Chapter 02
இந்திய எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவியது.. பனி, மழை என்று பாராமல் இரவு, பகல் கண் விழித்துக் காவல் காத்தும் இந்திய மண்ணில் பாகிஸ்தானியர் கால் ஊன்றி விட்டனரே என்ற ரத்தத் துடிப்பு ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனுக்குள்ளும் கொதித்துக் கொண்டிருந்தது.
இந்திய ராணுவம் போருக்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கத்திடமிருந்து செய்தி வரலாம் என்று அவர்கள் காத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் சோழவந்தானுக்கருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் வைகை ஆட்சி செய்தது.. மேலக்கால் கிராமத்து வாய்க்கால் நீரைக் குடித்தால் தேங்காய் தண்ணீர் குடித்தது போலிருக்கும் என்று அக்கிராம மக்கள் பெருமைப்படுவார்கள்.. சுற்றியுள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அங்கிருந்துதான் நல்ல தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வைகை ஆற்றுப் பாசனத்தில் மூன்று போகம் பயிர் செய்யும் செழுமையான பூமி அது.
பொன் விளையும் பூமியான அந்தக் கிராமத்தில் நாற்பது ஏக்கர் வயலுக்குச் சொந்தக்காரர் ஆன தயாநிதியின் வீட்டில் அன்று ஒரு விசேஷம்.. அவரது மூத்த மகனுக்கு பெண் பார்க்க கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்..
“அண்ணே… இது உங்களுக்கே நல்லாயிருக்கா..? கூடப் பொறந்த பொறப்புத்தான் உசத்தி… சித்தப்பன் மகள்ன்னா தள்ளி வைக்கணுமின்னு முடிவே பண்ணிட்டிங்களா.. என் மருமகனுக்கு பெண் பார்க்க செவ்வந்தி வரலாம்.. நான் வரக்கூடாதா… அவ கிட்ட மட்டும் தகவல் சொல்லிட்டு என்னை எப்படி நீங்க மறக்கலாம்…?” என்று அவரின் ஒன்று விட்ட தங்கை வம்பு வளர்த்துக் கொண்டு நின்றாள்.
தயாநிதியின் தங்கை செவ்வந்தி பேசியவளை முறைத்தாள்.
“ஆளுக்கு ஆள் உரிமை கொண்டாடுங்கடி… அக்கா, தங்கச்சி முறையில் ஊரில் ஆயிரம் ஜனம் இருக்கு… அம்புட்டு பேரும் வண்டியைக் கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு வாங்கடி… இப்போ உன்னைக் கூப்பிட்டுப் போனால் மத்த உறவு முறைக்கு யார் பதில் சொல்றது..?”
“செவ்வந்தி சொல்றதும் சரிதானே… இப்ப தயாநிதிக்கு ஒரே மகன், ஒரே மகள்தான்… ஆனா ஒன்று விட்ட அண்ணன், தங்கச்சி ஆயிரம் பேர் இருப்பாங்க… கூடப் பிறந்ததுன்னா லட்சுமணனும், சுபத்திராவும் தானே..” கூட்டத்தில் யாரோ ஒருவர் நியாயம் சொன்னார்.
தயாநிதியின் மனைவி ஈஸ்வரி கையைப் பிசைந்தாள். கணவன் வீட்டுச் சொந்தக்காரர்களில் யாரை விட்டுப் போவது..? யாரைக் கூட்டிப் போவது..? தயாநிதி துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்தார்.. சத்தம் போட்டுக் கொண்டிருந்த சித்தப்பன் மகளைப் பார்த்தார்.
“பாரும்மா… உன்னை மட்டுமென்ன ஊரையே நம்ம லட்சுமணனுக்கு பெண் பார்க்க கூட்டிக்கிட்டுப் போக நான் ரெடி.. ஆனால் பொண்ணு வீட்டுக்காரங்க சாப்பாடு போட ரெடியாயிருக்க வேண்டாமா…? அந்தப் பெண்ணையே நிச்சயம் பண்ணப் போறோம்ன்னாக்கூட ஊரே போய் இறங்கலாம்.. வெறுமனே பொண்ணுப் பார்க்கப் போகிறதுக்கு கூட்டமா போனா சரி வருமா..? லட்சுமணன் பொண்ணைப் பார்க்கணும்.. அவனுக்கும் பிடிச்சிருக்கணும். அப்புறம்தானே மத்ததெல்லாம்..? இப்ப பொறுமையா இருங்க.. என் மகனுக்கு பொண்ணு பிடிச்சிருச்சுன்னா அந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கிட்டு வந்திடலாம்… என்ன நான் சொல்றது…?”
