Chapter 08

0Shares

கஸ்தூரியின் முகம் துரைசிங்கத்தின் வார்த்தை களைக் கேட்டதும் கனிந்துவிட்டது.. அத்தையின் மகனை என்று மில்லாத அன்புடன் இன்று அவள் பார்த்தாள்..

“அது என்னவோ.. அவங்க அப்படித்தான் பெயர் வைப்பாங்களாம்..”

“ஆமாம்.. பெரிதாய் பெயர் வைத்து விட்டார்கள்.. கழுதைக்குப் பெயர் பட்டத்து இளவரசின்னு.. அதுவெல்லாம் ஒரு பெயரா..? அது கிடக்கு கழுதை.. அதை விடு..! நான் சொல்ல வந்ததே வேறு..”

“என்ன மாமா..?”

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சரவணன் விரும்பியதில் அவனோட ஆத்தாக்காரிக்கு இஷ்ட மில்லையாம்..”

“ஐயைய்யோ.. நிச்சயதார்த்தம்தான் முடிந்து விட்டதே..”

“அதனால் என்னன்னு.. அந்தம்மா கேட்டுதாம்.. பரிசம்போட்ட கல்யாணமெல்லாம் மணவறைக்கு வந்தே தீரணும்னு எந்த ஊரில் சட்டம் போட்டிருக்குதுன்னு வியாக்கியானமாய் பேசுதாம்..”

“அத்தையைப் பார்த்தால் அப்படித் தெரிய வில்லையே மாமா..”

“பாவம்.. நீ அறியாத பெண்..! வெளுத்தது எல்லாம் பால்ன்னு நினைக்கும் வெகுளி, உனக்கு எப்படியம்மா பச்சோந்திகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்..?”

“என்ன மாமா.. என்ன என்னவோ சொல்றீங்க..”

“முழுதாய் இன்னும் சொல்லவில்லையேம்மா.. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன்.. இன்னும் நிறைய இருக்கிறதே..”

“இன்னுமா..”

திகிலாய் கேட்ட மாமன் மகளை இரக்கமில்லாமல் பார்த்தான் துரைசிங்கம்..

“ஆமாம் கஸ்தூரி.. உன் மாமா பெண்டாட்டி சபதமே போட்டிருக்காம்..”

“என்னன்னு..?”

“என் ஒரே மகனுக்கு கல்யாணம் கட்டினால், என் அண்ணன் மகள்களில் ஒருத்தியைத்தான் கட்டுவேன்னு தான்..”

“நிஜமாவா..?”

“ம்.. அதனால்தான்.. மூன்று அண்ணன் மகள்களையும் மொத்தமாய் தன் வீட்டுக்கு வரவழைச்சு.. மகன் கூடப் பழகவிடுதாம்..”

“இப்படிக்கூட செய்வாங்களா மாமா..?”

“இது பொல்லாத உலகம் கஸ்தூரி.. எப்படியும் செய்வார்கள்..”

“அத்தான் மனம் மாறுவாரா..?”

“மாறாமலா நேரத்துக்கு ஒருத்தியுடன் ஊரைச் சுற்றுகிறான்..?”

“எனக்குப் பயமாய் இருக்குதே மாமா..”

“எனக்கும்தான் பயமாய் இருக்குது கஸ்தூரி… இந்த ‘ஷாஷே’ இருக்கிறாளே.. அவள் ஒரு மயக்கும் மோகினியாம்.. சரவணன் இருக்கிறானே.. இவனுக்கு அவள் மேல் அதிக மயக்கமாம்.. மற்றவர்களைவிட அவள் பின்னால்தான் அதிகம் சுற்றுகிறானாம்.. அவளைப் பார்த்து அவன் விடுகிற ஜொள்ளில், இந்த ஊரையே கழுவி விட்டுவிடலாமாம்.. இப்போது அவங்க இரண்டு பேரும் கோயிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டு.. கொஞ்சி பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்..”

“கோயிலிலா…?” கஸ்தூரியின் மனம் தவித்தது..

‘அது அவனுக்கும்.. அவளுக்குமான உரிமைப்பட்ட சந்திக்கும் இடமல்லவா..? அங்கே போய் அவன்.. அவளை விட்டுவிட்டு வேறு ஒருத்தியுடன் நேசம் பாராட்டிப் பேசுவதா..?’

