Chapter 04

0Shares

ஒரு புயலாய் வந்து அவள் மனதை சூறையாடி விட்டுச் சென்று விட்டான் லட்சுமணன்..

ஊர்மிளா தன் வசம் இழந்தாள்.. நேற்று வரை தோன்றாத தவிப்பு இன்று அவளிடம் தோன்றியிருந்தது.. அவள் எண்ணம் கவர்ந்த கள்வன் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டான்..

‘திருடன்’ அவள் வாய் முணுமுணுத்தது.. ஒரு வினாடியில் என்ன காரியம் செய்து விட்டான்..? யாராவது பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்று எண்ணமிடும்போதே,

‘அதுதான் உன் பயமா..?’ என்று அவள் மனம் வினவியது…

‘ஆக யாரும் பார்க்கவில்லையென்றால்… இது சரி அப்படித்தானே…?’ மனம் கேலி செய்ய முகம் சிவந்து நகம் கடித்தாள்.. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்ற சுற்று முற்றும் கவனித்துக் கொண்டாள்.. யாரும் பார்க்கவில்லை யென்று அறிந்ததும் முற்றத்தில் போடப்பட்டிருந்த கல் உரலில் அமர்ந்து கொண்டாள்.. கிராமத்தின் நெல் குற்ற என்று போடப்பட்டிருக்கும் கல் உரலும், மாவாட்ட என்று போடப்பட்டிருக்கும் கல் உரலும் உட்கார்ந்து கொள்ள அவ்வளவு வாகாக கூடை நாற்காலி, மோடா போல் சௌகரியமாக இருக்கும்.. அதில் அமர்ந்து கொண்டு ஊர்மிளா தன்னுடைய புதிய உலகத்திற்குள் புகுந்து கொண்டாள்..

எப்படிக் கோவிலில் அவன் கையைப் பற்றினோம்..? அதுவும் ‘நாராயணா நல்ல வழி காட்டு’ என்று வேண்டி முடித்து விட்டு அவன் கையைப் பற்றி இழுத்தோமே… அது எப்படி.. அதுதான் தெய்வத்தின் கட்டளையா…? ‘எங்கேயென்று சொல் வருகிறேன்…’ என்றானே… அதுவும் எப்படி… தான் எங்கே கூப்பிட்டாலும் வர எப்படி அவன் தயாரானான்…?

பெற்றவர்களே தன் விருப்பத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ‘நீ சின்னப் பெண். நல்லது கெட்டது உனக்கென்ன தெரியும்’ என்று கூறி விட்டபோது அவன் மட்டும் அவள் விருப்பத்தை மட்டும் பெரிதாக எண்ணி ‘எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.. ஆனால் உனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லிவிடு.. உன் மேல் பழி விழாமல் நான் பழி ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்திருக்கும் உன்னைப் பிடிக்கவில்லையென்று சொல்லி விடுகிறேன்..’  என்றானே… இவனை விட அவளை மதிக்க, மரியாதை கொடுக்க வேறு ஒரு ஆண் மகன் பிறந்து அல்லவா வர வேண்டும்..

பாரதி சரியாகத்தான் பாடியிருக்கிறான்..

‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி’ அவனுக்குக் கள்வெறி வந்ததோ இல்லையோ அவளுக்கு வந்தது.. அவன் இதழ் தொட்ட கன்னம் நினைவுச் சின்னமாகியது..

அடிக்கடி கண்ணாடியில் தன் கன்னம் பார்த்துக் கொள்வதே அவள் வேலையானது.. மற்ற நேரங்களில் தன்னிச்சையாய் கைகள் கன்னம் வருட அந்த இனிய கணத்தை நினைவில் கொள்வாள்.. உடலில் பரபரப்பு உற்பத்தியாகி அவள் மூச்சடைக்கும்..

“ஊர்மிளா… ஏண்டி இங்கதானே உட்கார்ந்திருக்கிறே.. இந்தக் கத்து கத்துகிறேன்… ஏன்னு ஒரு வார்த்தை கேட்கிறயா…?” என்று சத்தியவதி முதுகில் ஒரு போடு போட ஊர்மிளா பதறி எழுந்தாள்..

“அம்மா.. என்னம்மா… நான் வந்து…” என்று பதறி நின்றாள்..

சத்தியவதிக்கு மகளின் நிலை நொடிப் பொழுதில் விளங்கியது.. அவளும் மகள் வயதைக் கடந்து வந்தவள் தானே… திருமணம் பேசி முடித்த நாள்களை வாழ்ந்தவள் தானே… மகளின் மனம் புரிய மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்..

