Chapter 20

0Shares

“என்னடா சொன்ன…?”

“ஆமாம்.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்..”

“என் அண்ணன்.. உனக்கு கஸ்தூரியைக் கட்டி வைக்க நினைத்தாரா..? இதை என்னை நம்பச் சொல்றாயா..?”

“ஹா.. நீ இப்படித்தான் சொல்லுவாய்.. நாங்க இப்ப எங்கிருந்து வருகிறோம் தெரியுமா..? கல்யாண பத்திரிகை அடிக்கக் கொடுக்கப் போயிருந்தோம்.. இவள் விஷத்தைக் குடிச்சிட்டாள்னு தெரிஞ்சதால் பாதி வழியிலேயே திரும்பிட்டோம்..”

“என்னத்தைச் சொல்லி என் அண்ணன் மனசைக் கலைத்தாய்..?”

“ஆமாம்.. உன் அண்ணன் மனசை யாராலும் கலைக்க முடியாதாக்கும்..? அவருடைய பெண் என்னைத்தான் காதலிக்கிறாள்னு சொன்னேன்.. மனுசன் உடனே நம்பிட்டார்..”

“நீ கெட்டிக்காரன்டா.. பேசுகிற விதத்தில் பேசியிருப்பாய்..”

“இப்போதுதான் நீ என்னைச் சரியாக புரிந்து வைத்திருக்கிறாய்.. உன் அண்ணனிடம் நிறைய ‘டயலாக்’ பேச வேண்டியது இருந்தது.. பேசி கரைச்சிட்டேன்..”

“இப்படியே இருந்தால் நீ ரொம்ப கஷ்டப்படப் போறடா..”

“ஏம்மா.. விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு.. இப்ப போய் சீதைக்கு நாமன் சித்தப்பன்ங்கிறே.. உனக்கு என்ன ஆச்சு..?”

“இன்னும் ஒண்ணும் ஆகாமல் உயிரோடு இருக்கிறேன்னு இருக்கு.. துரைசிங்கம்.. பொய்யில் எழும்பும் மாளிகை நிலைக்காதுடா..”

“அட போம்மா..! உனக்கு இன்னும் உலகம் தெரியலை..”

“உன்னையே நான் சரியாத் தெரிஞ்சுக்கலை.. உலகத்தை தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்..?”

“ஏம்மா.. நான் என் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட வாழ்ந்தால் உனக்கு பிடிக்காதா..?”

“அவ மனசுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா..?”

“அதெல்லாம் போகப் போக சரியாகிவிடும்..”

“ம்ஹூம்.. உன்னைப் பேசித் திருத்த முடியாது..”

“நீயேன் திருத்தணும்னு முயற்சி பண்ணுறே..?”

“ஒரு பெண்ணின் கண்ணீரில் வாழ்ந்தால், நம் வாழ்க்கை விளங்காதுடா..”

“அவளை யார் கண்ணீர் விடச் சொன்னது..? சந்தோஷமா என் கூட குடித்தனம் பண்ண வேண்டியது தானே..! நீ என் அப்பன்கூட சிரிச்சுக்கிட்டேவா குடித்தனம் பண்ணின..? அதுபோலதான்..”

“ஆக.. எனக்கும், என் அண்ணன் மகளுக்கும் கண்ணீர் வடிக்கணும்கிற விதியை.. உன் அப்பனும், நீயும் எழுதி வைச்சிருக்கீங்கன்னு சொல்லு..”

“இதையெல்லாம் வியாக்கினமாய் பேசு.. உன் அண்ணன்கிட்ட மட்டும் கையைக் கட்டி வாயைப் பொத்திக்க.. ஏம்மா இப்படி இருக்கே..?”

“என் தலைவிதிடா.. இருக்கேன்.. வேறு என்னத்தை நான் சொல்ல..?”

மகனுடன் பேசிக்கொண்டே மருத்துவமனையின் வாசலைப் பார்த்த செவ்வந்தி, அவசரமாய் எழுந்து நின்றாள்.. தாயின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த துரைசிங்கம்.. ஏளனமாக சிரித்தான்..

“என்னம்மா.. உன் கடவுள் வருகிறாரா..?”

“சும்மா இருடா.. என் அண்ணன் வர்றார்..”

“அதுக்கு ஏன் எழுந்திருக்கிற..?”

“வாயை மூடு.. அவர் கிட்டக்க வந்துட்டாரு..”

“வந்தால் வரட்டுமே..”

அலட்சியமாய் தாயிடம் சொல்லியபடி திரும்பிய துரைசிங்கம்-நொடிப் பொழுதில் தன் முகத்தில் பக்தி கலைந்த மரியாதையை கொண்ட வந்தான்..

“மாமா.. வந்துட்டீங்களா..?”

“ம்.. நீ என்னப்பா இங்க நிற்கிற..? செவ்வந்தியும் உன் கூட நிற்கிறா..! அங்கே கஸ்தூரிக்கு துணையா யார் இருக்கிறது..? இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பீங்க..”

“அது வந்து அண்ணே..”

செவ்வந்தி விளக்கம் சொல்ல ஆரம்பிக்கையில், துரைசிங்கம் அவசரமாய் உள்ளே புகுந்தான்..

“நாங்க என்ன மாமா செய்ய..? வெளியே போங்கன்னு கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய்.. என்னையும், அம்மாவையும் அந்த சரவணன் துரத்தி விட்டுவிட்டானே..”

