Chapter 10
கஸ்தூரி அழுதுகொண்டே வெளியே ஓடியதும், ஷாஷா திகைத்து விட்டாள்..
“வாட் இஸ் திஸ் சரண்..?”
“ஷி இஸ் சைல்டிஷ்.. நான் போய் சமாதானப் படுத்திட்டு வர்றேன் ஷாஷா.. கொஞ்சம் ‘வெயிட்’ பண்ணுறியா..?”
“நோ பிராப்ளம்.. டேக் யுவர் ஓன் டைம்.. ஆனா, இவள் ஏன் இப்படி இருக்கிறாள்..?”
“அவள் என் விசயத்தில் ரொம்பவும் அதிக உரிமையா இருப்பா..”
“யூ ஆர் லக்கி.. சரண்..”
“ஆமாம்.. ஆமாம்..”
தன் அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டே சரவணன், கோயிலைவிட்டு வெளியே சென்றான்..
அவன் ஷாஷாவுடன் பேச்சை முடித்துவிட்டு தாமதமாக வருவதற்குள்.. துரைசிங்கம் தாவிப் போய்.. கஸ்தூரியை வழி மறித்துக் கொண்டான்..
“ஏன் அழுதுகொண்டு வருகிறாய்கஸ்தூரி..? கோயிலுக்குள் என்னதான் நடந்தது..? அடடா.. நானும் உன்னுடன் கோயிலுக்குள் வராமல் போய்விட்டேனே..! நீ
சரவணனுடன் பேசும்போது குறுக்கிடக் கூடாதுன்னு நினைச்சு.. உனக்காக இங்கேயே காத்திருந்ததுதான் தப்பாகி விட்டது.. நானும் கோயிலுக்குள் வந்திருக்க வேண்டும்.. வந்து அவனை இரண்டில் ஒன்று கேட்டிருக்க வேண்டும்.. நீ அழாதேம்மா.. உன் அருமை பெருமை அந்த மடையனுக்குத் தெரியவில்லை..”
துரைசிங்கம் பேசிக்கொண்டே மரத்தின் மேல் சாய்ந்து அழுது கொண்டிருந்த கஸ்தூரியின் அருகே நெருங்கி நின்று கொண்டான்..
சற்றுத் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள்.. துரைசிங்கத்தின் மார்பின் மேல் சாய்ந்து நின்று அழுவது போல் தோன்றும்..
சில கோணங்களில்.. சில காட்சிகள்.. பார்ப் பவர்களுக்கு தவறாக தோன்றிவிடுவது இப்படித்தான்..!
துரைசிங்கம் கையாண்ட யுக்தி பலித்தேவிட்டது..
கோயிலில் இருந்து வெளிப்பட்ட சரவணன்.. கஸ்தூரி, துரைசிங்கத்தின் மார்பில் சாய்ந்து அழுது கொண்டிருந்தது போன்ற காட்சியைக் கண்டு அதிர்ந்து விட்டான்..
போதாத குறைக்கு.. சரவணன் பார்ப்பதைக் கவனித்துக் கொண்டே “அழாதேம்மா.. அழாதே..” என்று ஆறுதல்.. கூறிய வண்ணம் அவளது கண்ணீரை துடைத்து விடவும் செய்தான் துரைசிங்கம்..
“நீங்கள் சொன்னது உண்மைதான் மாமா..?”
“தெரிந்து கொண்டாய் இல்லையா..? இதுதான் இந்த மனிதர்களின் உண்மையான நிறம்.. வெளித் தோற்றத்தை வைத்து அவனை நல்லவன் என்று நம்பிவிட்டாயேம்மா..”
“போதும் மாமா.. எனக்குத் தாங்கவில்லை..! நாம் வீட்டுக்குப் போய்விடலாம்..” கஸ்தூரி தேம்பியவாறு கூற..
“அதுவும் சரிதான்..! கோயிலுக்கு வருகிறவர்களும், போகிறவர்களும் நம்மையே பார்க்கிறார்கள் பார்..” என்றபடி துரைசிங்கம், சைக்கிளில் ஏற்றுக்கொண்டான்..