“எதுக்கும்மா பயப்படறே… அப்பா டவுனுக்குப் போகக் கூப்பிடறார்.. வந்து என்னன்னு கேளு…”

ஊர்மிளா தந்தையின் முன் வந்து நின்றாள்.. மகளின் முகம் பார்த்த ஜனார்த்தனம்.

“ஏம்மா… அம்மா உனக்கு நாலு பட்டுச்சேலை எடுக்கனும்கிறா… அப்படியே பழைய நகைகளை மாற்றி விட்டு புதிதாய் வாங்கி விடலாம்கிறா.. கிளம்பு போய்விட்டு வந்துவிடலாம்…”

“ஏம்ப்பா…? இருக்கிற சேலையும் நகையும் போதுமே..”

சத்தியவதி மகளின் அருகே வந்து அவள் முடி கோதினாள்..

“அப்படி இல்லைம்மா… எங்களுக்கு இருக்கிற ஒரே பெண் பிள்ளை நீ.. வீட்டில் நடக்கப் போகிற முதல் கல்யாணம் இது… பழைய பட்டுச் சேலைகளோடவா அனுப்புறது.. புதுசா நாலு வாங்கிடலாம்…”

“நகையெல்லாம் நல்லாத்தானம்மா இருக்கு..?”

“இருக்கும்மா… உன் பாட்டி நகை பத்து பவுனுக்கு இருக்கில்ல… அதை மட்டும் மாத்திடலாம்…”

“பணம் நிறைய ஆகுமேம்மா…”

“சேர்த்து வைச்ச பணத்தை பொண்ணு கல்யாணத் துக்கு செலவு செய்யாம எப்போ செய்வது…?”

“பலராமனுக்கு வேண்டாமா…?”

“அவனுக்குத்தான் சொத்து இருக்கிறதே.. நீ கிளம்பும்மா…”

தந்தையின் பைக்கில் தாய் அமர்ந்துகொள்ள தன் ஸ்கூட்டியில் தம்பியை ஏற்றிக் கொண்டு அவள் கிளம்பத் தயாரான போது ஜனார்த்தனத்தின் செல் ஒலித்தது.. எடுத்துப் பேசியவர்,

“அதற்கென்ன மச்சான்.. நாங்களும் டவுனுக்குத்தான் கிளம்பிக் கிட்டு இருந்தோம்… என்ன விசயம்ன்னா கேட்கறீங்க.. பொண்ணுக்கு இன்னும் புதுசா நாலு பட்டுச் சேலை வாங்கனும்.. அப்புறம் எங்க அம்மாவோட அந்தக் காலத்து நகை பத்து பவுனிருக்கு அதை மாற்றி புதுசா வாங்கணும்ன்னு என் வீட்டுக்காரி சொன்னாள்.. இப்ப என்ன திண்டுக்கல்லில் வாங்குற சேலையையும், நகைகளையும் மதுரையில் வாங்கினால் வேணாம்னு இருக்கா.. உடனே கிளம்பி வாரோம்…”

செல்லை அணைத்தவர் மனைவியை இறங்கச் சொன்னார்.. செல்போனில் திண்டுக்கல் டிராவல் ஏஜன்ஸிக்கு போன் பண்ணி வாடகைக் கார் ஒன்றை அனுப்பச் சொன்னார்.. காரணம் கேட்ட மனைவியிடம்,

“சம்பந்தக்காரங்க பேசுறாங்கடி… முகூர்த்த சேலை எடுக்கணுமாம்.. நம்மளயெல்லாம் மதுரைக்கு வரச் சொல்றாங்க.. போய் இன்னும் நல்ல துணிமணியைக் கட்டிக்கிட்டு நகைகளை போட்டுக்கங்க…” என்றவாறு தன் வண்டியை வீட்டின் முன் வராண்டாவிற்கு தள்ளி பூட்டி விட்டு நிமிர்ந்தார்..

“அப்பா… நீங்களும் நானும் வேற துணி போட்டுக்க வேணாமா…?” என்று கேட்ட பலராமனிடம்,

“நாமள்ளாம் ஆம்பளை சிங்கங்கள்டா.. நாம் என்ன துணி போட்டுக்கிட்டாலும் எடுபடும்.. அவங்க ரெண்டு பேரும் பொம்பளைக பாரு.. நல்ல சேலை கட்டி நகை போட்டுக்கிட்டாத்தான் பார்க்க முடியும்..” என்று சிரித்தவாறு கூறினார் ஜனார்த்தனம்..

