Chapter 12
“ஏன்.. என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்காதா..? அந்த துரைசிங்கத்தின் முகம்தான் பிடிக்குமா..?”
‘பேசுவது யார்..? இது.. இது.. சரவணனின் குரல் அல்லவா..? சரவணனா வந்திருக்கிறான்..?’
கஸ்தூரி பதறி நிமிர்ந்தாள்.. அவனது முகத்தைப் பார்க்கக் கூசியவளாய் சட்டென்று எழுந்து ஜன்னலோரம் போய்.. அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள்..
சரவணனின் புருவங்கள் முடிச்சிட்டன.. அவளது இந்த ஒதுக்கம் அவனை இன்னும் தாக்கியது.. முகம் இறுக.. அருகில் செல்லப் போனவன், உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றுவிட்டான்..
இருவரும் மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தனர்.. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியாத தவிப்புடன் மவுனமாய் நின்றிருந்தார்கள்..
மவுனம்.. பேச்சுக்களற்ற ஆழ்ந்த மவுனம்..
அவள் மனம் கவர்ந்தவன் அவள் இதழ்களை.. அவன் இதழ்களால் தொடும் முன்னரே.. ஒரு கயவனின் இதழ்கள் முத்தமிட்டுவிட்ட கொடுமையை ஜீரணிக்க முடியாமல்.. தன்னைத்தானே கொன்று கொண்டிருந்தது கஸ்தூரியின் மவுனம்..
சிரிப்பால், பேச்சால், பார்வையால், நாணத்தால், அனைத்து வகைகளிலும் அவன் நெஞ்சில் நிறைந்தவள் இன்று ஏன் விலகிப் போகிறாள்..? வெஞ்சினத்தால் கொதித்தது சரவணனின் இதயம்..
பெருமூச்சுடன் அறையைவிட்டு வெளியேறி விட்டான்.. அவனது காலடியோசைகள் தேய்ந்து மறைவதை மனம் கனக்கக் கேட்டுக் கொண்டிருந்தவள்.. அவனுக்கு முகம் காட்ட முடியாமல்.. ஜன்னலின் கம்பிகளில் முகத்தைக் தேய்த்து.. மவுனமாய் பொங்கி அழுதாள்..
அன்று இரவு.. கஸ்தூரி தனக்குப் பிடித்த நாவலில் வந்திருந்த அந்தக் கவிதையை ஒரு முறை படித்துப் பார்த்தாள்..
‘காத்திருத்தல் ஒரு வேள்வி..
தீயெனவே எனைத் தாக்கும்..
மவுனத்திலே கரையமைத்த..
உயிர் நதியோ ஊமையாகும்..’
அடுத்து வந்த நாள்களில் சரவணன் அவளுக்காக கோயிலில் காத்திருந்து.. திரும்பிச் சென்றான்.. அவள் வரவில்லை.. வீட்டிற்கு தேடிச் சென்றால்.. அவனது கண்களில் அவள் தென்படுவதே இல்லை..
ஆயிரம்தான் அத்தையின் மகளாக இருந்தாலும்.. பரிசம் போட்டுவிட்டாலும்.. காதலியாக இருந்தாலும்.. கல்யாணம் பண்ணிக் கொள்கிறவளிடம் நேரடியாக பேசவோ.. பழகவோ கிராமத்தில் அனுமதிக்க மாட்டார்கள்.. அது கலாசாரம்..
எனவே, எந்த வகையிலும் அவளைப் பார்க்க முடியாமல் சரவணன் தவித்தான்..
இனித் தாங்காது என்ற நிலை வந்தவுடன், தன் தகப்பனாரிடம் திருமண தேதியைக் குறிக்கும்படி சொல்லி விட்டான்..
மகேஷ்வரனின் வீட்டில், தேதி குறிப்பது பற்றிய பேச்சு எழுந்தது.. மனைவியுடன் அவர் கலந்து ஆலோசித்தார்..
