Chapter 09

0Shares

சரவணன் தன் பொறுமையை கைவிட்டான்.. பெயர் சொல்லி அழைத்ததில், அவன் குற்றம் காணவில்லை.. அதை அவள் கூறிய விதம்தான் கொதிக்க வைத்து விட்டது..

அவனை நேசிப்பவள்.. அவனைப் பெற்ற தாயை மதிக்க வேண்டாமா..? மகன் விரும்பியதற்கு மறுப்புச் சொல்லாமல்.. கணவனிடம் வாதாடி.. தன் அண்ணன் மகள்களை விட்டுவிட்டு.. நாத்தனார் மகளை.. தன் மகனுக்கு திருமணம் பேசி முடிக்கச் செய்தவளை.. பேசும் முறையா இது..? தனக்கு மனைவியாகப் போகிறவள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டாமா..? என்ற கோபம் பொங்கி எழ.. அவன் நிதானத்தை கைவிட்டான்..

“யார் அவள்..?”

தொலைவில் படம் எடுத்துக்கொண்டிருந்த ஷாஷாவைக் காட்டி அவள் கேட்கவும்.. அவனுக்கு இன்னும் கோபம் கூடியது..

“ஏன்.. மரியாதையாய் பேசமாட்டாயா..?”

“ஓஹோ.. அவளுடைய மரியாதையில் உங்களுக்கு அவ்வளவு அக்கறையோ..?”

அவனுடைய மாமன் மகள்.. வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி.. அவளுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது.. அவனுக்கு மனைவியாகப் போகும் கஸ்தூரியின் கடமை ஆயிற்றே என்ற சிந்தனையில் இருந்தவன்..

“ஆமாம்..”  என்றான்..

“ஆமாம்னு சொல்றீங்களா..?”

“அட.. ஆமாண்டி..! நீ என்ன செவிடா..? நான் சொன்னது உன் காதில் விழலையா..? ஆளையும்.. மூஞ்சியையும் பார்.. பேசத் தெரிந்தால் பேசு.. இல்லா விட்டால் இடத்தைக் காலி பண்ணு..”

“என்னையா போகச் சொல்கிறீங்க…?”

“உன்னைத்தான் போகச் சொல்கிறேன்..”

“என்னைவிட அவள் முக்கியமாகப் போய் விட்டாளா..?”

“அவள் முக்கியமானவள்தான்டி..”

“அவள்தானே ஷாஷா..?”

“ஆமாம்.. இப்ப என்ன அதுக்கு..?”

“அவள் கல்யாணம் பண்ணிக்கொள்வாளாமே..?”

சில நேரங்களில் சிலர் பேசும் லட்சணம்.. வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.. கஸ்தூரியும் அப்படித்தான் பேசி வைத்துத் தொலைத்தாள்..

சும்மாவே அவளுக்கு உருப்படியாய் பேச வராது.. இன்று காதலித்தவன் கைநழுவிவிடுவானோ என்ற பயத்துடன் வாய்க்கு வந்ததைக் கேட்டு வைத்தாள்..

சரவணனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது..

“ஏண்டி.. நீயென்ன பச்சைக் குழந்தையா..? அவளுக்கு கல்யாண வயதுதானே..! கல்யாணம் 

பண்ணிக் கொள்ளாமல் வேறு என்ன செய்வாள்..? கொஞ்சம் கூட விவரமாகப் பேசக்கூடாதுன்னு விரதமே கடைபிடிக்கிறாயோ..?”

“ஓஹோ.. அந்த அளவுக்கு போய்விட்டதா..?”

“எந்த அளவுக்கு..?”

“அவள் கல்யாணம் பண்ணிக்கொள்வாளா..? எப்படி பண்ணிக் கொள்வாள்..? அதையும் நான் பார்க்கிறேன்..”

‘இவளுக்கு என்ன பித்துப் பிடித்துவிட்டதா..?’ என்ற கவலையே சரவணனுக்கு வந்துவிட்டது..

