Chapter 20
எதையுமே நேரில் கேட்டுத் தெளிவு படுத்திவிடும்.. ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ வழக்கமுடைய செவ்வந்தி.. ஒரு பண்பான பெண்ணின் வாழ்க்கைப் பிரச்னையில் மிக அமைதியாக இருந்தாள்.. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற செயல்பாடு இந்த விசயத்தில் சரி வராது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தாள்.. மற்றவர்களின் ஆர்ப்பாட்டம் அவளுக்கு கவலையை அளித்தது.. அதே சமயம் திருமணம் முடிந்து பதினைந்து தினங்கள் மட்டுமே கணவனோடு வாழ்ந்த சிறு பெண்ணிற்கு மறுவாழ்வு கிடைக்க விடாமல் செய்து விட்டாளென்ற பழி தன் மீது விழுந்து விடும் அபாயம் இருந்ததால் எந்தவிதமான அபிப்ராயத்தையும் கூறி விடாமல் மௌனித்தாள்..
ஊர்மிளாவின் பெற்றோர் மகிழ்ச்சியடைவதில் நியாயம் உள்ளது.. சுந்தரமும், கலைமதியும் இரக்கம் கொள்வதில் மனிதாபிமானம் உள்ளது.. தயாநிதியும், ஈஸ்வரியும் விட்டுக் கொடுப்பதில் கடமை உள்ளது.. ஆனால் இவையாவுமே எப்போது செல்லுபடியாகும்..? ஊர்மிளா உண்மையிலேயே மறு வாழ்வை விரும்பினால் மட்டுமே செல்லுபடியாகும்.. மறுமணத்தை விரும்பாத பெண்ணின் மனதை எந்தவித ஆசைகளும் இல்லாத போது அவளை இரக்கத்தின் பெயரில் வற்புறுத்துவது நிர்பந்தமாகாதா…?
செவ்வந்தியின் நிதானமான ஆனால் புத்திசாலித் தனமான அணுகுமுறைக்கு வெற்றி கிடைத்து விட்டது.. ஊர்மிளாவும், நடேசனும் மடைதிறந்த வெள்ளமாகப் பேச ஆரம்பித்து விட்டனர்..
“அத்தை.. எங்கள் ஆபிசில் வேலை பார்க்கும் அபிராமிக்கு நடேசன் மேல் காதல்.. சாருக்கும் அப்படித்தான்..” நடேசனைப் பார்த்து குறும்பாக நகைத்தபடி பேசினாள் ஊர்மிளா..
“ஏய்.. நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை.. உன் பிரண்ட் தான் உருகி வழிந்தாள்..” என்றாள் நடேசன்.
“ஓஹோ அப்படியா.. மதியம் தனியாகச் சாப்பிடுவீர்கள்.. இந்த இரண்டு மாதங்களாக ஏன் எங்களுடன் சாப்பிட வந்தீர்களாம்..”
“அது வந்து.. சும்மா பேசிக்கிட்டே சாப்பிடலாம்ன்னு..”
“அது சரிதான்.. யார் கூட பேசிக்கிட்டு சாப்பிட வந்தீங்க..”
“ஏன் உன்னுடன் பேசிக்கிட்டு சாப்பிடலாம்ன்னு தான்..”
“காரில் போகும் போதும் வரும் போதும் பேசிக் கொள்கிறோம்.. அப்புறம் நீங்கள் வீட்டிற்கு வரும்போது பேசுகிறோம்..”
“இப்போ என்ன சொல்ல வருகிறாய்..?”
“நீங்கள் உண்மையை ஒத்துக் கொள்ளனும்னு சொல்கிறேன்..”
“ஓ.கே.. அம்மா, அப்பா நான் அபிராமிங்கிற பெண்ணைக் காதலிக்கிறேன்.. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. சொல்லிட்டேன் போதுமா..” நடேசன் சிரிக்க ஊர்மிளாவும் இணைந்து நகைத்தாள்..
