Chapter 23

0Shares

அபிராமி வேலையில் சேர்ந்தவுடன் ஊர்மிளாவின் பக்கத்து இருக்கை அவளுக்குக் கொடுக்கப்பட்டது.. கழுத்தில் தாலியுடனும் நெற்றியில் பொட்டுடனும் இருந்தாலும் ஊர்மிளா கணவனைப் பறிகொடுத்தவள் என்ற உண்மை தெரிய வந்தபோது அபிராமி வேதனைப் பட்டாள்.. மென்மையான அதிர்ந்து பேசாத ஊர்மிளா உதவும் மனப்பான்மை கொண்டவளாய் இருந்தாள்.. அவளது இருக்கைக்கு பக்கத்து இருக்கை என்பதால் அபிராமியின் வேலைகளை சொல்லிக் கொடுத்தாள்… காலப்போக்கில் இருவரும் தோழிகள் ஆனார்கள்..

ஊர்மிளாவின் உறவினர் என்ற முறையில் அறிமுக மான நடேசனின் கண்ணியமான குணம் அபிராமியை மிகவும் கவர்ந்துவிட்டது.. ஊர்மிளா தன் தோழியென்று அறிமுகப்படுத்தியபோது முகம் பார்க்காமல் அவன் ‘ஹலோ’ சொன்னது அவளுக்கு ஒரு வகையில் எரிச்சலைக் கிளப்பினாலும் அதையும் மீறி வியப்பு எழுந்தது.. மெல்ல, மெல்ல அவள் மனம் அவன் வசப்படுவதை உணர்ந்தாள் அபிராமி.. ஓர் நாள் ஊர்மிளாவைத் தேடி அவன் வந்தபோது ஊர்மிளா சூப்பரிண்டெண்ட் அறையில் இருக்க தன் மனதை நடேசனிடம் தெரியப்படுத்தினாள் அபிராமி..

“ஊர்மிளா இல்லையா…?”

“ஏன் ஊர்மிளாகிட்டத்தான் பேசுவீங்களா..? என்னிடம் பேச மாட்டீர்களா..?”

நடேசன் புருவம் தூக்கினான்.. இவள் இத்தனை நாளாய் இப்படி உரிமை எடுத்துப் பேசியவள் அல்ல… கேள்வியாய் பார்த்தான்..

“ப்ளீஸ் ஒரு நிமிடம் உட்காருங்களேன்.. உங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.. ஊர்மிளா வருவதற்குள் பேசி விடுகிறேன்..”

“ஏன் அவள் வந்தால் என்ன..? அவளுக்குத் தெரியாமல் பேச நம்மிருவரின் இடையே என்ன இருக்கிறது..?”

“என் மனதில் உங்கள் மேல் காதல் இருக்கிறது..” அபிராமி படாரென்று தன்மனதில் உள்ளதை போட்டு உடைக்க, ‘இது என்ன புதிதாய் ஒரு கதை கிளம்புகிறது..?’ என்று நடேசன் திகைத்துப் போனான்..

“ஏன் மௌனமாய் இருக்கிறீர்கள்..?”

“பேச வார்த்தைகள் இல்லாதபோது வேறு என்ன செய்வது..?”

“வார்த்தைகள் இல்லாமல் போவதேன்..? இதற்கு நான் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது..?”

“அபிராமி.. நீங்கள் ஊர்மிளாவின் தோழி.. என்னுடைய கோ.வொர்க்கர்.. 

இந்த முறையில் தான் நான் இதுவரை உங்களிடம் பேசியிருக்கிறேன்.. வேறு கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை..”

“நான் உங்களை என் காதலராகத்தான் பார்க்கிறேன்..”

“என் பார்வையும் உங்கள் பார்வையும் வித்தியாசப் படும்போது என்ன பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை..”

“காதல் என்பது மாயவலை.. அந்த வலையில் நான் சிக்கிவிட்டேன்.. உங்களால் மட்டுமே என்னை மீட்க முடியும்.. இதை உங்களிடம் தெரிவிப்பது மட்டுமே என் நோக்கம்.. நீங்கள் என் காதலை ஏற்றுக் கொள்வதும், மறுத்து விடுவதும் உங்கள் விருப்பம்..”

நடேசன் இப்போது அவள் முகத்தை நேராகப் பார்த்தான்.. அவள் விழிகளில் காதல் சுடர் தெரிந்தது.. அதில் உண்மை இருந்தது..

“எனக்கு யோசிக்க அவகாசம் வேண்டும் அபிராமி…”

“இது போதும் எனக்கு.. நான் காத்திருக்கிறேன்..”