மனம் ஒடிந்து போயிருந்த கஸ்தூரி.. சரவணன் தொடர்ந்து வந்ததைக் கவனிக்கவில்லை.. இயந்திரம் போல் சைக்கிளில் ஏறி, முன் பக்க கம்பியில் அமர்ந்து கொண்டாள்.. துரைசிங்கம் இரு பக்க தோள்களைத் தழுவியவாறு, அவளை அணைத்துப் பிடித்தபடி சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான்..
போகும்போது திரும்பி.. சரவணனின் பக்கம் ஒரு வெற்றிப் பார்வையை வீசுவும் அவன் மறக்கவில்லை..!
சரவணன் தன் கண்களைத் தானே நம்ப முடியாத வனாக திக் பிரம்மை பிடித்துப் போய் நின்றுவிட்டான்..
“சரவணா..” அவன் பின்னால் இருந்து ஒரு குரல் அழைத்தது.. திரும்பிப் பார்த்தான்.. சாரதி நின்றிருந்தான்..
“என்ன சாரதி..?”
“உன்னைக் கட்டிக்கொள்ளப் போகிற பெண்ணோடு இப்படித்தான் சைக்கிளில் வந்து இறங்கினான் அந்த துரைசிங்கம்…”
“வரும்போதும் இப்படித்தான் உட்கார்ந்து வந்தாளா..?”
“ஆமாம்ப்பா..! நான் என்னடா.. இது நம்ம சரவணன் பரிசம் போட்டிருக்கிற பெண்ணாச்சேன்னு பார்த்தேன்.. அதுக்கு அவன் என் முறைப் பொண்ணை ஏண்டா பார்க்கிறேன்னு சண்டைக்கு வந்தான்..”
“அவனுக்கு முறைப் பெண்ணா..?”
“அட ஆமாம்ப்பா.. அவன் அப்படித்தான் சொன்னான்.. நான் இது சரவணன் கட்டிக்க போற பொண்ணாச்சேன்னு சொன்னேன்.. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா..?”
“என்ன சொன்னான்..?”
“அப்படிக் கனவு காண வேணாம்னு உன்கிட்ட சொல்லச் சொல்கிறான்ப்பா..”
“அப்படியா..?”
“ம்..! சரவணா.. இவன் வில்லங்கம் பிடிச்சவன்.. கஸ்தூரிக்கு இவனும் முறைப் பையன்தானே..! பார்த்து இருப்பா..”
“அப்படி அவன் என்ன செய்துவிடுவான்..?”
“எதையும் செய்வான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் மரநிழலில் நடந்த கூத்தை நீ பார்த்துக்கொண்டு தானே இருந்தாய்..?”
“கஸ்தூரி விவரம் இல்லாத பொண்ணுடா சாரதி..”
“அது எனக்குத் தெரியும்.. ஊருக்குத் தெரியுமா..? எதற்கும் அவனிடம் தொட்டுப் பேசிப் பழக வேண்டாம்னு கஸ்தூரியிடம் எச்சரிக்கை பண்ணி வை..”
“சரிடா..”
சரவணன் யோசனையுடன் கோயிலுக்குள் போய் விட்டான்..
அங்கே.. வீட்டில் போய் இறங்கிய கஸ்தூரி.. இரண்டு நாள்கள் இடைவிடாமல் உட்கார்ந்து அழுது தீர்த்தாள்.. பெற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக அழுது கொண்டிருக்க.. அவள் முகம் வாடி இருப்பதைக் கண்ட மகேஷ்வரன் காரணம் கேட்டார்..
“ஏண்டி காயத்ரி..”
“என்னங்க..”
“கஸ்தூரி ஏன் சோர்ந்து தெரிகிறாள்..?”
“தலைவலியாம்..”
“தலைவலியா..?”
மகேஷ்வரனின் புருவம் சுருங்கியது.. திருமணம் ஆகப் போகும் பெண்ணிற்கு திடீரென்று.. இடைவிடாத தலைவலி வரக் காரணம் என்ன..?
‘ஒரு வேளை.. அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் பிடித்தமில்லையோ..? பிரிந்து நிற்கும் குடும்பங்கள் ஒன்று சேரட்டும்னு நினைச்சு என் குழந்தை தியாகம் பண்ணுகிறாளோ..?’
