Chapter 13
இதுவரை மகnஷ்வரனுக்கும், காயத்ரிக்கும் சிறு பிணக்கு கூட வந்ததில்லை. பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு.
‘காதல் என்பது எது வரை..?
கல்யாண காலம் வரும் வரை..!’ என்று..
ஆனால், திருமணத்திற்குப் பின்னாலும் காதலுடன் வாழ்ந்த தம்பதிகள் அவர்கள்.. காயத்ரியின் புன்னகை என்றும் வாடியதே இல்லை.. மகேஷ்வரனின் கண்களில் இருந்த காதலும் என்றும் மாறியதே இல்லை..
இன்றோ.. இருவரும் எதிரும் புதிருமாய்.. கஸ்தூரி கலங்கிப் போனாள்..
‘என்னால்தானே இந்த நிலைமை..’ பூப்போன்ற அவளது மனம் துடித்தது.. கண்ணீர் விட்டு அழுதாள்..
“அம்மா.. கோபப்படாதீங்க.. அப்பா மேல தப்பில்லை..”
“ஏய்ய்.. பேசாதேடி துரோகி..”
“காயத்ரி.. அவளிடம் அப்படிப் பேசாதே.. அவள் நீ பெற்ற பெண்.. அதை மறந்துவிடாதே..”
“இவளை என் வயிற்றில் சுமந்து ஏன் பெற்றேன்னு இப்போதுதான் வருத்தப்படுகிறேன்..”
காயத்ரி வெறுப்புடன் கூறியதும்.. கஸ்தூரி “அம்மா” என்று வாய் பொத்தி அழுதாள்.. அதைக் கண்ட மகேஷ்வரன் “பளார்..” என்று காயத்ரியின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார்..
“அப்பா..” என்று அதற்கும் தலையில் அடித்துக் கொண்டு அழுத கஸ்தூரி.. தன் அறைக்கு ஓடி விட்டாள்..
அப்போது வீட்டிற்குள் வந்து கொண்டிருந்த செவ்வந்தி, இந்தக் காட்சியைக் கண்டதும் பதறி ஓடி வந்தாள்…
“அண்ணே.. என்ன இது..? என்றைக்கும் சிரிக்காதவள், திருவிழாக் கடையில் சிரித்த கதையாய்..! கல்யாணமான நாளில் இருந்து மதினியை கோபமாய் ஒரு பார்வை கூடப் பார்க்காமல் இருந்துட்டு, இப்ப மகளைக் கட்டிக் கொடுக்கப் போகிற நேரத்தில் உங்க வீரத்தைக் காண்பிக்கிறீங்களா..?”
“உனக்குத் தெரியாது செவ்வந்தி.. இவ நான் பெத்த பொண்ணை பார்த்து என்ன வார்த்தை சொன்னாள் தெரியுமா..?”
“என்ன அண்ணே இது..? கஸ்தூரி உங்களுக்கு மட்டுமா மகள்.. மதினிக்கும் மகள் இல்லையா..? பெத்தவளுக்கு இல்லாத உரிமையா உங்களுக்கு வந்திருச்சு..?”
“அப்போ.. இவள் என் மகளை உசிரோடு கூறு போடுவாள்.. அதை நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கணுமா..?”
“என்ன மதினி இது..! எலியும், பூனையுமா இங்கே நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு நின்னா.. கஸ்தூரியின் கல்யாணத்தை எப்படி நடத்துவது..?”
“இந்த வீட்டில் கஸ்தூரியின் கல்யாணம் நடக்காது செவ்வந்தி.. நான் செத்து கருமாதிதான் நடக்கும்..”
“மதினி..”
செவ்வந்தி துடிதுடித்துப் போய்விட்டாள்.. அதைவிட மகேஷ்வரனின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் மரண அடியாய் வந்து விழுந்தன..
