Chapter 16
சாந்தா நம்ப முடியாம திகைப்புடன் சுந்தரத்திடம் வினவினாள்..
“என்ன அண்ணே சொல்றீங்க.. நம்ம சுப்புத்தாயி அக்காவா சொல்லுச்சு…?”
“சுப்புத்தாயின்னு சொல்ல வேண்டியதுதானே… அது என்ன அக்கா போடறே..?” செவ்வந்தி வக்கணையாய் தட்டில் தோசைகளைப் போட்டுக் கொண்டு வாயில் பிட்டுப் போட்டபடி பேசினாள்..
சுந்தரம் மனைவியை முறைத்தார்.. அவள் அலட்சிய மாக சட்னியை தோசையில் ஊற்றிக் கொண்டே கூறினாள்..
“கூடப் பிறந்த பிறப்பு மாதிரி என் மதினிக்குப் பாசம் பொங்கி வழியுதே அதேன் கேட்டேன்.. என்ன மதினி நான் சொன்னது தப்பா..?”
“நீ என்னைக்குத் தப்பாப் பேசியிருக்கிற..? ஆனா செவ்வந்தி உன் நாத்தனாருக்கு எப்படி இப்படி ஒரு நினைப்பு வந்துச்சு.. ஆச்சரியமாயிருக்கே…”
“எப்படி நினைப்பு வந்துச்சு.. ஏன் நினைப்பு வந்துச்சுங்கிறது இப்ப பிரச்சினை இல்லை மதினி.. இது சரி வருமா வராதாங்கிறதுதான் பிரச்சினை…”
சாந்தா யோசனையுடன் சுந்தரத்தைப் பார்த்தான்..
“ஏண்ணே.. செவ்வந்தி சொல்ற மாதிரி இது சரிப்பட்டு வருமா..?”
“ஏம்மா வராது..? ஒரு வாடின பயிரைப் பாத்தால் தண்ணி ஊத்தி அதைக் காப்பாத்தி வளர்க்கிறவன்தான் விவசாயி.. நான் உண்மையான விவசாயி.. அது பச்சை இளங்குருத்து.. பட்டுப் போய் நிக்குது.. அது வாழ்க்கையில தண்ணீரைப் பாய்ச்சிக் காப்பாத்தணும் எங்க அக்கா நினைக்கிறதை நான் நினைச்சுப் பார்க்கிறப்போ ரொம்பப் பெருமையாயிருக்கு.. ஊருக்குள் எத்தனை பேருக்கு இப்படி ஒரு நினைப்பு வரும்..? எங்க அக்கா வைரம்.. அது மதிப்பு தெரியாதவங்க ஒரு நாள் தெரிஞ்சுக்குவாங்க..”
எதற்கும் வாயடித்து வாய் மூட வைக்கும் செவ்வந்தி மௌனமாக இருந்தாள்.. சாந்தாவுக்கும் சுந்தரத்தின் நினைவு தான்.. கிராமத்தில் இப்படி ஒரு மனுஷியா..?
“இப்ப என்ன அண்ணே செய்யச் சொல்றீங்க..?”
“உன் புருசன் கிட்ட இதைப் பத்திப் பேசு.. நான் என் பெரிய மச்சான் கிட்டப் பேசுறேன்.. நல்ல காரியத்தை நடத்தி விடலாம்..”
செவ்வந்தி பேசாமல் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை கழுவி வைக்க ஆரம்பித்தாள்.. சாந்தா ஒரு முக்காலியைப் போட்டுக் கொண்டு அவள் அருகில் வாகாய் அமர்ந்து கொண்டாள்..
“நீ என்ன செவ்வந்தி ஒன்னும் பேச மாட்டேங்கிற.. அண்ணன் சொன்னதை கேட்டுக்கிட்டுத்தான இருந்தே..?”
“அவர் சொன்னதையும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.. அவர்கிட்ட அவங்க அக்கா சொன்னதையும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்..”
செவ்வந்தி பாத்திரங்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்..
“அப்புறம் ஏன் பேசாம இருக்க..?”
