Chapter 15

0Shares

சாந்தா செவ்வந்தியின் வீட்டிற்குப் போனபோது அவள் வீட்டில் ராஜ்ய பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.. அவள் வீட்டுக்குள் போட்டுக் கொண்டிருந்த சத்தம் தெருவை எட்ட சாந்தா பீதியடைந்து வீட்டுக்குத் திரும்பி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள்.. மறுகணம் செவ்வந்தி வீட்டில் சத்தம் இல்லாமல் இருப்பது அலையடிக்காத கடல் இருப்பதைப் போல் என்று மனதைத் திடம் பண்ணிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..

“என்ன செவ்வந்தி என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்த சாந்தாவைக் கண்டதும் மனைவியின் சண்டையில் கிழிந்து கந்தல் துணியாகிக் கொண்டிருந்த சுந்தரம் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்..

“வாம்மா.. சாந்தா..” என்று அவ்வளவு முகமலர்ச்சியாக என்றுமே அவர் மைத்துனன் மனைவியை வரவேற்று இருக்க மாட்டார்..

கணவனின் வரவேற்பைத் தொடர்ந்து சாந்தாவைப் பார்த்த செவ்வந்தி “வா மதினி..” என்றாள் சண்டையின் கடுமை குறையாதவளாய் முறைப்புடன்..

செவ்வந்தி சிரித்த முகத்துடன் இருக்கும்போதுதான் பேச வேண்டுமென்றால் ஏழேழு ஜென்மம் காத்திருக்க வேண்டுமே..

அத்தனை ஜென்மம் காத்திருக்கும் உத்தேசமில்லாத சாந்தா,

“சாப்பிட்டியா செவ்வந்தி..” என்று கேட்டு பேச்சை ஆரம்பித்தாள்..

“ஏன் சாப்பிடலைன்னு சொன்னா எங்கண்ணன் வீட்டில இருந்து ஆக்கிக் கொண்டு வரப் போறயா..?”

“அங்கே ஆக்காவிட்டால் என்ன..? இதுவும்  எனக்கு அண்ணன் வீடுதானே இங்கே ஆக்கிப் போட்டால் போச்சு.. நகரு.. நான் சமையல் கட்டுக்குப் போய் பொங்கிப் போடறேன்..”

அவ்வளவுதான் சாந்தாவை விட்டு விட்டு சுந்தரத்தை பத்ரகாளி போல் முறைக்க ஆரம்பித்தாள் செவ்வந்தி.. சுந்தரம் குலை நடுங்கிப் போனார்..

“ஆமா மதினி.. இப்படி எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க..? என்னை என் வீட்டை விட்டு பத்திவிட..?”

“இதென்னடி ஆத்தா புதுக்கதையா இருக்கு..? உன் வீட்டை விட்டு உன்னைப் பத்திவிட ஒரு மனுசப் பிறவி பிறந்து இல்ல வரணும்..?”

சாந்தாவின் சாதுர்யப் பேச்சில் செவ்வந்தி கொஞ்சம் மலை இறங்கினாள்.. சாந்தா சுந்தரத்தைப் பார்த்து வினவினாள்..

“என்னண்ணே.. எங்க செவ்வந்தி இவ்வளவு கோபப் பட்டு நான் பார்த்ததே இல்லையே…”

சுந்தரம் ‘அடிப்பாவி என்னமா புளுகுகிறாய்..?’ என்பது போல் பார்வை பார்க்க அதைக் கண்டும் காணாதவள் போல் சாந்தா தொடர்ந்தாள்..

“அவ கோபப் படறான்னா விசயம் பெரிசாத்தான் இருக்கும்.. என்ன செவ்வந்தி என்ன ஆச்சு..?”

கதை கேட்க ஆரம்பித்து விட்டாள் என்று சலித்துக் கொண்ட சுந்தரம் வெறும் வயிற்றோடு பசி தாங்க முடியாமல் சோர்ந்து அமர்ந்தார்.. எட்டு வயது மகள் சீதாவைப் பார்த்துக் கொண்டார்.. வளர்கின்ற பிள்ளைப் பருவம்.. நேரா நேரத்திற்கு சாப்பாடு போடாமல் இந்தப் பாடு படுத்துகிறாளே என்று கவலைப்பட்டவர் விரக்தியுடன் விட்டத்தை வெறித்தார்..

