Chapter 06
லட்சுமணன் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் மிகப் பவ்யமாய் அவள் முகம் பாராமல் நின்று கொண்டிருந்தான்.. சத்தியவதி பரபரப்பாய் சமையலறைக்குள் போய் அடுப்பைப் பற்ற வைத்தாள்..
“ஏண்டி ஊர்மிளா… மாப்பிள்ளை ராத்திரிக்கு சோறு சாப்பிடுவாரா… பலகாரம் சாப்பிடுவாரான்னு தெரியலையே.. போய் அப்பாகிட்ட கேட்டுக்கிட்டு வா..”
ஊர்மிளா வெளியே வந்தாள்.. வீட்டின் முன்பக்க காம்பவுண்டின் உள்ளே பிளாஸ்டிக் நாடாவால் பின்னப் பட்ட மடக்கு கட்டிலை விரித்துப் போட்டு அதன் மேல் லட்சுமணனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ஜனார்த்தனம்.. மகளைக் கண்டதும்..”என்னம்மா..?” என்று கனிவாக வினவினார்..
“அம்மா, அவருக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டுக் கிட்டு வரச் சொன்னாங்க…”
அதற்குள் வாசலில் யாரோ அழைக்கவும் எழுந்து சென்ற ஜனார்த்தனம்,
“மாப்பிள்ளை கிட்டேயே கேட்டுக் கொள்ளம்மா” என்றபடி சென்று விட்டார்.. ஊர்மிளா அவனைப் பார்க்க அவன் புருவம் உயர்த்தி சல்லாபப் பார்வை பார்த்தான்.. ‘திருடன்’ மனதிற்குள் மீண்டும் கூறிக் கொண்டாள்.. ‘அப்பா முன்னால் அடக்க ஒடுக்கமாய் உட்கார்ந்திருந்த தென்ன… இப்போது இந்தப் பார்வை பார்க்கிறானே…’ மனது இப்படிக் கூறினாலும் பதிலுக்கு அதே பார்வையை திருப்பித் தராமலிருக்க அவளால் முடியவில்லை.. அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. கண்கள் மின்னின…
“ஸோ… இது கோவில் இல்லை வீடு… நீ சொன்னபடி வந்து விட்டேன்.. போதுமா..? இதற்கு எனக்கு என்ன தருவாய்..?”
“என்ன வேண்டும்..?” கேட்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை யூகித்தாள்.. அவள் யூகம் மெய்யானது..
“நீதான் வேண்டும்…”
அவள் உதடு கடித்தாள்.. உடலில் உஷ்ணம் பரவியது..
“தெரியுமே.. இப்படித்தான் கேட்பீர்கள் என்று.. சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்…”
அவள் எதிர்பார்த்த பதில் வந்தது..
“உன்னைத்தான் பிடிக்கும்…”
“ப்ளீஸ்.. அம்மா உள்ளே இருக்கிறாங்க.. அப்பா வாசலில் இருக்கார்..” அவன் சட்டென்று கோபமானாள்…
“ஏய்… என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கே.. கோவிலில் சாமி இருக்கார்ன.. சரி… வீட்டுக்கு வந்தால் அப்பாம்மாங்கிற… எல்லார் வீட்டிலயும் தான் அப்பாம்மா இருக்காங்க.. அதுக்காக…?”
அவனது சிடுசிடுப்பின் காரணம் புரிந்தது.. தவிப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது.. ஊர்மிளா சுற்று முற்றும் பார்த்தாள்.. அப்பா வந்தவருடன் பேசிக் கொண்டே எங்கோ சென்றிருந்தார்.. இருள் கவிந்திருந்தது.. வாசல் விளக்கு இன்னும் போடப்படவில்லை.. அவனது கட்டில் இருந்த இடம் இருளின் போர்வைக்குள் இருக்க ஊர்மிளா சட்டென குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.. எதிர்பாராத பரிசினால் அவன் திக்கு முக்காடிப் போய் அவள் கை பிடித்து இழுக்க அவன் மடியில் விழுந்தாள்..
