Chapter 11
அன்று ஊர்மிளா பெற்றுக் கொண்ட கடிதத்தில் லட்சுமணன் இவ்வாறு எழுதியிருந்தான்…
‘அன்பான ஊர்மிளா,
பாகிஸ்தானியருடன் நடந்த சண்டையில் எனது சகாவும் நண்பனுமான சோல்ஜர் ரஹீம் படுகாய மடைந்தான்.. மருத்துவமனையில் அவனது கால்களில் பாய்ந்திருந்த குண்டை எடுத்து உயிரைக் காப்பாற்றி விட்டார்கள்.. ஆனால் கடைசி வரை அவன் விந்தி விந்தித்தான் நடக்க வேண்டும்.. ஆம் ஊர்மிளா.. அவன் ஊனமாகி விட்டான்.. இதுபோல் தினசரி என் கண் முன்னே நடக்கிறது.. போரில் உயிர் தப்பினாலும் இதுபோல் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது.. ரஹீம் மிகவும் சந்தோசமாக அதை ஏற்றுக் கொண்டு இருக்கிறான்.. இது அவனுக்குக் கிடைத்த நினைவுச் சின்னம் என்று கூறுகிறான்..
ஊர்மி… நான் உன்னிடம் கேட்க விரும்புவது இதைத் தான்.. இது போன்ற ஒரு நிலைமை எனக்கு வந்தால்.. நான் ஊனத்துடன் திரும்பி வந்தால்… அதை நீ எப்படி எதிர்கொள்வாய்..? எப்படி என்னை ஏற்றுக் கொள்வாய்..?
உன் லட்சுமணன்.’
பனி படர்ந்த மலைப் பகுதியில் அந்த ராணுவக் கூடாரத்தில் குளிரில் விறைத்துக் கிடந்த லட்சுமணனின் உடல் சூடேற ஊர்மிளாவின் பதில் கடிதத்தைப் பிரித்துப் படித்தான்…
‘அன்பே!
நான் அழகானவள் என்று நீங்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.. அது என் முக வடிவையும், நீண்ட கூந்தலையும் பார்த்து நீங்கள் கூறியவை.. ஒருவேளை ஏதேனும் ஓர் விபத்தில் என் முகம் மாறி கூந்தல் கொட்டி நான் பார்க்க விகாரமாகத் தோற்றமளிக்கும் நிலை நேர்ந்தாலும் நீங்கள் என் மேல் கொண்டுள்ள காதல் எள்ளளவும் குறையாது என்பதை நான் அறிவேன்.. நான் உங்கள் ஊர்மிளா என்ற நினைவு ஒன்றே போதும்… நீங்கள் என்னைக் காதலிக்க.. அவ்வாறு இருக்கும்போது இப்படி ஒரு கேள்வியை என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாமா..?
நீங்கள் என் முன் வந்தால் போதும்.. அதற்காகவே காத்திருக்கிறேன்..
காதலுடன் காத்திருக்கும்…
உங்கள் ஊர்மிளா…’
கொட்டும் மழையிலும், குளிரிலும் இரவு பகல் பாராமல் எல்லையைக் காவல் காக்கும் ராணுவ வீரர்களுக்கான உற்சாக மருந்து அவர்கள் குடும்பத் திலிருந்து அவர்களுக்கு வரும் கடிதங்கள்தான்.. அதன் மதிப்பு பிரிவில் தவிக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும்.. எழுத்துக்கள் விளக்குவதை மொழியில் கூற முடியாது.. பக்கம், பக்கமாக எழுதுவதை பத்து வார்த்தைகளில் பேசி முடிக்க இயலாது.. செல்போன் என்னதான் அசுர வளர்ச்சியை அடைந்தாலும் தபாலுக்கும் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் அது குறைந்து விட முடியாது.. அந்தக் காலத்தில் தூது விடும்போது மடல்கள் எழுதி அனுப்பினார்கள்.. லட்சுமணனும் ஊர்மிளாவும் கடிதங்களில் எழுதி அனுப்பிக் கொண்டார்கள்…
மனைவியின் கடிதத்தைப் படித்த லட்சுமணனின் மெய் சிலிர்த்தது.. மனமெங்கும் இதம் பரவியது.. உடனே அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.. எப்போது அவளைப் பார்ப்போம் என்ற ஏக்கம் எழுந்தது.. கூடாரத்தை விட்டு வெளியே வந்தான்.. பனிக்காற்று உடலைத் துளைத்தது.. தோளில் ஒரு கரம் பட்டது.. படக்கென்று திரும்பினான்.. ஜோசப் நின்றிருந்தான்…
“என்னடா… இவ்வளவு அலர்ட்டாத் திரும்புகிறாய்..?”
“போர் முனையில் இருக்கிறோம்.. அலர்ட் இருக்க வேண்டாமா..?”
“அதற்காக நம் கூடாரத்திற்குப் பக்கத்தில் பாகிஸ்தானி வந்து விடுவானா…?”
லட்சுமணன் சிரித்தான்.. வயர்லெஸ் அழைக்க மறுநாள் போரைப் பற்றிய கட்டளைகளை மேலதிகாரி களிடம் வாங்கிக் கொண்டான்.. மறுநாள் அவர்கள் மூவரும் மேலும் முன்னேறினார்கள்..