“அந்தக் காலக் கொடுமையை ஏன் மதினி கேட்கிற..?”

சாந்தா நாத்தனார் எந்தக் காலக் கொடுமையைப் பற்றிக் கூறுகிறாள் என்று அறியாதவளாய் நாத்தனாரின் கணவரைப் பார்த்தாள்.. அவர் இருக்கும் நிலையைக் கண்டு இதைவிடப் பெரிய காலக்கொடுமை எதுவும் இருக்க முடியாது என்று மனதிற்குள் பரிதாபப்பட்டுக் கொண்டு வெளியில் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்..

“நான் கேட்காம யார் கேட்பாங்க.. நீ சொல்லு கேட்கிறேன்..”

“ஒரு வீட்டில் சமையல்கட்டுல புழங்குகிற உரிமை யாருக்கு மதினி..?”

“ஏன் அந்த வீட்டுப் பொம்பளைக்குத்தான்..”

“அந்த வீட்டுப் பொம்பளைன்னா யாரு..? வாக்கப்பட்டு வந்தவளா..? வாக்கப்பட்டு இன்னொருத்தன் வீட்டுக்குப் போனவளா..?”

‘ஆஹா..’ என்று சுதாரித்துக் கொண்டாள் சாந்தா.. பிறந்த வீட்டில் இந்த செவ்வந்தி நடந்துக்கிற நாட்டாண் மையைத் தட்டிக் கேட்க நேரம் வந்து விட்டதே..

“இது என்ன செவ்வந்தி இப்படிக் கேட்டுவிட்ட? உலகத்திற்கே தெரியுமே.. தாலி கட்டிக் கொண்டு ஒரு வீட்டுக்கு வாழ வரும் பொண்ணுக்குத்தான் உரிமை இருக்கு.. அடுத்த வீட்டுக்கு மருமகளா போன பின்னாலும் பிறந்த வீட்டில் ஆட்டம் போடுகிற பிறவிகளை என்ன செய்யறது? அதுகளுக்கா புத்தி இருக்கணும்.. இல்ல நாலு பேர் வாழறதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கணும்.. மனச்சாட்சி இல்லாத ஜென்மங்களைப் பத்தி நமக்கென்ன பேச்சு செவ்வந்தி..”

செவ்வந்தி விழித்துக் கொண்டாள்.. ‘வாடி என் அண்ணன் பெண்டாட்டி.. நீ சந்தடி சாக்கில் சிந்து பாடுறயா..?’ என்று கறுவிக் கொண்டவளாய் கூறினாள்..

“மதினி.. பிறந்த வீடு நல்லா இருக்கணும்.. நாலுபேர் மெச்ச இருக்கணும்னு பாடுபட்டவளுக்கு பட்டுக் கொண்டிருக்கிறவளுக்கு பிறந்த வீடு தங்கத் தாம்பளத்தில் மரியாதை கொடுக்கணும்..”

‘ஆமாம் உனக்கு அதைக் கொடுத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்..’ என்று சாந்தா முறைப்பாய் பார்க்க செவ்வந்தி தொடர்ந்தாள்..

“ஆனா என்னை மாதிரி பிறந்த வீட்டைத் தூக்கி நிறுத்துற பொம்பளைங்க யாரு இந்த மண்ணில் இருக்கிறாங்க..?”

‘உன் ஒருத்தியையோ இந்த மண் தாங்காது.. இதில் இன்னொருத்தியா..?’ சாந்தா பல்லைக் கடித்துக் கொண்டாள்..

“இப்ப என் வீட்டையே எடுத்துக்க மதினி.. இந்த மனுசன் கூடப் பொறந்தவன்னு ஒருத்தி இருக்காளே…”

‘உன்னை அண்ணன் பொண்டாட்டியாக்கிய பின்னாலும் அவள் இருக்கிறாளே.. அதுவே அதிசயம்தான்’ சாந்தா மனதில் நினைவு ஓடியது..