உயரமாய் கட்டப்பட்டிருந்த காம்பவுண்டு சுவர் அவர்களை முழுவதும் மறைக்க அவன் மடியில் விழுந்தவள் எழுந்திருக்கும் முன் அவன் கரங்கள் அவளைச் சுற்றி வளைத்தன.. எழுந்திருக்க முடியாமல் அவன் கைச்சிறையில் அடங்கியவளின் இதழோடு இதழ் பதித்து இறுக்கி அணைத்துக் கொண்டான் லட்சுமணன்.. ஒரு பெரிய அலையொன்று அடித்துச் செல்வதைப் போல் உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிட்ட ஊர்மிளா அவன் அணைப்பில் அடங்கிப் போனாள்.. உள்ளேயிருந்து சத்தியவதியின் குரல், “ஊர்மிளா” என்று அழைக்க பெருந் தூக்கத்திலிருந்து விழித்தவள் போல்
உலுக்கி தன்னிலைக்கு வந்தாள்.. அவசரமாய் அவன் அணைப்பிலிருந்து விலகி வீட்டினுள்ளே ஓடினாள்..
“என்ன வேண்டுமாம்…?”
‘நான்தான் வேண்டுமாம்’ என்று சொல்லத் துடித்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டு,
“எது செய்தாலும் சரிங்கிறார் அம்மா…” என்றாள்..
“அப்படியா… சரி நான் கோதுமை மாவை பிசைந்து தர்றேன்.. நீ உருண்டை போட்டு பூரிக்கு தேச்சுக்குடு.. அதற்குள் நான் குருமா ரெடி பண்ணி விடுகிறேன்..”
வீடு திரும்பிய ஜனார்த்தனம்..
“அடடா… என்ன மாப்பிள்ளை இருட்டுக்குள் உட் கார்ந்திருக்கீங்க…” என்றபடி வாசல் விளக்கைப் போட ஒளி வெள்ளம் பாய்ந்தது.. லட்சுமணனின் மடியில் ஊர்மிளாவின் தலையிலிருந்து விழுந்த மல்லிகைப் பூ ஒன்று சிரித்துக் கொண்டிருந்தது.. அலுங்காமல் அதை எடுத்துச் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.. அவன் மேல் கவிழ்ந்திருந்த அவளது வாசம் அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது.. கசங்கிய அவனது சட்டை சற்று முன் நிகழ்ந்தது கனவல்ல.. நனவு என்பதை உரைத்துக் கொண்டிருந்தது.. ஜனார்த்தனம் ஏதோ உலக நடப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க அவன் தன் போக்கில் மெய் மறந்தவனாக ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தான்..
“அதனால்தான் சொல்றேன் மாப்பிள்ளை.. எலக்சன் வச்சா மட்டும் போதாதுன்னு… என்னம்மா சாப்பாடு தயாராயிடுச்சா…”
ஜனார்த்தனம் பேச்சை நிறுத்திவிட்டு ஊர்மிளாவிடம் வினவ அவள்,
“தயாராகி விட்டது அப்பா” என்றாள் அவனைப் பார்ப்பததைத் தவிர்த்தபடி,
“வாங்க மாப்பிள்ளை சாப்பிடப் போகலாம்…”
உள்ளே சென்று சாப்பிட அமர்ந்தபோது பலராமன் உள்ளே ஓடி வந்தான்…
“எங்கேடா போயிட்டே… வா சாப்பிடலாம்…” என்றார் ஜனார்த்தனம்.
“ஐ… மாமா” என்று லட்சுமணனைப் பார்த்து உற்சாகமாய் கூவிய பலராமன் பூரியைப் பார்த்ததும்,
“ஐ… பூரி” என்று அதைவிட உற்சாகமாய் கூறிவிட்டு தட்டின் முன் உட்காரப் போனான்..
“டேய்.. கை கழுவி விட்டுத்தான் சாப்பிடணும்…” ஊர்மிளா அதட்டினாள்..
“போக்கா… சிங்கமெல்லாம் கையா கழுவுது…” என்ற படி பூரிகளை உள்ளே தள்ள ஆரம்பித்தான் பலராமன்..
“ஹாஹ்ஹா…” என்று சிரித்தார் ஜனார்த்தனம் மகனின் பேச்சை ரசித்தவராய்…
“அது சரி… கையைக் கழுவாமல் சாப்பிட்டா நீ சிங்கமாயிட மாட்டேடா…” என்று தம்பியிடம் கூறினாள் ஊர்மிளா..
“ஊம்.. நான் சிங்கம்தான்.. ஆம்பளை சிங்கம்.. அப்பாவே அன்னைக்கு சொல்லிட்டாரே நாமள்ளாம் ஆம்பளை சிங்கங்கள்டான்னு…” பலராமன் ஊர்மிளாவிடம் தலையை ஆட்டியபடி கூறினான்.
“ஆஹ்ஹாஹா…” என்று இன்னும் பலமாகச் சிரித்த ஜனார்த்தனம்,
“அப்படிச் சொல்லுடா என் சிங்கக்குட்டி…” என்றார் மகனிடம்..
