Chapter 04

0Shares

அவளிடம் லேசாக அசைவு தோன்ற.. இப்போது அவசரமாய் அவன் கண்களை மூடிக் கொண்டான்.

‘ராங்கி பிடித்தவள்.. நான் அவளுக்காக ஏங்குவதாக நினைத்துக் கொள்வாள்..’

அதே நேரத்தில்.. லேசாக அரைக் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள் தர்ஷிணி.. பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில்.. தலைமுடி கலைந்து.. கவர்ச்சிகரமான தோற்றத்துடன் உறங்கிக் கொண்டிருந்தான் அர்ஜூன்..

அவனின் அந்த இயல்பான ஆண்மை நிறைந்த அழகு அவளை ஆகர்ஷித்தது..

‘ம்ம்.. எப்படி இருக்கிறான்..? ‘மாப்பிள்ளையைப் போல் ஜம்மென்று இருக்கிறான்..’ ன்னு சொல்வார்களே.. மாப்பிள்ளையின் டிரெஸ்ஸில் இவன் ஹீரோ போல்தான் இருக்கிறான்.. அப்புறம்.. ஏன்.. ரமா இவனிடம் ஜொள்ளு விடமாட்டாள்..?’

அவள் விழி திறந்து அவனை ரசித்துக் கொண்டிருக்கும் போது அவன் புரண்டு படுத்தான்.. அவள் சட்டென்று கண்மூடிக் கொண்டாள்.. அவள் உடல் நடுங்கியது..

‘நான் பார்த்ததை அவன் பார்த்திருப்பானோ.. என்னவோ அவனைப் பார்த்து நான் ஜொள்ளு விட்டதாக நினைத்துக் கொள்ள மாட்டானா..?’

அதன் பின்னால் இருவருமே ஒருவர் பக்கம்.. ஒருவர் திரும்பவில்லை. இந்த லட்சணத்தில் முதலிரவைக் கொண்டாடி முடித்து விட்டு.. அறையை விட்டு வெளியே வந்தவர்களைக் கேலி செய்ய உறவினர் கூட்டம் காத்திருந்தது..

“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

ஆனால் இதுதான் முதலிரவு..” என்று பாடினாள் தர்ஷிணியின் அத்தை..

“நேத்து ராத்திரி.. யம்மா..” என்று பாடி கண் சிமிட்டினாள்.. ரமாவின் அண்ணி..

    “உன் மேல ஆசை வைச்சேன்..

     உத்தமியே மெத்தஉண்டு..

    சத்தியமாச் சொல்லுறேண்டி.. தங்க ரத்தினமே..

    தாள முடியாது கண்ணே.. பொன்னு ரத்தினமே..”

தர்ஷிணியின் பாட்டி பாடினாள்..

‘ஐயோ..!’ என்று இருந்தது தர்ஷிணிக்கு.. ஆனாலும் வெட்கப்படுவது போல் தலையைக் குனிந்தபடி.. குளிக்க ஓடி விட்டாள்..

மாப்பிள்ளையும்.. பெண்ணும்.. மறுவீட்டு விருந்திற்குச் செல்லத் தயாராகி விட்டார்கள்..

“இங்கே பார்.. என்னால்.. உன் வீட்டில் ஒருநாள்தான் தங்க முடியும்.. உன் அப்பா-அம்மாவிடம் சொல்லிவிடு..” என்றான் அர்ஜூன்..

“ஏன்.. உங்களுக்கு வாய் இல்லையா..? நீங்கள் சொல்ல வேண்டியதுதானே.. நான் சொல்ல முடியாது..”  என்றாள் தர்ஷிணி..

“எரிச்சலைக் கிளப்பாதேடி.. நான் சொன்னால் உன் அப்பா.. என்னைத் தாங்குகிறேன்னு நினைத்துக் கொண்டு.. ‘அதெல்லாம் முடியாது மாப்பிள்ளை… நீங்க கட்டாயம் இருந்துவிட்டுத்தான் போகணும்..’ன்னு கெஞ்சுவார்.. எனக்கு டார்ச்சராக இருக்கும்..”

“எங்க அப்பா பேசுவது உங்களுக்கு டார்ச்சராக இருக்கிறதா..?”

“ஆமாம்.. அதுக்கு என்னாங்கிற இப்ப..?”

“உங்க அப்பா பேசினால் மட்டும் எப்படி இருக்கிறதாம்..?”

“உங்க அப்பா பேசுவதைவிட.. என் அப்பா பேசுவது அதிக டார்ச்சராக இருக்கும்டி..”

இப்படிச் சொல்கிறவனிடம் எப்படி வார்த்தையாடுவது..?

“பார்க்கிறேன்..” என்றாள் தர்ஷிணி..