அவளது கடைசி வார்த்தையில் நடேசனின் மனம் சிதைந்தது.. ஊர்மிளா லட்சுமணனிடம் கூறிய வார்த்தை அது.. ‘காத்திருக்கிறேன்..’ அவள் காத்திருக்கிறாள்.. அவளை காத்திருக்கச் சொன்னவன்தான் திரும்பி வரவேயில்லை.. காலமெல்லாம் காத்திருப்பது மட்டும்தான் பெண்களின் விதியா..? அவன் மனம் கசிந்தது.. அபிராமியின் பால் புதிதாய் அன்பு சுரந்தது…

“வந்து நேரமாயிற்றா..?” என்ற ஊர்மிளாவின் குரல் கேட்டுத் திரும்பினான் நடேசன்.. அபிராமி ஏதோ வேலை செய்வது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்..

“ஆமாம் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது…”

“என்ன விசயம்..?”

“முரளிக்கு பால் பவுடர் டின் தீர்ந்துவிட்டது என்றாயே.. இப்போது கடைவீதிக்குப் போகிறேன்.. வாங்கி வந்து விடவா..? வேறு சாமான் எதுவும் தேவையா..?”

“ஆமாம்.. மழைக்காலம் வந்துவிட்டது.. சிரப்பாட்டில் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.. அப்புறம் ஜான்ஸன் பேபி ஸோப் ஒன்று…”

“சரி வாங்கி வருகிறேன்..” அவன் போய்விட்டான்.. அவன் போவதையே அபிராமி பார்த்துக் கொண்டிருப்பதை ஊர்மிளா பார்த்தாள்..

மதிய உணவு இடைவேளையில் அபிராமியின் முகத்தையே வைத்த கண் மாறாமல் ஊர்மிளா பார்க்க அபிராமி தலைகுனிந்து கொண்டாள்..

“ஏண்டி அப்படிப் பார்க்கிற…?”

“ம்ம்… உன் முகத்தில் இத்தனை நாளாக இல்லாத கள்ளத்தனம் இப்போது வந்திருக்கிறதே.. அது தான் பார்த்தேன்…?”

“என்னடி என்ன என்னவோ சொல்கிறாய்..?”

“நீ மட்டும் நடேசனிடம் என்ன என்னவோ சொல்லலாம்.. நான் உன்னிடம் சொல்லக் கூடாதா…?”

அபிராமியின் தொண்டைக்குள் உணவு சிக்கிக் கொண்டது.. புரையேறி அவள் தவிக்க தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள் ஊர்மிளா.. அவசரமாய் அதை வாங்கிக்  குடித்தாள் அபிராமி..

“மனசுக்குள் சிக்கல் இருந்தால் சாப்பாடும் சிக்கிக் கொள்ளும்.. மெதுவாய் சாப்பிடு…”

“நீ என்னவோ பூடகமாய் சொல்வது போல் இருக்கிறது..”

“என்னவென்று நீதான் கண்டுபிடியேன்..”

“நான் நடேசனிடம் பேசியதை நீ கேட்டுவிட்டாய்.. சரிதானே..?”

“ஒட்டுக் கேட்கணும்னு நினைக்கலை.. நான் அப்போதே வந்து விட்டேன்.. சூப்பரின்டெண்ட் ஒரு ஃபைலைக் கேட்டார்.. பீரோவில் எடுத்துக் கொண்டி ருந்தேன்… பீரோ மறைவிலிருந்த என்னை நீங்கள் பார்க்கவில்லை..”

“ஊர்மிளா.. உன்னிடம் மறைக்கணும்ன்னு நான் நினைக்கவில்லை.. அவரிடம் பேசுவதற்கு முன் உன்னிடம் சொன்னால் நீ எனக்காக அவரிடம் வாதாடுவாய்.. எனக்கு அதில் விருப்பமில்லை…”

“ஏன்..?”

“காதலில் சிபாரிசு இருக்கக் கூடாது ஊர்மிளா.. அது தானாக வர வேண்டும்.. நடேசன் மேல் அளவுகடந்த காதல் எனக்கு இருக்கிறது.. அதில் ஒரு பொஸெண்டேஜ் குறைவாக அவருடைய காதல் இருந்தால் கூட அதைத் தாங்கிக் கொள்ள மாட்டேன்..”

ஊர்மிளாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை.. அவளுடைய லட்சுமணன்தான் அவள்மேல் காதல் கொண்டான்.. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதை மறக்கடித்து துரத்தித் துரத்திக் காதலித்தான்.. அவனிடம் பேச்சு வார்த்தை நடத்தும் முறையே கிடையாது.. எல்லாமே செயல் வேகம்தான்.. புயல் வேகம்தான்.. காட்டாற்று வெள்ளம் போல் திடீரென்று பிரவகித்து அவளது மலர் மனதை அடித்துச் சென்றுவிட்டான்.. காதல் சொல்லிப் பதிலுக்காக காத்திருக்கும் அபிராமியின் நிலையில் காதலித்து அந்தக் காதலுக்காக காத்திருந்து இன்று அக்காதலனின் நினைவுடன் வாழும் ஊர்மிளா இல்லைதான்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link