Chapter 01
ஒரு நொடி.. அந்த இடத்தை விட்டு ஓடிப்போய் விடலாமா என்று நினைத்தான் அர்ஜுன்.. ஆனால் பக்கத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்த வேதாச்சலத்தைப் பார்த்ததும் அடங்கி உட்கார்ந்தான்.
‘பெண் பார்க்கன்னு கூப்பிட்டுக் கொண்டு வந்துவிட்டு.. இப்படி பேயைக் காட்டுகிறார்களே..!’
அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.. ஆனால் அவன் முன்னால் விரிக்கப்பட்டிருந்த புதிய பவானி ஜமுக்காளத்தில் அமர்ந்து வீணை வாசிக்கத் தயாராகிக் கொண்டிருந்த தர்ஷிணி ஒன்றும் பேயைப் போல் இருக்கவில்லை..
ஒல்லியாய்.. உயரமாய்.. அழகான நீண்ட பின்னலோடு.. அம்சமான பெரிய கருவிழிகளோடு.. அற்புதமான பேரழகியாய் இருந்தாள்..
வீணையை சுருதி ஏற்றுவதுபோல் தலையைக் குனிந்து கொண்டிருந்தவளின் மனம், அர்ஜூனுக்குக் குறையாத அளவில் குமுறிக் கொண்டிருந்தது..
‘ஹூம்.. போயும்.. போயும்.. இந்த மூஞ்சிக்காகாவா.. மெனக்கெட்டு இவ்வளவு தூரம் அலங்கரித்துக் கொண்டேன்..?’
விட்டால் அவள் வீணையால் அர்ஜூனின் தலையில் இரண்டு போடு போட்டு ஓட.. ஓட.. விரட்டியிருப்பாள்..
பெற்றவர்களை நினைத்து பல்லைக் கடித்துக் கொண்டு சபையில் அமர்ந்திருந்தாள்..
“எங்க தர்ஷிணி பாடினால்.. அந்த கலைவாணியே நேரில் வந்து பாடுவது போல இருக்கும்..” தர்ஷிணியின் அம்மா சnhhஜா பெருமையுடன் கூறினாள்..
“என்னது.. களவாணியா..?” வேண்டுமென்றே சந்தேகம் கேட்டான் அர்ஜூன்..
‘பெண் பார்க்க வந்திருக்கும் தெனாவெட்டா..?’ யாரும் அறியாமல் விழியுயர்த்தி, தன் வேல் விழியால் அவனை ‘வெட்டவா.. இல்லை, குத்தவா..?’ என்று ஒரு பார்வை பார்த்து வைத்தாள் தர்ஷிணி..
அவளது முறைப்பை இனம் கண்டு கொண்ட அர்ஜூனின் நெஞ்சில் வெற்றிப் பெருமிதம் படர்ந்தது..
‘டென்ஷன் ஆகிறாயாடி.. உன்னை டென்ஷன் படுத்துவது என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது போல.. என் முன்னால் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து
போஸ் கொடுக்கிறாயா..? உன் சுயரூபம் என்னைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியாது.. எனக்கு நல்லாத் தெரியுமே..’
மகனை முறைத்தார் வேதாச்சலம்.. அவனது காதருகே சரிந்து மிரட்டும் தொனியில் கூறினார்..
“டேய்.. வாயை வைத்துக் கொண்டு சும்மாயிரு..”
“இல்லப்பா.. எனக்கு அப்படித்தான் காதில் விழுந்தது.”
“விழும்.. விழும்.. ஞான சூன்யம்.. அப்படியே உன் அம்மாவைக் கொண்டு பிறந்து தொலைச்சிருக்க.. சங்கீதம்ன்னா.. கிலோ என்ன விலைன்னு கேட்பாள் அவள்… நீ அவள் பெற்ற பிள்ளைதானே..! வேறு எப்படியிருப்ப..?”
