Chapter 29
சிங்கவராயன் பிறந்து சீரழிந்து வளர்ந்த ஊர் ஆந்திராவின் அருகில் இருந்தது.. தொலைதூரத்தில் விசாரிக்காமல் பெண் கொடுத்து விட்ட வீரபத்ரன் வீட்டாருக்கு அவன் சுயரூபம் தெரியாது.. அதனால் மருமகன் தானே என்ற நினைவில் மங்கம்மாளும் அக்காள் கணவன் தானே என்ற உறவில் வீரபத்ரனும் அவன் இருப்பதை பொருட்படுத்தாமல் உரையாடிக் கொண்டிருந்தனர்…
“ஏண்டா அப்படிச் சொல்றே.. அவள் பார்க்க அழகா ரதி மாதிரி இருந்தாலும் அடக்க ஒடுக்கமாத்தானே தெரியறா..?”
மங்கம்மாளின் வார்த்தைகளில் ‘ரதி’ என்ற வார்த்தை அவள் மருமகனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது.. கெட்ட நடவடிக்கையால் உள்ளூரில் பெண் கிடைக்காமல் அயலூரில் அண்டங்கருப்பில் இருந்த வீரபத்ர னின் அக்கா காளிஸ்வரியை மணம் முடித்த கடுப்பில் இருந்த வனுக்கு அழகான பெண்களின் மேல் எப்போதுமே மோகம்..
“ஏம்மா நீ வேற.. அதெல்லாம் வீட்டில்தான்..” என்று அவன் சராமாரியாய் ஆரம்பித்து சரடு விட சிங்கவராயன் மனதில் தீய எண்ணம் விதைக்கப்பட்டுவிட்டது..
எந்த நேரம் திருமணம் தடைபடுமோ என்ற பயத்துடன் இருந்த வீரபத்ரன் திருமண நாள் நெருங்க நெருங்க குளிர் ஜூரம் பிடித்தவன்போல் ஆகிப்போனான்…
“என்னடா மாப்பிள்ளை மந்திரிச்சு விட்ட கோழி போல் ஒரு மார்க்கமா அலையற..?” நண்பர்கள் கிண்டல் பண்ணினர்..
“ஏண்டா தம்பி என்னவோ போல் இருக்க..? எவகண்ணு பட்டுச்சோ கல்யாணம் நெருங்கி வர்ற சமயத்தில் என் தம்பி கருக்குளிச்சுப் போயிட்டானே..” அக்காகாரிகளில் ஒருத்தி அங்கலாய்க்க,
“ஆமாம் மச்சான் ஏற்கனவே யானைச் சிவப்பில் இருந்தாரு.. இப்போது புதுசா கருத்துப் போயிட்டாரு பாவம்..” அக்காள் கணவர்களில் ஒருவர் கிண்டலடித்தார்..
ஒரு வழியாய் திருமண நாளும் வந்தது.. ஆயிற்று விடிந்தால் திருமணம்.. மதுரையில் நடைபெறும் திருமணத்திற்கு பெண் அழைத்துக் கொண்டு வந்தாகி விட்டது.. மண்டபத்தில் மனநிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்…
‘கல்யாணம் ஒழுங்காய் நடைபெறவேண்டும்..’ என்று முதன் முதலாய் கடவுளிடம் வேண்டிக் கொண்டான்..
விடிந்தது.. மணமேடையில் மாப்பிள்ளையாக அமர்ந்து விட்டான்.. அருகே மணப்பெண் அலங்காரத்தில் சுபத்ரா வந்து அமர்ந்தாள்.. முகூர்த்த நேரம் நெருங்கி தாலியை அவன் கையில் எடுக்கும்போது அது நிகழ்ந்தது..
“வீல்..” என்ற கூக்குரல் எழுந்தது.. தொடர்ந்து ‘டம்டம்’ என்ற சத்தம் கேட்டது..
“அது ஊர்மிளாவின் சத்தம் போல் தெரிகிறதே..” என்று அபிராமி கவலையுடன் விரைய தயாநிதியும் ஈஸ்வரியும் மணமேடையை விட்டு ஓடினர்..
அதை விடப் பெரிய கொடுமைஎன்னவென்றால் மணப்பெண் கோலத்தில் மாலையும் கழுத்துமாய் அமர்ந் திருந்த சுபத்ரா முதல் ஆளாய் எழுந்து ஓடிவிட்டதுதான்..
வீரபத்ரன் வெறிகொண்ட வேங்கை ஆனான்.. ‘இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்..? அவனை வாழ விடக்கூடாது என்று கங்கணம் கொட்டிக் கொண்டு அலைகிறாளே..’ என்று பல்லைக் கடித்தவாறு தாலியை கையில் பிடித்துக் கொண்டு சுபத்ரா சிக்கினால் கழுத்தில் கட்டிவிடும் உத்தேசத்துடன் எழுந்து வேகமாகச் சென்றான்..