கஸ்தூரி பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தாள்.. வேகமாக வெளியே கிளம்பினாள்.. துரைசிங்கம் அவளைத் தடுத்து நிறுத்துகிறேன் பேர்வழியென்று.. முதல் முறையாக அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.. அவளது மனமெல்லாம் சரவணனிடத்தில் இருக்க.. துரைசிங்கத்தின் தொடுகையை உணராதவளாய் அவள் நின்றாள்..

“விடுங்க மாமா.. நான் போகணும்..”

“எங்கே..?”

“கோயிலுக்கு..”

“அங்கே போனால் இன்னும் வீணாய் உன் மனம் கஷ்டப்படும்.. வேண்டாம்..”

“அப்படி இருக்க என்னால் முடியாது..”

“நீ நடந்து போவதற்குள் அவர்கள் போய்விடு வார்களே..!”

“ம்.. ஆமாம் மாமா.. இப்போது நான் என்ன செய்றது..?”

“கட்டாயம் போய்த்தான் ஆக வேண்டுமா..?”

“என் வாழ்க்கையே.. நான் இப்போது அங்கு போவதில்தான் இருக்கிறது..”

‘உன் வாழ்வு மட்டுமில்லையடி மாமன் மகளே.. என் வாழ்வும் நீ இப்போது அங்கு போவதில்தான் அடங்கி இருக்கிறது..’ துரைசிங்கம் மனதிற்குள் வெற்றி முரசு கொட்டிக்கொண்டான்..

“ஒன்று செய்யலாமா..?”

“என்ன மாமா..?”

“என் சைக்கிளில் உன்னைக் கூட்டிட்டுப் போகவா..?”

“உங்கள் சைக்கிளில் ‘கேரியர்’ இல்லையே..!”

கஸ்தூரி தயங்கினாள்.. துரைசிங்கம் அவளுக்காகத் தானே கேரியரையே கழட்டி வீட்டில் போட்டான்..!

“அதனால் என்னம்மா.. நீ முன் பக்கம் உட்கார்ந்து கொள்..”

“வேண்டாம் மாமா.. நான் வேண்டுமானால் உங்கள் சைக்கிளை எடுத்துக்கிட்டு கோயிலுக்கு போய்விட்டு வரவா..?”

கஸ்தூரி கல்லூரிப் படிப்பை முடித்ததும், கேட்பார் இல்லாமல் மூலையில் கிடந்த அவளது சைக்கிளை பண்ணை வேலையாளின் மகளின் படிப்புக்கு உதவியாக இருக்கட்டும் என்று மகnஷ்வரன் கொடுத்துவிட்டார்..

சைக்கிள் ஓட்டுவதில் அனுபவம் உள்ள கஸ்தூரி இப்படிக் கேட்டதும் துரைசிங்கம் எரிச்சல் அடைந்தான்..

‘காரியத்தையே கெடுக்கிறாளே..!’

“இல்லை கஸ்துரி, இந்த நிலைமையில் உன்னைத் தனியாக நான் அனுப்ப மாட்டேன்.. என் மாமனுக்கு யார் பதில் சொல்வது..?”

கஸ்தூரி செய்வது அறியாதவளாய் திகைத்து நின்றாள்..

“சரி விடு.. அவர்கள் எப்படிப் போனால் உனக்கென்ன..? நீ கதவைப் பூட்டிக்கிட்டு, பத்திரமாய் வீட்டில் இரு.. நான் கிளம்புகிறேன்..”

அவன் கிளம்பப் போவது போல் பாவனை செய்ய.. கஸ்தூரி பதற்றத்துடன் அருகே வந்தாள்..

“இருங்க மாமா.. நானும் வர்றேன்..”

கதவைக்கூட பூட்டாமல், ஆவேசம் கொண்டவளாய் துரைசிங்கத்தின் சைக்கிளில் முன் பக்கம் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. அவளை அப்படியே கட்டி அணைத்து.. அவளது பின் கழுத்தில் முகம் உராய.. சைக்கிளை மிதித்த துரைசிங்கம் சொர்க்கத்துக்கே போய்விட்டான்..

‘இதுக்குத்தாண்டி.. நான் இத்தனை நாளும் காத்திருந்தேன்..’

கிறங்கிக் போனவனாய் கோயில் வாசலில் அவன் சைக்கிளை நிறுத்த.. அங்கே நின்று கொண்டிருந்த சரவணனின் பள்ளித் தோழன் சாரதி ஆச்சரியமாக பார்த்தான்..

