Chapter 08
தயாநிதியின் வீடு அந்த ஊரில் மிகப் பெரிய வீடு.. அந்த வீடு இருந்த தெருவும் மிக அகலமானது.. அந்தத் தெருவை அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள்.. தயாநிதியின் வீட்டு ஹால் மிகப் பெரியது.. அதில் மணவறை அமைத்திருந்தார்கள்.. பந்தி இன்னொரு வீட்டில் நடந்து கொண்டிருந்தது.. பந்தலை நாற்காலிகள் நிறைந்திருந்தன.. வீட்டின் உள்ளே மணவறையைச் சுற்றி ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டிருந்தன.. நல்ல நேரத்தில் பெண் மணவறைக்கு அழைத்து வரப்பட்டு ஏற்கனவே அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் அருகே உட்கார வைக்கப் பட்டாள்.. ஊர்மிளா அமர்ந்ததும் லட்சுமணன் நன்றாக நகர்ந்து அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.. அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.. மணமேடையில் அவனை நிமிர்ந்து முறைக்க முடியாமல் மனதிற்குள் திட்டினாள்…
‘கள்ளன்… வெட்கமில்லாத ராஸ்கல்…’
நாதஸ்வரம் ஒலிக்க கெட்டி மேளம் முழங்க உறவினர் கள் அட்சதை போட சுபயோக சுபநேரத்தில் அவளது உள்ளம் கவர்ந்த கள்வன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.. அவள் கரம் பிடித்து அக்கினியை வலம் வந்தான்..
ஊர்மிளா லட்சுமணனின் மனைவி ஆகிவிட்டாள்.. தாடிக் கொம்பு கிராமத்தில் ஜனார்த்தனம், சத்தியவதி தம்பதியின் மகளாகவும் பலராமனும் தமக்கையாகவும் இருந்தவள் இன்று தயாநிதி, ஈஸ்வரி தம்பதிகளின் மருமகளாகவும், சுபத்ராவின் அண்ணியாகவும் ஆகிவிட்டாள்.
இனி அவளது வாழ்க்கை அவனோடு.. அவனது உறவினர்கள் தான் அவளது உறவினர்கள்.. அவன் வீடுதான் இனி காலம் முழுவதும் அவள் வீடு…
மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுத்தார்கள்.. கோவிலுக்கு அழைத்துச் சென்று குலதெய்வத்தை வணங்க வைத்தார்கள்.. மதிய விருந்து பரிமாறினார்கள்.. எல்லா நேரங்களிலும் அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டே அவன் இருந்தான்… விடுவிக்கவில்லை..
“அண்ணன் மகனே… உன் பெண்டாட்டியை யாரும் விழுங்கிவிட மாட்டாங்க.. கொஞ்சம் கையை விடு.. காலக் கொடுமை” என்று செவ்வந்தி கூறியதை அவன் கண்டு கொள்ளவில்லை…
“இந்த வித்தையெல்லாம் எங்கேடா கத்துக்கிட்ட…” என்று எகத்தாளம் பேசிய சாந்தாவின் வார்த்தைகள் அவன் காதுகளில் ஏறவில்லை..
தயாநிதி வீட்டு மாடியறை.. இதமான ஊதுவத்தி வாசம்.. அறையை ஒட்டியிருந்த மொட்டை மாடியில் நடை பயின்று கொண்டு ஊர்மிளாவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் லட்சுமணன்..
கொலுசு சத்தம் கேட்டது.. ஊர்மிளா வருவதை அது அறிவித்தது.. வந்தவள் அறைக்குள் அவன் இல்லாததைக் கண்டு திகைத்தாள்.. மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த லட்சுமணன்..
“இங்கிருக்கிறேன்…” என்று குரல் கொடுத்ததும் அங்கே வந்தாள்..
இதமான அவள் வாசத்தோடு மல்லிகையின் வாசம் அவனைச் சமீபித்தது.. கொலுசு சத்தம் ஒலிக்க வந்து நின்றாள்..
லட்சுமணன் அறையிலிருந்து வந்த வெளிச்சத்தில் அழகுப் பதுமையென அருகில் வந்து நின்ற ஊர்மிளாவை ரசித்துப் பார்த்தான்..
