Chapter 28
சுபத்ராவை பெண் பார்க்க வந்த வீரபத்ரனுக்கு அவள் ஊர்மிளாவின் நாத்தனார் என்று தெரியாது..
“வீட்டுக்கு ஒரே பொண்ணு.. அண்ணன் மிலிடிரி ஆபிசர்.. கார்கில் போரில் போய் விட்டான்.. மருமகள் ஏதோ கவர்ன்மென்ட் வேலை பார்க்குது.. கேட்ட நகை போடுவாங்க.. லாரி, லாரியாய் சீர் வரிசை கொடுப்பாங்க.. ஆற்றுப் பாசனம்.. மூணு போகம் விளையற பூமி.. கடைசி வரைக்கும் செய்முறை செய்யும் வளமையான குடும்பம்…”
பணத்தாசை பிடித்த வீரபத்ரனின் குடும்பத்திற்கு உறவுக்காரர் ஒருவர் இவ்வாறு தகவல் சொன்னார்..
“ஏண்டா.. அண்ணன்காரன் இல்லை.. ஒரு பொண்ணு தான்.. நாளைக்கு சொத்தில் கூடப் பங்கு கேட்கலாம்.. ஆற்றுப் பாசன பூமிடா.. லட்சக் கணக்கில் விலை போகும்..” வீரபத்ரனின் தந்தை மார்த்தாண்டம் கணக்குப் போட்டார்..
“பங்கு எதுக்கு..? சொத்தே அந்தப் பொண்ணுக்கு மட்டும்தான்னு அடிச்சுக் கேட்டால் பெத்தவங்களால என்ன செய்ய முடியும்..? அந்த மருமகள்காரிக்கு கையில் ரொக்கம் எதையாவது கொடுத்து கையெழுத்தை வாங்கிக் கொண்டு விரட்டி விட்டால் சரியாகிப் போகிறது..” என்று வழி சொன்னாள் வீரபத்ரனின் அன்னை மங்கையர் குலதிலகம் மங்கம்மாள்…
வீரபத்ரனுக்கு அவர்களது பேச்சு மிகவும் பிடித்தி ருந்தது.. நான்கு பெண்களுக்குப் பின் பிறந்த மகன் அவன்.. பெண்களைக் கரையேற்ற குடும்பச் சொத்து முழுவதும் கரைந்து விட குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில்தான் அவன் குடும்பம் வசித்து வந்தது.. அவனுக்கு இந்த நிலைமை பிடிக்கவில்லை.. பற்றாக்குறை வாழ்வில் திண்டாடிக் கொண்டு வாழும் இந்த வாழ்வில் உயர்வு வர வேண்டுமானால் அது தன் சம்பளத்தால் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தவன் தன் திருமணத்தின் மூலம் அந்த உயர்வைப் பெற்று விடத் துடித்தான்..
ஊர்மிளாவை அவனுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் அவள் நடேசன் அபிராமியின் திருமணத்திற்குப் பாலமாக இருந்தாள் என்பதால்தான்..
அவன் முதலில் அபிராமியைத்தான் திருமணம் செய்து கொள்ள குறிக்கோள் வைத்திருந்தான்.. அவனது அலுவலக நண்பன் ஒருவன்,
“அதோ போகுது பார்.. அந்தப் பொண்ணு பேரு அபிராமி.. அப்பன் ஆத்தாளுக்கு ஒரே பெண் வாரிசு.. இந்த மதுரையிலேயே நாலு பங்களா இந்தப் பொண்ணு பேரிலேயே வாங்கிப் போட்டிருக்காங்கன்னா பார்த்துக்க.. இந்தப் பொண்ணெல்லாம் வேலைக்கு வரணும்னு அவசியமே இல்லை. ம்ம்… எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ..” என்று ஒரு நாள் பெருமூச்சு விட்டு வைக்க வீரபத்ரன் உஷாரானான்..
அதற்குப் பின்னால் அந்த நண்பனின் உறவையே அறுத்துக் கொண்ட வீரபத்ரன் கலெக்டர் ஆபிஸில் ஒரு நண்பனை புதிதாக உருவாக்கிக் கொண்டான்.. அவன் கல்யாணமானவன் என்பதை அறிந்த பின்னால்தான் அவனுடன் பழகவே ஆரம்பித்தான்.. அந்த அளவு ஜாக்கி ரதையாய் செயல்பட்ட வீரபத்ரன் தினம் ஒரு உடையணிந்து அடிக்கடி அபிராமியின் கண்ணில் படும்படி அந்த நண்பனைப் பார்க்கும் சாக்கில் அவளையே சுற்றி வந்தான்..
காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் தள்ளிக் கொண்டு போன கதையாய் அபிராமியின் திருமணப் பத்திரிக்கையை அந்த நண்பனின் மேஜையில் பார்த்தவன் அழுது விடுபவன் போல் ஆகி விட்டான்.. ஒன்றும் அறியாதவன் போல்..
“யாருக்குக் கல்யாணம்..?” என்று விசாரித்தான்..
“எதிர்த்த டேபிள் அபிராமிக்குத்தான்..”
“அப்படியா..? மாப்பிள்ளை எந்த ஊர்..?”
“எந்த ஊரா..? இதே ஆபிஸில்தான் வேலை பார்க்கிறான்..”
“இந்த ஆபிஸா..?” அதிர்ந்து போனாள் வீரபத்ரன்.. அவனுக்கு தெரியாமல் யார் அவளை அணுகியது..
“காதல் திருமணமா…?”
“ஆமாம்.. ஆனால் பத்திரிக்கை கொடுக்கிற வரை யாருக்குமே தெரியாது..” என்று அவன் சொல்ல,
‘அதுதான் தினமும் வந்து காவல் காக்கிறேனே.. எனக்கே தெரியாதே..’ என்று நினைத்துக் கொண்டு பல்லைக் கடித்தான் வீரபத்ரன்…
“எப்படிக் காதல் ஆரம்பித்ததாம்..?” அக்கறையில்லா தவன் போல் அவன் வினவ யதார்த்தமாய் பதில் கூறினான் அவனது நண்பன்..
“அதை ஏன்ப்பா கேட்கிற.. எதிர்த்தாப்புல அபிராமி சீட்டுக்குப் பக்கத்தில் இருக்குதே அந்தப் பொண்ணு பேரு ஊர்மிளா.. அதுகூட அபிராமி ரொம்ப சிநேகிதம்.. அந்த ஊர்மிளாவோட சொந்தக்காரன் தான் இப்ப அபிராமியைக் கல்யாணம் பண்ணிக்கப்போற நடேசன்.. ஊர்மிளாவைப் பார்க்க அது டேபிளுக்கு இவன் வர அபிராமிக்கு இவன் மேல் காதல் வந்து விட்டது.. அப்புறம் ஊர்மிளா வீட்டில் சொல்லி பெண் கேட்டு வந்து கல்யாணம் முடிவாகிருச்சுப்பா…”
‘அடிப்பாவி! என் குடி கெடுத்த குடிகேடி நீதானா..?’ வீரபத்ரன் ஊர்மிளாவைச் சாம்பலாக்குவது போல் பார்த்துக் கொண்டே நண்பனிடம்,
“சொந்தக்காரன் என்றால் அண்ணன் தம்பி முறையா..?” என்று வினவினான்..
“இல்லைப்பா.. அத்தை மகன் மாமன் மகன் சொந்தம் தான்..”
“அப்ப இந்தப் பொண்ணே கட்டியிருக்க வேண்டியது தானே..” மனதின் கடுப்பு வெளியில் தெரியாமல் மலர்ச்சியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் அவன்..
“நீ வேற.. அந்தப் பொண்ணு விடோப்பா.. குழந்தை இருக்கான்..”
நண்பன் பேச்சை முடித்துக் கொள்ள சொர்க்கத்தை பறிகொடுத்தவன் போல் அபிராமியைப் பார்த்துக் கொண்டே வீரபத்ரன் வெளியேறினான்.. அதன் பின்னால் ஊர்மிளாவைக் கண்டாலே மிளகாயை அரைத்து மேனியில் பூசியது போல அவனுக்கு இருக்கும்.. அதன் விளைவாக அதன் பின் ஊர்மிளாவைப் பற்றி அவதூறாய் பேசுவதும் அவதூறு பரப்புவதுமே அவனது வேலையா ஆகிப் போனது…
நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு தானுண்டு.. தன் வேலையுண்டு என்று இருப்போம்.. ஆனால் நம்மைப் போல் நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் இல்லை.. அது கோடிக் கணக்கான கண்களைக் கொண்டு நம்மைக் கண்காணிக்கிறது என்பதை அறிய மாட்டோம்.. நம்மைப் போலவே பிறரையும் நினைப்போம்..
