Chapter 22

0Shares

அலை கடலாய் கொந்தளித்த மனதை அமைதிப் படுத்த முயன்று கொண்டிருந்தாள் கஸ்தூரி..

இது அவளாக இழுத்துக் கொண்ட துன்பம். அவள் மட்டும் திருமணம் வேண்டாம் என்று சொல்லாமல் இருந்திருந்தால்… அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் அவளுடைய காதலனும், தாயும்.. துரைசிங்கத்தின் முகமூடியைக் கிழித்து.. அவனது பொய் முகத்தை அம்பலப்படுத்தி இருப்பார்கள்..

ஆனால், அவள்தான் சரவணனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சொல்லி.. அவனை இதில் உடனடியாக தலையிட முடியாமல் முள்வேலி போட்டு வைத்துவிட்டாளே..!

இன்னொரு விஷயம்.. அவனுக்கு ஆதரவாக காயத்ரி வாயைத் திறந்தால்.. அண்ணன் மகனுக்காக மகளை வற்புறுத்துகிறாள், நாத்தனார் மகன் என்பதற்காக துரைசிங்கத்தை வெறுக்கிறாள் என்று ஆகிவிடும்..

பூப்போல வளர்ந்த மகள்.. திரும்பவும்.. தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் காயத்ரியின் கண்கள் கலங்கிவிட்டன..

கஸ்தூரி என்ன செய்யப் போகிறாள்..? எதுவானாலும் அவளது கடைசி முயற்சி வரை காத்திருக்கலாம்.. அவளால் முடியாவிட்டால் களத்தில் இறங்கிக்கொள்ளலாம் என்ற நினைவு சரவணனுக்கு..

செவ்வந்தி வாயைத் திறக்கவே முடியாது.. ஒரு வாசகம் பேசினாலும், அதை திருவாசகம் போல் அவள் பேசி வைத்துவிட அப்போது ஆரம்பித்தவன்தான் துரைசிங்கம்.. தன் முறைப்பை நிறுத்தவே இல்லை..

இவனுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு.. கஸ்தூரி விருப்பமில்லை என்று சொல்லி திருமணத்தையே நிறுத்த முனைந்தது.. அவனுக்கு சாதகமான இன்னொரு விசயம், கஸ்தூரிக்கு அவன் மீது இருக்கும் வெறுப்பு..

தான் என்ன சொன்னாலும் அவள் தன் முகம் பார்த்து பதில் பேசமாட்டாள் என்ற துணிவில்.. அவன் இஷ்டப்படி பேசிக்கொண்டிருந்தான்.. அந்த சாதகமான விசயத்தை அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசியதன் மூலம்.. தவிடு பொடி ஆக்கினாள் கஸ்தூரி..

“நீங்கள் யார் மாமா.. என் கல்யாண விசயத்தில் தலையிட..?” அவள் நிதானமாக கேட்டதும் துரைசிங்கம் ஆடிப் போனாலும் உடனே சுதாரித்துக்கொண்டான்..

“உனக்கு என் மேல் கோபம் இருப்பதில் தவறில்லை கஸ்தூரி.. நான் யார்..? ஒரு ஏழை.. என் சொல் அம்பலம் ஏறுமா..? அதனால் மனதிற்குள் மருகிக்கொண்டு இருந்தேன்.. அதுதானே உன் கோபத்திற்கு காரணம்..? நான் என்ன செய்வேன் கஸ்துரி. நீதான் என்ன செய்ய முடியும்..? ஆனால் ஒன்று கஸ்தூரி.. நீ கல்யாணத்தை மறுத்ததும், நான் ஆர்வத்துடன் மாமாவைப் பார்த்து நம் காதல் கதையைச் சொல்லவில்லையா..? உன்னைக் காப்பாற்ற ஓடோடி வரவில்லையா..? இந்த ஏழை அத்தை மகனால்.. இதுதானே செய்ய முடியும்..?”

விட்டால்.. லொக்.. லொக்கென்று இருமிவிடுவான் போல அவன் உணர்ச்சிகரமாய் வசனம் பேசிய விதத்தில் கஸ்தூரி எதையாவது எடுத்து அவனை அடித்துவிடலாமா என்று பார்வையால்.. அருகில் இருந்த பொருள்களை ஆராய ஆரம்பித்துவிட்டாள்..

‘அடங்க மாட்டேன் என்கிறானே…’ என்ற கோபத்துடனும், கஸ்தூரி எதையாவது ஏடாகூடமாய் செய்துவிடப் போகிறாள் என்ற கவலையுடனும் அவளைப் பார்வையால் அதட்டினான் சரவணன்..

“ஏன் மாமா.. என் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னால்.. அது என் சொந்த விசயம். உங்களுக்கு எப்படி என் விருப்பத்தைப் பற்றித் தெரியும்..? என்னைப் பெற்ற தாய், தகப்பனுக்கு தெரியாதது உங்களுக்குத் தெரிந்துவிட்டதா..?”