“ஆமாமாம்… கசங்கின அழுக்குப் பிடிச்ச வேட்டி, சட்டையைப் போட்டுக்கிட்டு தலையில் எண்ணெய் வைக்காம முடி வெட்டி தாடி மழிக்காம பரட்டைத் தலையும், எண்ணெய் வழியற முகமும் அழுக்கு வேட்டி சட்டையோடு உங்க அப்பாவை வரச் சொல்லு… பார்ப்போம். இந்த ஆம்பளை சிங்கத்தின் அழகை… இதோ பத்து கிலோ மீட்டரில் இருக்கிற திண்டுக்கல்லுக்குப் போக காலையில் எழுந்ததில் இருந்து ஷேவ் பண்ணுகிறார்… பண்ணுகிறார் – ஒரு மணி நேரம் பண்ணுகிறார்.. அப்புறம் குளிச்ச முடிச்சு உடம்பெல்லாம் பவுடரைக் கொட்டி மூஞ்சியில் அரிதாரம் மாதிரி அப்பிட்டு… பீரோவைக் குடைஞ்சு.. பட்டு ஜரிகை வச்ச வேட்டியை செலக்ட் பண்ணி கட்டிக்கிட்டு கண்ணாடியில திரும்பித் திரும்பி தன்னைத்தானே பார்த்துக்கிட்டார் பாரு… கல்யாணம் மகளுக்கா, இல்ல இவருக்கான்னு சந்தேகமே வந்திருச்சு.. இப்ப அளக்கிறதைப் பாரு ஆம்பளை சிங்கம்ன்னு…” சத்தியவதி சிலிர்த்தாள்..

வாசலில் டாக்ஸி ஒன்று வந்து நிற்க வீடு பரபரப்பானது.. கண் இமைக்கும் நேரத்திற்குள் ஊர்மிளா சுடிதாரிலிருந்து புடவைக்கு மாறினாள்… கண்ணாடி பார்த்து இன்னம் கொஞ்சம் பவுடர் பூசினாள்.. மனதின் ஓரத்தில் ‘அவன் வருவானா..?’ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் யாரிடம் கேட்பது…?

சத்தியவதி மகளின் கை, கழுத்து, காதுகளுக்கு பொருத்தமான புதிய நகைகளை அணிவித்து விட்டாள்.. மகளை ஒரு தரம் தள்ளி நின்று ஏற இறங்கப் பார்த்தாள்..

பிஸ்கெட் கலரில் கருநீல பார்டரில் ஜரிகை இழையோடிய காஞ்சி காட்டன் புடவை.. கருநீல நிறத்தில் கைகளுக்கு ஜரிகைக் கரையிட்ட ஜாக்கெட் கழுத்தில் வெள்ளைக்கல் அட்டிகை.. காதுகளில் வெள்ளைக் கல் பதித்த வேலைப்பாடுகளுடன் கூடிய தோடு… கைகளில் பொன் வளையல்களும் கல் வளையல்களும் கலந்து விளையாடின.. ஏதோ ஒன்று குறைவது போல் தோன்ற மகளின் கழுத்திலிருந்த செயினை அவிழ்த்து விட்டு சின்னக் காசுகள் கோர்த்த நீண்ட காசு மாலை வடிவிலான ஆரத்தை அணிவித்து விட்டாள் சத்தியவதி..

“என்னம்மா கழுத்து நிறைய நகையிருப்பது போலிருக்கே..” என்று மகள் சிணுங்க…

“நீ வாழப்போகிற வீட்டில் இருக்கிறவங்க எல்லோரும் நல்லவங்களா தெரியறாங்கம்மா… ஆனா உன் மாமனாரின் தம்பி பொண்டாட்டியும், தங்கச்சிகாரியும் வில்லங்கம் பிடிச்சவங்களா இருக்கிறாங்களே.. வீட்டுக் குள்ள நகையை பூட்டி வச்சா அவங்க கண்ணுக்கு எப்படித் தெரியும்…? பூட்டிக்கிட்டு வந்தால்தானே தெரியும் அவங்க பாட்டுக்கு பொண்ணு கழுத்தில் நகை பத்தாதுன்னு பேசிட்டா என்ன செய்யறது… நீ சின்னப் பிள்ளை.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. பேசாமல் வா..” என்று அதட்டினாள் சத்தியவதி..

