Chapter 07

0Shares

துரைசிங்கம், மகேஷ்வரனின் வீட்டிற்குச் சென்ற போது.. காயத்ரி பட்டுச்சேலையும், நகையுமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்தாள்..

துரைசிங்கத்தைக் கண்டதும், “வாய்யா.. மருமகனே..” என்று வாய்நிறைய வரவேற்றாள்..

‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை.. என்னை வெறும் வாய் பந்தல் போட்டு கவிழ்த்துவிட்டு.. உன் அண்ணன் மகனை என் தாய் மாமனுக்கு மருமகனாக்கிய வித்தாரக்கள்ளி நீதானே..!’

மனதிற்குள் மாமன் மனைவியை மரியாதைக் குறைவாய் அர்ச்சனை செய்தவன்.. வெளியே வெகு மரியாதையாய் புன்னகைத்து வைத்தான்..

“மாமா எங்கே அத்தை..?”

“அவரு எங்கே வீடு தங்குறாரு..? விடியற்காலமே வயலு பக்கம் போயிட்டாரில்ல..”

கொண்டையைச் சுற்றி மல்லிகைச் சரத்தை வைத்துக் கொண்டே பேசியவளை பவ்வியமாய் பார்த்த துரைசிங்கம்,

“அத்தை எங்கேயோ வெளியே கிளம்பிட்டாப்புல இருக்கே..?” என்று கேட்டான்..

‘எங்கே போகிறாய்..?’ என்று அமங்கலமாய் நாத்தனார் மகன் கேட்கவில்லையாம்.. அந்த சாதுர்யத்தில் மகிழ்ந்து போய் சிரித்தாள் காயத்ரி..

“கிழக்குத் தெரு ஆவுடை வீட்டில் சடங்கு மருமகனே.. ஒரு எட்டு போய் தலையைக் காட்டிவிட்டு வந்துடுறேன்..”

“வீடு திறந்து கிடக்கே அத்தை..?”

வீட்டிற்குள் கண்களால் துழாவியபடி கேட்டவனைக் கவனிக்காமல், அவனுக்குத் தேவையான பதிலைச் சொல்லிவிட்டாள் காயத்ரி..

“கஸ்தூரி வீட்டிலதான் இருக்கா..”

‘எனக்கு அதுதானே வேண்டும்.. என் அயித்தை..’

துரைசிங்கம், காயத்ரியின் தலைமறையும் வரை காத்திருந்துவிட்டு.. வீட்டுக்குள் சென்றான்..

கஸ்தூரி ஊஞ்சலில் அமர்ந்து.. ஊஞ்சலாடிக் கொண்டே ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம்.. அவள் ஊஞ்சலாடும் அழகில் மயங்கி அதை ரசித்தவாறு நின்றான் துரைசிங்கம்.. மறுகணம் அவள் நிமிர்ந்து பார்த்துவிடவும் புன்னகைத்தான்..

அவனது வழக்கமான ‘டிரேட் மார்க்..’ வெள்ளைச் சிரிப்பு.. பதிலுக்கு உண்மையிலேயே மனதில் சூது வாது ஏதுமில்லாத கள்ளமில்லாத புன்முறுவலைப் பூத்தாள் கஸ்தூரி..

‘என்னமாய் சிரிக்கிறாள்..?’ முல்லைப் பூக்களை நெருக்கிக் கட்டியது போன்ற அவளது பல் வரிசையில் மயங்கிப் போனவன்..

“என்ன செய்கிற கஸ்தூரி..?” என்று அர்த்தமில்லாமல் கேட்டான்..

“கதை படிச்சுக்கிட்டு இருக்கேன் மாமா..” இயல்பாய் பதில் கூற துரைசிங்கத்தின் மனம் கடுத்தது..

‘அவன் மட்டும் உனக்கு அத்தான்.. நான் மாமாவா..? அவனும் நானும் ஒரே வயதுதானேடி..’

“என்ன மாமா.. என்னவோ போல் ஆகிட்டீங்க..” கஸ்தூரி கேட்டாள்..

‘நீ பேசிய லட்சணத்தால்தான் இப்படி ஆகிவிட்டேன்..’ என்று சொல்ல முடியாத துரைசிங்கம்..