பெண் பார்க்க வேதாச்சலம் போன போது அர்ஜூனின் அம்மா தமிழ்செல்வி கையில் வீணையோடு வந்து உட்கார்ந்தாளாம்.. வீணை இசையைக் கண்மூடி ரசித்த வேதாச்சலம், அந்த இசையில் கவரப்பட்டு அந்த இடத்திலேயே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டாராம்.. திருமணம் முடிந்து, தேநிலவும் முடிந்து, அர்ஜூன் தமிழ்செல்வியின் வயிற்றில் ஆறுமாத கருவாக இருந்த போது, மனைவியை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டாராம் அவள் திருதிருவென்று விழித்தாளாம்..
“அப்புறம்தாண்டா மகனே தெரியும்.. அவள் வெறுமனே வீணையை வைத்துக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறா.. பின்னால்.. டேப்பில் வீணையில் மியூஸிக்கை போட்டு விட்டிருக்கிறார்கள்.. இது தெரியாமல் ஏமாந்த சோணகிரியாய் நான், தலையைத் தலையை ஆட்டி, இவளைக் கல்யாணமும் பண்ணிக் கொண்டேன்.. அடித்து அவளுடைய அப்பா வீட்டிற்கு விரட்டி விடலாமென்றால், நீ வயிற்றில் இருக்கிறாய்.. அப்புறமென்ன.. என் சங்கீதக் கனவு காற்றோடு போச்சு..”
வேதாச்சலம் அடிக்கடி கூறும் நிகழ்வு இது.. அவரை எதிர்த்துப் பேசினால்.. அந்தச் சபையிலேயே அர்ஜூனின் அம்மா தமிழ்செல்வி வீணை வாசித்த கதையை அம்பலப்படுத்தி விடுவார் என்பதால் அர்ஜூன் வாயை இறுக மூடிக் கொண்டான்..
“மாப்பிள்ளை என்ன சொல்கிறாரு..?” தர்ஷிணியின் அப்பா கிருஷ்ணன் வினவினார்..
“இல்லை.. பொண்ணு வீணை மட்டும்தான் வாசிக்குமா.. இல்லை பாடவும் தெரியுமான்னு கேட்கிறான்.”
“பாட்டும் பாடுவாளே.. எங்க தர்ஷிணி வாயைத் திறந்து பாடினால் குயில் பாடுவது போலவே இருக்கும்..”
‘என்ன ஒரு பில்ட் அப்.. இவள் வாயைத் திறந்து பாடினால் எனக்கு கோட்டான் பாடுவது போலவே இருக்கும்..’ எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டான் அர்ஜூன்..
வீணையை ஸ்வரம் ஏற்றிக் கொண்டிருந்த தர்ஷிணியின் காதோரம் கிசுகிசுத்தாள் அவளது பெரியம்மாவின் பெண் ரமா..
“ஏய்.. நீ கொடுத்து வைத்தவள்டி.. மாப்பிள்ளை ஹீரோ போல ஜம்மென்று இருக்கிறார்.. யு ஆர் ஸோ லக்கி..”
‘இவனா ஹீரோ.. சரியான வில்லன் இவன்..’ தர்ஷிணி தன் மனதின் கடுப்பு முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டாள்..
அவள் மனம் கடுப்பதுபோல.. அர்ஜூன் வில்லன் போலத் தோற்றமளிக்கவில்லை.. ஆறடி உயரத்தில் கம்பீரமாய் – அளவான மீசையுடன் – எந்தப் பெண்ணையும் வசீகரிக்கும் தோற்றத்துடன் இருந்தான்..
பெண் பார்க்கவென்று வந்திருந்தவன் பெண்ணை விட்டுவிட்டு அவளின் பெரியம்மா பெண் ரமாவை ‘சைட்’ அடித்துக் கொண்டு இருந்தான்..
அதுவும் தர்ஷிணி பார்க்கும் போது இன்னும் அதிகமாக ரமாவை சைட் அடித்தான்..
