Chapter 31

0Shares

“அன்று நான், ஜோகிந்தர், ஜோசப் மூவரும் பாகிஸ் தானியரை எதிர்த்து தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்த போது பாகிஸ்தானியர் எங்களை சுற்றி வளைத்து விட்டனர்.. நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து ஓடினோம்.. என் மேல் குண்டு பாய்ந்து விட்டது.. நான் கீழே விழுந்து விட்டேன்.. ஜோகி, ஜோ இரண்டு பேரும் என்னைக் கவனிக்கவில்லை.. பாகிஸ்தானியர் என்னைச் சிறை பிடித்து விட்டனர்..” லட்சுமணன் விவரித்துக் கொண்டிருந்தான்..

“அப்போ ஊர்மிளாவின் கடிதம் இருந்த ரத்தக்கறை படிந்த உன் சட்டை எப்படி நம்மவர்களின் கையில் கிடைத்தது..?” நடேசன் வினவினான்..

“அது ஓடும்போது ஒரு மரத்தில் என் சட்டை மாட்டிக் கிழிந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.. சட்டையைக் கழற்றாவிட்டால் நான் நகர முடியாது.. அதனால் சட்டையை கழட்டி விட்டு ஓட ஆரம்பித்தேன்…”

“இத்தனை வருடங்களாய் எங்கிருந்தாய்..?” தயாநிதி கண்கலங்க கேட்டார்.. ஈஸ்வரி இன்னும் விசும்பிக் கொண்டிருந்தாள்..

“போன மாதம் வரை நான் பாகிஸ்தான் சிறையில் இருந்தேன்.. போன மாதம் கைதி பரிவர்த்தனை நடந்தபோது.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் செவ்வந்தி குறுக்கிட்டுக் கேட்டாள்..

“அப்படின்னா என்னப்பா..?”

“ஒவ்வொரு வருடமும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அவரவர் தரப்பில் பிடிபட்டு சிறையிலி ருக்கும் போர் கைதிகளை விடுவிப்பார்கள்.. இந்தியா ஆறு பாகிஸ்தானியரை விடுதலை செய்து அனுப்பி வைத்தால் பாகிஸ்தானும் ஆறு இந்தியரை விடுதலை செய்து அனுப்பி வைக்கும்.. அதுதான் கைதிகளின் பரிவர்த்தனை.. அத்தை..”

“அப்போ நீ பாகிஸ்தான் சிறையில் இருந்தது இந்தியா விற்கு தெரியுமா..?” கலைமதி கேட்டார்..

“தெரியாது சித்தப்பா.. என்னை உயிருடன் பார்த்ததில் என் மேலதிகாரிகளுக்கு மிகவும் ஆச்சர்யம்..”

“ஒரு மாதமாகி விட்டதே நீ வெளியில் வந்து, இங்கு வர என் இவ்வளவு நாளாச்சு,” சுந்தரம் கேட்டார்..

“நான் திரும்பி வந்த செய்தி கேட்டதும் முறை பிரகாரம் செய்ய வேண்டிய வேலைகள் ராணுவத்தில் நிறைய இருந்தன மாமா.. எனது சர்வீஸ் ரிகார்டுகளில் நான் உயிருடன் இருக்கி றேன் என்பது பதிவாக வேண்டும்.. அதைப் பதிவு பண்ணி விட்டு உடனே கிளம்பி இன்று அதிகாலையில் மேலக்கால் வந்து சேர்ந்துவிட்டேன்.. நம் பண்ணை வேலை யாள்கள் சுபத்ராவின் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லி அட்ரஸ் கொடுத்தார்கள்.. உடனே நேரே இங்கு வந்து விட்டேன்..”

“அப்போ இங்கே நடந்த காலக்கொடுமையை எல்லாம் பார்த்தாயா ராசா..?”

“ஆமாம் அத்தை.. என் ஊர்மிளாவிற்கு நேர்ந்த அவலங்களை எல்லாம் கண்ணால் பார்த்தேன்.. காதால் கேட்டேன்.. நான் முதன் முதலாய் அவளைப் பார்த்தபோது அறியாப் பெண்ணாய் கடவுள் முன் கை கூப்பி வணங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.. ரொம்பச் சின்னப்பெண். கல்யாணம் என்கிற பெயரில் அவள் சிறகொடித்து சிறை வைத்து விட்டேன்..”

“அப்படிச் சொல்லாதீர்கள்..” என்று பதறி எழுந்தாள் ஊர்மிளா.. பெரியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஜாடை செய்து கொண்டு அறையை விட்டு வெளியேற கடைசியாய் சென்ற நடேசன் கதவை அடைத்து விட்டுச் சென்றான்..

லட்சுமணனின் விரித்த கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள் ஊர்மிளா.. கதறித் தீர்த்தாள்.. பிரிவின் சோகத்தை வேதனையை கண்ணீரால் கரைத்தார்கள் அவர்கள்..

அவளது உச்சியில் முத்தம் பதித்தான் அவன்.. காற்றில் பிடிமானம் இல்லாமல் ஆடிய தளிர் கொடி போல் தவித்தவள் மெல்ல அவனது அருகாமை உணர்ந்து அமைதியுற்றாள்..