“ஒன்னுமில்லை கஸ்தூரி..” என்று பொய்யுரைத்தான்.

“ஒன்னும் இல்லாததற்கெல்லாம் உம்முன்னு இருப்பாங்களா..?”

‘களுக்’கென்று சிரித்தாள்..

“ம்.. என் மனதில் இருப்பதைத்தான் உன்னிடம் எப்படி சொல்லவென்று தெரியவில்லையே..!” என தன்னையும் அறியாமல் கூறிவிட்டான் துரைசிங்கம்..

“என்னது..?” புரியாமல் நோக்கினாள் கஸ்தூரி..

“இல்லை.. ஊருக்குள் பேசிக்கொள்வதை நான் எப்படி உன்னிடம் சொல்வதுன்னு தெரியவில்லை..”

“ஊருக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள்..?”

“அது நிறைய பேசிக் கொள்கிறார்கள்.. அது எதுக்கு உனக்கு..?”

“இல்லை… சொல்லுங்க.. எனக்கு என்னன்னு தெரிய வேண்டும்..”

“ச்சு.. வேண்டாம் கஸ்தூரி..”

“ஏன் மாமா..?”

“நான் கேள்விப்பட்டதை உன்னிடம் சொன்னால், நீ ஆடி போய்விடுவாய்.. உன் துன்பம் பார்க்க எனக்கு சகிக்காது..”

கஸ்தூரியின் கருவிழிகளில் அச்சம் வந்தது.. அவளது கால்கள் தாமாகவே ஊஞ்சலாட்டத்தை நிறுத்தின.. கையில் இருந்த புத்தகத்தை ஊஞ்சலில் வைத்தவள்.. கலவரத்துடன் அவனை நோக்கினாள்..

துரைசிங்கத்தின் இறுகின முகம்.. அவன் எதையோ சொல்லப் போகிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

“என்ன மாமா..?”

“வேண்டாம் கஸ்தூரி.. என்னை விட்டுடு..”

என்னமோ அவன் போகத் துடிப்பதைப் போலவும்.. அவனது கையைப் பிடித்து அவள் நிறுத்தி வைத்திருப் பதைப் போலவும் பாவனையாய் பேசினான்..

“மாமா.. உங்களுக்கு என் மேல் பாசம் இருக்கிறதா.. இல்லையா..?”

‘பாசமா..? காதல் இருக்கிறதடி என் மாமன் மகளே..’ என்று பல்லைக் கடித்துக்கொண்டான்.

“உன் மேல் நான் என் உயிரையே வைத்திருக்கிறேனே கஸ்தூரி..”

“அப்படியானால் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்..”

“சொல்கிறேன்.. ஆனால், நீ ரொம்பவும் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும்..”

“சரி..”

“வாழ்வே பறிபோய் விட்டதுன்னு மூலையில் உட்கார்ந்துவிடக் கூடாது..”

“சரி..”

இது ஒரு வகையான மனோ தத்துவ ரீதியான தாக்குதல், ஒருவரைத் தைரியம் இழக்கச் செய்யும் வழி முறைகளில் இதுவும் ஒன்று. அதை கடைபிடித்தான் துரைசிங்கம்..

‘என்னவோ.. ஏதோ..’ என்று முதலில் கஸ்தூரியைப் பயப்பட வைத்தான்.. பின்னர்.. சொல்ல வந்ததை கனமான குரலில்.. அவளது மனதில் அழுந்தப் பதியும் வண்ணம் சொன்னான்..

“சரவணனின் மாமா பெண்கள் வந்திருக்கிறார்கள்.. கஸ்தூரி..”

“என்னது..?”

அவர்கள் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் போதே.. இங்கே நிம்மதி இழந்து தவித்தாள் கஸ்தூரி.. இன்று அவர்கள் இங்கேயே வந்துவிட்டார்கள் என்பதை அறிந்ததும் பதறிப் போய்விட்டாள்..

“ஆமாம் கஸ்தூரி.. ஊரே சிரிப்பாய் சிரிக்குது..”