“அவன் சிங்கக்குட்டின்னா நான் யாராம்…” என்று சிணுங்கினாள் ஊர்மிளா…
“நீ மான் குட்டிம்மா…” என்று மகளை செல்லம் கொஞ்சினார் ஜனார்த்தனம்…
சாப்பிட்டு முடித்த லட்சுமணன், ஊர்மிளா எதிர் பார்த்தது போல் வேண்டுமென்றே தாமதமாய் கை கழுவ வந்தான்.. ஜனார்த்தனம் உள்ளே சென்றுவிட பலராமன் சமையலறையில் சத்தியவதியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க ஊர்மிளா கையில் கை துடைக்கும் துண்டைக் கொண்டு வந்து நீட்டினாள்.. அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே கை கழுவியவன் அவளது தாவணி முந்தானையில் கை துடைத்தான்..
“ஐயோ.. யாராவது பார்த்திடப் போறாங்க…”
“பார்க்கட்டும்..” என்றவாறே தாவணி முந்தானையை அவன் பிடித்து இழுக்க வழக்கம் போல் அவள் அவன் மேல் விழுந்தாள்.. அப்புறம் வழக்கம் போல் அவன் அணைப்பில் அடங்கினாள்.. அவன் வழக்கம் போல் முத்தமிட்டான்..
மருண்ட அவள் விழிகளைப் பார்த்தபடி முகம் விலக்கியவன் தன் கையிலிருந்து அவள் தாவணி முந்தானையை விடுவித்து,
“நீ மான் குட்டியே தான்டி… இந்த பயம் பயப்படுகிறே..?” என்றான்..
ஊர்மிளா உள்ளே விரைந்து விட்டான்.. வீட்டின் முன் பக்கத்தில் இரண்டு கட்டில்கள் மெத்தை போடப்பட்டு புது விரிப்புக்கள் விரிக்கப்பட்டு தயாராக இருந்தன.. அவற்றில் ஒன்றில் ஜனார்த்தனம் அமர்ந்திருக்க மற்றொன்றில் லட்சுமணன் அமர்ந்திருந்தான்..
“அப்பா பால்….” என்று ஊர்மிளா நீட்டினாள்..
“மாப்பிள்ளைக்கும் குடும்மா…”
அவன் முகம் பார்க்காமல் நீட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள்..
உள்ளறையில் தாயின் ஒரு பக்கம் ஊர்மிளாவும் மறு பக்கம் பலராமனும் படுத்தார்கள்.. சற்று நேரத்தில் பகல் பூராவும் ஊர், ஊராய் சுற்றிப் பத்திரிகை வைத்து விட்டு வந்து வீட்டிலும் வேலை செய்த அலுப்பில் சத்தியவதி தூங்கிவிட விளையாடிய களைப்பில் பலராமனும் தூங்கி விட்டான்..
தூங்காதது ஊர்மிளா மட்டும்தான்.. அவளால் தூங்க முடியவில்லை.. கண்களை மூடினாள் அவன் உருவம்தான் தெரிந்தது…
‘கள்ளன்’ என்று செல்லமாய் திட்டிக் கொண்டே புரண்டு படுத்தாள்… ‘சட்’டென்று அவள் மேல் சிறுகல் ஒன்று வந்து விழுந்தது.. பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள்..
ஜன்னலோரத்தில் அந்தக் ‘கள்ளன்’ நின்று கொண்டிருந்தான்…
குப்பென்று வியர்த்து விட்டது ஊர்மிளாவுக்கு.. அவசரமாய் தாயையும் தம்பியையும் பார்த்தாள்.. ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள்…
‘என்ன’ என்று சைகை காட்டினாள்..
‘வெளியே வா’ என்று அவன் பதில் சைகை காட்டினாள்..
‘முடியாது’ என்று தலையை ஆட்டினாள்..
‘நான் போய் விடுவேன்’ என்று அவன் சைகையில் கூறினான்..
‘திக் திக்’கென்று மனம் அடித்துக் கொள்ள எழுந்து பின்னால் கதவு திறந்து முற்றத்திற்குச் சென்றாள்.. அவன் அங்கு காத்திருந்தான்..
“அப்பா..?” என்றாள் அவள் பயந்த குரலில்..
“அடித்துப் போட்டது போல் தூங்குகிறார்…”
“எதுக்குக் கூப்பிட்டீர்கள் சொல்லுங்கள்.. நான் உள்ளே போகணும்…”
“போய் என்ன செய்யப் போகிறாய்..?”