“அவ இன்னைக்கு காலையில இங்க வந்திருந்தா மதினி..?”

“யாரு சுப்புத்தாயா..? உன் வீட்டுக்கு வந்தாளா..?” சாந்தா ஆச்சரியமாய் கேட்டாள்..

சுந்தரம் இரண்டு சகோதரன்களோடும் ஒரு சகோதரி யுடனும் பிறந்தவர்.. எல்லோருமே உள்ளூரில்தான் வசித்து வந்தனர்.. சுந்தரத்தின் அக்கா சுப்புத்தாயுடைய மகன்தான்  நடேசன்.. சகோதரனைப் பார்க்க அவள் விரும்பினாள் மகனிடம் சொல்லி விடுவாள்.. சுந்தரம் தான் போய்ப் பார்ப்பார்.. தம்பி மனைவியான செவ்வந்திக்கும் அவளுக்கும் என்றுமே ஆகாது.. அவள் வந்திருந்தாளா..?

சாந்தா ஆச்சர்யப்படுவதைப் பார்த்தவுடன் செவ்வந்தி முறைத்தாள்.. “இது என்ன மதினி, வரக்கூடாத வீட்டிற்கு வந்திட்டாப்புல கேட்கறே..?” சாந்தா சுதாரித்துக் கொண்டு பதில் கூறினாள்..

“அப்படியில்ல செவ்வந்தி.. வரக்கூடாதவ வந்திருக்கா ளேன்னுதான் கேட்டேன்.. பாரு காலங்கார்த்தால அடுப்பைக்கூட பத்த வைக்காம அண்ணன் கூட மல்லுக்கு நிற்கிறயே.. நீங்க சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லையே…”

அவள் விசமமாகக் கூற ‘இதுவும் என் நேரமா..?’ என்று செவ்வந்தியை சுந்தரம் விழியால் கேட்க செவ்வந்தி சாந்தாவை முறைத்தாள்..

“வீட்டுக்கு வீடு வாசப்படி மதினி.. நீயும் எங்க சின்ன அண்ணனும் எப்பப் பார்த்தாலும் கொஞ்சிக்கிட்டே இருக்கிறது போல மத்தவங்க வீட்டை கேலி பேசுறயா..? போன வாரம் உனக்கும் அண்ணனுக்கும் வந்த சண்டையில் நான் மட்டும் தலையிட்டு நிப்பாட்டலைன்னா நீ பொறந்த வீட்டுக்கு பொட்டியைக் கட்டியிருப்ப…”

சாந்தா அடங்கிப் போனாள்.. இப்படி பதிலடி கொடுக்கிறாளே என்று பொறுமியபடி அடுப்பைப் பார்க்க அதில் கொஞ்சம் தணல் இருந்தது..

“அடுப்பைப் பத்த வச்சிட்டுத்தான் சண்டையை ஆரம்பிச்சியா…?”

“அத நான் பத்த வைக்கலை மதினி.. வயித்தெரிச்சலைக் கிளப்பாதே…”

“வேற யார் பத்த வச்சா..? அண்ணனா..?”

“இல்ல.. உங்க அண்ணனோட அக்கா…”

“யாரு நடேசனோட அம்மாவா..? எதுக்கு இங்க வந்து அடுப்பெரிச்சுச்சு.. அதுக்கு என்ன உனக்கு ஆக்கிப் போடனும்னு தலை எழுத்தா…?”