ஊர்மிளாவின் பெற்றோர் முகத்திலும் நடேசனின் பெற்றோர் முகத்திலும் ஈ ஆடவில்லை.. பிரமித்துப் போய் அமர்ந்திருந்தனர்.. தயாநிதிக்கும் சுந்தரத்திற்கும் மட்டும் அன்று கேட்ட உரையாடல் நினைவு வந்தது.. அதில் பேசப் பட்ட விசயங்கள் பொய்யா..? அடுத்து ஊர்மிளாவும், நடேசனும் பேசிய பேச்சுக்கள் அந்த மர்மத்தையும் உடைத்தன..
“அத்தை ஆக்சுவலா அபிராமி தன் விருப்பத்தைச் சொல்லி ஆறு மாதங்களாகிறது.. உங்கள் மகன்தான் சரி கொடுக்கவில்லை.. நான்தான் கரைப்பாய் கரைத்து ஒரு வழிக்குக் கொண்டு வந்தேன்..”
“காதல் எல்லாம் நம் குடும்பத்தில் பழக்கமில்லை ஊர்மிளா.. அவள் திடீரென்று சொல்லி விட்டாள்.. எனக்கு யோசிக்க அவகாசம் வேண்டாமா..?”
“நல்லா யோசிச்சீங்க போங்க.. நாலு மாதம் கழித்து இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் பதிலுக்கு ஐ லவ் யூன்னு சொல்லியிருக்கீங்க..”
“ஊர்மிளா.. அப்பா அம்மா முன்னால் மானத்தை வாங்காதே…”
“அது எப்படி அவர்களுக்கும் எல்லாம் தெரிய வேண்டாமா..? நீங்க கேளுங்க அத்தை.. இந்த இரண்டு மாதங்களாக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாமல் இழுத்தடிச்சார்..”
“எனக்கென்று சில நிபந்தனைகள் இருக்காதா..?”
“என்ன நிபந்தனை..? மதுரையிலே பிறந்து வளர்ந்த வளை மேலக்காலில்தான் இருக்க வேண்டுமென்று நீங்கள் போடும் நிபந்தனை.. அவள் வீட்டுக்கு ஒரே பெண்.. அவள் பெயரில் ஒன்றுக்கு நான்கு வீடுகள் மதுரையில் இருக்கின்றன..”
ஊர்மிளா பேசிக் கொண்டிருக்க இந்த விசயத்தைக் கேட்டதும் நடேசனின் பெற்றோர் முகத்தில் பல்ப் எரிந்தது..
‘அவ்வளவு பெரிய இடத்துப் பெண்ணா நடேசனுக்கு கிடைத்திருக்கிறாள்..’ என்ற சந்தோசம் பொங்க ராமையா கூறினார்..
“ஏன்ப்பா ஊர்மிளா சொல்வதும் சரிதானே.. மதுரையில் ஒன்னுக்கு நாலு வீடு இருக்கிறப்போ இந்தப் பட்டிக்காட்டில் வந்து இருக்கச் சொல்லி அந்தப் புள்ளையை ஏன் கஷ்டப்படுத்தறே..?”
ஜனார்த்தனமும், சத்தியவதியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. ‘மனிதர்கள் வினாடி நேரத்திற்குள் எப்படி மாறி விடுகிறார்கள்..?’ என்ற அங்கலாய்ப்பு அதில் இருந்தது..
தயாநிதிக்கு சங்கடமாய் இருந்தது.. சரியாக விசாரிக் காமல் தாடிக் கொம்பிலிருந்து அவர்களை வரவழைத்து தவறு இழைத்து விட்டதாக அவரது மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்தது..
ஆனால் இன்னும் ஏன் அவர்கள் அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதற்கு விடை கிடைக்கவில்லையே..
“அப்பா.. மேலக்காலை விட்டுவிட்டு என்னால் போக முடியாது…” என்றான் நடேசன் தீவிரமான முகத்துடன்..