“நான் பேசறது இருக்கட்டும்.. நீ இதைப்பத்தி என்ன நினைக்கிற மதினி.. அதைச் சொல்லு முதலில்…”
“இதில நான் பேச என்ன இருக்கு செவ்வந்தி..?”
“அதனாலதான் பேசாம இருக்கேன்.. இதில நான் பேச எதுவும் இல்லை.. பேசவும் போறதில்லை மதினி.. இது ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை… என் புருசன் சொன்ன மாதிரி அவ பச்சை இளம் குருத்துதான்.. அவ வாழ்க்கையில மறுபடி சந்தோசம் தழைச்சா நல்லதுதான்..”
“நல்லதுதான்னு இழுவை இழுக்கறே.. ஏன் செவ்வந்தி…”
“உனக்குத் தெரியாதா மதினி.. முள்ளு மேல சேலை விழுந்தா பார்த்து பக்குவமாத்தான் எடுக்கணும்.. பதறிப் போய் வேகமா இழுத்தா சேலை கிழிஞ்சுறக் கூடாது.. அவ்வளவுதான் சொல்வேன்…”
“நீ சொல்றதும் சரிதான் செவ்வந்தி.. பதறின காரியம் சிதறித்தான் போகும்.. நான் உங்க சின்ன அண்ணன் கிட்டச் சொல்றேன்..”
சாந்தா வீடு வந்து சொன்ன செய்தியைக் கேட்ட கலைமதி அதிர்ந்து விட்டார்..
“என்ன புள்ள சொல்ற..? நம்ம சுப்புத்தாயி மதினியா சொல்லி விட்டிருக்கு..”
“அப்படித்தான் உங்க தங்கச்சி செவ்ந்தி சொல்றா..”
“செவ்வந்தி சொன்னால் அது உண்மையாத் தானிருக்கும்…”
கலைமதி சொன்னது உண்மையென்பதை அறிந்திருந்த சாந்தா மௌனம் சாதித்தாள்.. செவ்வந்தி பொய் உரைப்பவள் அல்ல..
“ஏன் சாந்தா.. இதை அண்ணன் கிட்ட நாம எப்படிப் பேசறது..?”
“அவரே பேசிக்கறேன்னு சுந்தரம் அண்ணே சொன்னாரே…”
“ஓகோ.. அப்படியா.. நீ என்ன நினைக்கிற சாந்தா..?”
“செவ்வந்தியும் இதைத்தான் கேட்டாள்.. அவகிட்ட சொன்னதைத்தான் உங்ககிட்டயும் சொல்றேன்.. இதில் நான் பேச எதுவும் இல்லை.. சம்பந்தப்பட்டவங்ககிட்ட இந்தக் கேள்வியைக் கேளுங்க.. அவங்க என்ன நினைக்கிறாங்க என்பதுதான் இதில் முக்கியம்..”
“சுப்புத்தாயி தானாக் கேட்டாப்புலயா..? இல்ல ராமையா அண்ணன் சொல்லிக் கேட்டாப்புலயா..?”
“ராமையா மாமா சொல்லித்தான் கேட்டாப்புலயாம்..”
“ரெண்டு பேருக்குமே ரொம்பப் பெரிய மனசு…”
“அதை உங்க தங்கச்சியே ஒத்துக்கிட்டாள்..”
“நான் அண்ணன் கிட்டப் பேசும்போது சுந்தரம் சொன்னதை என்கிட்டச் சொல்லாம இருக்க மாட்டார்.. அவர் என்ன நினைக்கிறார்ன்னு தெரிஞ்சுடும்..”
“எல்லோருடைய நினைப்பையும் கேட்கறீங்களே.. உங்க நினைப்பு என்ன..?”
“நல்லதே நடக்கட்டும்ன்னுதான்…” மனமாரச் சொன்னார் கலைமதி..