ஊர்மிளாவும் இது போன்ற அப்பாவிதான்.. அவள் தன்னைப் பற்றி மற்றவர் பேச என்ன இருக்கிறது என்ற எண்ணத்துடன் அப்பழுக்கில்லாத நடத்தையுடன் வாழ்ந்து வந்தாள்.. ஆனால் அவளையும் எதிரியாய் நினைக்க ஓர் அயோக்கியன் இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாமல் போனது.. அதை விடப் பெரிய அநியாயம் அவனே அவளது நாத்தனாரைப் பெண் கேட்டு வந்தது..
மீண்ட சொர்க்கம் போல் இந்த மேலக்கால் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவனது லட்சியம் உயிர் பெற்றது.. பெண்ணின் மூலம் வரும் சொத்து மதுரையில் பங்களாக்களாக இருந்தால் என்ன..? மேலக் கால் கிராமத்தில் வயல்களாக இருந்தால் என்ன..?
அவன் அன்றே விவரம் சொன்ன உறவுக்காரரை நல்ல முறையில் கவனித்தான்.. அவனது தாய் தகப்பனோ வீட்டில் கோழிப் பண்ணையை இறக்கி மூன்று நேரமும் வறுவல், பிரியாணி என்று தூள் பரத்தி விட்டனர்.. கையிலும் கணிசமாக பணம் பெற்றுக் கொண்ட அந்த பொய்பேசும் உறவுக்காரர் மேலக்காலில் போய் இறங்கி தயாநிதி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்.. தயாநிதிக்கு அவர் தூரத்து சொந்தம்..
“வாப்பா.. வீட்டில் பெண்டாட்டி பிள்ளைக சௌக் கியமா..? ஈஸ்வரி காபித் தண்ணியைப் பாரு.. விருந்தாளி வந்திருக்கு.. அப்புறம் என்ன விசயம்..? இந்தப் பக்கமா என்ன சோலியா வந்தே…?”
ஈஸ்வரி காபி கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போகத் திரும்பினாள்..
“ஈஸ்வரியம்மா.. நீயும் கொஞ்சம் இப்படி வந்து உட்காரு.. நல்ல சமாச்சாரம் பேச வந்திருக்கிறேன்.. நீயும் யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லணும்..”
ஈஸ்வரி கேள்வியாய் பார்த்தபடி எதிரே தரையில் அமர்ந்தாள்.. தயாநிதி யோசனையாய் பார்த்தார்..
“என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு..”
“இல்லாமல் போகுமா..? நம்ம சுபத்ராவுக்கு நல்ல சம்பந்தம் கிடைச்சிருக்கு.. அதைச் சொல்லத்தான் வந்தேன்”
“இப்போ அது கல்யாணத்துக்கு என்ன அவசரம்..?”
“என்ன தயாநிதி இப்படிப் பேசுற..? அதுக்கும் வயசா கலையா..? புள்ளையை நினைச்சுக்கிட்டு பொண்ணைக் கவனிக்காமல் விட்டால் எப்படி..? அதுவும் நீ பெத்தபிள்ளை தானே..”
தயாநிதியும் ஈஸ்வரியும் யோசித்தார்கள்.. வந்தவர் சொல்வதில் இருக்கும் உண்மை உறைக்கப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்கள்..
“பையன் யாரு..? என்ன வேலை பார்க்கிறான்…”
“தங்கமான பையன்.. கார்ப்பரேசனில் ஆபிஸரா இருக்கான்.. அருமையான குடும்பம்.. அக்காமார்கள் நான்கு பேர்.. இவன் ஒருத்தன் தான் மகன்.. அக்காக்களுக்கு கல்யாணம் பண்ணிவிட்டுத்தான் தனக்கு கல்யாணம்ன்னு பிடிவாதமா தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தான்.. இப்போ நாலு பெண்களும் கல்யாணம் ஆகி நல்லா வாழறாங்க.. அவனுக்கும் கல்யாணம் பண்ணிடனும்னு பொண்ணு தேடுறாங்க..”
நாக்கில் தேன் தடவி நயவஞ்சகமாய் அவர் பேசினார்.. வஞ்சகர்களை வாழ வைக்கும் தெய்வங்கள் என்றார்.. அடங்காப் பிடாரி மங்கம்மாவை அமைதியின் மறுவடிவம் என்றார்.. பேராசை மாத்தாண்டத்தை பெருந்தன்மை மிக்கவர் என்றார்.. கூனி போல் குணம் படைத்த வீரபத்ரனின் உடன் பிறப்புக்களை குணக்குன்று என்றார்.. மொத்தத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருமே பத்தரை மாற்றுத் தங்கம் என்றார்..