கூடியிருந்த உறவுக்காரர்கள் சமாதானம் ஆகினர். ஈஸ்வரிக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.. கிராமங்களில் இது ஒரு அன்புத் தொல்லை.. கிராமம் முழுவதும் ஒருவருக் கொருவர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.. இதில் தனி ஒரு ஆள் பட்டினி கிடந்தாலும் சாப்பாடு கொடுத்து தூக்கி விட ஊரே ஒன்று சேரும்.. அதே போல விருந்து சமைத்தாலும் பகிர்ந்து சாப்பிட ஊரே வந்து விடும். கிராமத்தில் தனிமை என்பது யாருக்கும் கிடையாது.
எல்லோரையும் எவ்வளவுதான் காரணம் சொல்லி தடுத்து நிறுத்தினாலும் நெருங்கிய சொந்தங்கள் என்று டாடா சுமோவில் அடைந்த தங்கை குடும்பத்தாரையும், தம்பி வீட்டாரையும் எண்ணினால் பதினைந்து பேரைத் தாண்ட ‘கடவுளே’ என்று பெருமூச்சு விட்டபடி பெண் பார்க்கப் போகும் மகனிடம்,
“உனக்கு இடம் இருக்குமாடா…?” என்று வினவினார் தயாநிதி…
“டிரைவர் பக்கத்தில் ரிசர்வ் செய்திட்டேன்ப்பா… நீங்கள் யார் மடியிலாவது உட்காரப் பாருங்கள்…” என்றவாறு லட்சுமணன் முன் பக்கம் டிரைவர் அருகே ஏறி அமர்ந்தான்.
தயாநிதி யார் மடியில் உட்கார்ந்தால் தாங்குவார்கள் என்று பார்த்து தாய்க்குப் பின் தாரம் தானே தாங்க வேண்டும் என்று மனைவியின் மடிமீது அமர்ந்தார்.. ஒரு வழியாய் டாடா சுமோ கிளம்பியது.
“ஏண்டா மகனே… பொண்ணு போட்டோ கீட்டா பார்த்தியா…?” என்று வினவினார் கலைமதி, லட்சுமணனின் சித்தப்பா.
“எங்கே சித்தப்பா… அந்தப் பழக்கமெல்லாம் அவங்க குடும்பத்தில் கிடையாதாம். நேரே பார்த்தால் போதுமாம்..” அலுத்துக் கொண்டான் அவன்.
“இது என்னடி அதிசயமா இருக்கு.. அந்தக் காலத்தில் உன் சித்தப்பா என் போட்டோவ மட்டும் பார்த்திட்டு நேரே மணமேடைக்கு வந்து தாலி கட்டிட்டாரு…” பெருமையுடன் கூறினாள் சாந்தா… லட்சுமணின் சித்தி.
“அந்தக் கெரகத்த ஏண்டி இப்ப ஞாபகப்படுத்தற… டேய் மவனே போட்டாவக் காட்டி ஏமாத்திட்டாங்கடா… அந்த மூஞ்சி வேற… இந்த மூஞ்சி வேற…” கலைமதி தலையில் அடித்துக் கொள்ள சாந்தா காளி அவதாரம் எடுத்தாள்.
“ஏன்…. அந்த மூஞ்சிக்கு இந்த மூஞ்சி பத்தலையோ.. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வைச்சுக்கிட்டு பேச்சைப்பாரு பேச்சை…”
சற்று நேரம் அவர்கள் பஞ்சாயத்து நடந்து முடிய தயாநிதியின் தங்கை செவ்வந்தி வேறு ஒன்றை ஆரம்பித்து வைத்தாள்.
“லட்சுமணனுக்குத்தான் அசலூரில் பொண்ணு எடுக்கிற கஷ்டம் வந்திருச்சு.. ராமசாமிக்குத்தான் பிரச்னையே இல்லை.. கைமேல் வெண்ணையாக என் பொண்ணு சீதா இருக்காளே…”
ராமசாமி கலைமதியின் மகன்..
“ஆமாம்.. கேணச்சி நான்தானே… ஈஸ்வரி அக்கா மகனுக்கு ஊர் ஊரா வலைவீசி பொண்ணு தேடுவாங்க.. என் மகனுக்கு மட்டும் உன் பொண்ணா..? அதுக்கு வேற ஆளைப்பாரு…” சாந்தா கூறினாள்.