சுந்தரம் தயாநிதியின் வீட்டினுள் நுழைந்தபோது நடேசன் பாலமுரளியைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.. அருகில் ஊர்மிளா இணைந்து நின்று மகனின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள்.. அந்தக் காட்சியைக் கண்டதும் கண்ணும் மனமும் சேர்ந்து நிறைந்து விட்டது சுந்தரத்திற்கு.. ஒரு வினாடி அங்கே நடேசன் மறைந்து லட்சுமணன் தோன்றினான்.. ஊர்மிளா வும், அவனும் இணைந்து தாங்கள் பெற்ற பிள்ளையுடன் விளையாடுவதுபோல் இருந்தது.. நடேசன் குழந்தையின் கைகளைத் தூக்கி முத்தமிட்டபடி திரும்பினான்…
“அடடே நீங்க எப்ப வந்தீங்க மாமா…?” என்று தன் தாய் மாமனை வரவேற்றான்.. ஊர்மிளா மரியாதையுடன் சேரைத் தூக்கிப் போட்டாள்.. அதில் அமர்ந்தபடி,
“நீ எப்ப வந்தே…?” என்று பதிலுக்குக் கேட்டார் சுந்தரம்..
“நான் காலையிலிருந்து இங்கேதான் இருக்கிறேன்.. சூடா இட்லி, சாப்பிட்டாச்சு.. மதியம் கோழிக் குழம்பாம்.. சமைத்து முடிக்கட்டும்ன்னு காத்திருக்கிறேன்.. பலராமன் ஊரிலிருந்து வந்திருக்கிறான்.. அவனுக்கு விருந்து வைக்கும்போது எனக்கும் கொஞ்சம் கிடைக்கிறது.. நெல்லுக்கு பாய்ச்சும் தண்ணீர் புல்லுக்கும் சேர்த்து பாய்வது போல.. என்ன பலராமா நான் சொல்வது சரிதானே…”
பலராமன்.. “போங்க மாமா…” என்று வெட்கிச் சிரித்தான்.. அவனுக்கு நடேசனை மிகவும் பிடித்திருந்தது.. அவன் தன் தமக்கையிடமும், தமக்கையின் குழந்தை யிடமும் காட்டுகிற பரிவும், பாசமும் அவனை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது..
சுந்தரம் பலராமனைப் பார்த்து, “பரிட்சையெல்லாம் முடிந்து விட்டதா..?” என்று ஆரம்பித்து ஊரிலிருந்த மாடு, கன்று, தோட்டம் துரவு மற்றும் பலராமனது பெற்றோர் நலமா என்று சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்டு முடித்தார்.. காலையிலிருந்து மாற்றி, மாற்றி அனைவரும் கேட்கும் இந்தக் கேள்விகளை மாதம் இருமுறை அக்காவைக் காண வரும் போதெல்லாம் காது புளிக்கக் கேட்டு வாய் வலிக்கப் பதில் சொல்லும் வழக்கத்தில் அவன் பதில் கூறிக் கொண்டிருந்தான்..
“வா சுந்தரம்.. காலையில் வயல் பக்கம் போகலையா..?” என்று கேட்டவாறு தயாநிதி பின்பக்கமிருந்து வந்தார்…
“வயக்காட்டுப் பக்கம் போகலைன்னா நம்ம பிழைப்பு எப்படி ஓடும் மச்சான்..? விடிஞ்சதும் போய் தண்ணி பாய்ச்சிட்டுத்தான் வந்தேன்..”
“நல்லதாப் போச்சு.. உங்க அக்கா கோழி அடிச்சு குழம்பு வச்சுக்கிட்டு இருக்கா.. மருமகன் வந்திருக்காரு இல்ல.. ஹாஹ்ஹா… இருந்து சாப்பிட்டு விட்டு செவ்வந்திக்கும், சீதாவுக்கும் தூக்குச் சட்டியில கோழிக் குழம்பைக் கொண்டு போ..”
“அதுக்கென்ன மச்சான்.. சாப்பிட்டுட்டால் போச்சு.. உங்ககூடக் கொஞ்சம் பேசனும்.. மாடிப் பக்கம் போகலாமா..?”
தயாநிதி கேள்வியுடன் தங்கை கணவரைப் பார்த்தார்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.