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்..? இந்தக் கல்யாணம் நின்று போய்விடும் என்பதில் இவளுக்கு இவ்வளவு ஆக்ரோஷமா..? அப்போ.. இத்தனை நாள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை.. பொய்யானதா..? என்னைவிட இவளுக்கு அவளுடைய அண்ணன்தான் முக்கியமாய் போய் விட்டானா..?’
செவ்வந்தி ஆறுதலாகப் பிடித்த கையை அழுகையும்.. ஆத்திரமுமாய் தட்டி விட்டுவிட்டு கோபத்துடன் போய் விட்டாள் காயத்ரி. செவ்வந்தி ஆற்றாமையுடன் தமையனின் அருகே வந்து, “அண்ணே.. என்ன இது..? நம்ம வீட்டுல நடக்கப் போகிற மொத விசேஷம்.. அதை நல்லபடியாய் நடத்தி வைக்கிறதை மறந்துட்டு.. இப்படி சொய்கிறீங்களே..?” என்று கேட்டாள்..
“கஸ்தூரிக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்ட மில்லையம்மா..”
“என்ன அண்ணே சொல்றீங்க.. நிசமாவா..?”
“ஆமாம் செவ்வந்தி.. கொஞ்ச நாளாவே.. அவ முகமே சரியாக இல்லை.. எதையோ மனசில வைச்சுக்கிட்டு சொல்ல முடியாமல் மறுகி மறுகி நிற்கிறா, நான் நினைக்கிறேன்.. இவ காயத்ரிக்காக தன் மனசில இருக்கிறதை மறைச்சுக்கிட்டு… தியாகம் பண்ணி இருக்கிறா.. இப்ப கல்யாண தேதி வரைக்கும் போகவும்.. கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறா..”
“இருக்காது அண்ணே..! நீங்களா எதையாவது மனசுல நினைச்சுக்கிட்டுப் பேசாதீங்க..”
“இல்ல செவ்வந்தி.. அப்படித்தான் இருக்கணும்..”
வீடு இரண்டு பட்டு நின்றது.. அன்று இரவு யாருமே சாப்பிடவில்லை.. செவ்வந்தி, மூவரிடமும் மன்றாடிப் பார்த்துவிட்டு.. தோற்றுப் போனவளாய் தன் வீட்டிற்குப் போனாள்..
“என்னம்மா.. எதையோ பறிகொடுத்தது மாதிரி உட்கார்ந்திருக்கிற..?”
“நான் என்னத்த சொல்வேண்டா..? எங்க அண்ணன் வீட்டில் நிம்மதி இல்லாம கெடக்கறாங்க..”
“என்னவாம்..?” எரிச்சலுடன் கேட்ட துரைசிங்கத் திடம் விலாவாரியாய் விசயத்தை எடுத்துச் சொன்னாள் செவ்வந்தி.. அவ்வளவுதான்.. அவன் எரிச்சல் போன இடம் தெரியவில்லை..
“என்னம்மா இப்படிச் சொல்கிற…?” ஆவலுடன் கேட்டான்..
“அந்த சரவணன் பய நல்லவன்.. அழகன்.. சொத்து பத்து இருக்கிற பணக்காரன்.. படிச்சவன்.. அவனை விட்டால் கஸ்தூரிக்கு இணையான மாப்பிள்ளை இந்த ஜில்லா பூராவும் தேடினாலும் கிடைக்காது.. ஆனா.. எந்தப் பாவி கண்ணு பட்டதோ.. கல்யாணம் கலைஞ்சிடும் போல இருக்கே..!”
அதைக் கலைத்த படுபாவியான துரைசிங்கத்திற்கு சுர்ரென்று மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது..
“தேவையில்லாம லொடலொடன்னு ஓட்டைப் பானைக்குள் நண்டை விட்டிருக்காப்புல ஏம்மா பேசித் தள்ளுர..? பேசாம படு..”
“நீதானேடா விவரம் கேட்டே..”
