Chapter 21

0Shares

திருமண மண்டபம் ஒன்றில் அரவிந்தன்-ஷாலினியின் திருமண வரவேற்பு நடந்தது..

மண்டபம் முழுவதும் கூட்டம் நிரம்பியிருக்க.. ஷாலினி பெருமையாக உணர்ந்தாள்..

வரிசையில் வந்த உறவினர்களையும்.. நண்பர்களையும் அரவிந்தன் அறிமுகப்படுத்தியபோது மரியாதையுடன் கை குவித்து வணக்கம் சொன்னாள்..

அதில் வெள்ளிமலைக்கும்.. விசாலாட்சிக்கும் மனம் கொள்ளாத பெருமை..

“அருமையாண மருமக உனக்கு கிடைச்சிருக்கா விசாலாட்சி.. அழகா இருக்கா..! மரியாதை தெரிஞ்சவளா இருக்கா..! இந்தக் காலத்திலே இப்படிப் பொண்ணு கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும்..”

விசாலாட்சியின் அத்தை மகள் சொல்லி விட்டுப் போக.. ரேவதி நொடித்தாள்..

“ஆமாமா.. உங்க மருமகளின் பெருமையை நீங்கதான் மெச்சிக்கணும்.. வீட்டுக்குள்ள வாரதுக்கு முன்னாடியே வீட்டு மாப்பிள்ளையை பிரிச்சுவச்சிட்டா.. இவளை மருமகளா கொண்டுவர நீ குடுத்துவச்சிருக்கணுமா..?”

“விடு ரேவதி.. ஏதோ மனதில் பட்டதை சொல்லிட்டுப் போறா..”

“எப்படி மனசில் படும்ன்னு கேட்கிறேன்..”

“உன் புருஷனுக்கு டெல்லியில கான்பரன்ஸ் இருக்கு.. அதனால வரமுடியலைன்னு நீதானே சொன்னே.. அதுக்கும் ஷாலினிக்கும் என்ன சம்பந்தம்..? இவளா மாப்பிள்ளையை கான்பரன்ஸில் கலந்துக்கப் போகச் சொன்னா..?”

“அவர் கான்பரன்ஸ் முடிஞ்சுவந்த பின்னால் இந்த ரிசப்சனை வச்சிருக்கலாமே.. அதுதானே அவருக்குமரியாதை..”

“இது ஒரு பேச்சா ரேவதி..? உன் புருசன் கான்பரன்ஸ் முடிஞ்சு வர ஒரு மாசமாகும்.. அது வரைக்கும் ரிசப்சனை தள்ளிப் போட முடியுமா..?”

“மனமிருந்தா மார்க்கமிருக்கும்..”

“மனசிருந்தா மார்க்கம் இருக்கும். ஆனா.. பிடிவாதத்துக்கு மார்க்கம் இருக்க முடியாது.. ஏன்.. இவ்வளவு பேசறயே.. மாப்பிள்ளை நாளைக்கு காலையிலேதானே டில்லிக்கு கிளம்பிப் போகப் போகிறார்..? போகிற வழியில் இந்த ரிசப்சனில் தலையை காண்பித்து விட்டுப் போகலாமில்லையா..?”

“ஏம்மா.. அவரே தூரம் தொலைவுக்குப் போகிற டென்சனில் இருப்பார்.. அதுதான் என்னை அனுப்பி வைத்திருக்கிறாரே.. இதுவே பெரிசும்மா..”

“உன்னைக் கொண்டாடினோம் ரேவதி.. நீ உன் தம்பியைக் கொண்டாட மாட்டேன்கிற..”

“அவன் என்னைக் கொண்டாடமாட்டேன்கிறான்.. இது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது..”

“உன் நாத்தனாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தான் உன்னைக் கொண்டாறதா அர்த்தமாகுமா..? போடி.. போய் வந்திருக்கிறவங்களைக் கவனி..”