‘அவர்கள் வந்தால் ஊர் எதற்கு சிரிக்க வேண்டும்..? வந்தவர்கள் எதுவும் ‘காமெடி ஷோ’ நடத்துகிறார்களா என்ன..?’ என்றுதான் அறிவுள்ள பெண் யோசித்து கேள்வி கேட்டிருக்க வேண்டும்..

ஆனால்.. காதல் என்று வந்துவிட்டால், எத்தனை அறிவான பெண்ணும்.. ஆணும் முட்டாள் ஆகிவிடுவார்கள்.. இதில் அறிவைக் கடன் கொடுத்துவிட்டு.. அறியாமையை சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் கஸ்தூரி எப்படி இப்படி யோசிப்பாள்..?

அவள் மலங்க மலங்க விழித்தபடி அத்தை மகனின் முகத்தைப் பார்த்தாள்.. அவளது பதற்றம் கண்ட துரைசிங்கம் அதிக திருப்தி அடைந்தான்..

கொளுத்திப் போட்ட வெடிகள் வெடித்துக்கொண்டு இருக்கும் போதே, அணு குண்டுகளை அள்ளி அவள் முன்னால் போட ஆரம்பித்தான்..

“கஸ்தூரி.. சரவணன் படித்தவன்தானே..?”

“அதிலென்ன உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் மாமா..?”

“சந்தேகம் வராதா..? அறிவுள்ளவன் செய்கிற காரியங்களையா அவன் செய்து கொண்டிருக்கிறான்..? 

ஊர் பேசுவதை என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.. சேச்சே..”

“அப்படி அவர் என்ன செய்துவிட்டார் மாமா..?”

“அவனுக்குன்னு கார் இருக்குதா.. இல்லையா..?”

“இருக்குது…”

“இவன் காரை வீட்டில் நிறுத்திவிட்டு.. மோட்டார் பைக்கில்.. மாமன் மகள்களை.. காலையில் ஒருத்தி.. மதியம் மற்றொருத்தி.. மாலையில் இன்னொருத்தின்னு பின்னால் உட்கார வைத்துச் சுற்றினால்.. இந்த ஊரார் காறித்துப்புவார்களா.. மாட்டார்களா..?”

அன்று சரவணனின் காரில், கதிரேசனும்.. ராஜலட்சுமியும் ஏறி.. அருகில் இருந்த கிராமத்தில் வசித்து வரும் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றிருந்தார்கள்..

சரவணன் அவனுடைய திருமணம் நிச்சயம் ஆகியிருந்த மாமன் மகளுக்கு தன் ஊர் கோயிலைக் காட்டுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றிருந்தான்..

அதை கஸ்தூரி பார்த்துவிட வேண்டும் என்பதற்காக கதையைக் கட்டி.. அவளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான் துரைசிங்கம்..

“நீங்கள் சொல்வது நிஜமா மாமா..?”

“பின்னே.. நானென்ன பொய்யா சொல்கிறேன்..? இப்போது கூட அவனது மூன்றாவது மாமா பெண் ஒருத்தியை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு நம் ஊர் கோயிலுக்குப் போயிருக்கிறான்.. அவள் பெயர் கூட என்னவோ.. வாயில் நுழையாத கண்றாவிப் பெயர்.. ‘சாசாவோ..’ இல்லை ‘சீசாவோ..'”

‘ஷாஷா..’ என்ற பெயரைக் கேட்டால் கஸ்தூரிக்கு ஆகாது என்பதை அறிந்துகொண்டே அவன் நடித்தான்..

“அது ஷாஷா மாமா..”

“என்னவோ ஒன்னு… இப்படிக்கூடப் பெயர் வைப்பார்களா கஸ்தூரி..? இப்போது உன் அம்மாவின் பெயரைப் பார்… காயத்ரி… மந்திரம் போன்றது.. கையெடுத்துக் கும்பிடலாம்… உன் பெயர் கஸ்தூரி.. உன் கையைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.. அதை விட்டுவிட்டு.. ஷாச்சாவாம் ஷாச்சா..”

துரைசிங்கம் முகத்தை அஷ்ட கோணலாய் சுளித்தான்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link