அவன் எதிர்பார்த்தது போலவே தர்ஷிணியின் முகம் மாறியது.. அவன் விழிகள் அவளிடம் சவால் விட்டன..
‘உன்னைப் போய் எவன் பார்ப்பான்..?’ அவன் மனதிற்குள் பொறுமிக் கொண்டிருந்த போது..
‘உன் புத்தி இப்படித்தானேடா போகும்..’ என்று அவள் மனதிற்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாய் வீணையில் ஸ்வரம் கூட்டி பாட ஆரம்பித்தாள் தர்ஷிணி..
“அலைபாயுதே.. கண்ணா..
என் மனம்.. மிக.. அலைபாயுதே..”
உண்மையில் அவளுடைய மனம் அலைகடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருந்தது.. அவள் பாடிக் கொண்டிருக்கும் போது மற்றவர் அறியாமல் அவன் செய்த மௌன சேஷ்டைகள் அவளை மிகவும் பாதித்தன.. போதாக் குறைக்கு அவள் பார்வையை உணர்ந்தவன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்..
‘இவன் பெரிய மகாராஜா.. சோபாவில் உட்கார்ந்துக்குவான்.. நான் சேடிப் பெண் போல.. தரையில் உட்கார்ந்து இவன் கேட்டு மகிழ வீணை வாசிக்க வேண்டுமா..?’
அவள் மனம் முரண்டியது.. இந்தப் ‘பெண் பார்க்கும் வைபவ’த்தைக் கண்டுபிடித்த மகாராசனைக் கண்டால்.. சல்லடையாக்கி விடும் கொலைவெறியுடன் அவள் கண்மூடிக் கொண்டாள்..
எல்லோரும் அவள், பாட்டில் மூழ்கி கண்மூடிக் கொண்டாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.. அர்ஜூனுக்கு மட்டுமே தெரியும்.. அவள் அவனது முகத்தைப் பார்க்க சகிக்காமல் கண்மூடிக் கொண்டு வீணை வாசிக்கிறாள் என்பது..
இப்படியொரு பெண் பார்க்கும் படலம் வேறு எங்கும் நடந்திருக்குமா..? என்று நினைத்து தலையில் கை வைத்துக் கொண்டான் அவன்..
“ஆஹா.. அற்புதம்.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு..” என்று மகிழ்ந்து போனார் வேதாச்சலம்..
‘இவர் எதைச் சொல்கிறார்..?’ என்று குழம்பிப் போனான் அர்ஜூன்..
“ஏன்ப்பா.. காபி குடித்து முடித்து எவ்வளவு நேரமாகி விட்டது.. இப்போது போய் காபியை விழுந்து, விழுந்து பாராட்டுகிறீங்களே..” என்று தகப்பனாரைப் பார்த்து கேட்டு வைத்தான் அவன்..
வேதாச்சலம் நெற்றிக் கண்ணைத் திறக்காத குறையாய் அவனைப் பார்வையிலேயே எரித்தார்..
“ஞான சூனியம்.. ஞான சூனியம்.. நீயும் உன் அம்மாவைப் போல் தின்பதிலேயே குறியாய் இரு.. அந்தப் பொண்ணு வீணை வாசிக்கிறதைக் கேட்டியாடா..?”
‘நான் எங்கே கேட்டேன்..?’
“அப்படியே சாட்சாத்.. அந்த சரஸ்வதியே வந்து வீணை வாசித்தது போல இருந்தது..”
‘சரஸ்வதியை நீங்க நேரில் பார்த்திருக்கிறீங்களா..?’
“இப்படியொரு பெண் உனக்கு மனைவியா கிடைக்க நீ போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..”
‘போங்கப்பா.. நீங்க வேற.. பாவம் செய்திருக்க வேண்டும்.. அது புரியாமல் பேசிக்கிட்டு..’
தர்ஷிணி ‘வீணை வாசித்தேன்.. என் வேலை முடிந்தது..’ என்பது போல எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டாள்..