நினைத்ததை மனைவியிடம் பகிர்ந்துகொள்ள அவரால் முடியவில்லை.. மனதிற்குள் புதைத்துக்கொண்டு.. மகளைக் கண்காணிக்கலானார்..
இந்த நிலையில்.. ஒரு நாள் மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது.. காயத்ரி திடீரென்று வயிற்று வலியால் துடித்தாள்.. வயலுக்குப் போயிருந்த மகேஷ்வரனுக்கு செய்தி போகவும்.. அவர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்..
செவ்வந்தி செய்த கை வைத்தியத்துக்கு கட்டுப் படாமல், காயத்ரியின் வயிற்று வலி ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருக்க.. சரவணனுக்கு சொல்லிவிட்டார்கள்.. அவன் காரோடு வந்தான்.. செவ்வந்தியும், மகnஷ்வரனும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொள்ள காயத்ரி காரில் ஏற்றப் பட்டாள்..
கார் அருகில் இருந்த நகரத்திற்கு விரைந்தது..
சரவணன் வந்திருக்கும் செய்தி அறிந்து, கஸ்தூரி ஒடி வந்து பார்த்தும்-அவன்.. அவள் பக்கம் தன் பார்வையைத் திருப்பவே இல்லை.. முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளைப் பாராதது போல் போய்விட்டான்..
கஸ்தூரி இடிந்து போய்விட்டாள்.. கார் வெளியேறியதும், ஓடிச் சென்று பார்த்தாள்.. கார் போயே போய்விட்டது..
கட்டுப்படுத்த முடியாத அழுகையுடன் கீழே நின்றால் யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று.. தனிமையில் அழ மாடியேறிச் சென்றாள் அவள்..
மொட்டை மாடியில் மழை வலுத்துப் பெய்து.. வானத்தில் இருந்து ஊற்றாகக் கொட்டிக்கொண்டிருந்தது.. கஸ்தூரியின் கண்களிலும் நீர் பெருகி வழிந்தது..
தன் உணர்வில்லாமல் மழையைப் பார்த்த வண்ணம் மாடியில் இருந்த ஒற்றை அறையில் சாய்ந்து நின்று கொண்டு, கண்ணீர் வடித்த கஸ்தூரி திடீரென்று அந்தத் தொடுகையை உணர்ந்தாள்..
பின்னால் நின்றுகொண்டு அவளை இறுக்கி அணைத்து.. அவளது பின்னங்கழுத்தில் இதழ் பதித்தான் துரைசிங்கம்..
அதிர்ந்து விலகிய கஸ்தூரி..
“மாமா.. என்ன இது..?” என்று கேட்டாள்..
“நான் உன் மேல் என் உயிரையே வைத்திருக்கிறேன் கஸ்தூரி..”
“அதற்காக.. இப்படியா செய்வீர்கள்..? சீச்சீ.. தள்ளிப் போங்க…”
“ஏன் கஸ்தூரி.. நான் உன் மாமன்தானே..?”
“பேசாதீங்க..! அத்தையின் முகத்திற்காகப் பார்க்கிறேன்.. அப்பாவுக்கு மட்டும் இது தெரிந்தால், உங்களை கொன்றே விடுவார்.. என் முகத்தில் விழிக்காமல் போய்விடுங்கள்..”
“கஸ்தூரி..”
“இப்போதுதான் எனக்கு எல்லாம் புரிகிறது.. நீங்கள் வேண்டுமென்றே என்னிடம் என் அத்தானைப் பற்றித் தவறாய் பேசி இருக்கிறீர்கள்..?”
கஸ்தூரி இவ்வளவு சீக்கிரம் இதைப் புரிந்து கொள்வாள் என்பதை எதிர்பார்க்காத துரைசிங்கம் வெகுண்டான்..
ஒரு பெண் எத்தனை அப்பாவியாய் இருந்தாலும்.. பெண்மையைப் பொறுத்தவரையில் சிறு தவறான தொடுகையையும் இனம் கண்டுகொள்வாள் என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.