மகேஷ்வரனின் கண்களில் அதிர்வு வந்தது.. மனைவியை முறைத்துப் பார்த்தார்.. அதற்கு பதிலாக முதன் முதலாய் துரைசிங்கத்தை முறைத்தாள் காயத்ரி..

‘ம்.. பயங்கரமான ஆள்டா நீ வெடியைக் கொளுத்தி போடுகிறாயா..? இரு.. நான் உன் மேல் அணுகுண்டையே போடுறேன்..’

மாமன் மனைவியின் பார்வை பேசிய சங்கேத மொழியைப் புரிந்து கொள்ளாத மட்டியல்ல துரைசிங்கம்.. அவனுக்கும் புரிந்தது.. ஆனாலும், அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு..

“என்ன அத்தை..?” என்று கேள்வி வேறு கேட்டு வைத்தான்..

“ஒன்றுமில்லை மருமகனே..! வர வர.. நீ மகா புத்திசாலியாய் மாறிக்கிட்டு வருகிறாயே.. அதான் ஒரு கற்பூரத்தை ஏத்தி உனக்கு திருஷ்டி சுத்திப் போடணும்னு நினைக்கிறேன்.. தாங்கலைப்பா.. என்னமா எதையும் எடுத்துச் சொல்லுற..”

செவ்வந்திக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. காயத்ரி கேட்ட கேள்வியின் அர்த்தம் புரியாதவள் இல்லை அவள்.. எப்போதும் தன் மகனிடம் பரிவாகப் பேசும் அண்ணன் மனைவி-இன்றைக்கு நக்கலும், நையாண்டியுமாய் பேசுவதற்கு காரணம் அவன்தானே என்று மனதிற்குள் நினைத்து கூனிக் குறுகிப் போனாள்..

மகேஷ்வரனும் மனைவியின் தாக்குதலைக் கவனிக்கத் தவறவில்லை.. துரைசிங்கத்தின் வாக்கில் சந்தேகம் வந்துவிட்ட பின்னால் முழு மனதாய் அவனுக்கு ஆதரவைக் கொடுக்கவும் அவரால் முடியவில்லை..  வேகமாய் நடையைப் போட்டார்.. மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்..

கஸ்தூரி இருந்த அறைக்குள் சென்றபோது, கண்ட காட்சி.. அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு வகையான உணர்வைக் கொடுத்தது..

புத்துணர்வுடன்.. தலையணையை சாய்வாக வைத்து, அதில் சாய்ந்து அமர்ந்து கொண்டு.. சிரித்த முகமாய்.. சரவணன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் கஸ்தூரி..

அவளிடம் நகைச்சுவையாய் பேசியபடியே.. ஆரஞ்சுப் பழத்தை உரித்து.. அவள் கையில் சாப்பிடக் கொடுத்தான் சரவணன்..

மகள் தேறி எழுந்து அமர்ந்திருப்பதோடு.. சிரித்துக் கொண்டும் இருப்பதில்.. உயிர் மீண்ட உணர்வைப் பெற்றவனர் மகேஷ்வரனும், காயத்ரியும்..

தன் மகன் மேல் அதீத கோபத்துடன் இருந்தவளை மாற்றி, கனிவுடன் சிரிக்க வைத்துவிட்ட சரவணனையும்.. அவன் முகத்தை காதலுடன் பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரியையும் கண்ட செவ்வந்தி-அவர்கள் போன்ற மனம் ஒப்பிய ஜோடி பிரியக் கூடாது என்று கடவுளை வேண்டினாள்..

‘என்னம்மா.. அவன்கிட்ட சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்கா பாரு… கைகாரி.. என்னைப் பார்த்தால் எதையாவது தூக்கி எறியத் தோன்றுகிறது இவளுக்கு.. அவனைப் பார்த்தால் பல்லைக் காட்டத் தோன்றுகிறதாக்கும்..?’ துரைசிங்கத்தின் மேனி எரிதனல் போல் ஆனது..

“கஸ்தூரி..” மகேஷ்வரன், மகளின் அருகே அமர்ந்தார்.

“அப்பா..”

“ஏன்ம்மா இப்படியொரு காரியத்தைச் செய்தே..?”

அக்கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் உதட்டைக் கடித்து.. தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயன்றவளாய் தலையைக் குனிந்து கொண்டாள் கஸ்தூரி..

அவளைப் பேசவிட்டால் விவகாரம் பெரிதாகிவிடும் என்ற சுதாரிப்புடன் துரைசிங்கம் அவசரமானான்..

“இப்ப எதுக்கு மாமா வேண்டாத கதையையெல்லாம் கேட்டுக்கிட்டு..! அதான் நம்ம கஸ்தூரி பொழைச்சு எழுந்து உட்கார்ந்துவிட்டாளே.. இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம்.. பழசைக் கிளறி.. அது மனசை புண்படுத்த வேண்டாம் மாமா..”

கஸ்தூரி வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அதை ஜாடையாய் கணவனுக்கு உணர்த்தினாள் காயத்ரி.. மகேஷ்வரன் புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினார்..

கணவன்-மனைவியின் பார்வைப் பரிமாற்றங்களை துரைசிங்கம் கவனித்துவிட்டு.. கவலையில் ஆழ்ந்தான்..

‘என்னடா இது.. ஒரு இட்லியை விழுங்கிவிட்டு வருவதற்குள்ளே.. என் அத்தைக்காரி, மாமன்காரனை கைக்குள் போட்டுவிட்டாளே..! இனி என்ன செய்வது..?’ திகைத்தான்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link