“ம்ம்.. தூங்கப் போகிறேன்…”
“தூக்கம் வருகிறதா..?”
அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.. வீட்டிற்குள் முன்னால் கைக்கு எட்டும் தூரத்தில் அவன் படுத்திருக்கும் போது தூக்கம் எப்படி வரும்…?
“வீட்டிற்குள்ளே கை தொடும் தூரத்தில் நீயிருக்கும் போது என்னால் தூங்க முடியவில்லை..” அவள் மனதிலிருப்பதை அவன் கூறினான்..
அவள் மெதுவாய் கதவை மூடிவிட்டு முற்றத்து படிக்கட்டில் அமர்ந்தாள்.. அருகே அவன் அமர்ந்தான்.. நிலவின் ஒளியில் அவள் முகம் பார்த்தான்..
“எண்ணம் போல் வாழ்க்கை ஒரு சிலருக்குத்தான் அமையும்.. அது எனக்கு அமைந்திருக்கு ஊர்மிளா..” என்றான் மிக மெதுவான குரலில்…
“என்னவாம்…” என்றாள் அவள் கிசுகிசுப்பான குரலில்..
“நீதான் வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.. நீயே எனக்குக் கிடைத்து விட்டாய்.. நீ என் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும்ன்னு ஏக்கப்பட்டேன்.. என் மனமறிந்து உன் பயம் உதறிக் கட்டுக் காவல் தாண்டி என்னிடம் வருகிறாய்.. எனக்காக எது வேண்டுமானாலும் செய்வாய்… இதைத்தான் சொன்னேன்…”
அவன் அவள் காதருகில் குனிந்து ரகசியம் பேசினான்.. அவள் முகம் சிவந்து அவன் மடியில் முகம் புதைத்தாள்.. அவன் சத்தமின்றி சிரித்தான்.. தலை கவிழ்ந்திருநத அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.. மெல்ல விலகி அமர்ந்தவள்,
“பாண்டிய மன்னன் போல் ஆராய்ச்சி செய்கிறீர்களா? பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா..? செயற்கை மணமான்னு..?” என்றாள்..
“உன் கூந்தலுக்கு எப்படியோ… உன் மேல் ஒரு தனி வாசம் இருக்கு.. அது முதல் உன்னை நான்…”
அவன் பேச விடாமல் வாய் பொத்தினாள் அவள்..
தன் இதழ் பொத்திய கரத்தின் விரல்களை அவன் கடிக்க அவள் கரம் விலக்கினாள்.. அந்தக் கையை தன் கைக்குள் பத்திரமாய் பொதித்துக் கொண்டவன்,
“இப்போ.. இந்த நிமிசம் உனக்கும், எனக்கும் கல்யாணமாகவில்லைங்கிற நினைப்பே பொய் என்பது போல் இருக்கிறது.. எத்தனையோ ஜென்மங்களாய் சேர்ந்து வாழ்ந்த நினைப்புத்தான் வருது…” என்று கூறினான்..
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது…”
அவர்கள் வெகு நேரம் நிலவொளியில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.. விடியும் நேரம் நெருங்கும்போது ஊர்மிளா..
“இனிப் போய் தூங்கலாமா..?” என்று கேட்டாள்..
“எங்கே தூங்குவது…? போய் தூங்குவது போல் நடிக்கலாம்..”
விடிந்தபோது தூங்கி விட்டாள் ஊர்மிளா…
“ஊர்மிளா, ஊர்மிளா” என்று சத்தியவதி உலுப்பி எழுப்ப அவசரமாய் விழித்து எழுந்தாள்..
“என்னம்மா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா..?”
“அதெல்லாமில்லை… காபி போட்டு வைச்சிருக்கேன்.. அப்பாவும் மாப்பிள்ளையும் வாசலில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் எழுப்பிக் கொடுத்துட்டு வா…”
ஊர்மிளா காபித் தம்ளர்களோடு வாசலுக்கு வந்தாள்..
“அப்பா, அப்பா” என்றழைத்தாள்..
“என்னம்மா.. பால்கார முனியன் வந்திட்டானா..?” என்று பதறி எழுந்தார் ஜனார்த்தனம்..
“அவன் அப்போதே வந்து பால் கறந்திட்டுப் போயிட்டான்னு சொல்லும்மா..” உள்ளேயிருந்து சத்தியவதியின் குரல் வந்தது..
“பால் கணக்கை எழுதி வைத்தாளா…?” ஜனார்த்தனம் கேட்க,
“வைச்சாச்சு…” உள்ளிருந்து பதில் வந்தது..