அடர்ந்த காடுகளின் இடையே சூரிய வெளிச்சம் புக முடியாமல் இருட்டாக இருந்தது.. அதன் ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒளிந்து ஒளிந்து லட்சுமணன், ஜோகிந்தர் சிங், ஜோசப் மூவரும் முன்னேறிக் கொண்டு இருந்தார்கள்.. தூரத்தில் பாகிஸ்தானியரின் நடமாட்டம் தெரிந்தது.. தோளில் தொங்கிய பைனாகுலரை எடுத்து அவர்களின் நடவடிக்கையைக் கண்காணித்தான் லட்சுமணன்..
“ஐந்தாறு பேர்கள்தான் இருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் கிட்டப் போய் குண்டை விட்டு எறியலாம்…”
ஒரு அடி எடுத்து மேலே வைக்கும் முன் அவர்கள் பாகிஸ்தானியரால் சூழப்பட்டார்கள்.. மெஷின் கன்னை இயக்கியபடி அவர்கள் மூவரும் சுட்டுக் கொண்டே பின் வாங்க லட்சுமணனின் மார்பில் குண்டு பாய்ந்தது.. அவன் நடக்க முடியாமல் கீழே விழுந்தான்.. அவன் விழுந்ததைக் கவனிக்காத ஜோசப்பும், ஜோகிந்தர் சிங்கும் சுட்டுக் கொண்டே ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து ஓடினார்கள்..
லட்சுமணன் பாகிஸ்தானியரிடம் மாட்டிக் கொண்டான்.. அன்று இரவு லட்சுமணன் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டு ராணுவ மேலிடத்திற்குத் தெரியப் படுத்தப்பட்டது.. மறுநாள் தேடும்போது ஊர்மிளாவின் கடிதமிருந்த லட்சுமணனின் சட்டை மட்டுமே ரத்தக் கறைகளுடன் கிடைத்தது.. போர்க்களத்தில் குவிந்திருந்த எண்ணற்ற சடலங்களில் லட்சுமணனின் சடலம் கூடக் கிடைக்கவில்லை..
அடுத்த ஒரு வாரத்தில் கார்கில் போர் முடிந்தது.. பாகிஸ்தானியரை விரட்டி கார்கில் மண்ணில் நம் இந்தியக் கொடியைப் பறக்க விட்டது நம் வீரமிகு ராணுவம்.. போரில் இறந்த வீரர்களின் இல்லங்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது..
மேலக்கால் கிராமத்தில் தயாநிதியின் வீட்டிற்கு முன்னால் ராணுவ ஜீப் வந்து நின்றது.. வாசல் தெளித்துக் கொண்டிருந்த சுபத்ரா அண்ணன் வந்து விட்டானென்று நினைத்து மகிழ்வுடன் துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள்..
“அம்மா, அப்பா, அண்ணி.. அண்ணன் வந்து விட்டார்.”
சுபத்ராவின் வார்த்தைகளைக் கேட்ட ஊர்மிளா காபிக்காக காய்ச்சி கையில் தூக்கிக் கொண்டிருந்த பால் பாத்திரத்தை அப்படியே நழுவ விட்டாள்.. பால் கீழே கொட்டி அவள் காலைச் சுட்டதை உணராதவளாய் வாசலுக்கு ஓடினாள்.. அதற்குள் பின் கட்டிலிருந்த ஈஸ்வரியும் வயலுக்குச் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்த தயாநிதியும் அவசரமாய் அங்கு வந்தனர்.. கணவனைக் கண்களால் தேடியபடி ஊர்மிளா தவித்து நின்றாள்…
ஜீப்பிலிருந்து ராணுவச் சீருடையுடன் இறங்கியவர்கள் நெருப்பின் மேல் நிற்பது போல் உணர்ந்தார்கள்.. இது கொடுமை.. கணவனைக் காண வந்த மனைவியிடம் ‘அவன் இனி வரவே மாட்டான்’ என்று சொல்ல நேர்வது பெரும் துயரம் தரும் செயல்.. ஆனால் அவர்கள் இதைச் செய்து தான் ஆக வேண்டும்.. இறந்து விட்ட ராணுவ வீரனின் இல்லத்திற்கு அந்தச் செய்தியைத் தெரியப்படுத்த வேண்டியது அவர்களது கடமை.. அந்த ராணுவ வீரனுக்கு செலுத்த வேண்டிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு அவனுக்குச் சேர வேண்டிய தொகைகளை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களது வேலை..
“அத்தை.. அவர் வரவில்லையா… கேளுங்களேன்..” ஊர்மிளா ஈஸ்வரியின் கை பிடித்து பரிதவித்தாள்..
“எங்க பையன் வரவில்லையா…?” என்று தயாநிதி கேட்டார்..