‘ஷாஷாவுக்கு கல்யாணமானால் இவளுக்கென்ன வந்தது..? ஒரு வேளை… அவள் மேல் இருக்கும் வெறுப்பால், அவள் நன்றாக வாழ்ந்துவிடக் கூடாதுன்னு நினைக்கிறாளா..?’

இந்தச் சந்தேகம் மனதிற்குள் முளைவிட்டதும், அவனுக்குள் கண்டிப்பு தோன்றியது..

‘சரவணனின் மனைவியாகப் போகிறவளுக்கு, இப்படிப் பட்ட அல்பத்தனமான சிந்தனைகளே வரக்கூடாதே..’

“ஏய்ய்.. திமிராடி உனக்கு..? அவளைப் பற்றி இனி ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது..”

“ஏன் பேசக்கூடாது..?”

“நீ யாருடி அவளைப் பற்றிப் பேச..?”

“என்னது..! நான் யாரா..? நான் யாரோதானா..?”

“ஆமாம்டி.. நீ யாரோதான்..”

“எனக்கு இதைப் பேச உரிமை இல்லையா..?”

“அடடா.. உனக்கு என்னடி உரிமை இருக்கிறது..? உரிமை இல்லை.. இல்லை.. இல்லை..! போதுமா.. வாயை மூடிக்கொண்டு போ..” 

“அப்போ.. நீங்கள் உங்கள் அம்மா சொன்னபடிதான் கேட்பீங்களா..?”

“ஆமாம்டி.. என் அம்மாதான் என் தெய்வம்..”

“நான் உங்களுக்கு முக்கியமில்லை..?”

“தாய்க்கு பின்தான் நீ..” இவர்கள் இருவரும் இந்த மார்க்கமாய் பேசிக்கொள்வதை வழக்கம் போல தூண் மறைவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த துரைசிங்கத்திற்கு சிரிப்பு வந்துவிட்டது..

‘கேப்பையில் நெய் வடிகிறதுன்னா.. கேட்கிற வனுக்குமா புத்தி இல்லாமல் போகும்..? கஸ்தூரி கேட்பது என்னவென்று புரியாமலே தாயை விட்டுக் கொடுக்காத மகனாய்.. அதே நேரம்.. கஸ்தூரியை தன் தாரமென்றும் மறைபொருளாய் உணர்த்தும் விதத்தில் இவன் பேசுகிறானே..! ‘தாய்க்குப் பின்னால் தாரம் நீதானேடி..’ன்று ஒற்றை வார்த்தையைச் சொல்லி இவளை மடக்கிப் போடுவதை விட்டுவிட்டு.. ஜாடையாய் சொல்கிறானாம்.. இந்த மக்கு கஸ்தூரிக்கு நேரடியாய் சொன்னாலே எதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் புரியாது.. ‘டியூப் லைட்’ டிலும்.. இவள் ‘பியூஸ்’ போன ‘டியூப் லைட்’ இவள்தானா இவன் சொல்வதைப் புரிந்துகொண்டு மலை இறங்கப் போகிறாள்..?’

கஸ்தூரியின் ஆவேசம் அதிகமாகிக்கொண்டே இருந்தது..

‘எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால்.. இவன் அம்மாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அந்த ஷாஷாவை கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவு செய்திருப்பான்..’

“இதுதான் உங்கள் முடிவா..?”

“அட.. ஆமாண்டி..”

“அப்போ.. அந்த ஷாஷாவிற்கு கல்யாணம் நடக்கும்..?”

“ஆமாம் நடக்கும்..”

“அவள் வாழ்வாள்.. நான் அதைப் பார்த்து வயிறு எரிய வேண்டும்.. நீங்களும், உங்கள் அம்மாவும் மட்டும் சந்தோஷப்பட வேண்டும்.. அப்படித்தானே..?”

“அவள் வாழ்க்கையை அவள் வாழ்ந்தால் நீ ஏண்டி வயிறு எரிய வேண்டும்..? சீச்சீ.. இவ்வளவு சின்னப் புத்தியா உனக்கு..?”

“எனக்கா சின்னப் புத்தி..?”