“என்ன புதிதாய் பார்ப்பது போல் பார்வை..? ம்…”
“புதிதுதாண்டி… நேற்று வரை நீ என் காதலி… இன்று என் மனைவி…”
“அதற்கென்னவாம்…?”
“என்னவா… எத்தனையோ இருக்கு.. இப்படி வா சொல்கிறேன்..”
மொட்டை மாடியில் நிலவொளியில் அவளை அமர வைத்தான்.. அருகே அமர்ந்தவன் அவள் எதிர்பாராமல் அவள் மடியில் படுத்துக் கொண்டான்..
அவள் இன்ப அவஸ்தையில் சிக்கினாள்.. அவளது கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை தொட்டு விளையாடியவாறே அவன் பேசினான்…
“ஊர்மி… நேற்று வரை உன்னை நான் தொடலாம்.. தொட்டேன்.. அதிக பட்சமாய் என்ன செய்ய முடியும்…? முத்தமிடத்தான் முடியும்..”
“அதையும் முதல் நாளிலேயே செய்தாகிவிட்டதே… கள்ளன்…”
அவன் நகைத்தான்.. அவளது கரத்தைப் பிடித்து எடுத்து விரல் பின்ன ஆரம்பித்தான்..
“அதெல்லாம் ஒரு திரில்டி.. இப்போ நிலையே வேற.. அதற்கும் மேல் எத்தனையோ.. அதைச் சொல்ல முடியாது.. ஏன்னா.. அது சொல்லித் தெரியாதது…”
ஊர்மிளா வெட்கத்துடன் மௌனம் சாதித்தாள்…
“ஊர்மி.. ஒரு பாட்டு கேட்டிருக்கிறாயா… ரொம்ப பழைய பாட்டு.. நம் பாட்டி காலத்துப் பாட்டு…” அவன் பாடினான்…
“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு…”
ஊர்மிளாவின் மடியிலிருந்து எழுந்து நின்றவன் அவள் கை பிடித்து எழுப்பி நிறுத்தினான்.. அவள் தோள் தழுவி முத்தமிட்டான்.. தொய்ந்து சரிந்தவளை அப்படியே கைகளில் வாரித் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து படுக்கையில் கிடத்தினான்..
அந்த இரவின் ஒரு வினாடி கூட அவர்கள் உறங்கவில்லை.. உறவாடினார்கள்.. உரையாடினார்கள்.. இரண்டும் இல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..
பரிசு என்பது ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்வது.. ஒருவர் விரும்புவதை மற்றொருவர் அளிப்பது.. பரிசு வழங்குவதில் இருவரும் கொடை வள்ளல் கர்ணனை மிஞ்சினார்கள்..
பொழுது புலர்ந்தது.. புது மண மக்களை ‘மறுவீடு’ விருந்திற்கு ஊர்மிளாவின் பெற்றோர் அழைத்தனர்.. தயாநிதி தயக்கத்துடன்,
“மச்சான் மகனும் மருமகளும் இரண்டு நாள் அங்கே தங்கட்டும்..மகனுக்கு லீவு குறைச்சலா இருக்கு.. அதனால் ஒரு பத்து நாள் பக்கத்தில் கொடைக்கானல் இருக்கு.. போய்ட்டு வரட்டும்…” என்றார்..
ஜனார்த்தனம் மகிழ்ந்து போனார்… அவர் மகளும் சந்தோசப்படுவாளே…
“இதுக்கு எதுக்கு மச்சான்.. இவ்வளவு சங்கடப் படறீங்க.. நம்ம புள்ளக சந்தோசம் தானே நமக்கு முக்கியம். சடங்கு, சம்பிரதாயமெல்லாம் நம்மளை மாதிரி ஆளுகளுக் குத்தான்.. மாப்பிள்ளை லீவு முடியும் வரை அவங்க கொடைக்கானலில் தங்கியிருக்கட்டும்.. ஆகிற செலவு என்னைச் சேர்ந்தது..”