அவர்கள் மூவரும் மௌனம் சாதித்தனர்.. எதையோ சொல்லத் துடிக்கும் துடிப்புடன் சொல்ல முடியாத சோகத்துடன் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. ஊர்மிளாவின் கை ஈஸ்வரியின் கையை விட்டு விட்டது.. ஊர்மிளாவின் மனம் திகிலடைந்தது…
ஊர்மிளா பட்டதாரி.. உலகம் தெரிந்தவள்.. ராணுவ ஜீப் வந்து நிற்கிறது.. இறங்கியவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.. ஏன்..? அவள் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது..
மனதில் அவளை முதன் முதலாய் பார்த்து “எங்கே போகிறோம்..?” என்று இளநகையுடன் கேட்டுக் கொண்டு நின்ற லட்சுமணன் தோன்றினான்.. வந்திருந்தவர்களில் ஒருவன் ஏதோ பேச வாய் திறக்க,
“சொல்லாதீர்கள்…” என்று அலறினாள் ஊர்மிளா..
“அவரைப் பற்றிய நல்ல தகவல் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்…”
வந்தவர்கள் மௌனம் சாதிக்க ஊர்மிளா கண்கள் இருள பின் வாங்கினாள்.. தயாநிதியும், ஈஸ்வரியும் பதறிப் போயினர்..
“என்ன தம்பி.. என் மருமகள் பயப்படுதே.. எதுவும் இல்லைன்னு வாய் திறந்து சொல்லுங்களேன்…”
“மனதை திடம் செய்து கொள்ளுங்கள்…”
“என்னப்பா என்ன ஆச்சு…?”
“கார்கில் போரில் லட்சுமணன் இறந்து விட்டான்.. அவனது ரத்தக்கறை படிந்த சட்டை மட்டுமே கிடைத்தது.. சடலம் கிடைக்கவில்லை…”
“இல்ல்ல்லை…” என்ற அலறலுடன் ஊர்மிளா மயங்கிச் சரிந்தாள்.. ஈஸ்வரி சுவரில் முட்டி மோதிக் கதறிப் புரண்டாள்.. ஒரு நொடியில் மேலக்கால் கிராமமே அந்த வீட்டில் வந்து கூடியது..
ராணுவ ஜீப்பில் இருந்தவர்களிடம் ஆள் மாற்றி ஆள் விசாரித்துக் கொண்டு இருக்க பெண்கள் வீட்டுக்குள் ஓடி ஈஸ்வரியைக் கட்டிப் பிடித்து அழுதனர்.. செவ்வந்தி மார்பில் அறைந்து அழுது கொண்டே ஓடி வந்தாள்..
“மதினி.. இது என்ன காலக்கொடுமை… நம்ம வீட்டிலயா இப்படி எல்லாம் நடக்கணும்.. தெய்வமே… இது உன் சோதனையா..?”
சாந்தா போட்டது போட்டபடி தன் வீட்டில் போட்டு விட்டு ஓரகத்தியின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.. தயாநிதியிடம் சென்று கதறி அழுதாள்…
“மாமா.. மன்னவன் தேர்சாஞ்சு போச்சே.. இதை எங்கே போய் சொல்ல.. நம்ம கொடுமையைக் கேட்க ஆளில்லையா..?”
ராணுவத்தினர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிறகு ஓர் நாள் வருவதாகக் கூறி விட்டுச் சென்று விட்டார்கள்..
தாடிக் கொம்பிற்குத் தகவல் பறந்தது.. ஜனார்த்தனத் தின் தலையில் இடி விழுந்தது போலானார்.. சத்தியவதிக்கு மூச்சே நின்று விட்டது.. பள்ளிக்குச் சென்ற பலராமனை அங்கேயே சென்று தகவல் சொல்லி அழைத்துக் கொண்டு மேலக்கால் கிராமத்துக்கு டாக்ஸியில் பறந்தார்கள்..
ஊர்மிளாவின் பிறந்த வீட்டுச் சொந்தங்கள் வந்து கூடின.. அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்கள் அவர்கள்.. ஊர்மிளாவின் தாய்வழிப் பாட்டி சத்தியவதியை அடிக்கப் போனாள்..
“பாவி… என் பேத்தி பாட்டுக்கு படிச்சுக்கிட்டு இருந்தாளே.. கல்யாணம் வேணும்ன்னு அவ உன்கிட்ட வந்து கேட்டாளா..? ஒரு நாள் கூத்துக்கு தலையைச் சிரைச்ச கதையா.. என் பேத்தி வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடவா அந்தக் கூத்தை நடத்தின.. சண்டாளி…”
“ஆத்தா.. நான் கனவு கண்டேனா.. கற்பனை தான் செய்து பார்த்தேனா.. இப்படியெல்லாம் நடக்குமின்னு… பெரிய மிலிடிரி ஆபிசர்.. பெரிய குடும்பம்ன்னு பொண்ணைக் கட்டிக் குடுத்தேன்.. என் ஆசையெல்லாம் நொறுங்கிப் போச்சே ஆத்தா.. என் மக வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே ஆத்தா.. என்னைக் கொன்னாக் கூடத் தகும் ஆத்தா.. நான் பாவிதான் ஆத்தா பாவிதான்…” சத்தியவதி கதறி அழுதாள்…
செவ்வந்தி சிலிர்த்து எழுந்தாள்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.