ஸ்டோர் ரூமின் உள்ளே சத்தம் கேட்டது.. எல்லோரும் உள்ளே சென்று பார்த்தனர்.. ஊர்மிளா சிங்கவராயனை அங்கே இருந்த பிளாஸ்டிக் முறத்தை வைத்து அடித்துக் கொண்டிருந்தான்.. அபிராமி அருகே போய் ஊர்மிளாவின் கை பிடித்து,
“என்ன ஆச்சுடி…” என்று வினவினாள்…
‘என்ன ஆகியிருக்கும்..’ என்பதை அங்கிருந்த அனைவரும் ஓரளவு யூகித்து இருந்தனர்..
“அபிராமி.. இவன்.. இவன்.. என்னை…” அவள் வார்த்தைகளை கூற முடியாமல் தடுமாற நடேசன் பாய்ந்து அவனை இழுத்துப்போட்டு மிதித்தான்..
மேலக்காலில் உள்ள ஆண்கள் அனைவரும் அவனை துவைத்து எடுத்துவிட்டனர்.. தன் கல்யாணம் என்பதை மறந்தும் நினைவில் கொள்ளாதவர்களைச் சீற்றத்துடன் பார்த்த வீரபத்ரன், தன்னை அறியாமல் வாய்விட்டு விட்டான்.
“யோவ்.. இப்ப என்ன நடந்திருச்சுன்னு இந்தக் குதி குதிக்கறீங்க.. இவளைப் பற்றி எனக்குத் தெரியாதா..?”
“ஏய்ய்.. நீ கல்யாண மாப்பிள்ளையாய் இருப்பதால் சும்மா விடுகிறேன்.. அவ இவன்னே பல்லு முப்பத் திரண்டையும் பேர்த்து விடுவேன் ஜாக்கிரதை.. அவளாமில்ல.. உனக்கெல்லாம் பொண்ணு கொடுக்கணும்னு எங்க அண்ணன் நினைச்சார் பாரு.. அதுதான் நீ இப்படி தராதரம் தெரியாமல் பேசற.. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது ‘ளொள்’ன்னுதான் குலைக்குமாம்.. செருப்பை வாசலில்தான் விடணும்.. அதை வீட்டுக்குள் போட்டு வரக் கூடாது.. உன்னை வீட்டுக்குள் கொண்டு வர நினைச்சார் பாரு எங்க அண்ணன்.. அவரைச் சொல்லணும்.. எங்க வீட்டு குல விளக்குடா அது.. அதைப் போய் அவள்ங்கிறே.. காலக் கொடுமை…”
செவ்வந்தி சீறிச் சினந்தெழ வீரபத்ரன் மனம் விண்டு விட்டான்.. இனிக் கல்யாணம் நடக்காதோ என்ற தவிப்பில்,
“அட நிறுத்தும்மா நீ வேற.. கொட்டுற மழையில் அதோ நிற்கிறானே பாண்டியன் நெடுஞ்செழியன் பரம் பரைன்னு ஒருத்தன்.. வெடுவெடுன்னு உயரமா.. அவன் கூட ஒரே குடையில் ஊர் சுத்தினவதானே உங்க வீட்டு குல விளக்கு…” என்று விஷத்தைக் கக்கினான்…
அது வரையில் அவன் என்ன பேசுகிறான் என்பதை அறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நெடுஞ் செழியன் ஓங்கி ஓர் அறை விட்டான்.. வீரபத்ரன் மூலையில் போய் விழுந்தான்.. தொடர்ந்து சென்று அவனைத் தூக்கி சட்டையைப் பிடித்தவன் மீண்டும் அடிக்கலானான்.. எல்லோரும் பிரித்து விட,
“பாவி.. அந்தப் பொண்ணை என் தங்கையா நினைக் கிறேன்டா.. அக்கா தங்கை கூடப் பிறக்காத நானே என் கூட வேலை பார்க்கும் பெண்ணைத் தங்கையாய் நினைக்கிறேன்.. நான்கு அக்காமார்கள் கூடப்பிறந்த நாய்… நீ.. கண்டபடி பேசுற.. உன் நாக்கை கட் பண்ணி விடுவேன்.. அடங்கு.. இந்தச் செழியனைப் பற்றி உனக்கு தெரியவில்லைன்னு நினைக்கிறேன்.. விசாரித்துப்பார்.. நான் கொலை பண்ணக் கூட அஞ்சாதவன்னு சொல்லுவாங்க,” என்று கொதித்தான் நெடுஞ்செழியன்..