அவ்வளவு தான் செவ்வந்தி சீறிப் பாய்ந்து விட்டாள்.
“அம்மாடி சாந்தா அடங்கு… இங்கே ஈஸ்வரி மகனுக்கும், சாந்தா மகனுக்கும் பொண்ணு கொடுக்கணும்னு நான் தவம் கிடக்கலை. என் பெரியண்ணன் மகனுக்கும், சின்னண்ணன் மகனுக்கும் பொண்ணு கொடுக்கத்தான் தவம் கிடக்கிறேன்..” என்று அவள் போட்டுத் தாக்க இப்போது ஈஸ்வரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ஆமாம்மா.. உன் அண்ணன் மகன் வானத்தில் இருந்து பொத்துன்னு குதிச்சான்.. பத்து மாசம் சுமந்து பெத்தது நான்ம்மா… பத்தியச் சாப்பாடு சாப்பிட்டதும் நானும்மா.. வார்த்தை வளர்க்காதே…”
செவ்வந்தியின் கணவன் சுந்தரம் மனைவியை அடிக்க வந்தார்..
“ஏண்டி உன் அண்ணன் மகன் என் பொண்ணைக் கட்டிக்க தவமிருக்கனும்.. அதை விட்டுட்டு நீ பொண்ணைக் கொடுக்க தவமிருப்பியா…”
மீண்டும் கலவரம் ஆரம்பிக்க இது எதையும் கவனிக்காத கலைமதியின் பத்து வயது மகன் ராமசாமி செவ்வந்தியின் எட்டு வயது மகள் சீதாவுடன் மிட்டாயைக் காக்காய் கடி கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாடகைக்காரின் டிரைவர் கலவரத்தில் பயந்து போய் அடிக்கடி பின் பக்கம் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்ட, லட்சுமணன்,
“டிரைவர் சார் இதையெல்லாம் கண்டுக்காதீங்க.. இதெல்லாம் சும்ம்ம்ம்மா….” என்று ஆறுதல் கூறினான்.
“எப்படி தம்பி.. வெட்டு, குத்து வந்திடும் போல இருக்கே..” டிரைவர் பயந்த குரலில் கூறினான்..
“இப்ப நிலைமை சரியாகனும் அவ்வளவுதானே… நான் சொல்வதை அவங்க பக்கம் திரும்பிச் சொல்லுங்க..” லட்சுமணன் டிரைவரின் காதில் ரகசியமாய் எதையோ கூறினான்.
டிரைவர் பின் பக்கம் திரும்பிப் பார்த்துக கூறினார்.
“அடடா… என்ன சார் இந்தச் சத்தம் போடறீங்க.. இந்த மேலக்கால் ஆளுகளுக்கே பந்த பாசம் கிடையாது போல இருக்கே…”
அவ்வளவுதான்.. ஆளுக்கு ஆள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதை விட்டு விட்டு ஒற்றுமையாய் டிரைவர் மேல் பாய்ந்தார்கள்.
“யாரைப் பார்த்து பந்த பாசம் இல்லாதவங்கன்னு சொன்னே.. என் மேல் தூசு பட்டாலும் என் அண்ணன்களுக்குப் பொறுக்காது.. என் மதனிகளோ அதைவிட உயிரை விடுவாங்க…” செவ்வந்தி சிலிர்த்துக் கொண்டாள்.
“அதுதானே… என் நாத்தனார் மட்டும் குறைஞ்சவளா..? ஊரில் ஒருத்தர் அவ பிறந்த வீட்டைப் பார்த்து ஒரு பேச்சு பேசிட முடியுமா… தடியைத் தூக்கிக்கிட்டு வந்திடுவாளே…” சாந்தா பெருமையாகக் கூறினாள்.
“எதற்குடி அடுப்பெரிக்கவா…?” என்று கலைமதி கேட்க…
“நீங்க வேற மச்சான்… மண்டையை உடைக்கத்தான்” என்றார் சுந்தரம்.
“அனுபவம் பேசுது போல…” என்றான் லட்சுமணன் கேலியாக… டிரைவர், “எப்படி சார் இவ்வளவு கரெக்டா இவங்களை எடை போட்டு வச்சிருக்கீங்க…?” என்று வியந்தான்.