‘இந்தப் பொறுக்கி.. இப்படி உரசிக் கொண்டு வர.. கஸ்தூரி இவனுடன் சைக்கிளில் உட்கார்ந்து வருகிறாளே..?’

அவனைக் கவனியாதவளாய் கஸ்தூரி.. துள்ளிக் குதித்து இறங்கி புள்ளி மான் போல் கோயிலுக்குள் ஓடிவிட்டாள்..

வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சாரதியை முறைத்தான் துரைசிங்கம்..

“ஏண்டா.. இப்படிப் பார்க்கிற..? அது என் முறைப் பெண்.. நினைப்பில் இருக்கட்டும்.. இப்படிப் பார்க்கிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. கன்னத்தை பெயர்த்து விடுவேன்.. ஜாக்கிரதை..”

“சரவணன் கட்டிக்கப் போகிற பெண்.. உன் கூட சைக்கிளில் வந்து இறங்குதேன்னு பார்த்தால் நீ வில்லங்கமாய் பேசுகிறாயே.. வேண்டாம் துரைசிங்கம்.. என்னிடம் வீணாய் மோதாதே.. நீ என் கன்னத்தைப் பெயர்க்க.. நான் கன்னத்தைக் காட்டிக்கொண்டு நிற்பேனாக்கும்..?”

“என்னது.. அவள் சரவணன் கட்டிக்கப் போற பெண்ணா..? கனவு காண வேணாம்னு நான் சொன்னேன்னு அவன்கிட்டப் போய் சொல்லு..”

“எனக்கு இதுதான் வேலையா..? ஏன்.. அவன் கோயிலுக்குள்ளேதான் இருக்கிறான்.. நீயே போய் சொல்ல வேண்டியதுதானே..?”

“சொல்வேண்டா.. அவன்கிட்ட கட்டாயம் சொல்வேன்..”

“சொல்லு.. சொல்லு..”

‘இந்த முரடன் என்ன வினையை இழுக்கக் காத்திருக் கிறானோ..?’ என்ற கவலையுடன் சாரதி.. கோயில் வாசலில் தள்ளிப் போய் நின்று யோசிக்க ஆரம்பித்தான்..

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் கஸ்தூரி கோயிலுக்குள் நுழைந்தாள்.. அவர்கள் வழக்கமாக உட்காரும் மண்டபத்தில் சரவணன் ஒரு தூண் மேல் சாய்ந்து உட்கார்ந்திருக்க.. சற்று தள்ளி நின்றிருந்த நவநாகரிமான அழகிய பெண் ஒருத்தி தன் செல்போன் கேமராவில் கோயிலில் இருந்த சிற்பங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்..

மூச்சு வாங்க வந்த கஸ்தூரியை வியப்புடன் பார்த்தான் சரவணன்..

“ஏன் இப்படி ஓடி வருகிற…?”

“ம்.. உங்கள் வண்டவாளத்தை எல்லாம் தண்ட வாளத்தில் ஏற்றத்தான்..”

அவளது பதில் கேட்டு, சரவணனின் முகம் சுருங்கியது.. தூரத்தில் நகர்ந்துவிட்ட ‘ஷாஷா’ வை நிம்மதியுடன் பார்த்தான் அவன்..

‘நல்லவேளை.. இவள் இப்படி தரக்குறைவாய் பேசுவதை அவள் கேட்கவில்லை.. பிழைத்தேன்..’

“என்னடி.. பேச்செல்லாம் ஒரு தினுசாய் இருக்கிறது..?”

“நீங்கள்தான் தினுசு… தினுசாய் பார்க்க அலைகிறீங்க..?”

‘இதை விடவும் கேவலமாய் பேசிவிட முடியுமா..?’

சரவணனின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது..

“மரியாதையாய் பேசு.. யாரிடம் பேசுகிறாய்ங்கிற நினைவு இருக்கிறதா.. இல்லையா..?”

“ஏன் இல்லை… மாட்சிமைப் பொருந்திய ராஜலட்சுமியின் மகனிடம்தானே பேசிக்கொண்டு இருக்கிறேன்..”

“அடிக் கழுதை.. என் அம்மாவையா பெயர் சொல்கிறாய்..”

சரவணன் ஆத்திரத்துடன் எழுந்துவிட்டான்.. அவளோ சண்டைக் கோழியாய் மாறி அவனை முறைத்தாள்.. அவன் முகம் உக்கிரமாய் மாறி இருந்தது..

‘அப்பாவின்னு பொறுத்துப் போனால்.. தேளாய் கொட்டுகிறாளே..?’

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link