Chapter 19
ஷாலினி, எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.
அந்திவானம் அழகாக இருந்தது… கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அரவிந்தன்… அவனருகே… காற்றில் பறந்த சேலை முந்தானையை இழுத்துச் செருகியபின் அவள் அமர்ந்தாள்.
“அதை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற…?” அரவிந்தன் விழிகளால் அவளை மேய்ந்தான்.
“எதை..?” என்று கேட்டவாறு அவனை நிமிர்ந்து பார்த்த ஷாலினி… அவன் பார்வையைக் கண்டு கொண்டாள்.
‘எப்படிப் பார்க்கிறான்’ அவள் முகத்தில் வெட்கத்துடன் ஒரு செல்ல கோபம் சூழ்ந்தது…
“உன் சேலை முந்தானையைத்தான் சொல்றேன்…”
“ஆளைப்பாரேன்… இன்னும் அதே பார்வையை பார்த்துக்கிட்டு…”
“இன்னும்ன்னா…?”
“நமக்கு கல்யாணம் ஆன பின்னாடியும்ன்னு… அர்த்தம்…”
“கல்யாணமானா.. வேற பெண்ணைத்தான் சைட் அடிக்கக்கூடாது. பெண்டாட்டியையுமா சைட் அடிக்கக் கூடாது?”
“ஸ்வீட் ராஸ்கல்…”
“யார்…?”
“என் புருஷன்தான்…”
இதை இனிப்பான ஒன்றை உச்சரிப்பதைப் போல மகிழ்ச்சியுடன் உச்சரித்தவளை காதலுடன் பார்த்தான் அரவிந்தன்.
இந்தப் பெண்களுக்கெல்லாம் ‘புருஷன்’ என்ற சொல்லின்மேல் ஏனிந்த அதீத ஈர்ப்பு என்று நினைத்துக் கொண்டவனுக்கு-தனக்கும்… ‘பெண்டாட்டி’ என்ற சொல்லின் மீது அதீதமான ஈர்ப்பு இருப்பது நினைவிற்கு வந்தது.
“என்ன யோசனை…?”
“எப்படி என் பொண்டாட்டி இத்தனை அழகாயிருக்கான்னுதான்…”
அவனது அஸ்திரம் குறிதவறாமல் மிகச் சரியான இடத்தில் பாய்ந்தது…
ஷாலினி முகம் மலர்ந்தாள்.
‘ஆதி காலத்திலிருந்து பெண்களை ‘தேனே’ ‘பூவே’ ன்னு ஏன் ஆம்பளைகள் வர்ணிச்சாங்கன்னு இப்பத்தான் காரணம் புரியுது…’
அரவிந்தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்…
முறைத்துக் கொண்டிருக்கும் பெண்களைக்கூட அழகாயிருக்கிறாய்… பயமாயிருக்கிறது… என்று பேச வைக்கும் வித்தை கைவரப் பெற்றவன் அவன்…
என்ன ஒன்று.. இந்த வித்தையை ஷாலினியிடம் அதிகமாக அவன் பிரயோகித்ததில்லை… அவள் மற்ற பெண்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டிருந்தாள். உண்மையிலேயே அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
“என்ன பார்வை வேண்டிக்கிடக்கு…?”
“அழகாயிருந்தா பார்க்க மாட்டாங்களா…?”
“இப்படி சொல்லிச் சொல்லியே… எத்தனை பேரைக் கவிழ்த்தீங்க…?”
“ஏய்… நான் உன்னோட ஆள்டி…”
“அதுதான் பார்த்தாலே தெரியுதே… வரும்போதே வழியில் நாலு பெண்களை வண்டியில் ஏற்றிக்கிட்டு
வந்து… வழியெல்லாம்.. ஸ்டாப்.. மாத்தி… மாத்தி… இறக்கிவிட்டுட்டு.. என்னையும் பிக்அப் பண்ணிக்க வந்து சேர்ந்திருக்கீங்க… நானும் ரோசம் கெட்டுப் போய் உங்க பின்னாலே உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்..”
“ஏண்டி… வர்ற வழியில… லிப்ட் கேட்டாங்க… எப்படி மாட்டேன்னு சொல்றது…?”
“அதெப்படி வரிசையாய் நின்னு… உங்ககிட்ட மட்டும் லிப்ட் கேட்கறாங்க…?”