“ஏன்னா நான் ஒரு மிலிடிரிமேன்.. மிலிடிரியில் எல்லா ஸ்டேட்காரங்களும் இருப்பாங்க.. எல்லா பாஷையும் பேசுவோம்.. இந்து, முஸ்ஸீம், கிறிஸ்டியன்னு வேற வேற மதம். ஆனால் போர்ன்னு வந்திட்டால் நாங்க எல்லோரும் இன்டியன் ஆர்மிங்கற நினைப்பு மட்டும்தான் இருக்கும்.. எங்களுக்குள் அடிச்சுக்கிட்டாலும் எதிரியை அடிக்க நாங்கள் ஒன்று படுவோம்.. எங்கள் தாய்நாடு இந்தியா.. அதன் ஒரு துகள் மண்ணைக் கூட காப்பாற்ற வேண்டியது ராணுவ வீரர்களான எங்கள் கடமைன்னு போராடுவோம்..”
திண்டுக்கல்லைத்தாண்டி பத்து கிலோ மீட்டரில் இருந்தது தாடிக் கொம்பு. தூரத்திலேயே பெருமாள் கோவில் தெரிய அதன் விசேஷம் அறிந்தவர்களான அவர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
“இந்த ஊர் பெருமாள் கோவில் சுற்று வட்டாரத்திலேயே பெயர் பெற்றது..” என்றார் தயாநிதி.
“ஏண்ணே… இங்க பக்கத்திலதானே ‘அகரம்’கிற ஊர் இருக்கு..? அகரத்து முத்தாழம்மன் திருவிழான்னா தமிழ் நாட்டுக்கே தெரியுமே… பல்லி மூலமா அம்மா உத்திரவு தந்தால்தான் காப்பு கட்டி திருவிழாவைக் கொண்டாடுவார் களாம்.. வெறும் களிமண்ணில் அம்மன் சிலையைச் செய்வார்களாம்.. திருவிழா முடிஞ்சு அம்மன் சிலையை தாடிக் கொம்பு, அகரம் ஊர்களுக்குப் பின்னாலிருக்கிற ஆற்றில் கரைப்பார்களாம்.. உடனே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுமாம்…” செவ்வந்தி விவரிக்க ஈஸ்வரியும், சாந்தாவும் ‘ஆ’வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டு வந்தார்கள்.
சுபத்ரா தந்தையின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.. அவர்காதில் கிசுகிசுத்தாள்.
“ஏம்ப்பா இவங்களா இத்தனை நேரம் குடுமிப்பிடி சண்டை போட்டாங்க…”
ஊரின் உள்ளே கார் நுழைந்தது. செவ்வந்தி கேட்டாள்.
“ஏண்ணே… பொண்ணு பார்த்திட்டு காபி பலகாரம் விழுங்கிட்டுக் கிளம்ப எவ்வளவு நேரமாகுமோ என்னவோ.. இவ்வளவு சக்தி வாய்ந்த கோவில் இருக்கிற ஊருக்கு வந்திருக்கிறோம். முதல்ல சாமியைக் கும்பிட்டுட்டு அப்புறம் பொண்ணு பார்க்கப் போகலாமே…”
“அதுதான் சரி.. ஏம்பா டிரைவர் தம்பி வண்டியை கோவில் வாசலுக்கு விடு…” ஈஸ்வரி உத்தரவிட்டாள்.
லட்சுமணன் தயாநிதியின் முகம் பார்க்க,
“என்னை ஏண்டா பார்க்கிற… அதான் உங்க அம்மாவும், சித்தியும், அத்தையும் ஒன்னு சேர்ந்திட்டாங்கல்ல… இனி என் பேச்சு எடுபடுமா…?” என்றார் அவர்.
வண்டி கோவில் வாசலில் நின்றது. அனைவரும் திபுதிபுவென இறங்க தயாநிதி “அம்மாடி” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.. வாசலில் அர்ச்சனைத் தட்டு வாங்கும் இடத்தில் குடும்பச் சண்டை ஆரம்பித்துவிட டிரைவர் வண்டிக்குள்ளேயே பதுங்கினார். வாண்டுகளோடு சுபத்திரா கோவிலைச் சுற்றிப் பார்க்கச் சென்று விட்டாள்.
லட்சுமணன் திரும்பிப் பார்த்தான். பெரியவர்கள் இன்னும் சமரசம் ஆகவில்லை.. தோளைக் குலுக்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்று பார்க்கலாம் என்று சென்றான்.