“அதெல்லாம் வேண்டாம் மச்சான்.. எனக்கிருப்பது ஒரே பையனும் பெண்ணும் தானே.. யாருக்கு செலவழிக்கப் போகிறேன்..?”
இரண்டு தகப்பன்மார்களும் போட்டிபோட,
“ஹலோ.. நான் என் பெண்டாட்டியோட தேன் நிலவு போவதற்கு நீங்க ரெண்டு பேரும் ஏன் செலவழிக்கணும்..? என் சம்பளம் இருக்கு.. நான் பார்த்துக் கொள்வேன்…”
என்று லட்சுமணன் அவர்கள் போட்டிக்கு முற்றுப் புள்ளி வைத்தான்..
“பார்த்தியா செவ்வந்தி… இந்தக் கூத்து எங்கேயும் நடக்குமா..?” சாந்தா செவ்வந்தியின் காதைக் கடிக்க,
“அதுதானே.. பெண்ணைக் கட்டிக் கொடுத்தவர் செலவுக்கு கொடுக்கிறேன்னா வாங்கிக்கிட்டுப் போக வேண்டியதுதானே.. அப்பனும், மகனும் வேண்டாம் கிறானுங்க.. என் அண்ணனுக்கும் புத்தியில்லை.. என் அண்ணன் மகனுக்கும் புத்தியில்லை.. காலக் கொடுமை…” என்று அவள் நொடித்தாள்..
மறு வீடு விருந்து பலமாக இருந்தது… அவளை முதன் முதலாய் சந்தித்த பெருமாள் கோவிலில் கணவன், மனைவியாக இருவரும் போய் வணங்கினார்கள்.. கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது,
“இங்கேதானே நாம் உட்கார்ந்திருந்தோம்..” என்று கேட்டான்..
“ஆமாம்…”
“உட்கார்…” என்று உட்கார்ந்து கொண்டவன் அருகில் அமர்ந்து கொண்டவளைப் பார்த்துக் கேட்டான்..
“இப்போ ஒளிந்து உட்காரவில்லையே…?”
“ம்ம்… தெரியாதாக்கும்…”
“இது நீ பிறந்து வளர்ந்த ஊராச்சே…”
“நீங்கள் என்னோட தாலிகட்டிய புருசனாச்சே…”
“ஹாஹ்ஹா… இதற்குத்தாண்டி உட்காரச் சொன்னேன்.. அப்போது பயந்து, பயந்து நீ உட்கார்ந்ததைப் பார்க்க கஷ்டமா இருந்துச்சு…”
“ரொம்பத்தான் அக்கறை.. அவ்வளவு இருந்தால் ஏன் வரச் சொல்லணும்…?”
“முடியலைடி…”
ஊர்மிளாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது.. படக்கென்று எழுந்து கொண்டாள்.. அவனும் கேள்வி கேட்காமல் எழுந்து கூட வந்தான்.. கோவிலைத் தாண்டியதும்…
“ஏன் எழுந்து விட்டேன்னு கேட்கவே இல்லையே…” என்றாள் அவள்…
“காரணம் தெரிந்ததுதானே… கேட்பதற்கு என்ன இருக்கிறது..?”
“என்ன காரணமாம்…?”
“என் பெண்டாட்டிக்கு என் மேல் காதல் வந்து விட்டது.. அம்மினிதான் கோவிலுக்குள் கொஞ்ச மாட்டீங்களே.. அதுதான் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போறீங்க.. போதுமா..?”
“உதைதான் கிடைக்கும்.. ராஸ்கல்… வீட்டில் ஒரே கூட்டம்…”
“கூட்டத்தை மீறிக் கொஞ்ச வர மாட்டாயா..?”
“வரமாட்டேன்…”
“அதையும் பார்ப்போம்…”
அவன் சவாலில் ஜெயித்தான்.. கணவனுக்கு காபி கொடுக்க வேண்டும், அவன் முகம் கழுவ குளியலறையில் தண்ணீர் எடுத்து வைக்க, அவனுக்கு சாப்பாடு பரிமாற என்று ஆயிரம் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு அவனைக் கட்டித் தழுவி விலகினாள் அவள் மனைவி..