சாந்தா சுப்புத்தாயின் மேல் மரியாதை வைத்திருப்பவள்.. தானுண்டு.. தன் வேலையுண்டு என்று இருக்கும் மகராசி சுப்புத்தாய்…

“அது ஆக்கிப் போட்டுச் சாப்பிடணும்னு எனக்கும் தலை எழுத்தில்லை.. மகராசி விடிஞ்சும் விடியாம வந்தாள்.. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை.. சீத்தாவுக்கு பள்ளிக் கூடம் லீவு.. அதனால கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. தம்பியைப் பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்டுச்சு.. இல்லைக்கான்னார் இந்த மவராசன்.. உடனே அடுப்பைப் பத்த வச்சு கல்லைத் தூக்கிப் போட்டுறுச்சு…”

“கல்லைத் தூக்கி போட்டுருச்சா..? யார் மேல…?”

“ம்ம்.. என் மேலதான்… அடுப்பில தோசைக் கல்லைத் தூக்கிப் போட்டுறுச்சு மதினி.. இந்த மனுசன் வக்கனையா தட்டை வச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டார்…”

“பாவம், சாப்பிட்டாரா இல்லையா..?” அனுதாபத் துடன் வினவினாள் சாந்தா..

“யார் வீட்டில யாரு வந்து அடுப்பெரிக்கிறது..? நான் எந்திருச்சு வந்து நல்லா நாலு கொடுத்தேன்.. வாங்கிக் கிட்டுப் போயிருச்சு..”

“அப்போ.. அண்ணன் இன்னும் சாப்பிடவே இல்லையா..?”

சாந்தாவுக்குச் சிரிப்பு வந்தது.. செவ்வந்தி அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை எடுத்து வைத்தாள்.. மாவைக் கரைத்தவாறு மகளை விரட்டினாள்..

“ஏண்டி சீதா.. மரமாட்டம் நிற்காதே.. தேங்காய் சட்னியை மிக்சியில் அரைத்து எடு.”

“ஏன் செவ்வந்தி, கேஸ் அடுப்பை வாங்கி மூலையில் வைத்துவிட்டு விறகு அடுப்பை எரிக்கிற..?”

“காடு கரையில் இருக்கிற மரம் மட்டையை என்ன செய்யறது..?”

“அதுதானே நீதான் வடிகட்டின கஞ்சமாச்சே…”

“சேர்த்து வைச்சு என்ன செய்யப் போறேன்..? கொண்டுக்கிட்டாப் போகப் போறேன்…? எல்லாம் என் மகளுக்குத்தானே..”

சுந்தரத்தின் தட்டில் தோசைகளைப் போட்டு அதில் சட்னியை சீதா ஊற்ற அவர் சாப்பிட ஆரம்பித்தார்.. கொஞ்சம் பசி அடங்கட்டும் என்று பொறுமை காத்த செவ்வந்தி, சுந்தரம் பத்து தோசைகளை உள்ளே தள்ளியதும் சாந்தாவைப் பார்த்துக் கேட்டாள்..

“அவங்க அக்கா எதுக்கு வந்துச்சுன்னு தெரியுமா மதினி..?”

செவ்வந்தி பீடிகைபோட சாந்தாவிற்கு ஆர்வம் பிறந்தது.. ஆவலாக “எதுக்காம் செவ்வந்தி..?” என்று கேட்டாள்..

“அதை அவரையே கேளு.. எல்லாம் காலக் கொடுமை. அடியே சீதா.. உன்னை வெத்தல பாக்கு வெச்சு சாப்பிட அழைக்கணுமா..? வா வந்து சாப்பிடு..”

மகளுக்கு பரிமாறுவதில் அவள் முனைய சாந்தா சுந்தரத்தைப் பார்த்தாள்..

“என்னங்கண்ணா.. என்ன விசயம்..? எதுவும் முக்கிய மான செய்தியா..?”

சுந்தரம் பசியடங்கி நிதானத்திற்கு வந்திருந்தார்.. யோசனையாய் மைத்துனன் மனைவியைப் பார்த்தபடிக் கூறினார்..

“முக்கியமான விசயம்தாம்மா.. முதலில் உன்கிட்டத் தான் சொல்லி யோசனை கேட்கணும் இருந்தேன்.. நீயே வந்து விட்டாய்..”

சுந்தரம் செய்தியைக் கூறினார்.. சாந்தா நம்ப மாட்டாமல் திகைத்தாள்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link