.
வெளியூரில் இருந்த அரவிந்தனின் பெற்றோர், மகன் தங்களைக் கேட்காமல் காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்தும் அதற்காக கோபம் கொள்ளாமல் கிளம்பி வந்து அவர்களை அசிர்வதிக்க… அருகிலேயே இருந்த ஷாலினியின் பெற்றோர்… விமானத்தில் ஏறிப் பறந்து விட்டார்கள்.
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.