“சொந்த வீடு இருக்கா..?” ஈஸ்வரி வினவினாள்..
“கூடிய சீக்கிரத்தில் வாங்கிடுவாங்கம்மா…”
“வேற சொத்து சுகம்..?”
“அந்தப் பையனின் குணமே பெரிய சொத்தும்மா ஈஸ்வரி.. நீ பெண்ணைக் கொடுத்துப் பார்.. அப்புறம் நீயே சொல்வாய்..”
என்று சொன்ன அந்த உறவினர்.. திருமணமான பின்பு வீரபத்ரனின் குடும்பத்தின் உண்மை முகம் தெரிய வரும் போது ஈஸ்வரி என்ன செய்வாள் என்று யோசித்தார்..
அவள் என்ன என்ன வார்த்தைகளில் தன்னை சபிப்பாள்.. என்று கற்பனை செய்து கொண்ட அவரின் உடல் நடுங்க அவர் மனதாரப் பொய் சொன்னார்..
“சரி பொண்ணு பார்க்க வரச் சொல்லுங்க..”
சாப்பிட்ட கறியும் சோற்றிற்குத் தன்னால் ஆனகைமாறை செய்துவிட்ட திருப்தியோடு அவர் போய்ச் சேர்ந்தார்.. செய்தி அறிந்ததும் வீரபத்ரன் மனம் சிறகடித்தது..
வெள்ளை வெளேரென்ற சலவை வேட்டி அணிந்து பெரிய மனிதத் தோரணையுடன் மார்த்தாண்டம் கிளம் பினார்.. கூட அடக்கமே வடிவானவள் போல் இரவல் பட்டுப் புடவை உடுத்தி இரவல் நகைகளைப் போட்டுக் கை எடுத்து கும்பிட வைக்கும் மரியாதையான தோற்றத்துடன் மங்கம்மா சென்றாள்.. இவர்களுடன் இந்தப் பெண்பார்க்கும் பார்க்கும் படலத்திற்கு என்று எடுத்த புதிய பேண்ட், சட்டையணிந்து ஒரு பாட்டில் சென்டில் குளித்து பவுடர் மணக்க ஒரு மணி நேரம் தலை சீவி யோக்கியமே வடிவமாய் வீரபத்ரன் சேர்ந்து கொண்டான்..
வாடகைக் காரில் இவர்கள் போய் இறங்கியபோது நடேசன் வந்து வரவேற்க ‘அட துரோகி’ என்று மனதில் புகைந்து கொண்டு வெளியே சிரித்தபடி வணக்கம் சொன்ன வீரபத்ரனின் மனதில் ‘இவன் எங்கே இங்கு வந்தான்..?’ என்ற எண்ணம் ஓடியது.. அபிராமி வந்து எல்லோருக்கும் காபி கொடுத்துப் போக அவள் கை நழுவிப் போனாளே என்ற ஏக்கத்துடன் வீரபத்ரன் இருந்தபோது அதை போக்கப் பிறந்து வந்தவள் போல் அழகே வடிவான சுபத்ரா எதிரே வந்து அனைவருக்கும் கரம் குவித்து வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தாள்.. அவளது அழகைக் கண்ட வீரபத்ரன் அபிராமியை இழந்த சோகத்தை மறந்து விட்டான்.. சுபத்ரா விடம் சொக்கி விட்டான்..
எல்லோரும் பேசிக் களித்து சுபத்ராவின் முகத்தில் நாணம் கலந்த சம்மதத்தைக் கண்டு மகிழ்ந்து ஒரு முடிவிற்கு வந்து வெற்றிலை பாக்கு மாற்றி நாள் குறித்து முடித்தவுடன் வீரபத்ரனின் தலையில் இடி இறங்கியது..
கூடத்தில் அமர்ந்திருந்த ஈஸ்வரியின் மடியில் அமர்ந் திருந்த ஐந்து வயதுச் சிறுவனைப் பார்த்து,
“இதுதான் உங்க பேரனா..?” என்று மங்கம்மாள் மயக்கும் புன்னகையுடன் கேட்டாள்..
“ஆமாங்க..” என்று பாசத்துடன் பேரனைக் கட்டிக் கொண்டாள் ஈஸ்வரி.. அதை எரிச்சலுடன் பார்த்த மார்த்தாண்டம்,
“பையன் படிக்கலையா..?” என்று கேட்டார்..