‘நான் சின்னப் பிள்ளையா…?’ என்ற கோபக்கேள்வி எழும்போதே அவளை நாற்காலியில் அமர வைத்து ‘நீ உலகம் தெரிந்தவள்’ என்ற விதமாய் பேசிய ‘அவனின்’ நினைவு எழுந்தது..

‘இன்று அவனைப் பார்க்க முடியுமா..?’ மனம் ரகசியமாய் வினவியது.. தெரியவில்லையே என்று கூறிக் கொண்டவள் தாயைப் பின் தொடர்ந்தாள்..

“ஹேண்ட் பேக் எதுக்கும்மா – வச்சிட்டு வா..” என்று தாய் கூற,

“இருக்கட்டும்… புள்ள எங்கே போனாலும் பேக் இல்லாம போகாது அந்தப் பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும்.. வைச்சிருக்கட்டும்..” என்றார் ஜனார்த்தனம்.. 

கார் கிளம்பி ஓடியது..

“ஏங்க… பூ வாங்கனும்.. எங்கே வாங்கலாம்…?” என்று சத்தியவதி கேட்க “மதுரைக்குத் தானே போகிறோம்.. அங்கேயில்லாத பூவா..? ஊருக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் தென்படுற பூக்கடையில் வாங்கிக்கலாம்..” என்று பதில் கூறினார் ஜனார்த்தனம்..

தாய், தந்தையின் பேச்சுக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த ஊர்மிளாவின் மனம் எதிர்பார்ப்பில் அல்லாடியது.. ‘அவன் வருவானா… மாட்டானா…’

கார் மதுரைக்குள் நுழைந்தது.. பூக்கடை ஒன்றின் அருகே நின்றது.. சத்தியவதி இறங்கிப் பேரம் பேசி பூ வாங்கி வந்து மகளின் தலையில் வைத்து விட்டாள்.. ஜனார்த்தனம் போனை எடுத்து தயாநிதியின் செல்போனின் எண்களை அழுத்திப் பேசினார்..

“மச்சான் நாங்க எல்லாம் மதுரைக்குள்ள நுழைஞ்சாச்சு… என்ன.. நீங்களும் வந்திட்டிங்களா… நல்லதாப்போச்சு.. எந்த ஜவுளிக்கடை.. ம்ம்.. இந்தா வந்திட்டோம்…”

என்னவோ முன்னாலேயே தயாநிதி சொன்ன ஜவுளிக் கடை இருந்தது போலவும் இவர் தாவிக் குதித்து ஓடப் போவது போலவும் ஒரு காலை காருக்குள் வைத்துக் கொண்டு மற்றொரு காலை வெளியில் தரையில் வைத்துக் கொண்டு அவர் பேசினார்.. சத்தியவதி சிரித்தாள்..

“இறங்கி இப்படியே ஓடியே ஜவுளிக்கடைக்குப் போகப் போறீங்களா…? ஒழுங்காய் உட்காருங்க..”

அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி ஜனார்த்தனம் உள்ளே ஒழுங்காக அமர்ந்தார்.. அவர் முகத்தில் பெண்ணைப் பெற்றவரின் தவிப்பு இருந்தது..

நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடையின் வாசலில் கார் நின்றது.. அவர்கள் இறங்க வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த தயாநிதி எதிர்கொண்டழைத்தார்… வருங்கால மாமனாரைக் கண்டதும் மரியாதையுடன் தாயின் பின்னால் மறைந்து கொண்டாள் ஊர்மிளா…

“வாம்மா தங்கச்சி, வாங்க மச்சான், டேய் பலராமா… எங்கே என் மருமகளைக் காணோம்..” என்று அவர்களை வரவேற்ற தயாநிதி வினவினார்…

“இதோ என் பின்னாலதான் ஒளிஞ்சுக்கிட்டு இருக்காளே.. உங்களைப் பார்த்ததும் வெட்கம் வந்திருச்சு” என்று சிரித்தபடி சத்தியவதி கூற தயாநிதி கடகடவென்று சிரித்தார்…

“மாமனார்ன்னா தகப்பன்தான்ம்மா… அப்பாகிட்ட பொண்ணுக்கு என்ன பயம்..?” என்று அவர் கூறவும் ஊர்மிளா தயங்கியவாறு அவர் முன் வந்தாள்…

தயாநிதிக்கு மனம் நிறைந்து விட்டது.. படித்த பெண் போலவா இந்தப் பெண் இருக்கிறது.. எவ்வளவு பதவிசு.. எவ்வளவு அடக்கம்..?