மகளைக் கண்டித்துப் பேசி வைத்தாள் விசாலாட்சி.. ஆனாலும்.. ரேவதி தன் வேலையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தாள்..

பந்தி நடந்து கொண்டிருந்தது.. நண்பர்கள் மட்டும் துணையிருக்க.. கோவிலில் தாலிகட்டி.. ரிஜிஸ்ட்ரர் ஆபிஸில் கையெழுத்துப் போட்டு திருமணம் பண்ணிக் கொண்ட ஷாலினிக்கு அந்த திருமண வரவேற்பு ஒருவிதமான மகிழ்வைத் தந்தது..

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் வரும் நிகழ்வு..

அந்த நிகழ்வு மிகவும் சாதாரணமாக நடந்து முடிந்ததில் அவளுக்குள் மெலிதான வருத்தம் ஒன்று இருந்தது…

இன்று அது மறைந்தது என்று நினைத்துக் கொண்டாள் ஷாலினி.. அவளது மலர்ந்த முகத்தைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தனுக்கு.. அவள்மேல் அனுதாபம் சுரந்தது..

“என்னம்மா.. புதுப்பொண்ணு.. தனித்தனி இலையில் உட்கார்ந்தா.. எங்க அரவிந்தனின் எச்சிலைச் சாப்பிடாம தப்பிச்சுரலாமுன்னு பார்க்கறியா..?”

உறவினர் வீட்டுப் பெண்மணி ஒருத்தி.. கலகலப்பாக பேசியபடி.. அரவிந்தனின் இலையிலிருந்த இனிப்பை எடுத்து ஷாலினியின் கையில் வைத்தாள்..

“ம்ம்.. சாப்பிடு..”

அவள் மிரட்டியபோது சுற்றியிருந்த மற்ற பெண்கள் சிரித்தார்கள்..

“பெரியம்மா.. எச்சில் இனிப்பைச் சாப்பிடச் சொல்லி இப்பப் போய் கையில் கொடுக்கறீங்களே.. அவங்களுக்கு கல்யாணமாகி.. மூணு நாளாகுது.. இன்னுமா.. அரவிந்தனின் எச்சில் ஷாலினிக்கு பழகாமல் இருக்கும்..?”

துடுக்குட்தனமாகக் கேட்ட அந்தப் பெண்ணின் பெயர் அனிதாவாம்.. அவளது பார்வை அரவிந்தனின் மேல் மையலுடன் படிவதை கவனிட்துக் கொண்டிருந்தாள் ஷாலினி.  

மற்றவர்கள் என்ன கேள்வி கேட்டாலும்.. அரவிந்தனை மையப்படுத்தியே அவள் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

“என்ன.. கன்னிராசி.. இங்கேயும் பலமாய் இருக்கும் போல இருக்கே..” கணவனின் காதருகே சரிந்து கிசுகிசுத்தாள்…

“இது பிறந்து வளர்ந்த ஊர்.. அவங்கள்ளாம் சொந்தக்காரங்கடி…”

“ஸோ.. அஸ்திவாரமே.. ஜொள்ளில்தான் ஆரம்பிச்-சிருக்குன்னு ஜொள்ளுங்க..”

“நீ ஜொள்ளிலேயே இரு..”

“நீங்க இல்லையா..?”

“அவ என்னைப் பார்த்து வைச்சா.. பதிலுக்கு நானும் பார்த்து வைக்கணும்டி..”

“ஓஹோ.. அப்படியொரு கடமையிருக்கா..?”

“இல்லேன்னா.. அவ மனசு வேதனைப் படாதா..? பெண்கள் மனசு வேதனைப்பட்டா.. எனக்குத் தாங்காது ஷாலினி..”

“த்சொ.. த்சொ.. என்னே கருணை உள்ளம்..”

அரவிந்தன் வாய் விட்டுச் சிரித்தான்.. முல்லைப்பூ பல்வரிசையில் ஷாலினி மயங்கிப் போனாள்…

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link