“யாரைப் பார்க்கிறாய்..?” என்றான் அவன் கிண்டலாக..

“நிச்சயமாய் உங்களை இல்லை..” என்று அவள் அவனது மூக்கை உடைத்தாள்..

“அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை..” என்று அவன் விறைத்துக் கொண்டான்..

சண்டைக் கோழிகள் போல் அவர்கள் முறைத்துக் கொண்டே மறுவீட்டு விருந்திற்குப் போனார்கள்..

மட்டான் பிரியாணி.. கோழி வறுவல்.. மீன் பொறியல்.. அவித்த முட்டை.. நண்டு குழம்பு என்று.. மதிய விருந்து தடபுடலாக இருந்தது..

“போதும்.. அத்தை.. போதும்..” என்று அர்ஜூன் அலற.. அலற..

“அட.. என்ன மாப்பிள்ளை.. இவ்வளவு கம்மியாய் சாப்பிடுறீங்க.. உங்க மாமாவெல்லாம் கல்லைக் கூடச் சாப்பிட்டு ஜீரணம் பண்ணி விடுவார்.. நீங்களானால் இப்படி குருவி கொறிப்பது போல்.. கொறிக்கறீங்களே..” என்று சரோஜா அவன் இலையில் அள்ளி.. அள்ளி வைத்து விட்டாள்..

அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருந்த அறையில்.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு.. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்..

“மாப்பிள்ளை சிக்கன் சூப் குடிக்க மறந்து விட்டார்.. நீ கொண்டு போய் கொடுத்து விட்டு வாம்மா..” என்று சரோஜா கெஞ்சியதால்.. கையில் சூப் தம்ளரோடு அறைக்குள் வந்தாள் தர்ஷிணி..

“என்னடி அது.. கையில்..?”

“அம்மா சூப் கொடுத்து விட்டிருக்காங்க..”

“என்னது..?”

அவன் அலறி, வயிற்றைப் பிடித்துக் கொள்ளவும், தர்ஷிணி பதறி விட்டாள்.. அவசரமாய் சூப் தம்ளரை மேஜையில் வைத்து விட்டு.. அவனருகில் ஓடி வந்தாள்..

“என்னங்க.. என்ன ஆச்சு..?”

“ஏண்டி.. நீ ஒரு முடிவோடுதான் என்னை மறு வீட்டு விருந்திற்கு கூப்பிட்டுக் கொண்டு வந்தாயா..?”

“என்னன்னு சொன்னால்தானே தெரியும்..”

“உங்க அம்மா.. சாப்பாட்டைப் போட்டே என்னைப் பழிவாங்கிட்டாங்கடி..”

“உளறாதீங்க..”

“உளறுகிறேனா.. ஐயோ.. அம்மா.. வயிறு வலிக்கிறதுடி..”

தர்ஷிணிக்கு அவன் துடிப்பதைக் கண்டு பாவமாக இருந்தது.. அதேசமயம் அம்மாவிடம் சொன்னால்.. அவளைப் பார்க்க அதைவிடப் பாவமாக இருக்கும் என்று தோன்றியதால் அவசரமாய் வெளியே சென்றாள்.. திரும்பி வரும்போது கையில் ஒரு குளிர் பான பாட்டிலோடு வந்தாள்..

“எழுந்திருங்க..”

“என்னடி இது.. திட்டம் போட்டு.. நீயும் எதையோ குடிக்கக் கொண்டு வந்திருக்க..”

“ம்ச்.. சத்தம் போடாமல் இதைக் குடிங்க..”

“சத்தம் போடுகிறேனா..? ஏண்டி சொல்லமாட்டே.. தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தாண்டி தெரியும்..”

“அது எனக்கு வரும் போது தெரிந்து கொள்கிறேன்.. இப்போது இதைக் குடிங்க..”

அர்ஜூன் அதை வாங்கிக் குடித்தான்..

“என்னடி ஒரு மாதிரிக் கசக்கிறது..”

“ஓமத்திரவம் கலந்தால் அப்படித்தான் இருக்கும்..”

“ஓமத்திரவமா..?”

“ஆமாம்.. அது வயிற்றுவலிக்கான மருந்து… அதைத் தனியாய் குடிக்கக் கஷ்டப்படுவீங்கன்னுதான்.. கூல்டிரிங்க்கோடு கலந்தேன்.. இப்ப கண்ணை மூடிப் படுங்க.. கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும்… சரியா..” அவள் அறைக்கதவை மூடிக் கொண்டு போய் விட்டாள்..

அவளது கரிசனம் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியவன்.. அப்படியே தூங்கி விட்டான்..

மாலையில் அவள் வந்து எழுப்பவும் எழுந்தவன்..  அதை உணர்ந்தான்.. வயிற்றுவலி மாயமாய் மறைந்து போயிருந்தது..