உட்பிரகாரத்தில் பெருமாளின் சந்நிதியில் கைகுவித்து வேண்டிக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் தோற்றம் அவனைக் கவர்ந்து இழுத்தது.
மாம்பழ வண்ணத்தில் அரக்குச் சிகப்பில் கரையிட்ட பட்டுப் புடவை உடுத்தி நீண்ட பின்னலில் மல்லிகை சரிய அவள் கண் மூடி தெய்வத்தைக் கும்பிட்ட தோற்றம் அவனை ஈர்த்தது.
‘எவ்வளவு அழகான பெண்’ என்று வியந்து கொண்டான் அவன்.. ‘இவ்வளவு நீண்ட பின்னல் எப்படி வந்தது… ஒரு வேளை சவுரி முடியோ’ என்று நினைத்தவனுக்கு ஜடையை இழுத்துப் பார்க்க கை துறுதுறுத்தது… ‘என்ன வேலை செய்கிறோம்’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.
ஒரு ராணுவ வீரனாக இருந்து கொண்டு கோவிலுக்குள் வந்து முன்பின் தெரியாத பெண்ணை ‘சைட்’ அடித்துக் கொண்டிருக்கிறான். அதுவும் எதற்காக அந்த ஊருக்கு வந்திருக்கிறான். திருமணத்திற்குப் பெண் பார்க்க…!
தன்னைத்தானே கடிந்து கொண்டவன் பார்வையைத் திருப்ப முனைந்தபோது அந்தப் பெண் வேண்டுதலை முடித்துக் கண் திறந்தாள். அர்ச்சகரின் கையிலிருந்த தீபாராதனைத் தட்டைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவர் கொடுத்த குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு நெற்றியில் இட்டுக் கொண்டவள் திரும்பினாள்.
அவளை ஒருதரம் நேருக்கு நேர் பார்த்துவிடும் ஆசையில் அவன் தயங்கி நிற்க அவள் அவன் முகம் பாராமல் கையைப் பிடித்து இழுத்து “வாடா போகலாம்…” என்றாள்.
அவளது கை மென்மையாய் இருந்தது. அவள் பிடியில் அவன் கரம்.. உடலில் உஷ்ணம் பாய,
“எங்கே என்பதைச் சொன்னால் தேவலை..” என்றான் அவன்.
அவள் பதறிப்போய் அவன் முகம் பார்த்துக் கையை விட்டாள்.. முகம் ரத்தமாய் சிவந்துவிட,
“நான்.. நான்.. என் தம்பின்னு நினைத்து.. அவன் எங்கே..?” என்று தடுமாறினாள்.
லட்சுமணன் உல்லாசமாய் சிரித்தான். அவன் சிரிப்பில் வசீகரிக்கப்பட்ட ஊர்மிளா உறைந்து போனாள். யார் இவன்..?
“உன் தம்பி எங்கேன்னு எனக்கு எப்படித் தெரியும். ம்ம்ம்…?” என்று அவன் புருவம் உயர்த்தி வினவ அவள் உடல் ‘ஜிவ்’வென்று ஆனது.. அடுத்த நொடி அங்கிருந்து ஓடி மின்னலாய் மறைந்தாள்.
சமரசம் ஆன பெரியவர்கள் வாண்டுகளை கூவி அழைத்தபடி வந்தனர். பெருமாளை வணங்கி முடித்த பின் டாடா சுமோவில் ஏறி பெண் வீட்டிற்குச் சென்றனர்.
அசிரத்தையாய் லட்சுமணன் அமர்ந்திருந்தான். அவன் மனமெல்லாம் அந்தப் பெண் நிறைந்திருந்தாள்.. எழுந்து வீட்டிற்கு வண்டியை விடச் சொல்லலாமா என்று அவன் யோசிக்கும்போது,
“பெண்ணைப் பார்த்துக்கடா…” என்று தயாநிதி அதட்டினார்.. விருப்பமில்லாமல் விழி உயர்த்தியவன் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தான்.. எதிரே விரல்கள் நடுங்க காபி தம்ளரை நீட்டிக் கொண்டிருந்தது அவன் கோவிலில் பார்த்த அதே பெண்தான்.
அதேநேரம் நடுக்கத்துடன் விழியுயர்த்திய அவள் கண்களிலும் ஆச்சரியம் வழிந்தது.
இருவர் விழிகளும் கலந்தன.. அவை கேட்டுக் கொண்டன.
“கடைசியில் நீதானா என்னைப் பார்ப்பது…?”
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.