“அப்படிப் பேசாதே கஸ்தூரி.. உன் கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. உனக்கு தெரியுமா..? நீ சின்ன வயசில்.. இந்த மாமாவின் தோள் 

மீது உட்கார்ந்துகொண்டு.. அந்த நிலா வேண்டும்னு அடம் பிடிப்பே.. என்னால் நிலாவைப் பிடித்துக் கொண்டு வர முடியாதுன்னாலும், நான் ஒரு கண்ணாடியை 

எடுத்து அதில் நிலாவின் பிம்பத்தைக் காட்டி.. ‘இதுதான் நீ கேட்ட நிலாம்மா.. எடுத்துக்க’ன்னு சொல்வேன்.. இது மத்தயாருக்கும் நினைவில்லாமல் போகலாம்.. உனக்குமா நினைவில்லை கஸ்தூரி..?”

அவளுக்கு இப்போது அழுகையே வந்துவிட்டது.. இவன் இப்படிச் பேசிப் பேசி கொல்கிறானே.. என்ற ஆற்றாமையுடன், ‘என்னைக் காப்பாற்றேன்..’ என்பது போல் சரவணனைப் பார்த்தாள்..

அவன் நிமிர்ந்து அமர்ந்தான்..

“கஸ்தூரி.. நீ நமது கல்யாணத்தில் விருப்ப மில்லைன்னு ஏன் சொன்னாய்..?” என்று கூர்மையான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான்..

“அத்தான்.. அது வந்து..”

“என்னை.. உனக்குப் பிடிக்கவில்லையா..?”

“உங்களைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது அத்தான்..”

‘நோட் த பாயிண்ட யுவர் ஆனர்..’ என்பது போல் மகேஷ்வரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் கேள்விகளைத் தொடர்ந்தான் சரவணன்..

“அப்புறம் ஏன்.. கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொன்னாய்..”

“நான் கல்யாணத்திலே விருப்பமில்லைன்னுதான் சொன்னேன்.. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லைன்னோ.. இல்லை வேறு யாரையும் விரும்புகிறேன்னோ சொல்லவே இல்லை..”

‘இது இரண்டாவது பாயின்ட்..’ என்று மகேஷ்வரனுக்கு பார்வையால் உணர்த்தினான் சரவணன்..

“ஏன் உனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லாமல் போய்விட்டது.. வேறு ஏதும் திட்டம் வைத்திருந்தாயா..?”

“உங்கள் மேல் உயிரைத்தான் வைத்திருந்தேன்..”

“இந்தக் காதல் பேச்சில் ஒரு குறைச்சலும் இல்லை.. அப்புறம் ஏன் கல்யாணத்தை மறுத்தாய்..?”

“உங்களுக்குத் தெரியாதா..?”

“எனக்குத் தெரியும்.. உன்னிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்தான்.. நீ அவனை இரும்பு வாளியால் அடித்து விரட்டிவிட்டாய்.. ஆனால், அந்நியர்களின் விரல் கூடப் படாமல் வளர்ந்த பெண் நீயென்பதால்.. அவன் தொட்டதை பெரிதாக நினைத்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்குத் தகுதி இல்லைன்னு நினைத்துவிட்டாய்.. இதுதானே நடந்தது..?”

“ஆமாம்..” என்ற கஸ்தூரி.. மற்றவர்களின் முகம் பார்க்க முடியாமல் கூசிப் போனவளாய் முழங்கால்களில் முகம் புதைத்து தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்..

“கஸ்தூரி..” என்று விதிர்த்துப்போன காயத்ரி.. அவசரமாய் எழுந்து மகளின் அருகே வந்து அவளை அணைத்துக்கொண்டாள்..

“எனக்குத் தெரியாமல் போய்விட்டதே மகளே.. பெற்றவளிடம் கூட இதைச் சொல்லாமல் உன் மனதில் போட்டுக் கொண்டு.. இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாயே.. ஏன் மறைத்தாய் கஸ்தூரி..?”

“எப்படிம்மா.. இதைப் போய் உங்களிடமும்.. அப்பாவிடமும் சொல்வேன்..?”

“பைத்தியக்காரி.. எங்களிடம் சொல்லாமல் நீ மறைத்ததால் என்னவெல்லாம் நடந்துவிட்டது..?”

மகேஷ்வரனுக்கு உடலின் சர்வ அங்கமும் பதறிக்கொண்டு இருந்தது.. மீசை துடித்தது.. வெறி கொண்டவராய் எழுந்தார்..

“யார் இந்தக் காரியத்தை செய்தது..?” என்று அவர் கர்ஜித்த விதத்தில்.. துரைசிங்கம் ஆடிப் போய் விட்டான்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link