“என்ன.. ஒரு மார்க்கமாய் விழிக்கறீங்க..?”

“தர்ஷிணி.. இட்ஸ் கான்..”

“எது போய் விட்டது..?”

“என் வயிற்றுவலி..”

“அப்பாடி.. தப்பித்தேன்.. இல்லாவிட்டால் என் குடும்பத்தின் மீது, உங்களைக் கொலை செய்ய சதி செய்தாங்கன்னு பழியைப் போட்டு இருக்க மாட்டீங்களா..?”

“ஓஹோ.. அதற்காகத்தான் எனக்கு மருந்து கொடுத்து அம்மையார் காப்பாற்றினீங்களா..?”

“ஆமாம்.. வேறு எதற்குன்னு நீங்க நினைத்தீங்க..”

“ம்ம்.. என்மேல் காதலாகிக் கசிந்துருகி விட்டாய்ன்னு நினைத்தேன்..”

“நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாம்..”

“யார் பிழைப்பை..?”

“சொல்கிறவங்க பிழைப்பை..”

“என் பிழைப்பை நம்பித்தான் உன்னை என் தலையில் கட்டி வைத்திருக்கிறாங்க… அதை நினைவில் வை.. ஆமாம்.. அது என்ன கையில்..?”

“டீ..”

“அம்மாடி.. உன் வீட்டில் எதையாவது என் வயிற்றில் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டுமென்று வேண்டுதல் எதுவும் வைத்திருக்கிறீங்களா..?”

“ச்சு.. அலறாமல் இதை வாங்கிக் குடிங்க..”

அவளை நம்பி.. எதையும் வாங்கிக் குடிக்கலாம் என்று சற்றுமுன் நம்பிக்கை வந்திருந்த காரணத்தினால் அர்ஜூன் அதை வாங்கிக் குடித்தான்..

“என்னடி இது.. இதுவும் ஒரு மார்க்கமாகவே இருக்கு..”

“இஞ்சி டீ.. அப்படித்தான் இருக்கும்.. நீங்களே ஒரு மார்க்கமான ஆள்தான்.. அதனால் எதைப் பார்த்தாலும் உங்களுக்கு ஒரு மார்க்கமாகத்தான் தெரியும்..”

அர்ஜூன் உதட்டைக் கடித்தபடி அவளை ஒரு மார்க்கமாகவே பார்த்தான்.. அவனது பார்வையை உணர்ந்தவள், முகம் சிவப்பதை அவன் கண்டுபிடித்து விடாமல் இருக்கும் பொருட்டு ஜன்னலோரமாய் சென்று நின்று தெருவைப் பார்த்தாள்..

தர்ஷிணிக்கு எப்போதுமே முடி நீளமாக இருக்கும்.. அது இப்போது.. இன்னும் அழகுற நீண்டு இருந்தது..

‘ம்ம்.. எப்படி வாளிப்பாய் வளர்ந்து விட்டாள்..’

பதினேழு வயதில் அவளைப் பார்த்தவன்.. ஆறு வருடங்கள் கழித்து.. மீண்டும்.. இப்போதுதான் அவளைப் பார்க்கிறான்..

இடைப்பட்ட காலத்தில்.. இளமையில் மெருகேறி.. அவள் புதுப்பொழிவோடு இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவளிடம் தென்பட்ட பெண்மையின் மென்மை அவனை ‘வா..!’ என்று அழைத்தது..

‘எழுந்து சென்று அவளை பின்னால் இருந்து கட்டி அவளது பின்னங்கழுத்தில் முத்தமிட்டால் என்ன..’ என்று அவன் மனதில் எண்ணம் ஒரு நொடி ஓடியது..

அவன் மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டான்..

‘ஏன்.. அவள் என் அருகில் வரமாட்டாளாமா..?’ ஆணின் இயல்பான வீம்பு அவனுக்குள் தலைதூக்கியது..

அவளிடமிருந்து வந்த மல்லிகையின் பிரத்யேக நறுமணம் அவனை கிளர்ச்சியுறச் செய்தது.. போதாக் குறைக்கு தர்ஷிணி வேறு.. தன் மனத்தை மறைக்கும் பொருட்டு..

“மல்லிகை.. என் மன்னன் மயங்கும்

பொன்னான.. மலரல்லவோ..

எந்நேரமும்.. உன்னாசை போல்..”

என்று மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள்..

அந்த வினாடியில்தான்.. அவனுக்குள் அந்த மாற்றம் நிகழ்ந்தது..

‘இவள்.. என்னுடையவள்.. எனக்கே உரிய.. என் மனைவி..!’ என்று அவன் நெஞ்சம் கூவியது..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link