ஊர்மிளா இன்னொரு தம்ளரோடு தயங்கி நின்றாள்.. அப்பா முன்னிலையில் எப்படி அவனை எழுப்புவது..?
“என்னம்மா…”
“அப்பா அவருக்கு காபி…”
“அடடா… மாப்பிள்ளை இருக்காரில்ல…” என்றபடி அவசரமாய் எழுந்த ஜனார்த்தனம், தூங்கிக் கொண்டிருந்த லட்சுமணனை மெதுவாய் அசைத்து எழுப்பினார்..
“மாப்பிள்ளை மாப்பிள்ளை…”
மெதுவாய் கண் திறந்தவன் படக்கென்று எழுந்து அமர்ந்தான்..
“விடிந்து விட்டதா… ஊருக்குக் கிளம்பணுமே…”
“கிளம்பலாம் மாப்பிள்ளை… முதலில் காபியைக் குடிங்க…”
ஊர்மிளாவின் விழிகளை சந்தித்த விழிகள் ரகசியம் பேச காபியை வாங்கிக் கொண்டவன் ஜனார்த்தனத்திடம் கேட்டான்..
“இங்கே மெக்கானிக் யாராவது இருக்காங்களா மாமா..?”
“அந்தக் கவலை உங்களுக்கு எதுக்கு..? ஊர்மிளா அம்மாகிட்ட வெந்நீர் போடச் சொல்லு.. நீங்க குளிச்சுட்டு சாப்பிடுங்க.. நான் மெக்கானிக்கை கூட்டி வந்து வண்டியை சரி பண்ணிக் கொடுக்கறேன்..”
அவன் குளிக்க முற்றத்திலிருந்த குளியலறையில் வெந்நீர் ஊற்றி வைத்த பின் பலராமன் வாங்கி வந்த புதிய பிரஷையும், பல் பசையையும் கொடுத்தாள் ஊர்மிளா..
“கல்யாணத்திற்கு முன்னாலேயே மறு வீடு வந்து மாமியார் வீட்டில் சீராடுவது போல இருக்கு..” என்றான்..
“நல்லவேளை.. வேறு எதையும் சொல்லலை…”
“என்ன சொல்லுவேன்னு நினைச்சே…”
“ஒன்னுமில்லை…”
“பொம்பளைங்க ஒன்னுமில்லைன்னு சொன்னால் தான் எதுவோ இருக்குன்னு அர்த்தம்.. நீ சொல்ல வந்ததை நான் சொல்லவா..?”
“வேண்டாம்…”
“இல்லை.. சொல்லுவேன்..”
“நான் கேட்கமாட்டேன்..” ஊர்மிளா உள்ளே ஓடி விட்டாள்..
அவன் சிரித்தபடி குளிக்கப் போனான்.. குளித்து விட்டு வரும்போது அவன் வண்டி தயாராகி நின்றது..
காலை உணவாக இட்லியும், தோசையும் செய்திருந்தாள், சத்தியவதி… ஊர்மிளா ஓடி ஓடிப் பரிமாறினாள்..
அவன் கிளம்பினான்..
“வருகிறேன் மாமா, போய் வரேன் அத்தை…” விடை பெற்றான்..
“அதுதான் நாளைக்கு மறுநாள் வந்து விடுவீங்கள்ல மாமா” என்றான் பலராமன்..
மறுநாள் திருமணம்… முதல் நாளே மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுகிறான்.. லட்சுமணன் சங்கோஜத்துடன் வண்டியைக் கிளப்ப ஊர்மிளா உள்ளே கதவின் பின் மறைந்து கொண்டாள்..
சற்று நேரத்தில் வாசலில் பந்தல் போடப்பட்டது.. உறவினர் கூட்டம் வந்து இறங்கிக் கொண்டே இருந்தது.. வீட்டில் கல்யாணச் சூழ்ந்து கொண்டது… ஊர்மிளா வீட்டிற்குள்ளேயே அமர வைக்கப்பட்டாள்.. மாலை நெருங்கும் முன்னரே குளித்து புதுப்பட்டு உடுத்தி தலை வாரிப் பின்னலிட்ட ஊர்மிளாவின் பின்னலில் உறவுப் பெண்கள் பூ வைத்துத் தைத்து அலங்காரம் செய்து விட்டார்கள்.. நெற்றிச் சுட்டி, ஜடைப் பில்லை எல்லாம் வைத்து நகைகளையும் அணிவித்த பின் ஊர்மிளா,
மணப்பெண் ஊர்மிளா ஆகி விட்டாள்…
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.