“அடுத்து வருகிற முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்திடனும்னு மாப்பிள்ளை.. உங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டாராம்.. பத்தே நாளில் கல்யாணமாம்.. நீ என்ன சொல்ற காயத்ரி..”
“நான் சொல்ல இதில என்ன இருக்கு..? நம்ம மகளுக்கு இனிமேல்தான் நகை வாங்கப் போகிறோமா..? இல்லை, சீர் வாங்கப் போகிறோமா..? சேர்த்து வைத்த சீர், வீடு பூராவும் நிறைஞ்சிருக்கு, செஞ்சு வைச்ச நகை.. பீரோவை நிறைச்சிருக்கு.. அவங்க சொல்லுற நாளில் பொண்ணைக் கொண்டு போய் ஒப்படைக்கிறதுதானே பாக்கி.. சரின்னு சொல்லுங்க..”
“அப்படியா சொல்ற..?”
“ஆமாங்க.. பரிசம் போட்ட பின்னால.. நாளைக் கடத்தாம கல்யாணத்தைப் பண்ணிடணும்.. அதுதான் நம்ம நாட்டு வழக்கம்..?”
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட கஸ்தூரியின் மனதில் திகில் படர்ந்தது..
‘கல்யாணமா.. சரவணனுடனா..? எப்படி..! கூடல் இல்லாத கல்யாண வாழ்க்கை சாத்தியமில்லை.. முத்தமில்லாத கூடலும் சாத்தியமில்லை.. எனும்போது.. எப்படி அந்த நிகழ்வை மறந்து கூடலை எதிர்கொள்வது..?’
கஸ்தூரி, நினைவுகளைத் தாங்க முடியாது தவித்தாள்..
“அப்பா..” பதற்றத்துடன் அழைத்தாள்..
அவளது குரலில் மாற்றத்தையும்.. தடுமாற்றத்தையும் உணர்ந்த மகேஷ்வரனின் புருவங்கள் மேலேறின.. யோசனையுடன் மகளைப் பார்த்தார் அவர்..
“என்னம்மா..?”
“எனக்கு.. எனக்கு..”
“ஏன்ம்மா.. இவ்வளவு பயப்படுகிறாய்..? என்னிடம் சொல்ல உனக்கு என்ன பயம்..? எதுவாக இருந்தாலும் சொல்லு…”
‘எப்படிச் சொல்வேன்.. அம்மாவிடம் கூட என்னால் இதைச் சொல்ல முடியவில்லையே.. உங்களிடம் எப்படிச் சொல்வேன்..?’
கஸ்தூரி தாங்க முடியாமல் கதறி அழுதாள்.. மகேஷ்வரன் பதறிப் போய்விட்டார்.. காயத்ரி கலங்கிப் போனாள்… இருவரும் மாறி… மாறி… மகளிடம் விசாரித்தார்கள்..
பதில் சொல்லாமல் அழுது தீர்த்த கஸ்தூரி.. தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு.. முடிவாய் சொல்லி விட்டாள்.
“அப்பா.. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை..”
“கஸ்தூரி..” காயத்ரி அதிர்ந்துவிட்டாள்..
“என்னடி பேசுகிற..? ஊரறிய என் அண்ணன் பெண் கேட்டு வந்தபோது.. நான் உடனே சரின்னு சொன்னேனா..? உங்க அப்பாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு பேசாமல் தானே நின்றேன்..? உன் அப்பாவும் உடனே சரின்னு சொன்னாரா..? உன் விருப்பத்தைக் கேட்டுட்டுத்தானே சம்மதம் சொன்னார்..
இப்ப பரிசம் போட்ட கல்யாணத்தை நிறுத்தச் சொல் கிறாயே.. இது உனக்கே நல்லா இருக்கா..? இதுதான் நீ பெண்ணை வளர்த்து வச்சிருக்கும் லட்சணமான்னு
என் பிறந்த வீடும்.. இந்த ஊராரும் என்னைப் பார்த்து கேட்க மாட்டார்களா..? பெத்தவளுக்கு நல்ல பெயரைத் தேடித் தர துணிஞ்சிருக்கடி மகராசி, கல்யாணத்தை நிறுத்தனும்கிற பேச்சிற்கே இங்கேஇடமில்லை.. ஆமாம், சொல்லி விட்டேன்..?”