குளிர் மிகுந்த கொடைக்கானல்.. ஊசி மரக் கூட்டத்தின் இடையே சுற்றிப் பார்ப்பவர்களின் கூட்டம்.. கட்டவிழ்ந்த கன்றுகளாய் லட்சுமணனும், ஊர்மிளாவும் அங்கே சுற்றித் திரிந்தனர்..
சேலையை விட்டுப் பழையபடி சுடிதாருக்கு மாறியிருந்தாள் ஊர்மிளா.. ஜீன்ஸ், டி.சர்ட்டில் அட்டகாசமாய் இருந்தான் லட்சுமணன்.. கையில் இருந்த வீடியோ காமிராவில் அவர்கள் இருவரின் நிகழ்காலத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தான் லட்சுமணன்.. சில நேரம் அவனது நடமாட்டங்களை அவளும், அவளது செயல்களை அவனும் கேமிராவில் பதிவு செய்து கொண்டார்கள்.. சில நேரம் அவர்கள் இருவரும் சேர்ந்து நடக்க மற்றவர்கள் யாராவது உதவி கேட்டு பதிவு செய்து தரச் சொன்னார்கள்..
“ஏய்ய்.. குதிரையில் ஏறுவோமா…?”
“ஐயோ எனக்கு ஏறத் தெரியாது…”
“நான் ஏற்றி விடுகிறேன்..”
இருவரும் ஒரே குதிரையில் ஏறிக் கொள்ள அந்தக் குதிரை மெதுவான ஓட்டத்துடன் நடந்தது..
இருவரும் இறங்கியதும் அந்த வட இந்திய இளைஞனுக்கு நன்றி சொல்லி வீடியோ காமிராவைப் பெற்றுக் கொண்டான் லட்சுமணன்..
“இதையெல்லாம் படம் பிடிக்கணுமா..?”
“நிச்சயமாய்… இனி இது போன்ற படங்கள்தான் நம் இருவருக்கும் துணை!” அவன் இயல்பாய் பேசிக் கொண்டே அவள் தோள் மீது கைபோட அவளது நடைநின்றது..
“என்னடா..?” அவள் முகம் நிமிர்த்தினான்.. அவள் விழிகளில் கண்ணீர் முத்துக்கள்..
“ஏன் அப்படிச் சொன்னீங்க…?”
“அதுக்கா கலங்குற..? பைத்தியம்.. நீ இங்கே.. நான் அங்கேன்னுதான் நம் வாழ்க்கையில் பாதி நாள் கழியப் போகிறது.. அப்போது உனக்கும், எனக்கும் துணையா இந்தப் படங்கள் இருக்கும்ன்னுதான் சொன்னேன்.. மீதி நாள் உனக்கு நானும், எனக்கு நீயும் துணையிருப்போமே..”
அவள் தோளோடு அணைத்துக் கொண்டு நடந்தான்.. அவள் மனம் அமைதியடையாமல் ஏனோ அலை பாய்ந்து கொண்டிருந்தது..
குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முருகனை வணங்கி விட்டு வெளியே வந்தனர்..
“குறிஞ்சிப் பூ பூத்திருக்கு பார்த்தாயா…?”
“எவ்வளவு அழகாயிருக்கு…”
“இந்தப் பூவோட சிறப்பு என்னன்னு தெரியுமில்ல..”
“பனிரெண்டு வருசத்துக்கு ஒரு தரம் மலரும்.. அது தானே…”
“குறிஞ்சிப் பூப்போல்ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா.. அப்படி ஒரு வித்தியாசம்ன்னு சொல்லால் உணர்த்துறாங்க..”
“ஏங்க எனக்கு ஒரு ஆசை…”
“சொல்லேன்.. நீ கேட்க மாட்டாயான்னு தான் காத்துக்கிட்டிருக்கேன்…”
“அடுத்த முறை குறிஞ்சிப் பூ பூக்கும்போது நாம் இங்கு வரலாமா…?”
“வந்துட்டாப் போச்சு…”
இலகுவாய் சொன்னான் லட்சுமணன்.. அதே நேரம் பனி படர்ந்த மலையோரம் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு போர் அறிவிப்பு செய்தி போய் சேர்ந்தது…
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.