“உனக்குத்தான் சின்னப் புத்தி.. வேறு யாருக்கு நம் குடும்பத்தில் இப்படிப்பட்ட புத்தி வரும்..? என் அத்தை நல்லவங்களாச்சே.. அவங்க பெத்த மகளா நீ.. எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..”

கஸ்தூரியின் பொறாமைக் குணம் தனக்குப் பிடிக்க வில்லை என்று சரவணன் கூற.. தன்னையே பிடிக்க வில்லை என அவன் சொல்லிவிட்டதாக நினைத்தாள் கஸ்தூரி..

“நீங்கள்தானா இப்படிப் பேசுவது..?”

“நான்தாண்டி.. அதிலும் உனக்கு சந்தேகமா..?”

கஸ்தூரியின் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் இறங்கவும், அவன் சங்கடப்பட்டுப் போனான்..

‘இவளுக்கு இதுவே வழக்கமாகிப் போய்விட்டது..’

கஸ்தூரியைச் சமாதானப்படுத்த அவன் முனைந்தான்.. அதை உணராத கஸ்தூரி.. கண்ணீரும், கம்பலையுமாக கேட்டாள்..

“அப்படி.. அவள் என்ன.. என்னைவிட உயர்வானவளா..?”

சரவணனுக்கு அப்போதுதான் அவளது, கேள்வி போகும் போக்கு புரிந்தது.. ‘இவளை மரமண்டைன்னு நினைத்துக் கொண்டு, நான் இவளது பொறாமையை உணராத மரமண்டையாய் இருக்கிறேனே..?’ என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“ஹாய் சரண்.. என்ன சிரிக்கிறீங்க..?”

படங்களை எடுத்து முடித்துவிட்டு அவர்களுக்கு அருகில் வந்து நின்ற ஷாஷா கேட்டாள்..

“ஷாஷ்.. இவள்தான் கஸ்தூரி..”

சரவணன் பெருமையாய் காட்டினான்.. தன் அத்தை மகன்.. இரவும், பகலும் நினைத்து உருகும் கனவு தேவதை இவள்தானா என்று வியப்புடன் பார்த்தாள் ஷாஷா..

‘வாவ்..’ என்று மனதிற்குள் வியந்துகொண்டாள்..

‘எப்பேர்ப்பட்ட பேரழகு..’ அவளது விழிகளில் தெரிந்த பாராட்டைப் பெருமையுடன் பார்த்தபடி சரவணன் நிற்க.. அவர்கள் இருவரும் தன் முன்னாலேயே காதல் பார்வை பார்த்துக்கொள்வதாக நினைத்து துடித்துப் போனாள் கஸ்தூரி..

“இவள்தான் கஸ்தூரியா..?”

“ஆமாம்.. இவள் என்ன கேட்கிறாள் தெரியுமா..?”

“என்ன கேட்கிறாள்..?”

“அவளைவிட நீ உயர்வான்னு கேட்கிறாள்..?”

“ஓ.. அப்படியா..?”

கஸ்தூரியிடம் சென்று நின்ற ஷாஷா, சரவணனைப் பார்த்துக் கேட்டாள்..

“சரண்.. நன்றாகப் பார்த்துச் சொல்லுங்க.. எங்க ரெண்டு பேரில் யார் உயர்த்தி..?”

கேட்ட ஷாஷா.. கண்ணீர் தளும்ப நின்று கொண்டிருந்த கஸ்தூரியைவிட உயரமாக இருந்தாள்..

அவள் குறும்பாக கண்சிமிட்டுவதைப் புரிந்து கொண்ட சரவணன், தானும் அவளது குறும்பில் பங்கெடுத்தான்..

“இதைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டுமா..? கண்ணை மூடிக் கொண்டு சொல்வேனே.. நீதான் உயர்த்தி..”

அவ்வளவுதான்.. அதுவரை அடங்கி இருந்த அழுகை பொத்துக் கொண்டு வர.. ‘கோ’ வென்று கதறி அழுதபடி கஸ்தூரி வெளியே ஓடினாள்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link