“காயத்ரி..”
மனைவியைக் கோபத்துடன் அதட்டினார் மகேஷ்வரன்..
“அவளை மிரட்டாதே.. நான் அதை அனுமதிக்க மாட்டேன்..”
“என் அண்ணன் குடும்பத்தை அவமானப்படுத்த நானும் அனுமதிக்க மாட்டேன்..”
“என் பேச்சுக்கு.. எதிர் பேச்சு பேசுறியா..?”
“ஏன்.. நான் பேசக்கூடாதா..? இந்த வீட்டில் அவரவர் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. அதற்கு உங்களுக்கும்.. உங்கள் மகளுக்கும் உரிமை இருக்கிறது.. ஆனால், ஏன்னு நான் கேட்டுவிட்டால்.. என்னை அடக்க வருகிறீங்க… எனக்குப் பேச உரிமை இல்லையா..? நான் என்ன இந்த வீட்டில் அடிமையா..?”
“உன்னை அடிமை போலத்தான் நான் நடத்தி வருகிறேனா..?”
“அப்படித்தான் நான் நினைக்கிறேன், வெண்ணெய் திரண்டு வரும்போது இவள் பாத்திரத்தை உடைப்பாளாம்.. நான் பார்த்துக்கொண்டு சும்மா நிற்க வேண்டுமாம்..
உங்க நியாயத்தை ஊரில் சொல்லிப் பாருங்க.. யாராவது கேட்கிறாங்களான்னு பார்ப்போம்..”
“யாரும் கேட்க வேண்டும்கிற அவசியம் இல்லைடி.. எனக்கு என் மகளின் விருப்பம்தான் முக்கியம்..”
“அப்படியெல்லாம் நீங்க மனம் போனது போல செய்துவிட முடியாது.. இது விளையாட்டுச் சமாசாரம் இல்லை..”
“எவ்வளவு பெரிய சமாசாரமாக இருந்தாலும், எனக்கு கவலை இல்லை.. கஸ்தூரிக்கு பிரியமில்லாத விசயத்தை நான் செய்ய மாட்டேன்..”
“என்கொரு சந்தேகம்..”
“என்னடி..?”
“இந்தக் கல்யாணம் நடப்பதில் உங்க மகளுக்கு மட்டும் பிரியம் இல்லையா.. இல்லை, உங்களுக்கே பிரியமில்லையா..?”
“காயத்ரி..?”
“கத்தாதீங்க..! உங்க மனசில் இருக்கிற கசடு தெரிஞ்சு போச்சு.. பொண்ணு கேட்டு என் அண்ணன் வந்த அன்றைக்கு.. என்னவோ இவ ஊருல இல்லாத பேரழகி போல பீற்றிக்கொண்டு பிகு பண்ணினீங்க.. இப்ப பரிசம் போட்ட பின்னால கல்யாணத்தை நிறுத்த திட்டம் போட்டு வேலை செய்கிறீங்க.. உங்களுக்கு என் அண்ணன் குடும்பத்தை அவமானப்படுத்தணும்.. அதற்காக பெத்த பெண்ணின் கல்யாணம் நின்று போனாலும் பரவாயில்லை. சிங்காரிச்சு மூக்கை அறுக்கிறதுக்காக காத்திருந்தீங்களா..? உங்க மனசில் இவ்வளவு பழி உணர்ச்சி இருக்கா..?
உங்களுடனா இத்தனை நாள் குடும்பம் நடத்தி.. பிள்ளையும் பெத்துக்கொண்டேன்..? நினைத்துப் பார்க்கவே எனக்கு நெஞ்சம் எரிகிறது..”
மகேஷ்வரனின் கண்களில் அனல் பறப்பதை வெறுப்புடன் பார்த்தாள் காயத்ரி.. இணைந்து நின்ற இருவரும், பலமாக மோதிக்கொண்டனர்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.