அவர்கள் பட்டுப் புடவைகள் உள்ள பகுதிக்குப் போகும் போது அங்கே கும்பலாய் மேலக்கால் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.. ஒருவர் கூறும் புடவையை மற்றவர் நொட்டை சொல்ல ஒரு பானிபட் போர் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தென்பட்டது..

அந்தக் கூட்டத்தில் அவனைத் தேடிய ஊர்மிளாவின் கண்கள் சோர்ந்தன.. அவன் அங்கு இல்லை.. அவன் வரவில்லையா…?

காற்றுப் போன பலூனாய் அவள் உற்சாகம் வடிந்து விட இயந்திரம் போல் தாயின் பின்னே சென்றாள்.. அதற்குள் அவர்களைப் பார்த்து விட்ட ஈஸ்வரி, “இந்தா என் மருமகளே வந்தாச்சு.. ஆளாளுக்கு ஏன் அடிச்சுக்கறீங்க..? அதுக்குப் பிடிச்சதை அதுவே எடுத்துக்கட்டும்…” என்று போருக்கு தடை விதித்தாள்..

“இது என்ன அக்கா ஊரில் இல்லாத பழக்கமாகவே எல்லாமே நடக்கிறது.. நாம பார்த்து எடுத்துக் கொடுக்கிறது தான் முகூர்த்தச் சேலை…” என்று ஊர்மிளாவை முறைத்தாள் சாந்தா…

மருமகளை அருகில் இழுத்து நிறுத்திக் கொண்ட ஈஸ்வரி..

“பாரும்மா… இந்தச் சேலைகளில் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதைக் காட்டு.. விலையைப் பத்திக் கவலைப்படாதே..” என்றாள்..

அப்போது, “உன் மருமகளுக்குப் பிடித்தால் மட்டும் போதாது அம்மா.. எனக்கும் பிடிக்க வேண்டும்.. முக்கியமாக எனக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டும்.. ஏன்னா நான்தானே பார்க்கப் போகிறவன்…” என்ற குரல் அவர் காதுக்கு மிக அருகில் ஒலித்தது..

அடுத்த நொடி அவள் உடலில் ஆனந்த வெள்ளம் பாய்ந்தது.. திரும்பிப் பார்க்க அவள் திரும்ப வெகு அருகில் நின்று கொண்டிருந்த அவன் மீது மோதிக் கொண்டாள்..

அவள் உடலில் மின்சாரம் பாய அவள் தடுமாற அவன் அதைக் கவனிக்காதவன் போல் கூட்டத்தைச் சாக்கிட்டு அவள் அருகில் இன்னும் நெருங்கி நின்று கொண்டு,

“அந்த மெரூன் கலர் புடவையை எடுங்க..” என்றான்..

அந்தப் புடவையை விரித்துப் பார்க்கும்போது அவள் கரம் மீது அவன் கரம் உரச ஊர்மிளா தவித்துப் போனாள்..

“இந்தக் கலர் எனக்குப் பிடிச்சிருக்கு… உனக்குப் பிடிச்சிருக்கா..?” என்று அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவளைப் பார்த்துக் கேட்க அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் தாயின் முகம் பார்த்தாள்..

“இந்தக் கலர்தான் உனக்குப் பிடிக்குமேம்மா… அதையே எடுத்துக்கலாம்..” என்று கூறிய சத்தியவதி..

“என்ன மதினி நான் சொல்றது…?” என்று ஈஸ்வரியிடம் கேட்டாள்..

“எல்லாமே சீமைச் சித்ராங்கியா இருக்காங்க…” என்று செவ்வந்தியின் காதைக் கடித்தாள் சாந்தா..

“அதையேன் கேட்கிற… இன்னும் பொண்ணையே கட்டலை.. இவ என் மருமகள்ங்கிறா.. அவ என் மதினிங்கிறா. காலக் கொடுமை…” என்றாள் செவ்வந்தி..

புடவை எடுத்து முடித்த பின் அனைவரும் சாப்பிட ஓட்டலுக்குப் போனார்கள்.. இயல்பாய் லட்சுமணன் ஊர்மிளாவின் அருகே சாப்பிட அமர்ந்து விட்டான்.. ஊர்மிளா எழுந்திருக்க முடியாமல் அவள் சுவரோரம் மாட்டிக் கொள்ள அவள் அவளுக்கு விருப்பமான சிறையில் மாட்டிக் கொண்டாள்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link