“அதான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேல்ல.. இதுக்கு மேல உன் அண்ணன் குடும்பம் நல்லா இருந்தா நமக்கென்ன.. இல்லை நாசமாய் போனால்தான் நமக்கென்ன..? தூங்கு.. தூங்கு..”
தாயாரை அதட்டி துங்க வைத்துவிட்டு.. விடிய விடிய விழித்துக் கொண்டு மனக்கணக்கு போட்டான்..
விடிந்ததும் எழுந்து.. வயல் பக்கம் ஓடினான்.. அங்கே வரப்பின் மேல் நின்று கொண்டு, நாற்று நடவை மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தார் மகேஷ்வரன்..
அருகே சென்றவன்.. மிகவும் பவ்வியமான குரலில், கையைக் கட்டி.. முதுகை வளைத்து நின்று கொண்டு, “மாமா” என்று அழைத்தான்..
“என்ன மாப்பிள்ளை..?”
“உங்ககிட்ட ஒரு விசயம் தனியாப் பேசணும்..”
மகேஷ்வரன் வியப்புடன் தங்கை மகனின் முகத்தைப் பார்த்தார்..
“என்னய்யா.. என்ன விசயம்..?”
“அப்படி.. மோட்டார் ரூம் பக்கம் வருகிறீங்களா..?”
“வந்தால் போச்சு.. இப்ப சொல்லுப்பா.. என்ன விசயம்..?”
“நான் சொல்வதைக் கேட்டு, மாமா என் மேல் கோபப்படக் கூடாது..”
“அப்படியெல்லாம் பிடிமானம் போடாதே.. கோபப்படற விசயமுன்னா கட்டாயம் கோபப்படத்தான் செய்வேன்..”
“நீங்க கோபப்பட்டாலும் பரவாயில்லை மாமா.. நான் சொல்ல நினைக்கிறதை சொல்லிடுறேன்.. நான் சொன்ன பின்னால் நீங்கள் என்னை வெட்டிப் போட்டாலும் சரி.. மனசுக்குள்ளேயே நினைச்சு மறுகிக்கிட்டு.. நானும், கஸ்தூரியும் தவிக்கிற தவிப்பு போதும் மாமா..”
மகேஷ்வரனின் கையில் இருந்த குடை கீழே நழுவியது.. அவர் அதிர்ச்சியுடன் தங்கையின் மகனைப் பார்த்தார்..
‘இவன் என்ன சொல்கிறான்..?’
தாய்மாமனின் உணர்ச்சிகளைக் கவனிக்காதவன் போல் துரைசிங்கம் மடமடவென்று பேச ஆரம்பித்தான்..
“மாமா.. சின்ன வயசில இருந்தே கஸ்தூரிக்கு என் மேல பிரியம்.. கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்குவேன்னு என்னிடம் அடிக்கடி சொல்லும்..”
“நிஜமாகவா..?”
“என் அப்பன் மேல ஆணையா சொல்கிறேன் மாமா..”
செத்துப் போன தகப்பன் மேல் தீராத கோபம் கொண்டிருந்த துரைசிங்கம்.. இப்படி பொய் சத்தியம் செய்து தன் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டான்..
“இதை ஏன் இத்தனை நாளாய் கஸ்தூரி என்கிட்ட சொல்லலை..?”
“கல்யாணப் பேச்சு வரும்போது சொல்லிக் கலாமுன்னு இருந்தோம்.. அதோட.. அவளுக்கு நான், எனக்குத்தான் அவள்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.. திடீர்னு கதிரேசன் பெரியப்பா பெண் கேட்டு வருவாருன்னு நாங்க கனவிலேயும் நினைக்கலையே..”
அப்படியே.. உதடு துடிக்க.. கண்கள் கலங்க.. அப்பட்டமாக மகேஷ்வரனின் முன்னால் நடித்தான் துரைசிங்கம்.. நிஜ அம்பிகாபதி கூட இப்படி உருகி இருக்கமாட்டான்.. அப்படியொரு உருக்கத்தை அவனிடம் கண்டார் மகேஷ்வரன்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.