வீரபத்ரன் செழியனைப் பற்றி அறிந்தவன்தான்.. அவனைப் பற்றி அலுவலகத்தில் பேசப்படும் அனைத்து கதைகளையும் அறிவான்.. எனவே சப்த நாடியும் ஒடுங்க பெற்றவர்களைப் பார்த்தான்.. மகனின் பார்வையில் பொருள் புரியாமல் போகுமா அவர்களுக்கு..?
புலி பதுங்குவது பாய்வதற்காக.. பயத்தினால் அல்ல.. அந்தக் கூட்டம் இது பதுங்க வேண்டிய நேரம் என்று முடிவு செய்தார்கள்.. அவர்கள் தரப்பு பெரிய மனிதர் ஒருவர் நியாயம் பேசினார்..
“சரிங்க.. நடந்தது நடந்து போச்சு.. அக்காள் புருசன் பண்ணிய தப்பிற்கு மாப்பிள்ளை என்ன பண்ணுவார்..? அவங்க அக்கா குடும்பத்தை மண்டபத்தை விட்டுப் போகச் சொல்லி விடலாம்.. நல்ல நேரம் முடிவதற்குள் கல்யா ணத்தை முடித்துவிடலாம்..”
“அப்போ எங்க வீட்டுப் பெண்ணை மாப்பிள்ளை சார் பேசியதற்கு என்ன சொல்கிறீர்கள்..” நடேசன் கோபமாய் கேட்டான்..
“ஏன் தம்பி.. சின்ன விசயத்தை பெரிது பண்ணாதீங்க.. அக்காள் புருசனை அடிச்சால் யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.. அந்தக் கோபத்தில் ஏதோ தெரியாமல் நாலு வார்த்தை முன்னே பின்னே பேசி விட்டார்.. வேணும்னால் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன்..”
“மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா..?” இதைக் கேட்டது வேறு யாருமல்ல.. மணப்பெண் சுபத்ரா..
“ஏம்மா பெரியவங்க நாங்க பேசி ஒரு முடிவுக்கு வருவோம்ல்ல..? கல்யாணப் பெண்ணா லட்சணமா வாயை மூடிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இரும்மா.. நீ சின்னப் பெண்.. உனக்கு உலகம் தெரியாது…”
“சார்.. ரெண்டு விசயத்தைத் தெரிஞ்சுக்கங்க.. முதலாவது எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை.. அதனால் நான் கல்யாணப் பெண்ணில்லை.. இரண்டாவது நான் சின்னப் பெண்ணில்லை.. எனக்கு இருபத்தி நான்கு வயதாகிறது..”
“ஏம்மா.. வாய் புளிச்சதா மாங்காய் புளிச்சதான்னு பேசக் கூடாதும்மா.. ஊர் கூடி மண்டபத்தில் உட்கார்ந்து இருக்கோம்.. கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னா என்ன அர்த்தம்..? உங்க வீட்டு பத்திரிக்கைக்கு மதிப்புக் கொடுத்து வந்த நாங்க எல்லாம் கேணப் பயலுகளா…?”
“அதை உங்களுக்கு பத்திரிக்கை கொடுத்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்டக் கேளுய்யா… எங்க வீட்டுப் பெண்ணை உங்க வகையறாவில் கொடுக்க நாங்க கேண ஜனங்களில்லை.. காலக் கொடுமை…”
“இந்தாம்மா செவ்வந்தி.. கொஞ்சம் பொறுத்துப் பேசு.. கோபம் வந்தால் சண்டை சச்சரவு வருவது சகஜம்தான்.. இதுக்காக ஒரு கல்யாணத்தையே நிறுத்தலாமா..? மாப்பிள்ளை என்ன கூனா..? நொண்டியா..? முடமா..?”
“குணம் கெட்டவன்..” என்றாள் சுபத்ரா அறுவெறுப்பாக..
“என்னைக் கல்யாணம் பண்ணினால் என் அண்ணி என்ன முறை ஆகவேண்டும்..? தங்கை முறை ஆக வேண்டும்.. தங்கை முறையில் இருக்கும் பெண்ணை தரக் குறைவாய் பேசுபவன் குணம் எப்படி இருக்கும்..? இங்கே பாருங்கள்.. எனக்கு என் அண்ணியின் கௌரவம் மிக முக்கியம்.. அதில் தூசு படியும்படி யார் பேசினாலும் பேசியவர்களை வெட்டி விடுவேன்.. என்னைக் கொலைகாரி ஆக்காமல் உங்கள் மாப்பிள்ளையை கூப்பிட்டுப் போய் விடுங்கள்…”
“என்னை விரட்டுகிறாயா..? உன்னை யார் கட்ட வரு வார்கள் என்று நான் பார்க்கிறேன்..” வீரபத்ரன் சூளுரைக்க,
“நான் கட்டப் போகிறேன்.. நன்றாகப் பார்த்துக் கொள்.” என்றான் நெடுஞ்செழியன்…
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.