அர்ஜூன்.. ‘அப்பாடி..’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
“அப்புறம்.. சம்பந்தி.. நாங்க கிளம்புகிறோம்.. பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கு.. அடுத்த வாரம் புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு.. அன்றைக்கே நிச்சயதார்த்தம் நடத்தி விடலாம்.. வரும் முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்து விடலாம்..”
வேதாச்சலம் ‘கிளம்புகிறோம்..’ என்று சொன்னதும் படுஉற்சாகமாய் எழுந்து நின்ற அர்ஜூன்.. அடுத்து அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் பேயறைந்தவன் போல் ஆனான்..
“அப்பா..” என்று ஏறக்குறைய அலறியவனை வேதாச்சலம் விழி மிரட்டலால் அடக்கினார்..
பெண்ணைப் பெற்ற கிருஷ்ணனுக்கு வாயெல்லாம் பல்லானது..
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.. நீங்க சொன்னால் மறுபேச்சு ஏது..? உங்க இஷ்டப்படியே எல்லாத்தையும் நடத்தி விடுவோம்..” என்று கைகூப்பினார்..
எப்படி காரில் ஏறினான்.. எப்படி வீட்டிற்குள் வந்தான் என்று அறியாதவனாக.. பொம்மை போல் வந்தான் அர்ஜூன்..
அவனது நிலையைக் கண்டு பயந்து போன தமிழ்செல்வி.. அவன் முகத்தில் தண்ணீர் அடிக்காத குறையாக உலுக்கி.. அவனை தன் நிலைக்கு கொண்டு வந்தாள்..
“டேய் அர்ஜூன்.. ஏண்டா இப்படி முழிக்கறே.. ஐயோ.. என் பிள்ளைய எந்தக் காத்து கருப்போ.. பயமுறுத்திருச்சே..”
அன்னையின் அழுகுரல் கேட்டுத் தன் நிலைக்கு வந்த அர்ஜூன் தன்னை பயமுறுத்திய காத்து.. கருப்பை நினைத்து உடல் சிலிர்த்தான்..
‘ஐயோ.. அம்மா.. அதைத்தானே பெண்ணுன்னு காட்டி விட்டு கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கீங்க.. பத்தாக்கறைக்கு அப்பா.. அந்த பிசாசை வாழ்நாள் முழுவதும் என் தலையில் கட்டப் பார்க்கிறாரே..’
அவன் அவசரமாய் வேதாச்சலத்தைப் பார்த்தான்..
“அப்பா.. எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கலை..”
“ஏன் பிடிக்கலை..? அவளென்ன பின்னாலே டேப்-ரிகார்டரை ஒளித்து வைத்துக்கிட்டு வாயை அசைத்து ஏமாற்றினாளா..?”
மகனுக்கு பரிந்து பேச வாயைத் திறந்த தமிழ்செல்வி வாயை இறுக மூடிக் கொண்டாள்..
தகப்பனாரின் தந்திரம் புரிந்து கோபமடைந்தான் அர்ஜூன்..
“அப்பா இது அநியாயம்..”
“எதுடா அநியாயம்..? என் அப்பா.. ஒன்றுமில்லாத ஓட்டாண்டி வீட்டில் ஆறு பவுன் நகையோடு ஒரு ஞானசூன்யத்தை என் தலையில் கட்டி வைத்ததைப் போலவா.. நான் உனக்கு கட்டி வைக்கப் பார்க்கிறேன்..? கிளி போல் அழகாக இருக்கிறாள்.. குயில் போல பாடுகிறாள்.. மயில் போல நடக்கிறாள்..”
“அப்பா.. இந்தப் பறவைகள் இனமெல்லாம் எனக்கு வேண்டாம்.. மனிதப் பிறவியே எனக்குப் போதும்..”
அர்ஜூன் எரிந்து விழுந்தான்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.