“படிக்கிறானே.. மதுரையில் டி.வி.எஸ். பள்ளிக் கூடத்தில் யு.கே.ஜி. படிக்கிறான்..” நடேசன் பெருமையுடன் கூறினான்..
“பள்ளிக் கூடத்திற்கு எப்படி இங்கேயிருந்து போய் வர்றான்..?” என்று மங்கம்மாள் விசாரித்தாள்..
“கார் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.. அதில் என் மருமகள் மகனைப் பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு ஆபிஸிற்குப் போவாள்.. திரும்ப வரும்போது கூட்டிக் கொண்டு வருவாள்…” தயாநிதி கூறினார்..
‘இதுகளுக்கு கார் வேறா..?’ என்று எரிந்த வீரபத்ரன்,
“உங்க மருமகளுக்கு பாவம் வீண் அலைச்சல்.. பேசாமல் மதுரையிலேயே ஒரு வீடு வாடகைக்கு பார்த்து அவர்கள் இருந்திருக்கலாம்..” என்று அக்கறை போல் யோசனை கூறினான்..
“எங்க கட்டை வேகிற வரை எங்க மருமகளைத் தனியாக விட மாட்டோம்.. எங்க கடைசி காலம் வரை எங்கள் கண் பார்வையில் தான் எங்கள் மருமகள் இருப்பாள்..”
ஈஸ்வரி வெடுக்கென்று கூறினாள்.. மங்கம்மாள் மகனை விழிகளால் எச்சரித்தாள்.. அவன் வாயை மூடிக் கொண்டான்.. சம்பந்தகாரியின் கோபத்தை தணிக்க அவளை வார்த்தைகளால் குளிப்பாட்ட விரும்பி,
“பேரன் மூக்கும் முழியுமா அழகா இருக்கான்..” என்று கூறினாள்..
“அப்படியே என் மகன் ஜாடை..” என்றாள் ஈஸ்வரி கண்கலங்க..
“அடப்பாவமே மகனை நினைச்சிட்டிங்களா.. ஆமாம் நாங்கள் வந்ததில் இருந்து உங்க மருமகளையே பார்க்க வில்லையே..” என்று அவள் கேட்டு வைக்க,
“ஊர்மிளா..” என்று ஈஸ்வரி உள் பக்கம் பார்த்து அழைத்தாள் வீரபத்ரனுக்கு மனதிற்குள் ‘வதக்’ என்றது.. ‘அந்த ஊர்மிளாவா..?’ என பயந்தான்.. அவன் பயந்தது போலவே ஊர்மிளா வெளிவந்தாள்..
‘அடிப்பாவி.. இங்கேயும் இவள்தானா..?’ இந்தக் கல்யாணம் ஒழுங்காய் நடக்குமா என்ற கவலை மேகம் அவனைச் சூழ்ந்து கொண்டது..
அதை அறியாத அப்பாவி ஊர்மிளா எல்லோருக்கும் மரியாதையுடன் வணக்கம் சொல்லிவிட்டு மரியாதை நிமித்தம் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..
பெண்பார்க்க வரும்போது சிரித்த முகத்துடன் வந்த மகன் திரும்பி வரும்போது பேயறைந்தது போல் ஏன் வருகிறான் என்பதைப் புரியாத அவனது தாய் மேலக்காலில் இருந்து வந்த மூன்றாள் நாள் அதைப்பற்றி அவனிடம் விளக்கம் கேட்டாள்.. அவள் மகனிடம் வினவும் போது வீரபத்ரனின் கடைசி அக்காவின் கணவன் சிங்கவாரயன் மாமியார் வீட்டிற்கு கல்யாணச் செய்தியை விசாரிக்க வந்திருந்தான்…
“ஏண்டா மகனே மூஞ்சியை உம்முன்னு வைச்சிருக்கிற.. அதுதான் நம்ம மனசு போல நல்ல இடத்தில் சம்பந்தம் அமைஞ்சு போச்சே..”
“ஏம்மா வயித்தெரிச்சலைக் கிளப்பறே.. அந்த வீட்டில் மருமகள்ன்னு ஒரு ஆட்டக்காரி இருக்காளேன்னு தான் கவலைப்படறேன்…”
தன் போக்கில் வீரபத்ரன் அவன் பரப்பி வந்த கட்டுக்கதை களை வீட்டிலும் அவிழ்த்து விட பெண்கள் விசயத்தில் மோசமான சிங்கவராயன் அதை மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டான்..
விளைவு பெரும் விபரீதமானது..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.