“என் முகத்திலே ‘நல்லவன்’னு எழுதி ஒட்டியிருக்குடி…”
“‘போக்கிரி’ன்னு பார்த்தாலே தெரியுது…”
“நீ ஒரு முடிவோடயே இருக்க… அதான்… அப்படித் தெரியுது… நான் நல்லவன்டி… நம்பு…”
“உங்களை இந்த விசயத்தில் நான் நம்பத் தயாராயில்லை…”
“பின் சீட் காலியா இருந்தா லிப்ட் கேட்க மாட்டாங்களா…?”
“கேட்பாங்கதான்… ஆனா… அதெப்படி சார்… கரெக்டா பொம்பளைகளுக்கு மட்டுமே லிப்ட் கொடுக்கறீங்க… உங்க பின்னாலே.. ஒரு ஆம்பளைகூட உட்கார்ந்துக்கிட்டு வந்து… நான் பார்த்ததே இல்ல…”
“எவன்டி என்கிட்டே லிப்ட் கேட்கிறான்..?”
“நீங்கதான் ‘கன்னிராசிக்காரர்’ன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கே…”
“நீ இப்படியே பேசிக்கிட்டிரு…”
“உங்க ஃபிரண்ட் கார்த்திக் இருக்காரில்ல…”
“இருக்கான்… அவனுக்கென்ன…”
“நேத்து அவரோட வண்டி ரிப்பேர்ன்னு உங்ககூட டூவீலரின் வர்றேன்னு சொன்னாரா இல்லையா..?”
“சொன்னான்தான்.. அது உனக்கெப்படி தெரியும்…”
“ம்ம்… உங்க வீட்டுக்கு பக்கத்திலதான் நாங்களும் குடியிருக்கோம்…”
“நாங்கன்னு ஏண்டி… வினோத்தையும்… ரமேஷையும் கூட்டு சேர்த்துக்கிற…”
“இப்ப அடிதான் வாங்கப் போறீங்க… நாங்கன்னு சொன்னது என் குடும்பத்தை…”
“அப்படியா… ஒரு செகண்ட் பக்குன்னு ஆயிருச்சு…”
“ஆகும்… ஆகும்.. இல்லாததை இருக்கிறதா நினைச்சுப் பார்த்ததுக்கே இப்படி பக்குன்னு ஆகிருச்சே… நிஜமாகவே தினத்துக்கு ஒரு பெண்ணை டூவீலரில் உட்காரவைச்சு சுத்திக்கிட்டு இருக்கீங்களே… அதைப் பார்க்கிற எனக்கு எப்படியெல்லாம் இருக்கும்…?”
“உனக்கு பரந்த மனப்பான்மையே இல்லை ஷாலினி…”
“ஓஹோ… கூடத் தங்கியிருக்கிற உயிர் சிநேகிதர்-உங்க கூட ஒரே ஆபிஸில் வேலை செய்கிறவர்… அவரை டூவீலரில் கூப்பிட்டுக்கிட்டுப் போகாத நீங்க… பரந்த மனப்பான்மையைப் பற்றிப் பேசறீங்க…?”
“ஏய்ய்… வழியில ஒருத்தங்களுக்கு லிப்ட் கொடுக்க வேண்டியிருந்துச்சுடி…”
“யார் அந்தப் பெண்…?”
“அதெப்படி கரெக்டா… அது பெண்ணுன்னு கண்டு பிடிச்சே…?”
“உங்க வண்டிதான் தந்தை குலத்தைக் கண்டா நிற்கவே நிற்காதே…”
ஷாலினியின் முகத்தில் கோபம் தெரியும்… அந்த கோபத்திற்கு அரவிந்தன் பயப்படுவான்.. அழகாயிருக் கிறாய் என்று சொல்லியெல்லாம் அவளிடம் தப்பிக்கவே முடியாது; அவன் தப்பிக்கவும் விரும்பியதில்லை…
அந்த ஷாலினி… இன்று.. மலர்ந்த முகத்துடன் அவனது பார்வைக்கு வெட்கி தலை குனிகிறாள். அழகாயிருப்பதாக அவன் சொல்லியதும் மகிழ்ந்து போகிறாள்.
இந்த மாற்றத்தை உண்டு பண்ணிய வல்லமை படைத்தது எது…?
அது… அவளது கழுத்தில் மஞ்சள் சரடாக மின்னியது… எப்போது அவள் கழுத்தில் தாலியைக் கட்டினானோ… அப்போதே அவள் மனதிலிருந்த சலனம்… சஞ்சலமெல்லாம் மறைந்து இனம் புரியாத அமைதி அவளது நெஞ்சில் பரவி விட்டது…
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.