“எங்கே போகப் போகிறாய்.. இந்தா இருக்கிற மதுரைக்குப் போகப் போகிறாய்..”
“மாமா.. எனக்கு என்னவோ என்மேல் இருக்கிற அக்கறையினால்தான் அவர் மதுரைக்குப் போக மாட்டேன் என்கிறார் என்று தோன்றியது..” ஊர்மிளா மெதுவான குரலில் கூறினாள்..
அங்கு ஒரு வினாடி அமைதி நிலவியது.. நடேசன் அதைக் கலைத்தான்..
“அக்கறை இருந்தால் தப்பில்லை ஊர்மிளா.. நீ என் தங்கையைப் போல.. லட்சுமணன் போருக்குப் போவதற்கு முன் என்னிடம் நான் வரும்வரை ஊர்மிளாவிற்கு பாதுகாவலாக இருன்னு சொல்லிவிட்டுச் சென்றான்.. நான் அவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்..”
ஊர்மிளாவின் சிரிப்பு மறைந்து முகத்தில் சோகம் கவிழ்ந்தது..
“உங்களால் முடிந்தவரை பாதுகாப்பு கொடுத்து விட்டீர்கள்.. எனக்கு அண்ணன் இல்லை.. தம்பி சிறு வயது.. என் பெற்றவர்களின் ஊருக்குப் போவதில்லை யென்று இருக்கிறேன்.. அத்தை, மாமா வயதில் பெரிய வர்கள்.. சுபத்ரா சிறு பெண்.. என்னைக் காக்க ஓர் அண்ணன் போல் என்றும் இருந்தீர்கள்.. பால முரளியை உங்கள் தோளில் சுமந்து வளர்க்கிறீர்கள்.. இது போதும்.. இனி உங்களுக்குன்னு ஒருத்தி வந்தால் அவளுக்கு மட்டும் நீங்கள் சொந்தமாக இருக்க வேண்டும்.. அதுதான் நியாயமும் கூட இதை நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறீர்களே…”
“இதையே எத்தனை முறை சொல்வாய் ஊர்மிளா.. நான் அபிராமியைக் காதலிக்கிறேன்.. அவளும் என்னை உண்மையாகக் காதலித்தால் என் உணர்வுகளையும் ஏற்றுக் கொள்வான்.. மதிப்பாள்.. கல்யாணம் செய்து கொண்டால் கடமையிலிருந்து தவற வேண்டுமா..? நீ என் கூடப் பிறந்த தங்கையாக இருந்திருந்தால் உன்னையும், பால முரளியையும் காக்கும் கடமையிலிருந்து என்னை விலகச் சொல்வாயா..? உங்கள் இருவருக்காகவும் நான் என் சம்பளத்தை செலவழிக்கிறேனா..? சொத்தைக் கொடுக்கிறேனா..? என் நேரத்தை செலவழிக்கிறேன்.. என் பாசத்தைக் கொடுக்கிறேன்.. அதை தடை செய்ய உனக்கு உரிமையில்லை ஊர்மிளா..”
ஈஸ்வரி பொங்கி அழுதாள்.. ஊர்மிளா பதறி எழுந்து தன் மாமியாரின் அருகே போக தன் மருமகளைக் கட்டிக் கொண்டு அவள் முகம் பார்த்து, “என் தெய்வமே ராஜாத்தி.. உன் காலடி மண்ணை எடுத்து என் நெற்றியில் இட்டுக் கொண்டாலும் என் பாவம் போகுமா..?” என்று அழுதாள்..
என்றும் போல் தனது நிலையை எண்ணித்தான் தன் மாமியார் அழுகிறாள் என்றே ஊர்மிளா நினைத்துக் கொண்டாள்.. மூன்று நாள்களாக அவள் மனதில் இருந்த கசடு மறைந்து அழுகிறாள் என்பதை பாவம் அவள் அறியவில்லை..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.