கணவனின் மார்பிலிருந்து முகம் விலக்கி அவனது முகம் பார்த்தாள் ஊர்மிளா.. அவனது முகத்திலிருந்த தழும்புகள் அவளுக்கு வேதனையை ஊட்டின.. காய்த்துப் போயிருந்த அவன் உள்ளங்கையில் தவிப்புடன் முகம் புதைத்தாள்.. அவளது முடி கோதியவன் கூறினான்..

“இவையெல்லாம் வீரத்தின் விழுப்புண்கள்.. இந்த நாட்டிற்காக நான் போராடிய போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள்.. இன்னும் உடம்பில் நிறைய காயம் பட்டவடுக் கள் இருக்கின்றன.. அதைப் பார்த்தால் பயந்து விடுவாய்..”

“பயந்துதான் போய்விட்டேன்.. இனி எப்படி இந்த உலகில் வாழப் போகிறோம்.. எப்படி உங்கள் குழந்தையை வளர்க்கப் போகிறோம் என்று…”

“குழந்தை..? என்ன சொல்கிறாய் ஊர்மிளா..?” அவன் பரபரப்பாய் கேட்டான்.. அவன் விழிகள் மின்னின.. அதே நேரம் கதவு திறந்தது.. பால முரளி உள்ளே வந்தான்.. லட்சுமணனைப் பார்த்ததும் மகிழ்வாக,

“அப்பா..” என்றான்..

அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி..? ‘அம்மா’ என்றுதான் ஓர் குழந்தை முதலில் அழைக்கும்.. அந்த ஓர் வார்த்தையில் உலகை மறப்பாள் அந்தத் தாய்.. அதே குழந்தை விவரம் அறிந்து தளர் நடைபோடும் வயதில் ‘அப்பா’ என்று அழைக்கும்.. அந்த ஓர் வார்த்தையில் உலகையே வென்றுவிடுவான் அந்தத் தகப்பன்..

பாலமுரளிக்கு தன்தந்தையின் நினைவு என்றும் இருக்க வேண்டும் என்பதில் ஊர்மிளா குறியாய் இருப்பாள்.. மகனை மடியில் அமர வைத்துக் கொண்டு போட்டோ ஆல்பத்தில் லட்சுமணன் முகம் காட்டி தினமும் கதை சொல்லுவாள்..

‘இதோ பார்டா முரளி.. இவர்தான் உங்க அப்பா.. எங்கே அப்பா சொல்லு.. குட்.. அப்பா மிலிடிரியில் பெரிய ஆபிஸர்.. அவர் நம்ம எதிரி நாட்டோட சண்டை போட்டார்.. எப்படித் தெரியுமா டிஷ்யூம்.. டிஷ்யூம்.. அப்புறம் துப்பாக்கியை எடுத்து அவங்களை ஷூட் பண்ணிட்டார்.. எப்படி டுமில்.. டுமில்ன்னு.. நீயும் அப்பா மாதிரி பெரிய வீரனா ஆகணும்.. சரியா..?’

தினமும் தாய் சொல்லும் கதை கேட்டு தந்தையின் முகத்தை போட்டோவில் பார்த்து வளர்ந்தவன் பாலமுரளி.. அவனுக்கு தந்தையை உடனே அடையாளம் தெரிந்து விட்டது.

லட்சுமணனால் நம்ப முடியவில்லை.. தன் மகனா..? அவன் பிறந்ததைக் கூட லட்சுமணன் அறியவில்லை.. ஆனால் அவனோ வாய் நிறைய ‘அப்பா..’ என்று அழைக்கிறான்.. மெய்சிலிர்க்க மகனை வாரி எடுத்து முத்தங்கள் வழங்கினான் லட்சுமணன்.. பாலமுரளியும் தந்தையின் தோள் சாய்ந்து தன் அன்பை வெளிப்படுத்தினான்.

விலகி நின்ற உறவினர் கூட்டம் உள்ளே வந்தது.. செவ்வந்தி தகப்பனையும் மகனையும் சேர்த்துக் கண்ட நிறைவுடன்,

“இவன் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொள் லட்சுமணா.. இவன் மட்டும் உன் பெண்டாட்டி வயிற்றுக் குள் இருந்து கொண்டு அவளை வாந்தி எடுக்க வைக்காமல் இருந்திருந்தால் உன் பெண்டாட்டி இந்நேரம் சாம் பலாத்தான் இருந்திருப்பாள்…” என்று கூறினாள்..

“ஏன் அத்தை…”

“அவ தூக்கு மாட்டிக்கப் போனாள்டா.. அப்ப வாந்தி வரவும் திகைச்சுப் போய் அந்த நினைப்பை விட்டாள்.. அப்புறம் உன் மகனுக்காக உயிர் வாழறாள்..”

லட்சுமணன் ஊர்மிளாவைப் பார்த்த பார்வையில் ஆயிரம் கோடி அர்த்தங்கள்.. உணர்வுகள் இருந்தன.. அவை அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும் உணர்வுகள்..

“இப்போதாவது எங்களை ஆசிர்வதிப்பீர்களா அண்ணி,” சுபத்ரா நெடுஞ்செழியனுடன் அண்ணன், அண்ணியின் தாள் பணிந்தாள்.. மனமார மணமக்களை ஆசிர்வாதம் செய்த ஊர்மிளாவின் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டின் மேல் குங்குமம் இட்டு விட்டாள் அபிராமி…

மறுநாள் லட்சுமணனும், ஊர்மிளாவும் மகனுடன் தாடிக்கொம்பு போனார்கள்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link